முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கோரும் இலங்கை முஸ்லிம் பெண்கள்

0 1,629

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம் எல்லா முஸ்­லிம்­க­ளுக்கும் சமத்­து­வத்­தையும், நீதி­யையும் உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய வகையில் திருத்­தப்­பட வேண்­டு­மென முஸ்லிம் பெண்கள் ஒன்­றி­ணைந்து கோரிக்கை விடுக்­கின்­றனர்.

முஸ்லிம் பெண்கள் ஒன்­றி­ணைந்து கொழும்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய முஸ்லிம் பெண்கள் இந்தக் கோரிக்­கையை விடுத்­தி­ருந்­தனர்.
கோரிக்­கைகள்:

* அனைத்து முஸ்­லிம்­களின் திரு­மண வய­தெல்லை 18ஆக அமைய வேண்டும்.

* பெண்கள் காதி­க­ளா­கவோ, ஜூரி­க­ளா­கவோ, திரு­மணப் பதி­வா­ளர்­க­ளா­கவோ, காதிகள் சபை அங்­கத்­த­வ­ரா­கவோ நிய­மிக்­கப்­பட தகு­தி­யு­டை­ய­வர்­க­ளாக்­கப்­படல் வேண்டும்.

* முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம், அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் ஒரே மாதி­ரி­யா­ன­தாக வேண்டும்.

* அனைத்து சட்ட ரீதி­யி­லான திரு­ம­ணங்­களின் போது, மண­மகன் மற்றும் மண­மகள் ஆகிய இரு­வரின் கையெ­ழுத்து மற்றும் கைவிரல் அடை­யா­ளங்­களை கட்­டா­ய­மாகப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். திரு­மண வயதை எட்­டிய அனைத்து பெண்­க­ளுக்கும் சுயா­தீ­ன­மாக திரு­ம­ணத்தை தீர்­மா­னிப்­ப­தற்கு உறவு முறை ஆண்­களின் அனு­ம­தியை பெற வேண்­டி­யது கட்­டாயம் கிடை­யாது.

* திரு­மணம், சட்ட ரீதியில் ஏற்றுக் கொள்­வ­தற்­காக, கட்­டாயம் பதிவு செய்­யப்­பட வேண்டும்.

* ஒன்­றுக்கு மேற்­பட்ட திரு­ம­ணங்­களை செய்ய முயற்­சிக்­கும்­போது, விசேட கார­ணங்­களை அடிப்­ப­டை­யா­கவும், சாதா­ரண கார­ணங்­களை கருத்­திலும் வைத்து கொண்டு, நிதி இய­லுமை, அனைத்து தரப்­பி­னரின் சம்­மதம் மற்றும் நீதி­மன்­றத்தின் அனு­மதி பெறுதல் உள்­ளிட்ட உரிய நிபந்­த­னை­களை விதிக்க வேண்டும்.

* தலாக் மற்றும் பஸஹ் நடை­மு­றையின் கீழ் விவா­க­ரத்து பெற்றுக் கொள்­ளும்­போது உரிய நிபந்­த­னைகள் விடுக்­கப்­பட வேண்டும். மேன்­மு­றை­யீட்டு செயற்­பா­டு­களின் போது கணவர் மற்றும் மனைவி ஆகி­யோ­ருக்கு விவா­க­ரத்து நடை­முறை சம­மாகக் காணப்­பட வேண்டும். முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம், முபாரத் மற்றும் குலா ஆகிய விதத்தில் விவா­க­ரத்து ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்.

* கைக்­கூலி (சீதனம்) தொடர்­பான சரி­யான தக­வல்­களை பெற்று, விவா­க­ரத்தின் போது, அதனை மீளப்­பெற்றுக் கொள்ளும் விதத்தில் சட்டம் தயா­ரிக்­கப்­பட வேண்டும். திரு­ம­ணத்தின் போது, சரி­யான முறையில் பதி­வுகள் செய்­யப்­ப­டாது, சீத­னத்தை வழங்­குதல் மற்றும் பெற்றுக் கொள்­ளுதல் சட்­ட­வி­ரோ­த­மா­னது அல்­லது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்ற விதத்தில் அமைய வேண்டும்.

* முஸ்லிம் தம்­ப­தி­யினால் திரு­ம­ணத்­திற்கு முன்னர் திரு­மண உடன்­ப­டிக்­கையில் உள்­ள­டக்க வேண்­டிய விட­யங்­களை அறி­வித்து, அதனை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்­கையில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­குதல் சம்­ப­வத்தின் பின்னர், முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்ட திருத்தம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்­தப்­பட்­டது.

இந்­நி­லையில், கடந்த ஜுலை 11ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் 11 பேர் ஒன்­று­கூடி, முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தில் 14 திருத்­தங்­களை மேற்­கொள்ள இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தத்தை கொண்­டு­வர முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணக்கம் வெளி­யிட்ட முத­லா­வது சந்­தர்ப்பம் இது­வெ­னவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இறை­வனால் கூறப்­பட்­டுள்ள சட்­டத்தை, நாட்­டி­லுள்ள சட்ட திருத்­தங்­களின் ஊடாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மென முன்னாள் அமைச்­ச­ரான பேரியல் அஷ்ரப் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

“சுமார் 40 வருட காலம் இந்த சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு தொடர்ச்­சி­யாக பேசப்­பட்டு வந்­தது. ஏதோ ஒரு கார­ணத்­தினால் இந்த சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ள முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. பல்­வேறு கார­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்த இடத்தில் முஸ்லிம் பெண்­களே இருக்­கினறார்கள். இறைவன் எங்­க­ளுக்கு கூறி­யுள்ள விட­யங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிப்­ப­தாக சிலர் நம்­பு­கின்­றனர்.

இறைவன் கூறிய விட­யங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­மாறு நான் இந்த இடத்­திற்கு வந்து கூற­வில்லை. அதற்­கான தேவை மற்றும் அவ­சியம் எமக்கு கிடை­யாது. இறைவன் எமக்கு கூறி­யுள்ள சட்­டங்­களில் எந்­த­வித பிரச்­சி­னையும் எமக்கு கிடை­யாது. அந்த சட்­டத்தை மனி­தர்­க­ளுக்கு கொண்டு வரும் போது, மனி­தர்­க­ளினால் தயா­ரிக்­கப்­ப­டு­கின்ற சட்­டத்­தி­லேயே பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது. மனி­தர்­களால் எமக்கு விதிக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­தி­லேயே நாம் திருத்­தங்­களை கோரு­கின்றோம்.

இஸ்லாம் மார்க்­கத்தை பின்­பற்­று­கின்ற எம் அனை­வ­ருக்கும் ஏதேனும் ஒரு தவறு இழைக்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின், அந்த தவறு இஸ்லாம் தர்­மத்தில் என்றால், அது மிகவும் பிழை­யான கருத்­தாகும். இறைவன் ஒரு­போதும் எமக்கு அநீதி இழைக்கும் வகை­யி­லான சட்­டங்­களை பிறப்­பிக்­க­வில்லை. இறை­வ­னினால் வழங்­கப்­பட்­டுள்ள சட்­டத்தை, சட்டத் திருத்­தங்­களின் ஊடாக மக்­க­ளுக்கு வழங்­கு­மாறே நாம் கேட்­டுக்­கொள்­கின்றோம்” என முன்னாள் அமைச்­ச­ரான பேரியல் அஷ்ரப் கூறினார்.

இறை­வனால் கொண்­டு­வ­ரப்­பட்ட சட்­டத்தை மாற்­றி­ய­மைக்க கோரிக்கை விடுக்­க­வில்லை எனவும், மாறாக மனி­தனால் உரு­வாக்­கப்­பட்ட சட்­டத்­தி­லேயே மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் எனவும் சட்­டத்­த­ரணி எர்­மிசா டெகேல் தெரி­விக்­கின்றார்.

”முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் 1951ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதில் மாற்­றங்­களை கொண்­டு­வர வேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே வந்­துள்­ளது. இது அண்­மையில் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை கிடை­யாது. நீண்ட கால­மாக முஸ்லிம் பெண்கள் இது­கு­றித்து குரல் எழுப்­பி­யுள்­ளனர். இந்த சட்டம் மாற்­றப்­பட வேண்டும் என முஸ்லிம் மக்கள் மத்­தி­யி­லி­ருந்தே கோரிக்கை விடுக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நாட்­டி­லுள்ள ஏனைய சட்­டங்­களைப் போன்றே பாரா­ளு­மன்­றத்தில் மனி­தர்­களால் இந்த சட்டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதே போன்று முன்பு காணப்­பட்ட பல முஸ்லிம் சட்­டங்கள் மாற்­றப்­பட்­டுள்­ளன. மாற்ற முடி­யாது என கூறு­வது புதிய யோச­னை­யல்ல. இன்று அதில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும். மனி­தர்­களால் உரு­வாக்­கப்­பட்ட சட்­டத்தை மாற்­றி­ய­மைக்க முடியும். மதத்தை மாற்­றி­ய­மைக்­கு­மாறு நாம் கோர­வில்லை. சட்­டத்தை மாற்­றி­ய­மைக்­கு­மாறே கோரு­கின்றோம்.

இவ்­வா­றாக ஒழுங்கு படுத்­தப்­பட்ட மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­காக உள்­ளதே மதங்­க­ளாகும். மாறாக இந்த திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்­தி­னூ­டாக முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றனர். மதக்­கோட்­பா­டு­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் இந்த சட்டம் இல்லை. இந்த சட்டம் இஸ்­லா­மிய மார்க்கம், கோட்­பா­டு­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் இல்லை. ஆகவே, இது முழு­மை­யாக மாற்­றப்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நிதி­யத்தின் பணிப்­பாளர் ஜுவை­ரியா மொஹிதீன் இதன்­போது கருத்து தெரி­விக்­கையில்,

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தின் கார­ண­மாக முஸ்லிம் பெண்கள் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றாக பாதிப்­புக்­குள்­ளாகும் பெண்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்ணம் உள்­ளன. இந்த சட்­டத்­தி­னூ­டாக பெண்கள் மாத்­தி­ரமல்­லாது ஒரு பகுதி ஆண்­களும் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றனர்.

பார­பட்சம் மிக்க இந்த சட்­டத்தின் கார­ண­மாக பல­தா­ர­ம­ணங்­களை செய்து கொள்ள முடி­யு­மா­க­வி­ருக்­கின்­றது. திரு­ம­ணச்­சான்­றி­தழில் பெண்கள் கையொப்பம் இடவோ அல்­லது விர­ல­டை­யாளம் இடவோ இடம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கா­மையே இதன் கா­ர­ண­மாகும். இது போன்ற விட­யங்­களை உள்­ள­டக்­கிய இந்த சட்­டத்தின் கார­ண­மாக பாரிய பாதிப்பை முஸ்லிம் பெண்கள் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். அவர்கள் உடல், உள ரீதி­யிலும் பாதிக்­கப்­படும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த சட்­டத்தின் கார­ண­மாக பிள்­ளைகள் அநா­தை­க­ளாக்­கப்­படும் பாத­க­மான நிலையும் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றாக நாளொன்­றிற்கு 12 பேர் வரையில் இது தொடர்­பி­லான முறைப்­பா­டு­களை எமது அமைப்­புக்­க­ளுக்கு அளிக்­கின்­றனர். இந்தப் பிரச்­சினை புத்­த­ளத்தில் மாத்­தி­ர­மல்ல, அனைத்துப் பகு­தி­க­ளுக்கும் பொது­வான பிரச்­சி­னை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.

திரு­மண வாழ்க்­கையில் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும் பொருட்டே அது தொடர்­பி­லான சட்­டங்கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. மாறாக, இந்த சட்­டத்தின் கார­ண­மாக முஸ்லிம் பெண்கள் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றார்கள். குறைந்த வயதில் திரு­மணம் செய்து கொள்­கின்­ற­மையின் கார­ண­மாக முஸ்லிம் பெண்கள் பாதிப்பை எதிர்­நோக்­கு­கின்­றனர். ஆகவே, இது தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கமும், அர­சி­யல்­வா­தி­களும் எடுக்க வேண்­டு­மென ஜுவை­ரியா தெரி­வித்தார்.

ஆய்வுக்கும் வலு­வூட்­ட­லுக்­கு­மான பெண்கள் அமைப்பின் உறுப்­பினர் அனீஸா பிர்தௌஸ் இங்கு பேசு­கையில்,

வித­வை­க­ளா­கவும், கண­வரை பிரிந்து வாழும் பெண்­க­ளுக்­கா­கவும் கடந்த 12 வரு­டங்­க­ளாக சேவை­யாற்றி வரு­கின்றோம். இதன் ஊடாக முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தின் கார­ண­மாக பாதிக்­கப்­ப­டுவோர் தொடர்பில் நன்கு அறிந்­தி­ருக்­கின்றோம். ஆக­வேதான் இந்த சட்டம் மாற்­றப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்பில் உறு­தி­யாக இருக்­கின்றோம். எமது நாடு அழகு மிகுந்த நாடாகும் . அதற்கு மேலும் அழகு சேர்ப்­ப­தாக காணப்­ப­டு­வது நாட்டின் பல்­லி­னத்­தன்­மை­யாகும். அதனை மேலும் மெரு­கூட்ட வல்­ல­வை­யா­கவே நாட்டின் சட்­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் சிங்­கள மக்­க­ளுக்­காக கண்­டியச் சட்­டமும்., தமி­ழர்­க­ளுக்­காக தேச­வ­ழமைச் சட்­டமும் முஸ்­லிம்­க­ளுக்­காக முஸ்லிம் தனியார் சட்­டங்­களும் காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் முஸ்லிம் தனியார் சட்­டத்­தினால் ஆளப்­படும் முஸ்­லிம்கள் பல்­வேறு வகை­யான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­றார்கள். அந்த சட்­டத்தில் காணப்­படும் பாரிய இடை­வெ­ளி­களே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன.

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்டம் முழுமை­யாக இஸ்­லா­மிய விழு­மிய கோட்­பா­டு­க­ளுக்கு அமைய உரு­வாக்­கப்­ப­டா­மையின் கார­ண­மாக முஸ்லிம் பெண்­களும் சிறு­வர்­களும் பாரிய சீர­ழி­வுக்கு உள்­ளா­கின்­றனர். ஆகவே, இந்த சட்டம் திருத்­தப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்­பி­லான முன்­மொ­ழி­வுகள் பல ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தா­கவே கொண்­டு­வ­ரப்­பட்­டன. அதேபோல் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து சில­கு­ழுக்கள் அழுத்­தங்­களை பிர­யோ­கித்­தன. இந்த நிலையில் இந்த விடயம் தற்­போது தகுந்த தீர்வை எட்­டக்­கூ­டிய நிலைக்கு வந்­தி­ருக்­கின்­றது. அந்த தீர்­மா­னத்தை முழு­மை­யா­கவும் முஸ்லிம் பெண்கள் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வாக அமை­யப்­பெறும் வகை­யிலும் இருக்க வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

மேலும், இந்த விட­யங்கள் அனைத்தும் இஸ்­லா­மிய கோட்­பா­டு­க­ளுக்கு புறம்­பா­ன­வை­யல்ல. மாறாக, எம்­மு­டைய அனைத்துக் கோரிக்­கை­களும் மார்க்­கத்­திற்கு ஏற்­ற­தா­கவே அமை­யப்­பெற்­றுள்­ளன. ஆகவே, இது தொடர்பில் உரிய நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக எடுக்­கப்­ப­ட­வேண்டும். ஏனெனில், சட்­டத்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்ள கால­தா­மதம் ஏற்­படும் ஒவ்வொரு நாளிற்கும் இந்த சட்­டத்­தினால் பாதிப்­புக்­குள்­ளாகும் பெண்­க­ளி­னது எண்­ணிக்­கையும் அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. ஆகவே இதற்கு உட­ன­டித்­தீர்வு காணப்­ப­ட­வேண்டும் எனத் தெரி­வித்தார்.

சட்டத்தரணி சபானா குல் பேகம் தெரி­விக்­கையில்,

முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்­ட­மா­னது இலங்கை பாரா­ளு­மன்­றத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட ஏனைய சட்­டங்­களைப் போன்­ற­தொரு சட்­ட­மாகும். ஆகவே, தேவை ஏற்­ப­டு­கின்ற போது இந்த சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வ­ர­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. இந்த சட்டம் 17ஆம் நூற்­றாண்டில் இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்டு பின்னர் 1806 இல் முக­மதின் கோர்­வை­யாக உரு­வாக்­கப்­பட்­டது. அதன் பின்னர் எம்.ரீ. அக்பர் தலை­மையில் அமைக்­கப்­பட்ட குழு­வி­னாலும் 1929 ஆம் ஆண்டில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து பதிப்பு சட்­ட­மா­கவும் மாற்­றப்­பட்­டது. அதன் பின்னர் 1951இல் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­ட­மாக இது மாற்­றப்­பட்­டது. தற்­போது உள்ள இந்த சட்­டத்தில் 1975 ஆம் ஆண்டு வரைக்கும் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் அதன் பின்னர் எந்த திருத்­தங்­களும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. இருந்த போதிலும் 1951ஆம் ஆண்டு ஏ.ஆர்.எச். கன­க­ரத்­னவின் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்ட குழு­வி­னரும் 1972 ஆம் ஆண்டு எச்.என். இசட். பாரூக்­கினால் உரு­வாக்­கப்­பட்ட குழு­வி­னரும் 1990 ஆம் ஆண்டு ஏ.எல்.எம்.எம் .சகாப்­தீனால் உரு­வாக்­கப்­பட்ட குழு­வி­னரும் இந்த சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வ­ர­வேண்டும் என்­பது தொடர்­பி­லான பல பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்­தனர். ஆயினும் எந்த திருத்­தங்­களும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை.

இறு­தி­யாக 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு அந்தக்குழு தமது அறிக்கையை 2018 இல் நீதியமைச்சிற்கு சமர்ப்பித்தது. ஆகவே, அந்த அறிக்கையை நீதியமைச்சிற்கு சமர்ப்பித்த பின்னர் அந்த சட்டத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு உரிய முழுப் பொறுப்பும் பாராளுமன்றத்திற்கே உள்ளது. ஆகவே, தற்போது பாராளுமன்றத்தில் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இத்திருத்தங்கள் தொடர்பில் முடிவினை எடுத்து அதனை நீதியமைச்சிற்கு சமர்ப்பிக்கும் நிலை ஏற்பட்டது.
இருந்த போதிலும் அதனை மீளாயும் பொருட்டு மீண்டும் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பாராளுமன்ற அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ அல்லாத நபரையும் உள்ளடக்கிய வகையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அமைச்சர்களாலும் எடுக்கப்பட்ட முடிவை மீளாய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆகவே, மீண்டும் கலந்துரையாடல்களையும் குழுக்களையும் நியமிக்காமல் உடனடியாக இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு உட்பட்ட வகையிலும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகாத வகையிலும் ஆண், பெண் சமத்துவத்திற்கேற்ற வகையில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் சரிவரச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.