மட்டு. தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்கு விலை போகவில்லை

அமைச்சர் சஜித் பிரேமதாச

0 590

மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் பணத்துக்கு விலை போகவில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மக்கள் ஆதரவற்று அரசியலமைப்பு, ஜனநாயகத்தைப் புறந்தள்ளிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தவர்களை ஜனறாயக வழியில் நாங்கள் துரத்தியடித்துவிட்டோம் என்று வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வாழைச்சேனை கும்புறுமூலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 148 ஆவது மாதிரிக் கிராமமான “பழமுதிர்ச்சோலை” வீடமைப்புத் திட்டம் நேற்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்:

கடந்த காலங்களில் இந்த நாட்டை சூறையாடியவர்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் திருட்டு வழியில் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டு களவாக அமைச்சுக்களை உருவாக்கி  மீண்டுமொருமுறை நாட்டைச் சூறையாடத் தயாரானார்கள். அந்த திருட்டுக் கூட்டத்தை ஜனநாயக வழியில் மக்களின் செல்வாக்கு மூலம் நாங்கள் துரத்திவிட்டோம்.

எங்கள் அரசாங்கம் களவாக ஒப்பந்தகளைச் செய்துள்ளதாக திருட்டுத்தனமாக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தவர்கள் தற்போது கூறிவருகிறார்கள். நாங்கள் எப்போதும் மக்களின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள். வீதிகளைப் புனரமைப்பது, கடற்றொழிலாளர்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தவும், விவசாயிகள் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் சென்று ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக  சிலர் நிதி மோசடி, பதவி மோசடி, அபிவிருத்தி மோசடி போன்ற ஒப்பந்தங்களைச் செய்தார்கள். அவர்கள் தங்களின் சொந்தக் குடும்பங்களை  வளர்ப்பதற்காக ஒப்பந்தங்களைச் செய்தார்கள். அவர்கள் நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை.

களவாக ஒப்பந்தங்கள் செய்தவர்களை நாட்டுமக்கள் அடையாளம் கண்டார்கள். அவர்களை மக்களின் சக்தியைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதயில் ஓரம்கட்டி திடுட்டு ஒப்பந்தங்களைக் கிழித்து குப்பையில் போட்டுவிட்டோம்.

இந்த நாட்டிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், சிறிநேசன், இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, அமீர் அலி ஆகியோர் இலஞ்சங்களுக்குத் துணை போகாதவர்கள். ஜனநாயகத்தின் பால் அன்புகொண்டு உறுதியாக இருந்தார்கள். இடையில் உருவாக்கப்பட்ட தி்ருட்டு அரசுடன் இணையாதவர்கள்.

காசுக்கு விலை போகாத மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் காணப்படக் கூடிய வீட்டுப் பிரச்சினைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்தி செய்து தருவேன் என்றார்.

எனது தந்தை இந்த நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து உயிர்த் தியாகம் செய்தவர். அந்த வழியில் நானும் நின்று இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் முழு மூச்சாகப் பணியாற்றுவேன் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், விவசாயம் மற்றும்  கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். யோகேஸ்வரன், ஜீ. சிறிநேசன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.