அரபா நாளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

0 78

மெளலவி ஏ.ஜி.எம்.ஜலீல் (மதனி),
மஃஹதுஸ் ஸுன்னா அறபுக்கல்லூரி, காத்தான்குடி

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்­களும் இஸ்­லாத்தின் பார்­வையில் மிகச் சிறந்த தினங்­க­ளாகும். ரமழான் மாதத்தின் பிந்­திய 10 தினங்­களும் சிறப்பு பெறு­வ­தற்கு லைலத்துல் கத்ர் இரவு கார­ண­மாக இருப்­பது போல் துல்­ஹஜ்ஜின் முதல் 10 இர­வு­களும்  சிறப்பு பெறு­வ­தற்கு அதில் ஒன்­பதாம் தினத்தில் இடம்­பெறும் அரபா தினம் கார­ண­மாகும். ஆக­வேதான் துல்­ஹஜ்ஜின் முதல் பத்து தினங்கள் ரம­ழானின் பிந்­திய பத்து இர­வு­க­ளுக்கு சம­மா­ன­தாகும் என அறி­ஞர்கள் கூறு­கின்­றனர்.

நபி­ய­வர்கள்  கூறு­கின்­றார்கள்.. மனி­தர்கள் துல்ஹஜ் முதல் பத்தில் செய்யும் அமல்­களை அல்லாஹ் விரும்­பு­வ­துபோல் எந்தக் காலத்­திலும் அவ்­வ­ளவு அதிகம் அமல்­களை விரும்­பு­வ­தில்லை என்ற போது இறை­பா­தையில் போரி­டு­வதை விடவும் இக்­கா­லப்­ப­கு­தியில் இபாதத் செய்­வது  அல்­லாஹ்­வுக்கு விருப்­ப­மா­னதா? என சஹா­பாக்கள் வினவ, ஆமாம் ஜிகாதை விடவும் நல்­ல­மல்கள் அல்­லாஹ்­வுக்கு இக்­காலப் பகு­தியில் விருப்­ப­மா­னவை தான். போருக்கு புறப்­பட்டு போரி­லேயே ஷஹீ­தா­கி­விடும் உயிர்த்­தி­யா­கியைத் தவிர..  எனவே அந்­நாட்­களில் அதிகம் தக்பீர் தஹ்லீல், திக்ர் ஆகி­ய­வற்றில் ஈடு­ப­டுங்கள்.  (நூல்:  புகாரி)

அறபா தினத்­தன்று அல்­லா­ஹுத்­த­ஆலா கீழ் வானத்­துக்கு இறங்கி வந்து அரஃபா மைதா­னத்தில் ஒன்று கூடி­யி­ருக்கும் மக்­களைக் கண்டு பூரிப்­ப­டைந்து மலக்­கு­க­ளிடம் இவர்கள் எதற்­காக இங்கு ஒன்று கூடி இருக்­கின்­றார்கள் என்று பெருமை பாராட்டி பேசு­கின்றான்  (முஸ்லிம்)
அரஃபா நாளான ஒன்­பதாம் தினத்­தன்று ஹஜ்­ஜுக்கு செல்­லாத முஸ்­லிம்கள் நோன்பு நோற்­பது சுன்­னத்­தாகும்.  நபி­ய­வர்கள் துல்ஹஜ் பிறை ஒன்­ப­திலும் ஆஷூரா தினத்­திலும் மற்றும் ஒவ்­வொரு மாதத்தின் 3 தினங்­களும் நோன்பு நோற்கும் வழக்­க­மு­டை­ய­வர்­க­ளாக இருந்­தார்கள். (நூல் : அபூ­தாவூத்)
அவ்­வாறே நபில் தொழு­கைகள் திகிர், திலாவத், தஸ்பீஹ், இஸ்­திஃபார், தக்பீர் போன்­ற­வற்றில் இந்­நாட்­களில் நேரத்தை செல­வி­டு­வது மிகச் சிறந்­த­தாகும்

உழ்­ஹிய்யா தொடர்­பான சட்­டங்கள்
தியா­கத்­தி­ரு­நாளாம் ஹஜ் பெரு­நாளை முன்­னிட்டு ஒரு முஸ்லிம் நிறை­வேற்ற வேண்­டிய இபா­தத்­களில் முக்­கி­ய­மா­னது உழ்­ஹிய்­யா­வாகும்.  ஹஜ் பெரு­நா­ளன்றோ  அல்­லது அதற்கு அடுத்த மூன்று தினங்­க­ளிலோ அல்­லாஹ்­வுக்­காக அறுத்து கொடுக்­கப்­படும் குர்­பானி ஆடு, மாடு ஒட்­ட­கங்­க­ளுக்கு உழ்­ஹிய்யா எனப்­படும்.  நபி­ய­வர்கள்  மதீ­னாவில் வாழ்ந்த பத்து வரு­ட­கா­லத்தில் ஒரு தடவை கூட தவ­றாது நிறை­வேற்றி வந்த முக்­கி­ய­மான ஒரு சுன்­னத்­தாக இது இருக்­கின்­றது. இத­னா­லேயே சில அறி­ஞர்கள் உழ்­ஹிய்யாக் கொடுப்­பது கட்­டாய கடமை என்றும் வலி­யு­றுத்­து­கின்­றனர். இருப்­பினும் அது ஒரு வலி­யு­றுத்­தப்­பட்ட சுன்னத் என்­பதே ஏரா­ள­மான அறி­ஞர்­களின் கருத்­தாகும். வச­தி­யுள்­ள­வர்கள் ஒவ்­வொரு வரு­டமும் இதனை நிறை­வேற்­று­வது வலி­யு­றுத்­தப்­பட்ட ஒரு சுன்னத் ஆகும்.

உழ்ஹிய்யா யாருக்­காக ?
உழ்­ஹிய்யா பற்­றிய தவ­றான  நம்­பிக்கை நம்­ம­வர்­க­ளி­டத்தில் காணப்­ப­டு­கின்­றது. அதா­வது நமது நாட்டு முஸ்­லிம்­களில் அதி­க­மானோர் குர்பான் கொடுப்­பது மர­ணித்­த­வர்­க­ளுக்­காக செய்­யப்­படும் ஒரு கிரி­யை­யென தவ­றாக எண்ணிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.  மாறாக இது உயி­ரோடு இருப்­ப­வர்­க­ளுக்­காக நிறை­வேற்­றப்­படும் ஒரு கிரியை ஆகும்.

நாம் நமக்­கா­கவும் நமது குடும்­பத்­தி­ன­ருக்­கா­கவும் குர்­பானி கொடுக்கும் போது மர­ணித்­த­வர்­க­ளான எமது உற­வி­னர்­க­ளுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என நிய்யத் வைத்துக் கொள்­ளலாம். தவிர மர­ணித்­த­வர்­க­ளுக்­கென பிரத்­தி­யேக உழ்­ஹியா கொடுப்­ப­தற்கு ஸுன்­னாவில் எந்த ஆதா­ரமும் இல்லை. எனவே அது மர­ணித்­த­வ­ருக்­காக ஸதகா செய்­த­தா­கவே ஆகும்.
அவ்­வா­றே  ­உழ்­ஹிய்யா ஒரு­வ­ருக்கு ஆயுளில் ஒரு தடவை தான் என்றும் எம்மில் சிலர் எண்­ணு­கின்­றனர்.  இதுவும் தவ­றாகும். வச­தி­யி­ருந்தால் ஒவ்­வொரு வரு­டமும் இதனை நிறை­வேற்­று­வது சுன்­னத்­தாகும்.

உழ்­ஹிய்யா கொடுக்கும்
பிரா­ணிகள் யாவை?
ஆடு, மாடு, ஒட்­டகம் ஆகிய மூன்று பிரா­ணி­க­ளையும் மாத்­தி­ரமே உழ்­ஹிய்யாக் கொடுக்க முடியும். ஒரு ஆட்டை ஒரு நப­ருக்­கா­கவும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கா­கவும் கொடுக்­கலாம் அவ்­வாறே ஒரு மாட்­டையோ ஒட்­ட­கத்­தையோ ஒருவர் தனக்­காக- தன் குடும்­பத்­திற்கு மாத்­தி­ரமும் விரும்­பினால் ஏழு பேர் வரைக்கும்  கூட்டு சேர்ந்தும் கொடுக்­கலாம். அவ்­வேழு நபர்­க­ளுடன் அவர்­களின் குடும்­பங்­களும் அடங்கும். (பதாவா இப்னு பாஸ் றஹி­ம­ஹுல்லாஹ்.)

நபி­ய­வர்கள் தனக்­கா­கவும் தனது குடும்­பத்­தி­ன­ருக்­கா­கவும் ஒரு ஆட்டை அறுத்து உழ்­ஹிய்யாக் கொடுத்­தார்கள். அதன் மாமி­சத்தை அவர்­களும் உண்டு ஏனை­ய­வர்­க­ளுக்கும் கொடுத்­தார்கள் (ஆதாரம் திர்­மிதி)
நபி­ய­வர்கள் ஒட்­டகம் மற்றும் மாட்டில் எங்­களில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொள்­ளலாம் என்று கட்­ட­ளை­யிட்­டார்கள் (ஆதாரம்: முஸ்லிம்)
ஆகவே, மிகச் சிறந்­தது ஒருவர் ஒரு ஒட்­ட­கத்தை கொடுப்­ப­தாகும். அடுத்­தது மாட்டை கொடுப்­பதும், அதற்­க­டுத்­தது ஆட்டை கொடுப்­பதும் அதற்­க­டுத்­த­தாக மாடு அல்­லது ஒட்­ட­கத்தில் கூட்டுச் சேர்­வதும் சிறந்­த­தாக கணிக்­கப்­படும்.

உழ்­ஹிய்யா பிரா­ணியில் கவ­னிக்­கப்­பட வேண்­டிய நிபந்­த­னைகள்
1-. குறித்த பிராணி குறிப்­பிட்ட வய­தெல்­லையை அடைந்­தி­ருக்க வேண்டும்.  அதா­வது செம்­மறி ஆடாயின்  ஆறு மாதங்­களும் வெள்­ளா­டாயின் ஒரு வரு­டமும், மாடு இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­ன­தா­கவும் ஒட்­டகம் ஐந்து வரு­டங்கள் பூர்த்­தி­யா­ன­தா­கவும் இருக்க வேண்டும். குறித்த வய­தெல்­லையை அடைந்த பிராணி கிடைக்­கா­விடில் அதை­விட குறைந்த வயது பிரா­ணியை அறுப்­பதில் தவ­றில்லை என அறி­ஞர்கள் சிலர் குறிப்­பி­டு­கின்­றனர்.

2-. பிராணி அங்க குறை­பாடு அற்­ற­தாக இருக்க வேண்டும். அதா­வது குறித்த குறை­யினால் அதன் ­மா­மி­சமோ அல்­லது அதன் பெறு­ம­தியோ குறை­யாத அள­வுக்கு குறை­பா­டுகள் அற்­ற­தாக இருக்க வேண்டும். சிறு காயங்கள் கீறல்கள், தழும்­புகள் ஏற்­பட்­டி­ருப்­பதில் பிரச்­சனை இல்லை.

நபி­ய­வர்கள் கூறி­னார்கள்…
நான்கு குறை­பா­டுகள் உள்ள பிரா­ணியை உழ்­ஹிய்யாக் கொடுக்க முடி­யாது. தெளி­வான குருடு, தெளி­வான முடம், தெளி­வான நோயுற்­றது, கடு­மை­யாக மெலிந்­தது ஆகி­ய­வை­க­ளாகும் என நபி­ய­வர்கள் கூறி­னார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் ஜாமிஉ)

3.-அறுக்­கப்­படும் பிரா­ணியின் எப்­ப­கு­தி­யையும் விற்­பதோ கூலி­யாக கொடுப்­பதோ கூடாது. நபி அவர்கள் கூறி­னார்கள் குர்­பானி பிரா­ணியின் தோலை யாரா­வது விற்றால் அவ­ருக்கு குர்­பா­னியே கிடை­யாது. (ஆதாரம்: அல் ஜாமிஉ)

4-. குர்­பானி பிரா­ணியை குறித்த நேர எல்­லைக்குள் அறுக்க வேண்டும். அதா­வது ஹஜ்ஜுப் பெருநாள் தொழு­கையை நிறை­வேற்­றி­யது முதல் அன்­றைய தினமும் அதற்­க­டுத்த அய்­யா­முத்­தஷ்ரீக்  தினங்­க­ளான துல்ஹஜ் 11,12,13ம் தினங்­க­ளிலும் மாலை நேரம் வரை உழ்­ஹிய்யாப் பிரா­ணியை அறுக்க முடியும். முதல் தினத்தில் அறுத்து விடு­வது சிறந்­த­தாகும்.

நபி­ய­வர்கள் கூறி­னார்கள். பெருநாள் தொழு­கைக்கு முன் யாரா­வது குர்­பானி பிரா­ணியை அறுத்து விட்டால் அவர் வேறொரு பிரா­ணியை குர்­பானி கொடுக்­கட்டும். (ஆதாரம்: புகாரி)

அலி ரலி­யல்­லாஹு அவர்கள் அறி­விக்­கின்­றார்கள். அறுக்கும் தினங்­க­ளா­வன பெருநாள் அன்றும் அதற்­க­டுத்த 3 தினங்­களும் ஆகும். ஹஜ் பெருநாள் தொழு­கையை நிறை­வேற்­றிய பின் உட­ன­டி­யாக குர்­பானி கொடுத்து அப்­பி­ரா­ணியின் மாமி­சத்தில் இருந்து புசிப்­பது நபி­ய­வர்கள் செய்து வந்த வழி­மு­றை­யாகும்.

நபி­ய­வர்கள் நோன்புப் பெருநாள் தினத்­தன்று காலை உணவு அருந்­தாமல் தொழச் செல்­வ­தில்லை. ஹஜ் பெரு­நா­ளன்று காலை உணவு உண்­ணாமல் தொழு­கைக்குச் சென்று தொழு­து­விட்டு வந்து குர்­பானி கொடுத்து பிரா­ணியின் மாமி­சத்­தி­லி­ருந்து உண்­பார்கள். (ஆதாரம்: மிஷ்காத்)

5.- குர்­பானி கொடுத்த பிரா­ணியின் மாமி­சத்தை மூன்று பகு­தி­க­ளாக பிரித்து ஒன்றை தனக்கும் அடுத்­ததை உற­வி­னர்­க­ளுக்கும் மற்­றை­யதை ஏழை­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிப்­பது விரும்­பத்­தக்க வழி­மு­றை­யாகும்.

6-. உழ்­ஹிய்யா குர்­பானி கொடுக்க நிய்யத் வைத்­தவர் துல்ஹஜ் தலைப்­பிறை பிறந்­த­தி­லி­ருந்து குர்­பானி பிரா­ணியை அறுக்கும் வரைக்கும் தனது உடலின் முடிகள் ரோமங்கள், நகங்­களை அகற்­றாமல் இருப்­பது நபி வழி­யாகும்.
நபி­ய­வர்கள் கூறு­கின்­றார்கள்.. உங்­களில் குர்­பானி கொடுக்க நிய்­யத்து வைத்­தவர் தலைப்­பிறை பிறந்­த­தி­லி­ருந்து குர்­பானி கொடுக்கும் வரை தனது உட­லி­லுள்ள முடிகள் ரோமங்­களை அகற்­றாமல் பார்த்துக் கொள்­ளட்டும். (ஆதாரம் :முஸ்லிம்)

குர்­பானி பிரா­ணியை உரி­ய­வரே தன் கையினால் அறுப்பது சிறந்ததாகும்.   அவர் விரும்பினால் அறுப்பதற்கு வேறு ஒருவரையும் பொறுப்பாக்கலாம். அவ்வாறே தனது குர்பானி பிராணியை வாங்குவதற்கும் அறுத்து விநியோகிப்பதற்கும் ஒருவரை நியமிப்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் ஹக்கீம் பின் ஹிஸ்ஸாம் எனும் நபித்தோழரிடம் ஒரு தீனாரை கொடுத்து தனக்காக ஒரு குர்பானி பிராணியை வாங்குமாறு பணித்தார்கள். (நூல் :அஹமத்)

அவ்வாறே நபியவர்கள் இறுதி ஹஜ் ஜின் போது குர்பானிக்காக வந்திருந்த பிராணிகளில் 63 பிராணிகளை தனது கைகளினாலேயே அறுத்தார்கள். அதன் பின்பு கத்தியை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து மீதி பிராணிகளை அறுக்குமாறு பணித்தார்கள் (நூல்: முஸ்லிம் )
எனவே இந்த துல்ஹஜ் மாதத்தில் அபார நன்மைகள் செய்து இறையருளைப் பெற முயற்சிப்போமாக. ஆமீன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.