நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்­டுள்ள ஹஜ் யாத்­திரை விவ­கா­ரம்

0 82

இலங்­கையின் ஹஜ் விவ­காரம் மீண்டும் நீதி­மன்­றப்­ப­டி­களை மிதித்­துள்­ளது. கடந்த காலங்­க­ளிலும் இவ்­வா­றான பல சம்­ப­வங்கள் அரங்­கே­றி­யுள்­ளன. இம்­முறை ஹஜ் கோட்டா பகிர்வில் அநீ­தி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக முகவர் நிறு­வனம் ஒன்று தொடர்ந்த வழக்­கி­னை­ய­டுத்து ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு நீதிமன்றம் இடைக்­­காலத் தடை விதித்­துள்­ள­து.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­மனம் மற்றும் பதிவில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் உயர் நீதி­மன்­றத்தின் ஹஜ் வழி­காட்­டல்கள் அரச ஹஜ் குழு­வி­னாலும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து கட்­டளை நீதிப் பேராணை ( ரிட் ஒப் மன்­டாமுஸ்) மனு­வொன்று ஹஜ் முகவர் நிறு­வ­னம் ஒன்­றி­னால் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டது. அந்த மனு பரி­சீ­லனை செய்­யப்­பட்ட நிலை­யி­லேயே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் 4 இடைக்­கால கட்­ட­ளை­களை பிறப்­பித்­துள்­ளது.

இந்த இடைக்­காலத் தடை இலங்கை முஸ்­லிம்­க­ளின் ஹஜ் யாத்­­தி­ரையைப் பாதிக்­கா­த போதிலும் இவ்­வ­ருட யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டு­களில் பாரிய தாம­தத்­தையும் இழு­ப­றி­க­ளையும் ஏற்­ப­டுத்தப் போகி­றது என்­பது திண்­ணம்.

இந்த வழக்கின் பின்­ன­ணியில் ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரையும் நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டின் அடி­ப்­ப­டையில் எதிர்­வ­ரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகு­மாறு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நேற்று அழைப்பு விடுத்­துள்­ள­து.

2024ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களின் ஒரு அங்­க­மான, பதிவு செய்­யப்­பட்ட முக­வர்­க­ளி­டையே கோட்­டாக்­களை ஒதுக்­கீடு செய்த நட­வ­டிக்கை தொடர்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பித்­திருந்­தது. எனினும் மேன் ­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தி­னால் வழங்­கப்பட்ட உத்­த­ரவை மீறும் வகையில் ஹஜ் குழு நடந்து கொண்­டுள்­ள­தாகக் கூறியே இவ்­வாறு நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டின் கீழ் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

‘நீதி­ம­ன்றின் உத்­த­ரவை ஹஜ் முக­வர்கள் பின்­பற்றத் தேவை­யில்­லை’ என கூறும் குரல் பதி­வுகள் நீதின்றில் நேற்று முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்தே ஹஜ் குழுவுக்கு இவ்­வாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டு­ள்­ள­து.

அத்­துடன் நீதி­மன்றத்­தினால் வழங்­கப்­பட்ட இடைக்­காலத் தடை­யுத்­த­ரவு மூலம் இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை பாதிக்­கப்­படும் என குறித்த குரல் பதி­வுகள் மூலம் தவ­றாக அர்த்தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் நேற்று மன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­து.

வழக்­கம்போல இவ்­வ­ருடமும் 3500 ஹஜ் கோட்டா சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டது. இந்த 3500 ஹஜ் கோட்டா 93 ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட 93 ஹஜ் முக­வர்­களும் நேர்­முகப் பரீட்­சை­யொன்றின் மூலம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் இதில் தமக்கு அநீதி இழைக்­கப்­பட்­­டுள்­ள­­தாக முகவர் ஒருவர் தாக்கல் செய்­த வழக்கைத் தொடர்ந்தே தற்­போது சிக்கலான நிலைமை தோற்றம் பெற்­றுள்­ளது. இது விட­யத்தில் ஹஜ் குழு கவ­ன­மான முறையில் நடந்து கொண்­டி­ருப்பின் இவ்­வா­றான நிலைமை தோற்றம் பெற்­றி­ருக்­காது என சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் உயர் நீதி­மன்றம் ஏற்­க­னவே வழி­காட்­டல்­களை வழங்­கி­யுள்­ளது. அவ்­வ­ழி­காட்­டல்கள் தொடர்ந்தும் அமுலில் உள்­ளன. ஹஜ் வழி­காட்­டல்கள் முறை­யாக பின்­பற்­றப்­பட்­டி­ருந்தால் ஹஜ் விவ­கா­ரத்தில் இவ்­வா­றான சர்ச்­சைகள் தோன்­று­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­காது. எனவே சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள், ஹஜ் குழு என்­பன இது தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும்.

வருடா வருடம் ஹஜ் விவ­கா­ரத்தில் நீதி­­மன்றப் படி­களை மிதிப்­ப­து ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இந்த இழு­ப­றி­யா­னது மக்­களை குழப்­பத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. பல இலட்சக் கணக்­கான பணத்தை முத­லிட்டு புனித யாத்­திரை செல்லும் கனவில் உள்ள மக்­களை இந்த விவ­காரம் பெரும் சங்­க­டத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

இது விட­யத்தில் சகல தரப்­பு­களும் தமது பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.