ஹஜ் விவகாரத்தில் மீண்டும் அரசியலை நுழைப்பது நல்லதல்ல

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம்

0 594

ஹஜ் விடயத்தில் சகல தரப்பினரது ஒத்துழைப்பும் வரவேற்கத்தக்கதாகும். இவ்விவகாரத்தில் மீண்டும் அரசியல் உள்ளீர்க்கப்படுவது அழகான வியமல்ல என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

ஹஜ் கோட்டா அதிகரிப்பு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த அரசாங்கத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு இல்லாத காரணத்தால் ஹஜ் விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. இதற்குப் பிரதான காரணமாக இந்த விடயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருந்ததையே குறிப்பிட வேண்டும். எனினும் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மீண்டும் உருவாக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த அமைச்சு பொறுப்பு எனக்கு தரப்பட்டது. இதன்பின்னர் நாம் ஹஜ் விவகாரத்தில் அரசியலை கலக்காது சுயாதீனமாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இருந்தபோதிலும் சில அரசியல்வாதிகள் அதிகாரத்தில் உள்ளவர்கள் சிலரது உதவியுடன் ஹஜ்விடயத்தில் முக்கை நுழைக்க எத்தனித்தனர். நாம் அதற்கு இடமளிக்கவில்லை.

2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு 2040 கோட்டா மாத்திரமே கிடைத்தது. 2017 ஆம் ஆண்டாகும்போது 2200 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டில் 3000 கோட்டாவாக மேலும் உயர்வடைந்தது. இந்நிலையில் இலங்கை முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கும் சவூதி ஹஜ் அமைச்சுக்கும் இடையில் பல்வேறுமட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவ்வாறான கடும் முயற்சியின் பின்னரே இலங்கைக்கு இவ்வருடம் கடந்த வருடத்தை விட 500 கோட்டாக்கள் அதிகமாக கிடைத்தன.

அத்துடன் போக்குவரத்து ஏற்பாடுகளில் உள்ள சிக்கல்களை நீக்கல் மற்றும் பணப்பரிமாற்றாத்தில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

இதுதவிர எதிர்வரும் காலங்களில் மேலும் 2000 ஹஜ் கோட்டாவை அதிகமாக வழங்குவதற்கு சவூதி ஹஜ் அமைச்சு உறுதியளித்துள்ளது.

ஹஜ் கோட்டாவை பகிர்ந்தளிப்பதில் சவூதி அரசாங்கம் கடும் சிரமங்களை எதிர்நோக்குகிறது. எனினும், இலங்கை ஹஜ்ஜாஜிகள் மீது சவூதி அரேபியாவுக்கு நல்லபிப்பிராயம் இருக்கிறது. முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அரச ஹஜ் குழுவின் முயற்சி மற்றும் இலங்கையர்கள் மீதான சவூதியின் நல்லாபிப்பிராயத்தின் விளைவாக எமக்கு இந்த கோட்டா அதிகரிப்பு கிடைத்திருக்கிறது.

அரசியல் குழப்பகரமான சூழ்நிலையில் இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌஸி நியமிக்கப்பட்டிருந்தார். அவரும் ஹஜ் விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செய்பட்டார். அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநரான ஹிஸ்புல்லாஹ் குறித்த காலப்பகுதியில் அமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவரின் கீழ் முஸ்லிம் சமய விவகாரமும் உள்ளீர்க்கப்பட்டிருந்தது. இதன்போது  மேலும் 2000 ஹஜ் கோட்டாவை அதிகரித்து தருமாறு கோரிக்கை விடுத்து உத்தியோகபூர்வமாகக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இலங்கை ஹஜ் விவகார செயற்பாடுகளை சுயாதீனமாக செயற்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை நாம் செய்து வருகின்றோம். அதனை விரைவுபடுத்தி அரசியல் உட்செல்லாது ஹஜ் விடயத்தில் சுயாதீனத் தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.