ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் முரண்பாடு  

சுதந்திரக் கட்சியை ஒரே அணியாக திரட்ட முயற்சி என்கிறார் முன்னாள் செயலாளர்  

0 634

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எவரது பெயரையும் தீர்மானிக்கவில்லை. ஒவ்வொருவர் குறித்து கட்சிக்குள் விமர்சனங்கள் உள்ளன. கருத்து முரண்பாடுகளும் உள்ளன. ஆனால் அனைவரையும் ஒரே அணியாக ஒன்றுதிரட்ட முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்  ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றமை குறித்து கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கியமாகவும் கூட்டணியாகவும் அமைக்க வேண்டிய பொறுப்புமே  இப்போது எமக்குள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய எமக்கு இன்னமும் நீண்ட காலம் உள்ளது. முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். ஆகவே முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு எமது கட்சியை தயார்படுத்த வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டணியை அமைக்கும் பணிகளை இப்போது கட்சியாக நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளராக  களமிறக்க பல சிறந்த தலைவர்கள் உள்ளனர். சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் செல்வாக்கை பெறக்கூடிய தலைவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து ஊடகங்கள்தான் கருத்துக்களை முன்வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அணிகளை உருவாக்கி வருகின்றன. என்றாலும் கட்சிக்குள் சில காரணிகளில் கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பது உண்மையே. ஒருசிலர் மாற்றுக்  கருத்துக்களை முன்வைத்து அவர்களின் நிலைப்பாடுகளை முன்வைக்கும்போது மாற்றுக் கருத்தாளர்களுக்கு முரண்பாட்டுக் கருத்தாகவே இருக்கும். ஆனால் இது கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாடல்ல. சகலரது கருத்துக்களையும் ஆராய்ந்து மிகச் சரியான கொள்கையுடன் கட்சியை கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. அதற்கான நடவடிக்கையையே நாம் முன்னெடுக்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது பல்வேறு விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. மிகவும் கடினமான சூழலிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக்கிக்கொண்டோம் . இப்போது எதிர்கட்சியாக, பலமான கட்சியாக செயற்பட்டு வருகின்றோம். மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்ற பயணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியாகப் பயணிக்கத் தீர்மானித்துள்ளது எனவும்  அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.