இலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’

0 2,484

உலகின் பல்­வேறு நாடு­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு அந்­நா­டு­களில் உள்ள உய­ர­மான கட்­டி­டங்கள், கோபு­ரங்­க­ளையே குறிப்­ப­துண்டு. எனினும் இலங்­கையைப் பொறுத்­த­வரை அவ்­வா­றான உய­ர­மான கோபு­ரங்­களோ கட்­டி­டங்­களோ இது­வரை அமையப் பெற­வில்லை. இந்நிலை­யில்தான் இந்த வாரம் கொழும்பில் திறந்து வைக்­கப்­பட்ட ‘தாமரை கோபுரம்’ இலங்­கைக்குப் புதிய அடை­யா­ளத்தைப் பெற்றுத் தந்­துள்­ளது. 

2012 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இதன் கட்­டு­மானப் பணிகள் பல்­வேறு அர­சியல் இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர் கடந்த 16 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­ன­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் திங்கட் கிழமை முதல் இந்தக் கோபுரம் பொதுமக்கள் பார்­வைக்­காக திறக்­கப்­ப­ட­வுள்­ளது. இனி நீங்கள் கொழும்­புக்கு வந்தால் நிச்­சயம் இந்தக் கோபு­ரத்தில் ஏறி கொழும்பு நகரைப் பற­வையின் கண் பார்வை (Bird Eye View) யில் பார்த்­து­விட்­டுத்தான் செல்ல வேண்டும்.

கொழும்பின் டி.ஜே.விஜே­வர்­தன மாவத்­தையில் உள்ள பேர­வாவி மற்றும் இலங்கை தபால்­சேவை தலை­மை­யகம் என்­ப­வற்­றிக்கு மிக அண்­மையில் இந்த கோபுரம் அமைந்­துள்­ளது. சிங்­கள மொழியில் ‘நெலும் குலுன’ என அழைக்­கப்­படும் இந்த கோபுரம் 356 மீற்றர் உயரம் கொண்­ட­தாகும். கொழும்பு நகரின் எந்­த­வொரு பகு­தியில் இருந்தும் முக்­கிய சாலை­களில் இருந்தும் இந்த கோபு­ரத்தைக் காணலாம். மேலும் சீரான கால­நி­லையின் போது சிவ­னொ­ளி­பா­த­ம­லையை இந்தக் கோபு­ரத்­தி­லி­ருந்து காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருக்கும்.

இலங்­கையின் டிஜிட்டல் தொழில்­நுட்­பத்தில் புதிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு தொலை­தொ­டர்பு மையத்­தினை உரு­வாக்­கு­வதும் இலங்­கையின் சுற்­றுலா கைத்­தொ­ழி­லினை மேம்­ப­டுத்­து­வ­துமே இந்த கோபுரம் அமைக்­கப்­பட்­டதன் பிர­தான நோக்­கங்­க­ளாகும்.

தற்­போது பிரான்ஸின் ஈபிள் கோபுரம், டுபாயின் புர்ஜ் கலீபா, மலே­சி­யாவில் பெட்­ரோணர் இரட்டை கோபுரம், அமெ­ரிக்­காவின் எம்­பெயர் கோபுரம் ஆகிய நகர சின்­னங்­க­ளுடன் இலங்­கையின் தாமரை கோபு­ரத்தின் பெயரும் இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

வடி­வ­மைப்பு

இந்த கோபு­ரத்தின் வடி­வ­மைப்பு தாமரை மல­ரினை பிர­தி­ப­லிப்­ப­தாக உள்­ளது. தாமரை மலர் இலங்­கையின் பாரம்­ப­ரி­யத்­துடன் பின்னிப் பிணைந்­துள்­ளதால் இந்த வடிவம் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது. மேலும் இந்த மலர் வடி­வ­மைப்பு நாட்டின் செழிப்­பான வளர்ச்­சியை பிர­தி­ப­லிப்­ப­தாக உள்­ளது.

இந்தக் கோபு­ரத்தின் தொழில்­நுட்ப வடி­வ­மைப்பு மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் கட்­ட­டக்­கலைப் பிரிவின் மூலம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த வடி­வ­மைப்புக் குழு­வினை மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வு­ரை­யா­ளர்­க­ளான பேரா­சி­ரியர் நிமல் டி சில்வா, பேரா­சி­ரியர் சமித்த மான­வடு மற்றும் பேரா­சி­ரியர் சித்ரா வெட்­டிக்­கார ஆகியோர் தலைமை தாங்கி வழி­ந­டத்­தி­யுள்­ளனர். இந்த கோபு­ரத்தின் வடி­வ­மைப்பு, தொழில்­முறை ஆலோ­சனை மற்றும் செலவுக் கட்­டுப்­பாடு போன்­ற­வற்றை இந்­தக்­கு­ழுவே முகா­மைத்­துவம் செய்­தது.

அத்­துடன் சீனாவின் தேசிய இலத்­தி­ர­னியல் ஏற்­று­மதி, இறக்­கு­மதி கூட்­ட­மைப்பு (சி.ஈ.ஐ.ஈ.சி) மற்றும் ஏரோஸ்ப்பேஸ் லோங் மார்ச் இன்­டர்­நெ­ஷனல் ஆகிய கூட்­ட­மைப்­பு­களின் ஒத்­து­ழைப்­புடன் இலங்­கையின் கட்­ட­டக்­கலை வடி­வ­மைப்­பா­ளர்கள் இந்த கோபு­ரத்தின் அமைப்பை வரைந்து வடி­வ­மைத்­துள்­ளனர்.

கோபு­ரத்தின் அடித்­தளம்

கோபு­ரத்­தினுள் உள்­நு­ழை­வ­தற்கு 4 நுழை­வா­யில்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் இரண்டு நுழை­வா­யில்கள் பிர­தம அதி­திகள், நாட்டுத் தலை­வர்கள் போன்றோர் உள்­நு­ழை­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதன் பிர­தான நுழை­வாயில் விசேட தேவை­யு­டை­ய­வர்கள் நுழை­வ­தற்கு வச­தி­யாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள ஒரு நுழை­வாயில் பொதுமக்கள் மற்றும் சுற்­று­லாப்­ப­ய­ணிகள் நுழை­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

கோபு­ரத்தின் அடிப்­ப­குதி 4 மாடி­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது. இது தாம­ரையின் இதழ்­களை ஒத்த அமைப்­பி­லேயே வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. அடித்­த­ளத்தில் சமை­ய­ல­றைகள், உப­க­ர­ணங்­களை களஞ்­சி­யப்­ப­டுத்தும் அறைகள் மற்றும் பிரத்­தி­யே­க­மான அறைகள் என்­பன அடங்­கு­கின்­றன. முத­லா­வது மாடியில் வர­வேற்பு நுழை­வாயில் மண்­டபம், பார்­வை­யாளர் மையம், கண்­காட்சி மண்­டபம், நாட்­டுப்­புற அருங்­காட்­சி­யகம், தொலை­தொ­டர்­பாடல் அருங்­காட்­சி­யகம் மற்றும் துணை அறைகள் என்­பன அமைக்­கப்­பட்­டுள்­ளன.
இரண்­டா­வது மாடியில் பார்­வை­யாளர் மையம், கண்­காட்சி அரங்கம், உப­க­ரண அறைகள் மற்றும் துணை அறைகள் என்­பன அமைக்­கப்­பட்­டுள்­ளன.
மூன்­றா­வது மாடியில் அலு­வ­ல­கங்கள், உப­க­ரண அறைகள் மற்றும் துணை அறைகள் என்­பன அமைக்­கப்­பட்­டுள்­ளன. கோபு­ரத்தின் அடித்­தளம் 15 மீற்றர் உயரம் கொண்­ட­தாகும்.

கோபு­ரத்தின் தண்டு

தாமரை கோபு­ரத்தின் தண்­டுப்­ப­குதி 200 மீற்றர் நீளம் கொண்­ட­தாகும். இதில் செங்­குத்து சுழற்­சிக்­கான படிகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மற்றும் இலங்­கையின் அதி­வே­க­மாக உயரும் மின்­தூக்­கி­களும் இந்த தண்­டுப்­ப­கு­தியில் பொருத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் கோபு­ரத்தின் பிரத்­தி­யேக தேவை­க­ளுக்­கான குழாய்­களும் இதில் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

கோபுர வீடு

தாமரை கோபு­ரத்தின் மொத்த அழகும் சங்­க­மிக்கும் பகுதி கோபுர வீடாகும். இந்த பகுதி தாமரை மொட்டின் அமைப்பில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 8 மாடி­களைக் கொண்ட இந்த கட்­ட­மைப்பில் வியக்க வைக்கும் பல்­வேறு சிறப்­பம்­சங்கள் அடங்­கி­யுள்­ளன.

இந்த கோபுர வீட்டின் முதலாம் மாடி ஒளிப­ரப்பு அலை அறை­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இரண்டாம் மாடி தொலைக்­காட்சி அலை­களை அனுப்பும் அறை­யாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகள் விழாக்கள் மற்றும் வைப­வங்­களை நடாத்தும் பிர­தான திரு­மண வர­வேற்பு மண்­ட­ப­மா­கவும் கேட்போர் கூட­மா­கவும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இதில் 700 பார்­வை­யா­ளர்கள் ஒரே நேரத்தில் அமரக் கூடிய வசதி கணப்­ப­டு­கின்­றது.

இதில் அமைந்­துள்ள ஐந்தாம் மாடி விசேட கட்­ட­டக்­கலை அம்­சங்­க­ளுடன் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இது சுழலும் திறன்­கொண்ட விசேட உண­வ­க­மாகும். இந்த உண­வ­கத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் அம­ரக்­கூ­டிய வசதி காணப்­ப­டு­கின்­றது. 90 நிமி­டத்­திற்கு ஒரு சுழற்சி என இந்த உண­வகம் சுழன்று கொண்டே இருப்­பதால் உணவு உட்­கொண்ட வண்­ணமே கொழும்பு நக­ரத்தின் அழகை ஒரே பார்­வையில் இர­சிக்கக் கூடிய அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்­கின்­றது.
ஆறா­வது மாடியில் விசேட சொகுசு அறைகள் காணப்­ப­டு­கின்­றன. ஏழா­வது மாடி வெளிப்­புற பார்­வைத்­த­ள­மா­கவும் கண்­கா­ணிப்புத் தள­மா­கவும் விளங்­கு­கின்­றது. இந்­தப்­ப­குதில் நின்­ற­வாறே கொழும்பு நகரை துல்­லி­ய­மாக ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்­கின்­றது. எட்­டா­வது மாடி காற்­றோட்ட உப­க­ரண அறை­யாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

அன்­டெனா

இந்­தப்­ப­குதி கோபுர வீட்­டுக்கு மேல் உள்ள பகு­தி­யாகும். பொது­மக்கள் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டாத இந்த இடத்தில் தொலைக்­காட்சி மற்றும் வானொலி பண்­ப­லை­களின் அன்­டெ­னாக்கள் அடங்­கு­கின்­றன. இங்கு அமைக்­கப்­பட்­டுள்ள அன்­டெ­னாக்கள் வெவ்­வேறு அதிர்­வ­லை­களை துல்­லி­ய­மாகப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அமைப்பில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கோபு­ரத்தின் 250 ஆவது மீற்றர் தொடக்கம் கோபு­ரத்தின் எல்லை வரை இந்த அன்­டெ­னாக்கள் அமை­யப்­பெற்­றுள்­ளன.

அந்த வகையில் இந்த கோபு­ரத்தில் 50 தனித்­தனி ஒளிப­ரப்பு சேவைகள் 20 தொலை­தொ­டர்­பாடல் சேவைகள், பாது­காப்பு சமிக்­ஞைகள், கொழும்பின் கட்­டி­டங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள எண்­ணி­ல­டங்­காத தொலைக்­காட்சி மற்றும் பண்­ப­லையின் அன்­டெ­னாக்­களில் இருந்து வெளி­வரும் சக்­தி­வாய்ந்த அலை­களை நீக்­குதல் குறைத்தல் போன்ற வச­திகள் போன்­றன அமை­யப்­பெற்­றுள்­ளன.

சிறப்­பி­யல்­புகள்

தாமரை கோபுரம் தெற்­கா­சி­யாவின் மிக உயர்ந்த கோபு­ர­மாக இருப்­பது அதன் தனிச்­சி­றப்­பாகும். 12 மாடி­களைக் கொண்­ட­மைந்த இந்த கோபுரம் 356.3 மீற்றர் உயரம் கொண்­டது. இது உலகின் மிக உயர்ந்த கோபு­ரங்­களில் 19 ஆவது இடத்­தையும் ஆசி­யாவில் 11 ஆவது இடத்­தையும் பிடித்­துள்­ளது. பாரிஸ் நக­ரத்தின் பிர­சித்தி பெற்ற ஈபிள் கோபு­ரத்தை விட இந்த கோபுரம் 32 மீற்றர் உய­ர­மா­ன­தாகும்.

104.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் 7 வரு­டங்­களில் இந்த கோபுரம் கட்­டி­மு­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை நிர்­மா­ணிப்­ப­தற்­கான நிதி­யு­த­வி­யினை சீனாவின் மக்கள் குடி­ய­ரசு வங்­கி­யான எக்ஸிம் (EXIM) வங்கி வழங்­கி­யுள்­ளது. இதன் நிர்­மாணப் பணிகள் 12.11.2012 அன்று ஆரம்­பிக்­கப்­பட்­டன. அன்­றி­லி­ருந்து சரி­யாக 912 நாட்­களில் அதா­வது 2015 மே மாதத்தில் நிர்­மாணப் பணி­களை பூர்த்தி செய்ய திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் குறிக்­கப்­பட்ட திக­தி­யி­லி­ருந்து நான்கு வரு­டங்­களின் பின்­னரே இது திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த தாமதம் கார­ண­மாக அர­சாங்­கத்­திற்கு 5475 மில்­லியன் ரூபா நஷ்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக கணக்­காய்­வாளர் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள விசேட கணக்­காய்வு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த கோபுரம் அமைந்­துள்ள காணியின் மொத்த பரப்பு 27,538 கன மீற்றர் ஆகும். இதன் வாக­னத்­த­ரிப்­பி­டத்தில் ஒரே நேரத்தில் 207 வாக­னங்­களை நிறுத்தி வைக்­கக்­கூ­டிய வசதி உள்­ளது.

இந்த கோபு­ரத்தில் 8 மின்­னு­யர்த்­திகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. இதில் பொருத்­தப்­பட்­டுள்ள பய­ணி­க­ளுக்­கான 3 மின்­னு­யர்த்­திகள் ஒரு செக்­க­னுக்கு 7 மீற்றர் எனும் வேகத்தில் உயரும் வல்­லமை கொண்­ட­வை­யாகும். மேலும் பய­ணி­க­ளுக்­காக அமைக்­கப்­பட்­டுள்ள மேலும் இரு மின்­னு­யர்த்­திகள் ஒரு செக்­க­னுக்கு 5 மீற்றர் எனும் தூரத்தில் பய­ணிக்கக் கூடிய வல்­லமை கொண்­டவை. இவை இரண்டும் இலங்­கையின் அதி­வே­க­மாக பய­ணிக்கும் முதல் இரண்டு மின்­னு­யர்த்­தி­க­ளாகும்.

அத்­துடன் கோபு­ரத்தின் தேவை­க­ளுக்­கா­கவும் தனிப்­பட்ட சேவை­க­ளுக்­கா­கவும் மெது­வாக இயங்­கக்­கூ­டிய இரண்டு மின்­னு­யர்த்­திகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

கோபு­ரத்தில் உள்ள இந்த விசேட மின்­னு­யர்த்­திகள் மூலம் கோபு­ரத்தின் உச்­சிக்கு வெறு­மனே 40 செக்­கன்­களில் பய­ணிக்க முடியும்.

சர்ச்­சைகள்

தாமரை கோபு­ரத்தை அமைப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் 2008 ஆம் ஆண்டில் தொடங்­கப்­பட்­ட­போதும் முன்­னைய அர­சாங்­கத்தில் ஏற்­பட்ட அர­சியல் மற்றும் பல்­வேறு சர்ச்­சைகள் கார­ண­மாக இந்த கோபு­ரத்தின் கட்­டு­மா­னப்­ப­ணிகள் 2012 ஆம் ஆண்­டி­லேயே தொடங்­கப்­பட்­டன.

இந்த கோபு­ரத்தை திறந்து வைக்கும் வைப­வத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேசிய விட­யங்கள் நாட்டு மக்கள் மத்­தியில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளன. இந்த கோபு­ரத்தின் கட்­டு­மா­னப்­ப­ணி­க­ளுக்­காக சீனா­வினால் வழங்­கப்­பட்ட 12 பில்­லியன் ரூபா­வினை 10 வரு­டங்­க­ளுக்கு வரு­ட­மொன்­றுக்கு 240 கோடி என்ற அடிப்­ப­டையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

சீனா எக்ஸிம் வங்­கியால் 16 பில்­லியன் ரூபா வழங்­கப்­ப­டு­வ­தாக இருந்­த­போ­திலும் 12 பில்­லி­யனே கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. 2012 இல் இந்த கோபு­ரத்தை அமைப்­ப­தற்­காக அலிட் என்ற நிறு­வ­னத்­துக்கு அப்­போ­தைய அர­சாங்கம் 2 பில்­லி­யனை வழங்­கி­யுள்­ளது. எனினும் சீன அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் அந்த நிறு­வனம் தொடர்­பா­கவும் குறித்த பணம் தொடர்­பா­கவும் தேடிப்­பார்த்­த­போது அப்­ப­டி­யொரு நிறு­வ­னமே கிடை­யாது என்றும் அது போலி­யான முக­வரி என்றும் தகவல் கிடைக்­கப்­பெற்­ற­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். குறித்த பணத்­துக்கும் நிறு­வ­னத்­துக்கும் என்ன நடந்­தது என தெரி­யாமல் போன­தாக அவர் தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியின் இந்தக் கூற்று பலத்த சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது. இது தொடர்பில் விசேட குழு­வொன்றை அமைத்து விசா­ரிக்கப் போவ­தாக ‘கோப்’ குழுவின் தலைவர் சுனில் ஹந்­து­நெத்தி எம்.பி. கூறி­யுள்ளார்.

சமூக வலைத்­த­ளங்­களில் இந்த கோபுரம் முன்னைய அரசாங்கத்தின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்டது என்றும் இதனை நாட்டுக்கு வழங்கியது தமது முன்னாள் ஜனாதிபதி என்றும் மஹிந்த ராஜபக்சவே என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தாமரை கோபுரத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவத்துக்கு நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும் நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய விடயங்களும் ஏராளம் இருக்கத்தக்க கடன்பட்டு இப்படியொரு ஆடம்பர கோபுரம் தேவையா என்றும் பொதுமக்கள் வினவுகின்றனர்.
நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் இப்படியொரு கோபுரம் தேவையா என வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள் வினவுகின்றனர். அத்துடன் இந்த நிர்மாணப்பணிகள் இன்னும் முழுமையாகப் பூர்த்தியாகவில்லை. இதனை பூர்த்தி செய்ய மேலும் 300 கோடி ரூபா பணமும் குறிப்பிட்டளவு காலமும் தேவை. மீதமுள்ள நிர்மாணப் பணிகளுக்கு தேவையான செலவை இலங்கை அரசாங்கமே ஏற்றுள்ளது.

தாமரை கோபுரம் குறித்து நாட்டுப்பிரஜையாக ஒவ்வொருவரும் பெருமைப்பட்ட போதிலும் இதற்காக பெறப்பட்ட கடனை இலங்கை மக்களாகிய நாம்தான் செலுத்த வேண்டும் என்பதை யும் மறந்துவிடக் கூடாது.

எம்.ஏ.எம்.அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.