பல்லின சமூகங்களோடு பண்பாடுகளால் உறவைப் பலப்படுத்துவோம்

0 1,763

 

நிச்சயமாக நாம் ஆதமின் சந்ததியினரை கண்ணியப்படுத்தி விட்டோம், கடலிலும் கரையிலும் அவர்களைச் சுமந்தோம்.” (அல்இஸ்ராஃ: 70)

உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான்.

இந்தக் கண்ணியம் அல்லாஹ்வால் பொதுவாக மனித சமூகத்துக்கு வழங்கப்பட்டது. இது ஆதமின் அனைத்து சந்ததியினருக்கும் உரியது. அதே நேரம் அல்லாஹ், அவனது தூதர் முஃமின்களுக்கு விஷேட கண்ணியம் உள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“நிச்சயமாக நாம் உங்களை ஒரே பெண்ணிலிருந்தும் ஒரே ஆணிலிருந்தும் சிருஷ்டித்தோம். பின்னர் கோத்திரங்களாகவும் குழுக்களாகவும் ஆக்கினோம். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.” (அல் ஹுஜ்ராத்: 13)

இந்த உலகில் படைக்கப்பட்டவர்கள் அனைவரையும் அல்லாஹ்  உங்களை ஒரே பெண்ணிலிருந்தும் ஒரே ஆணிலிருந்தும் சிருஷ்டித்தோம் என்பதாகக் கூறுகிறான். உங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு, பாகுபாடு, குல கோத்திர வெறி, போன்ற அசிங்கமான குணங்கள் போக்கப்பட வேண்டும். அவற்றால் பெருமை கொள்ளக்கூடாது. உண்மையில் உங்களின் சிறப்பு இறையச்சத்தைக் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதனையும் அல்லாஹ் இந்த வசனத்தில் விளக்குகிறான்.

இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றி அதனடிப்படையில் வாழ்பவரே இவ்வுலகிலும் மறுமையிலும் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதனை ஆணித்தரமாகக் கூறும் இஸ்லாம், ஒருவர் தான் ஏற்றிருக்கின்ற இந்த மார்க்கத்தை அல்லது இந்த சத்தியக் கொள்கையை பிறர்மீது பலவந்தமாகத் திணிக்கும் உரிமையை எவருக்கும் வழங்கவில்லை.

“மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது. ஏனெனில், வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது.” (ஸூறா அல்பகரா- 256)

”மேலும், உம் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள். எனவே மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?” (அல்குர்ஆன் 10:99).

இஸ்லாத்தை அழகாக மக்களுக்கு முன்வைக்க வேண்டுமென்ற கட்டளையை முஸ்லிம்களுக்கு முன்வைக்கும் இஸ்லாம் பிற மதத்தவர்களோடும் பிற மதத்தவர்கள் வணங்குகின்ற தெய்வங்களோடும் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதனையும் எமக்கு விரிவாகத் தெளிவுபடுத்துகிறது.

1- அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைப்பவர்களை நீங்கள் ஏசாதீர்கள்.

“அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைப்பவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அதன் விளைவாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள்.” (அல்குர்ஆன் 6:108)

“அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைப்பவர்களை நீங்கள் ஏசாதீர்கள்” என்ற கட்டளையிலிருந்து அவர்களோடு நாம் எவ்வளவு தூரம் சகிப்புத்தன்மையுடனும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.

“அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைப்பவர்களை நீங்கள் ஏசாதீர்கள். அதனால் அவர்கள் அல்லாஹ்வுக்கு ஏசிவிடுவார்கள் என்ற செய்தியிலிருந்து அவர்கள் வணங்குகின்ற தெய்வங்களை நாம் திட்டினாலோ தேவையற்ற வார்த்தைகளால் ஏசினாலோ அவர்களிடமிருந்தும் அப்படியான தகாத, முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களையே நாமும் செவிமடுக்க நேரிடும் என்பதனால் அது தடுக்கப்பட்ட காரியம் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிற மதத்தவர்கள் வணங்குகின்ற தெய்வங்களோடு சம்பந்தப்படுகின்ற இப்படியான சிறிய விடயங்களையே இஸ்லாம் ஆணித்தரமாக தடுக்கின்றது என்றால் அந்த தெய்வங்களை சேதப்படுத்துவதோ அதற்கு பங்கம் விளைவிப்பதோ எவ்வகையான குற்றச்செயல் என்பதனை நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

2- மனிதர்களுக்கு நன்மை செய்தல்.

“மார்க்க விடயத்தில் உங்களுக்கெதிராக (ஆயுதம் தூக்கி)ப் போராடாத, உங்களை உங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் உபகாரம் செய்வதனை விட்டும் நீங்கள் அவர்களுடன் நீதியாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கமாட்டான்.” (60:08)

இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் அத்துமீறலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள், நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.”(05:02)

“மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் குடும்பம். அல்லாஹ்வின் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

தெளிவான இணைவைப்பு, இறைமறுப்பு, பாவங்களை பகிரங்கப்படுத்துதல், அதற்குத் துணைபோதல் போன்ற மார்க்கம் தடைசெய்த விடயங்களை தவிர்த்து எதிலும் மார்க்க வரையறைகளை மீறிவிடாது பொதுவான நற்காரியங்கள், கல்வி நடவடிக்கைகள், பொதுவான வேலைத்திட்டங்களில் பிற சமயத்தவர்களுக்கு உதவி செய்வதும் அதனூடாக அவர்களோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதும் இஸ்லாம் போதிக்கும் அம்சங்களாகும்.

நல்லவைகளை வாழவைத்தல், சமூக தீமைகளை ஒழித்தல் போன்ற விடயங்களில் அவர்களுக்கு முன்மாதிரிகளாக நாம் திகழவேண்டும். மனித சமூகத்துக்கே கேடுவிளைவிக்கும் அனைத்து விதமான விடயங்களையும் சமூகத்துக்கு இனம் காட்டுகின்ற பணியை முன்னின்று நாம் செய்ய வேண்டும்.

இன, மத, குல, சமய, நிற வேறுபாடுகளுக்கு அப்பால் தேவையுடையவர்களை இனம்கண்டு அவர்களுக்கு உதவுதல், அடிப்படை வசதியற்றவர்களை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல், கற்றல் உபகரணங்களைக்கூட வாங்கிக்கொள்ள முடியாத வறிய நிலையிலுள்ள பாடசாலை மாணவ மாணவியர்களுக்கு அதற்கான உதவி ஒத்தாசைகளை வழங்குதல், மேலும் இதுபோன்ற பொதுவான காரியங்களில் எமது பணிகளை மேம்படுத்துவதும் அதனை நோக்கி எமது இளம் சமூகத்துக்கு விழிப்புணர்வை வழங்குவதும் எமது கடமையாகும்.

3- எவருக்கும் தீங்கின்றி வாழ்தல்.

“எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர்தான் முஸ்லிம். எவரிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் பொருட்கள் பற்றி அச்சமற்று மக்கள் இருக்கிறார்களோ அவர் தான் உண்மையான முஃமின்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் (நூல்: திர்மிதீ, நஸாஈ)

இறைவனை நம்பி ஏற்றிருக்கின்றவரால் ஒருபோதும் பிறரது உயிருக்கோ உரிமைக்கோ உடமைக்கோ பொருளாதாரத்துக்கோ ஒரு போதும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அவ்வாறான ஒரு பண்பட்ட, பக்குவமான மனிதனையே இறைவிசுவாசம் உருவாக்க முனைகிறது. பண்பாடட்டற்ற, பிறருக்கு தொந்தரவழிக்கக் கூடிய மனிதர்களால் இஸ்லாத்துக்கோ மனித சமூகத்துக்கோ எவ்வித நன்மையும் கிடையாது.

ஒரு முஸ்லிமின் அகராதியில் பிறர் உரிமையில் அத்துமீறுகின்ற எவ்வித செயற்பாடுகளுக்கும் இடம் கிடையாது. அதற்கு நேர்மாற்றமாக தனக்குத் தேவையானதைக்கூட பிறருக்காக இழக்கின்ற மனோநிலை கொண்டவனாக அவன் இருப்பான் என்பதனையே இறைச் செய்திகள் அடையாளப்படுத்துகின்றன.

4- நீதிக்கு சான்று பகர்தல்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமாலி­ருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

சமூகத்தில் நடக்கின்ற நல்லவைகளோ கெட்டவைகளோ தமக்கு சாதகமானவைகளோ பாதகமானவைகளோ எதுவாயினும் நீதி, நியாயத்துக்கு மாத்திரம் சான்று பகர்வதனையே மார்க்கம் வலியுறுத்துகின்றது, எனது சமூகம், எனது மதத்தவர்கள், எனது ஊர்மக்கள், என்ற எவ்வித பாகுபாடுமின்றி நீதிக்கும் நியாத்துக்கும் குரல் கொடுக்கின்ற மனிதர்களே இறையச்சத்தை தன்னகத்தே கொண்டவர்களாவர். அவர்களால் தான் இந்த சமூகத்திற்கு உயர்வுண்டு, அதுவே அநியாயம் என்ற இருள் சூழ்ந்த சமூகத்தின் விடியலுக்கான பாதையுமாகும்.

பிற சமூகத்தவர்களுடனான உறவில் பிற மதத்தவர்களை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஏசாதிருத்தல், அவர்களது தெய்வங்களை திட்டாதிருத்தல், பிறரால் வணங்கப்படுகின்ற தெய்வங்களை சேதப்படுத்தாமலிருத்தல், நல் வழியில் அவர்களை சேர்ந்து நடத்தல், அவர்களது உணர்வுகளை காயப்படுத்தாது அவர்களுக்கு முடியுமான உதவி ஒத்தாசைகளை செய்தல், அவர்களது உயிர், உடமை, உரிமை, போன்றவற்றிற்கு எவ்வித பாதிப்பையும் விளைவிக்காமல் இருத்தல், என்றும் நீதிக்கு துணைநின்று நீதி நியாத்துக்கு சான்று பகர்பவர்களாக வாழ முயற்சித்தல், இத்தகைய போதனைகளை கடைப்பிடித்து நாட்டில் நல்லவைகளை வாழவைத்து அதனூடாக மனிதத்தையும் இஸ்லாத்தையும் வாழவைக்க முயற்சிப்போம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.