1064 சட்டவிரோத துப்பாக்கிகளுடன் 865 பேர் கடந்த ஆண்டில் மட்டும் கைது

ரீ 56 ரக துப்பாக்கிகள் 191 உம் சிக்கின

0 559

நாடளாவிய ரீதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 1064 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் 865 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்ற சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே, கடந்தாண்டு பொலிஸார் கைப்பற்றிய சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இவ்வறிவிப்பை விடுத்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு 781 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1064 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

2017 இல் ரீ 56 ரக துப்பாக்கிகள் 34 பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் கடந்தாண்டு 191 ரீ 56 ரக துப்பாக்கிகள் கைப்பற்றபப்ட்டுள்ளன. 2017 இல் கைத்துப்பாக்கிகள் 23 சிக்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டில் 30 கைத்துப்பாக்கிகள் சிக்கியுள்ளன.  கடந்தாண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.  2017 இல் 0.38 ரிவோல்வர்கள் 22 மீட்கப்பட்ட நிலையில் 2018 இலும் அத்தகைய 22 ரிவோல்வர்கள் மீட்கப்பட்டுள்ளன.  குழல் 12 ரக துப்பாக்கிகள் 2017 இல் 76 உம் 2018 இல் 55 உம் மீட்கப்பட்டுள்ளன.  2017 இல் கட்டுத் துவக்குகள் 608 கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடம் அத்தகைய கட்டு துவக்குகள் 632 கைப்பற்றப்பட்டுள்ளன.  இதனைவிட கடந்த 2018 இல் உள்நாட்டு தயாரிப்பு கைத்துப்பாக்கிகளான கல்கடஸ் ரக துப்பாக்கிகள் 22 உம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ரகங்களுக்குள் அடங்காத வேறு துப்பாக்கிகள் 18 கடந்த 2017 இலும் 2018 இல் 93 துப்பககிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே  தொடர் துப்பாக்கிச் சூடுகள், பாதாள உலக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றும் தீவிர செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.