விழிப்புணர்வுகளால் மாத்திரம் போதையை ஒழிக்க முடியாது

0 641

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “போதையிலிருந்து விடுதலையான நாடு” தேசிய நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய  2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் 11 போதைப்பொருள் ஒழிப்பு மாநாடுகள் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்டுள்ளன.

25 மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள், பிரதேச செயலாளர் மட்டத்தில் 331 குழுக்கள், கிராம சேவகர் பிரிவுகளில் 14,022 குழுக்கள் மூலம் இந்த போதைப் பொருள் ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கப்பால்   “பேண்தகு பாடசாலை” நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் 6,429 பாடசாலைகள் மூலமும் 10,000 அறநெறிப் பாடசாலைகளின் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்களின் மூலமும் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் முழுவதும் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் தொடர்ச்சியாக 5 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வுத் திட்டங்களின் மூலம் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கு எதிரான பாரிய அலை ஒன்று உருவாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விளக்கங்கள் சென்றடைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

இருந்தபோதிலும் இவ்வாறான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களால் மாத்திரம் இலங்கையிலிருந்து போதைப் பொருளை அழித்துவிட முடியுமா என்றால் இல்லை என்பதே பதிலாகும். மாறாக இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்தின் மூல காரணிகளைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற முறையில் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலமே  இதனை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரையில் போதைப் பொருள் மாபியாவை இயக்குபவர்கள் அரசியல்வாதிகள் என்பது வெளிப்படை உண்மை. கடந்த வாரம் சீவலி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதைப் பொருள் தடுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்த கருத்து இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ”இலங்கையில் 90 வீதமான மதுபான நிலையங்களின் உரிமையாளர்கள் அரசியல்வாதிகளே” என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ”அரசாங்கம் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒருபுறம் நடத்திக் கொண்டு மறுபுறம் மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது எந்தவகையில் நியாயமானது?” என மாணவர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். மற்றுமொரு மாணவர், இலங்கையில் போதைப் பொருளை அழித்தொழிப்பதில் ஏன் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது? என வினவியுள்ளார்.

மாணவர்கள் எழுப்பிய இதே கேள்விகளையே நாமும் எழுப்புகிறோம். ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் மாபியாவைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும். இந்த மாபியாவின் பின்னணியில் நின்று செயற்படும் அரசியல்வாதிகளை கட்சி பேதம் பாராது தண்டிக்க வேண்டும். அவர்களது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். போதைப் பொருள் வியாபாரத்துக்கு துணை போகும் அரச அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு அவர்களது தொழில் பறிக்கப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாகவே இதனை முற்றாக ஒழிக்க முடியும். மாறாக போதைப் பொருளுடன் எந்தவித சம்பந்தமுமற்றவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால் மாத்திரம் நாம் எதிர்பார்க்கும் எந்தப் பலனையும் அடைந்துவிட முடியாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.