பலஸ்தீன விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை வேடம்

* சபை விவாதத்தில் எம்.பி.க்கள் கடும் கண்டனம் * இஸ்ரேலுடனான உறவைத் துண்டிக்கவும் வலியுறுத்து

0 101

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

பலஸ்­தீன விவ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்கம் இரட்டை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருப்­ப­தாக கடும் விமர்­ச­னத்தை முன்­வைத்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், இஸ்­ரே­லு­ட­னான அனைத்து இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளையும் உட­ன­டி­யாகத் துண்­டிக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினர். பலஸ்­தீனின் தற்­போ­தைய நிலை தொடர்­பாக சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே எம்.பி.க்கள் இவ்­வாறு தெரி­வித்­தனர்.

ரவூப் ஹக்கீம் எம்.பி.

பலஸ்தீன் விட­யத்தில் ஜனா­தி­பதி இரட்டை நிலைப்­பாட்டை வகிக்­கிறார். அவர் பிள்­ளை­யையும் கிள்­ளி­விட்டு தொட்­டி­லையும் ஆட்டு­கிறார். இந்த அரசாங்கம் அமெ­ரிக்­காவின் அடி­மை­யா­கவே இருந்து வரு­கி­றது. உண்­மையில் அர­சாங்­கத்­துக்கு பலஸ்தீன் மீது அக்­கறை இருக்­கு­மானால் இஸ்ரேல் பிர­த­மரை சர்­வ­தேச  குற்­ற­வியல் நீதி­மன்றில் நிறுத்த வேண்டும் என்ற தென் ஆபி­ரிக்­காவின் கோரிக்­கைக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற பலஸ்­தீனின் தற்­போ­தைய நிலை தொடர்­பாக சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை முன்­மொ­ழிந்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

இஸ்ரேல் அர­சாங்­கத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் முன் நிறுத்­த­வேண்டும் என தென் ஆபி­ரிக்க அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக எகிப்து அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. அதே­போன்று பல நாடு­களும் அதற்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றன. ஆனால் பிராந்­தி­யத்தில் சில நாடுகள் இஸ்­ரே­லுடன் இரா­ஜ­தந்­திர உற­வு­களை இன்னும் பேணிக்­கொண்டு வரு­கின்­றன. எமது அர­சாங்­கமும் இந்த தீர்­மா­னத்தில் இருக்­கி­றது. அண்­மையில் எமது வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் இந்த சபையில் உரை­யாற்­றும்­போது, நாங்கள் இஸ்ரேல், ஈரான் உறவை சம­நி­லைப்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் ஈரான் ஜனா­தி­பதி இங்கு வந்தார், நாங்கள் செங்­க­ட­லுக்கு எமது படை­களை அனுப்­பிக்­கொண்­டி­ருக்­கிறோம். இது வெட்­கப்­ப­ட­வேண்­டிய விடயம் அல்­லவா? இது­தானா அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­திர உறவின்  பெரும் அடைவு? அதே­நேரம்  பலஸ்தீன் விட­யத்தில் ஜனா­தி­பதி இரட்டை நிலைப்­பாட்டை வகிக்­கிறார். அவர் பிள்­ளை­யையும் கிள்­ளி­விட்டு தொட்­டி­லையும் ஆட்­டு­கிறார். இந்த அர­சாங்கம் அமெ­ரிக்­காவின் அடி­மை­யா­கவே இருந்து வரு­கி­றது. ஜனா­தி­பதி பைடனின் வேண்­டு­கோ­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பதை அர­சாங்கம் இரா­ஜ­தந்­திரம் என தெரி­விக்­கி­றது. காஸாவை அழிப்­ப­தற்கு பைடன் அர­சாங்கம் 2 ஆயிரம் குண்­டு­களை இஸ்­ரே­லுக்கு வழங்­கு­கி­றது. ஆனால் பைடனின் அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்­கைக்கு அமெ­ரிக்­காவில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு வரு­கி­றது.  இஸ்­ரேலின் இனப்­ப­டு­கொ­லைக்கு எதி­ராக  அமெ­ரிக்­கர்கள் குர­லெ­ழுப்பி வரு­கின்­றனர். அதே­நேரம் இஸ்­ரேலில் பண்­ணை­களில் தொழில் செய்­து­வந்த  வறிய பலஸ்­தீ­னி­யர்­களை அங்­கி­ருந்து இஸ்ரேல் துரத்­தி­விட்டும் கொலை செய்­த­தாலும் அங்கு பண்­ணை­களில் தொழில் செய்­வ­தற்­காக எமது தொழில் அமைச்சர் இங்­குள்ள வறிய மக்­களை தொழி­லுக்­காக அனுப்பி வரு­கிறார். பலஸ்­தீன பிள்­ளை­க­ளுக்கு என அர­சாங்கம் நிதி சேக­ரித்­தது. ஆனால் அந்த நிதியும் பொது மக்­களின் நிதியே தவிர அர­சாங்­கத்தின் நிதி அல்ல. அர­சாங்கம் பெயர் போட்­டுக்­கொள்­கி­றது. உண்­மையில் பலஸ்­தீ­னத்­துக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அர­சாங்­கத்­திடம் இருந்தால் இஸ்­ரேலை சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்­து­வ­தற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தென் ஆபி­ரிக்­காவின் நட­வ­டிக்­கைக்கு ஆத­ர­வ­ளி­யுங்கள்.

மத்­திய கிழக்கு நாடு­களை எப்­போதும் கொந்­த­ளிக்கும் நிலைப்­பாட்டில் வைக்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே இஸ்ரேல், அமெ­ரிக்கா இருந்து வரு­கி­றது.  ஈரா­னுக்கு எதி­ரா­கவும் இஸ்ரேல் யுத்­தத்­திற்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. ஆனால் ஈரான் இஸ்­ரே­லுக்கு வழங்­கிய பதி­ல­டியால் இஸ்ரேல் மெள­மா­கி­யது. உக்­ரைனில் யுத்­தத்தை பைடனின் அர­சாங்­கமே ஆரம்­பித்­தது. உக்­ரைனில் ரஷ்யா மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைக்கு எதி­ராக ஜனா­தி­பதி புட்­டினை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­வர வேண்டும் என பைட­னுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றால் ஏன் இஸ்ரேல் பிர­தமர் நதன்­யா­ஹுவை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு முன் நிறுத்­த­வேண்டும் என தெரி­விக்க திரா­ணி­யில்லை என கேட்­கிறேம். பகலில் ஒரு­வேஷம் இரவில் ஒரு வேஷம் என்றே பைடன் வாழ்ந்து வரு­கிறார்.

அந்த வகையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வ­ளிப்­பதில் தைரி­ய­மாக துணிச்­ச­லாக செயற்­பட்டார். அதன் கார­ண­மாக பலஸ்­தீனில் வீதி­யொன்றில் மஹிந்த ராஜ­பக்ஷ்வின் பெயர் சூட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போன்று ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாச இஸ்­ரே­லிய நலன் பிரி­வினை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்ப நட­வ­டிக்கை எடுத்தார். ஆனால் இஸ்­ரேலில் இந்­த­ளவு படு­மோ­ச­மான வகையில் செயற்­படும் போது அர­சாங்கம் முஸ்லிம் மக்­களின் வாக்­கு­க­ளுக்­காக செயற்­பட்டு வரு­கி­றது.

இஸ்­ரேலின் அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் அழுத்தம் கொடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இஸ்­ரே­லுக்கு எதி­ராக இந்த சபையில் பிரே­ரணை நிறை­வேற்­றிய பின்­னரும், இஸ்ரேல் தொடர்ந்தும் அட்­டூ­ழி­ய­ங்­களை முன்­னெ­டுக்­கு­மானால் எமது அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கையை நிறுத்­திக்­கொள்­வ­தாக அர­சாங்கம் இஸ்ரேல் அர­சாங்­கத்­துக்கு தெரி­விக்க வேண்டும்.

எனவே பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ராக இஸ்ரேல் முன்­னெ­டுத்­து­வரும் யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு கிடைக்கும் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளையும்   ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை, பாது­காப்பு சபை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் என்­பன பயன்­ப­டுத்­திக்­கொண்டு அங்கு யுத்த நிறுத்­தத்தை மேற்­கொள்­வ­துடன் யுத்தக் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். சுயா­தீன பலஸ்தீன் நாடு அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்ற பிரே­ர­ணையை இந்த பாரா­ளு­மன்றம் ஊடாக முன்­வைக்­கிறோம் என்றார்.

இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி.

பலஸ்­தீனில் இடம்­பெற்­று­வரும் இனப்­ப­டு­கொ­லை­களை தடுப்­ப­தற்கு இன்னும் முடி­யா­மல்­போ­யி­ருப்­பது மனித இனத்­துக்கே இழுக்­காகும். அதே­நேரம் இஸ்­ரேலின் இனப்­ப­டு­கொ­லையை அர­சாங்கம் தற்­போ­தா­வது கண்­டிக்க வேண்டும் என இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,  ஆறு மாதங்­க­ளுக்கும் மேலாக பலஸ்­தீன மண்ணில் நடத்­தப்­பட்டு வரும் இனப்­ப­டு­கொ­லைகள் மற்றும் பேர­ழிவை உலகின் பலம் வாய்ந்த ஊட­கங்­களும், நமது நாட்டின் சில பலம் வாய்ந்த ஊட­கங்­களும் மூடி மறைத்து வந்­தாலும், சமூக ஊட­கங்கள் வாயி­லாக பலஸ்­தீ­னத்தின் யதார்த்தம் ஏறக்­கு­றைய சமூ­கத்­திற்கு அம்­ப­ல­மா­னது.

உல­கெங்­கிலும் உள்ள புதிய தலை­முறை, உலகின் எதிர்­கா­லத்­திற்கு உரித்­து­ரிமை கொண்ட தலை­முறை, அந்த எதிர்­கா­லத்தை வழி­ந­டத்­தப்­போகும்  தலை­முறை, சுதந்­திரம், ஜன­நா­யகம் மற்றும் மனித உரி­மைகள் போன்ற பெறு­ம­தி­க­ளுக்கு அர்த்தம் கொடுக்கும் பின்­ன­ணியில், இந்த முன்­மொ­ழிவு தொடர்பில் இன்று இந்த சபையில் விவா­திக்­கிறோம்.

உலகின் பிர­தான பல்­க­லைக்­க­ழக மாணவ தலை­மு­றை­யினர் தனது உயி­ரையும் எதிர்­கா­லத்­தையும் அர்ப்­ப­ணித்து சுதந்­திரம், ஜன­நா­யகம், நியாயம் மற்றும் நீதிக்­காக முன்­னின்று போராடும் தறு­வாயில் இந்த முன்­மொ­ழிவு தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­கிறோம்.

கடந்த வாரம், ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது பலஸ்­தீன அர­சுக்கு புதிய உரி­மைகள் மற்றும் சலு­கை­களை வழங்கும் தீர்­மா­னத்தை பெரும்­பான்மை வாக்­கு­களால் நிறை­வேற்­றி­யது. இது ஐக்­கிய நாடுகள் சபையில் முழு அங்­கத்­து­வத்­திற்கு வழி வகுத்­தது. இந்த முன்­மொ­ழிவு தொடர்­பான விவா­தத்தின் போது, இஸ்­ரே­லிய பிர­தி­நிதி ஐக்­கிய நாடுகள் சபையில் உரை­யாற்­றினார் .மற்றும் இந்த முன்­மொ­ழிவு நிறை­வேற்­றப்­பட்டால், ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் அத­னுடன் இணைந்த அமைப்­பு­க­ளுக்­கான அமெ­ரிக்க உத­வியை குறைக்க எதிர்­பார்க்­கிறேன் என்று அச்­சு­றுத்­தினார். இந்த எச்­ச­ரிக்­கை­யையும் பொருட்­ப­டுத்­தாது 143 நாடுகள் இந்த திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தன, அமெ­ரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்­பட ஒன்­பது நாடுகள் மட்­டுமே இதை எதிர்த்­தன.

சுதந்­திரம், மனித உரி­மைகள், நிற­வெறி அல்­லது இன­வெறி போன்­ற­வற்­றுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்ட அனைத்து முடி­வு­களும் ஒரு நாட்டின் வீட்டோ அதி­கா­ரத்தால் செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கி­யதை நாம் காண்­கிறோம். சர்­வ­தேச நீதி­மன்றம், மனித உரி­மைகள் ஆணைக்­குழு போன்­ற­வற்­றுக்கு தொடர்ந்து சவால் விடுப்­பதை நாம் இன்னும் பார்க்­கிறோம். மோதல்­களை நிறுத்­து­வ­தற்­காக, ஐக்­கிய நாடுகள் சபையின் அமைதி  படை­களை நிறுத்­து­வ­தற்­கான முன்­மொ­ழி­வுகள் கூட அப்­பட்­ட­மாக நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

சுயா­தீன விசா­ர­ணைக்­காக அந்த பூமிக்கு செல்­வ­தற்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் உரி­மைக்கும் தொடர்ந்து சவால் விடுக்­கப்­பட்டு வரு­கி­றது. எகிப்து, கட்டார் மற்றும் அமெ­ரிக்கா உட்­பட அனைத்து மத்­தி­யஸ்­தர்கள் போர் நிறுத்­தத்­திற்கு ஒப்­புக்­கொண்­டனர், ஆனால் நெதன்­யாகு ஆட்சி சமா­தா­னத்­திற்­கான வாய்ப்பை நிரா­க­ரித்­து­விட்­டது.

சர்­வ­தேச அர­சி­ய­லுக்­காக உரு­வாக்­கப்­பட்ட மனி­தா­பி­மான அவ­லத்­தைத்தான் இன்று பலஸ்­தீன மண்ணில் நாம் காண்­கிறோம். காஸா­விற்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்­தி­யா­வ­சிய மனி­தா­பி­மான உத­வி­களை கொண்டு வரும் அனைத்து வாயில்­க­ளையும் இஸ்ரேல் தற்­போது மூடி­யுள்­ளது. காஸாவில் பாது­காப்­பான பிர­தேசம் என்று தற்­போது எது­வுமே இல்லை.

ஆறு மாதங்­க­ளுக்கும் மேலாக, தினமும் இப்­படி மக்கள் கொல்­லப்­பட்டு, பஞ்­சத்தை உரு­வாக்கி, அதன் மூலம் மக்கள், குழந்­தைகள், பெண்கள், நோயா­ளிகள், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள், முதி­ய­வர்கள், கர்ப்­பிணித் தாய்­மார்கள், மருத்­து­வர்கள், மருத்­துவ உத­வி­யா­ளர்கள்,ஊட­க­வி­ய­லா­ளர்கள் என வேறு­பா­டின்றி அனை­வரும் இறக்­கின்­றனர். பாதிக்­கப்­பட்­ட­வர்­களால் நடத்­தப்­படும் இந்த இனப்­ப­டு­கொலை இன்­றைய கால­கட்­டத்தில் இன்னும் தடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது மனித குலத்­திற்கே அவ­மா­ன­மாகும் என்றார்.

 எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

இஸ்­ரேலின் கொலை­கார அரச பயங்­க­ர­வாதம் பலஸ்­தீன அப்­பாவி மக்கள் மீது மேற்­கொண்­டு­வரும் இனப்­ப­டு­கொ­லையை நாங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். இந்த இனப்­ப­டு­கொ­லைக்கு இஸ்ரேல் பிர­தமர் நெ­தன்­யாஹு பொறுப்­புக்­கூ­ற­வேண்டும்.  அதே­நேரம் பலஸ்தீன்,  இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்­வுக்கு வர­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், இஸ்­ரேலும் பலஸ்­தீனும் சமா­தா­ன­மாக பேச்­சு­வார்த்­தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.இஸ்ரேல் அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக பல­முறை பேச்­சு­வார்த்­தை­களை நிரா­க­ரித்­தது, பலஸ்­தீன தாய­கத்தை அழிக்கும் அரச பயங்­க­ர­வா­தத்தை கண்­டிக்­கின்றேன். இந்த கொலை­கார பயங்­க­ர­வா­தத்தை கைவி­டு­மாறு இஸ்ரேல் பிர­தமர் நெதன்­யா­கு­விடம் கேட்டுக் கொள்­கின்றேன்.
ஹிட்லர் என்ற கொலை­காரன் அன்று யூதர்­களை படு­கொலை செய்­த­து­போன்று இன்று இஸ்­ரேலை ஆட்சி செய்யும் படு­கொலை அர­சாங்கம் பலஸ்­தீன அப்­பாவி மக்­களை படு­கொலை செய்­து­வ­ரு­வதை நாங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். இந்த அரச பயங்­க­ர­வா­தத்தை உட­ன­டி­யாக நிறுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என சர்­வ­தேச சமூ­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கிறோம். அதற்கு தேவை­யான அனைத்து ஆத­ர­வையும் நாங்கள் நிபந்­த­னை­யின்றி வழங்­க­வேண்டும்.

நெதன்­யாகு அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக இடை­வி­டாது மேற்­கொண்டு வரும் மிலேச்­சத்­த­ன­மான, கீழ் தர செயலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். பலஸ்­தீன மக்­களின் வாழ்­வு­ரி­மையை மாத்­தி­ர­மல்ல, அவர்­க­ளது நாட்­டுக்குள் வாழும் உரிமை அவர்­க­ளுக்­குள்­ளது. இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு, பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடு தீர்­வாகும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்றார்.

முஜிபுர் ரஹ்மான் எம்.பி.
ஜனா­தி­பதி உள்­ளிட்ட அர­சாங்கம் பலஸ்­தீ­னுக்கு பணம் சேக­ரிப்­ப­தற்கு பதி­லாக இஸ்ரேல் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக முடி­யு­மான அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். அத்­துடன் ஹூதி போரா­ளி­களை அடக்­கு­வ­தற்கு எமது கடற்­ப­டையை செங்­க­ட­லுக்கு அனுப்பும் ஜனா­தி­பதி, இந்­திய மீன­வர்கள் எமது கடற்­ப­ரப்­புக்குள் வரு­வதை தடுப்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இருக்­கிறார் எனவும் தெரி­வித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், இலங்­கையை ஆட்சி செய்­து­வந்த அனைத்து அரச தலை­வர்­களும் ஆரம்ப காலம் தொட்டு பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வ­ளித்து வந்­தி­ருக்­கின்­றனர். மஹிந்த ராஜ­பக்ஷ்­வுடன் எமக்கு உள்ள அர­சியல் கருத்து வேறு­பா­டுகள் இருந்­தாலும் அவர் பலஸ்தீன் விட­யத்தில் உறு­தி­யாக இருந்து செயற்­பட்டார். அதே­போன்று ரண­சிங்க பிரே­ம­தாச எமது நாட்டில் இருந்த இஸ்ரேல் காரி­யா­ல­யத்தை மூடி­விட்டு அவர்­களை வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுத்தார். தற்­போ­துள்ள நிலையில் அர­சாங்கம் அதற்கு அப்பால் சென்று பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

பலஸ்தீன் மக்­க­ளுக்­காக ஜனா­தி­பதி நிதியம் ஒன்றை ஆரம்­பித்து பணம் திரட்டி வரு­கிறார். ஆனால் அவர் பணம் திரட்டி பலஸ்­தீ­னத்­துக்கு அனுப்­பும்­போது பலஸ்­தீனில் பிள்­ளைகள் உயி­ருடன் இருப்­பார்களா எனத் தெரி­யாது. அதனால் நிதி திரட்­டு­வ­தை­விட இஸ்­ரே­லுக்கு அழுத்தம் கொடுக்க முடி­யு­மான விட­யங்­களை மேற்­கொள்­ளு­மாறு ஜனா­தி­ப­தியை கேட்­டுக்­கொள்­கிறோம்.
எமது அண்மை நாடான மாலை­தீவு இஸ்­ரே­லி­யர்கள் தமது நாட்­டுக்குள் வரு­வதை தடை செய்­துள்­ளது. அதே­போன்று மத்­திய கிழக்கில் பல நாடுகள் இஸ்­ரே­லுடன் இருக்கும் தொடர்­பு­களை நிறுத்­தி­யுள்­ளன. அதனால் நாடு என்­ற­வ­கையில் எமக்கும் சில அழுத்­தங்­களை இஸ்­ரே­லுக்கும் ஏற்­ப­டுத்த முடியும். பலஸ்­தீ­னர்கள் தொழில் செய்­து­வந்த இடங்­களில் இருந்து இஸ்ரேல் அவர்­களை நிறுத்தி இருக்­கி­றது. அந்த இடங்­க­ளுக்கே தற்­போது தொழில் நிமித்தம் இலங்­கை­யர்கள் அனுப்­பப்­ப­டு­கி­றார்கள்.அதனால் இஸ்­ரே­லுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இஸ்­ரே­லுக்கு இலங்­கை­யர்­களை அனுப்பும் நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் யோசனை ஒன்றை முன்­வைக்­கிறோம்.

அதே­போன்று அண்­மையில் இஸ்ரேல் ஆலோ­சனை காரி­யா­லயம் ஒன்று எமது நாட்டில் திறக்­கப்­பட்­டது. இதன் மூலம் இஸ்­ரே­லி­யர்­களை நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­வதே இவர்­களின் திட்­ட­மாகும். இந்த காரி­யா­ல­யத்தை மூடச்­செய்து அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்­கலாம். ஏன் ஜனா­தி­பதி இதனை செய்­யாமல் இருக்­கிறார். ஒரு பக்­கத்தில் ஜனா­தி­பதி பலஸ்­தீ­னுக்­காக நிதி திரட்டி வரு­கிறார். மறு பக்­கத்தில் இஸ்­ரே­லி­யர்­களை நாட்­டுக்குள் கொண்­டு­வர தேவை­யான வழி­களை ஏற்­ப­டுத்தி வரு­கிறார். இது இரட்டை நிலைப்­பாடு. எமது அரச தலை­வர்கள் இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­க­ளின்­போது இவ்­வா­றான கொன்­கையை பின்­பற்­ற­வில்லை. எமது அரச தலை­வர்கள் இவ்­வா­றான வெளி­வி­வ­கார கொள்­கையை பின்­பற்­ற­வி­ல்லை.

கடந்த மாதம் ஈரான் ஜனா­தி­பதி நாட்­டுக்கு வந்­த­போது அவரை வர­வேற்று இரா­போ­சனம் வழங்கி வழி­ய­னுப்­பிய ஜனா­தி­பதி, மறுநாள் காலை காலி முகத்­தி­டலில் இடம்­பெற்ற புத்­தாண்டு விழாவில் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் ஜூலி சங்கை ஊஞ்­சலில் ஏற்றி, அவரை தள்­ளிக்­கொண்­டி­ருக்­கிறார். இதுவா இவர்­களின் வெளி­நாட்டு கொள்கை. எனவே ஜனா­தி­பதி வெளி­வி­வ­கார விட­யத்தில் இரட்டை வேஷத்தை நிறுத்­தி­விட்டு, பலஸ்தீன் விட­யத்தில் இது­வரை பின்­பற்­றி­வந்த பிள­வு­ப­டாத, பலஸ்­தீ­னத்­துக்கு ஆத­ரவு கொள்­கையை தொடர்ந்து பின்­பற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

டிலான் பெரேரா எம்.பி.
பலஸ்­தீ­னர்­க­ளுக்கு இலங்கை தனது ஒத்­து­ழைப்பை வழங்க வேண்டும். சர்­வ­தேச யுத்த கோட்­பா­டு­களை இஸ்ரேல் கடைப்­பி­டிக்கும் வரை இஸ்­ரே­லுக்கு தொழில் வாய்ப்­பு­க­ளுக்­காக இலங்­கை­யர்­களை அனுப்­புதை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்த வேண்டும். இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­குவை பயங்­க­ர­வாதி என்று குறிப்­பி­டு­வதை தவிர்க்க முடி­யாது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது, 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்­டத்தின் போது பலஸ்­தீ­னர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்கும் வகையில் சால்வை அணிந்து சபைக்கு வருகை தந்தேன். அப்­போது ஒரு­சிலர் என்னை பார்த்து ‘டிலான் சிங்­கள தம்­பியா’ என்று குறிப்­பிட்­டார்கள்.கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காக பேசி போது’ டிலான் கொடியா’ என்றும் ஒருசிலர் என்னை விமர்சித்தார்கள்.

பலஸ்தீனர்கள் எதிர்கொண்டுள்ள அவல நிலையை சிங்களம்,கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் என்ற மத கோணத்தில் இருந்துக்கொண்டு பார்க்க கூடாது. மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்.பலஸ்தீனர்களுக்கு எதிராக போர் தொடுக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக உலகளாவிய மட்டத்தில் தற்போது எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ளன.இந்த எதிர்ப்புக்கள் நிச்சயம் வெற்றி பெறும்.

பயங்கரவாதி பெஞ்சமின் நெதன்யாகுவின் பயங்கரவாத தாக்குதலினால் காஸாவில் இதுவரை 34 ஆயிரத்து 183 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,77 ஆயிரத்து 804 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல்களினால் காஸா பகுதியில் 20 நிமிடத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது..

பெஞ்சமின் நெதன்யாகுவின் பயங்கரவாத தாக்குதலினால் காஸாவில் மரணங்கள் மிகுதியாகியுள்ளன. 62 சதவீத மனித குடியிருப்புக்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இஸ்ரேல் இராணுவம் காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் அகதி முகாம்கள் மீதே தாக்குதல்களை நடத்துகின்றன.ஆகவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்த்து வேறு வார்த்தைகள் ஏதும் கிடையாது.

பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.