நிகாப், புர்காவுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதா? விரிவான அறிக்கை தேவை

பதில் பொலிஸ்மா அதிபரிடம் ஹலீம் கோரிக்கை

0 956

நாட்டில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் அச்­சட்­டத்­தின்கீழ் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு விதிக்­கப்­பட்ட தடை நீக்­கப்­பட்­டுள்­ளதா? இல்­லையா? என்­பது தொடர்பில் மக்­க­ளுக்கு விரி­வான அறிக்­கை­யொன்­றினை வெளி­யி­டு­மாறு பதில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அவ­ச­ர­காலச் சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளதா? இல்­லையா? என்­பது தொடர்பில் முஸ்லிம் பெண்கள் தெளி­வற்ற நிலையில் இருக்­கி­றார்கள் என்­பதை அமைச்சர் தனது கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை, முகத்­திரை தடை தொடர்பில் தெளி­வான விளக்­கங்­களை வழங்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ச­பையும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

முகத்­திரை தடை தொடர்பில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ஏப்ரல் 21 ஆம் திகதி நடை­பெற்ற துன்­பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசா­தா­ரண நிலை நில­வி­யதால் அவ­ச­ர­கால சட்டம் உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. அவ­ச­ர­காலச் சட்­டத்­தின்­போது பாது­காப்பு நட­வ­டிக்­கை­களைக் கவ­னத்­திற்­கொண்டு முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த 23 ஆம் திக­தி­யுடன் நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்டு பாது­காப்­புக்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ளும் அதி­காரம் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு வழங்கும் விஷேட வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­ட­துடன் அவ­ச­ர­கா­லத்தின் போது தடை செய்­யப்­பட்­டி­ருந்த முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்­தி­ரைக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது. எனினும், நமது சூழ­லி­லுள்ள பெரும்­பான்மை சகோ­த­ரர்­களின் மனோ­பா­வமும் அச்­சமும் மாறி­ய­தாகத் தெரி­ய­வில்லை.

இந்­நி­லையில் முஸ்லிம் பெண்கள் முகத்­தி­ரை­ய­ணிந்து வெளி­யேறும் போது அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு ஆளாக இட­முண்டு. எனவே முகத்­தி­ரை­ய­ணிந்து பொது இடங்­க­ளுக்கு செல்­வதைத் தவிர்த்து கொள்­ளு­மாறும் கால, நேர சூழ்­நி­லை­களை கவ­னத்­திற்­கொண்டு செயற்­ப­டு­மாறும் வேண்டிக் கொள்­கிறோம். பாது­காப்பு தரப்­பி­னரின் சோத­னை­களின் போது பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழ­மைபோல் வழங்­கு­மாறும் வேண்­டப்­ப­டு­கி­றார்கள்.

உல­மாக்­களின் வழி­காட்­ட­லின்­படி பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு நல்கி எமது உரிமைகளை எதிர்காலத்தில் உறுதி செய்ய முன்வருமாறு வேண்டுகிறேன் எனத் தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் முகத்திரை தொடர்பான தெளிவுகளை வழங்கினால் மேலதிக நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.