பெண் மத தலைவர்களின் நல்லிணக்க ‘விசிட்’

0 304

ஏ.ஆர்.ஏ.பரீல்

இனங்­க­ளுக்­கி­டை­யிலும், மதங்­க­ளுக்­கி­டை­யிலும் புரிந்­து­ணர்வு, கருணை, நட்­பு­றவு, கலா­சாரம் என்­ப­ன­வற்றை வளர்ப்­ப­தற்கும் கலா­சார விழு­மி­யங்­களை மதிப்­ப­தற்­கு­மான அனைத்து மதங்­க­ளையும் சேர்ந்த பெண் மதத் தலை­வர்கள் கண்­டிக்-கு இரண்டு நாள் விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

கடந்த 10,11 ஆம் திக­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட இருநாள் விஜ­யத்தில் பெளத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவம் ஆகிய மதங்­களைச் சேர்ந்த 30 பெண் மதத்­த­லை­வர்களும், 6 ஆண் மதத் தலை­வர்­களும் பங்கு கொண்­டி­ருந்­தனர். மதத் தலை­வர்கள் மதங்கள் தொடர்பில் பூரண அறி­வி­னையும், புரிந்­து­ணர்­வி­னையும் பெற்­றுக்­கொள்ளும் வகையில் ஸம் ஸம் பவுண்­டே­ச­னினால் இவ்­வி­ஜயம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

விஜ­யத்தில் பங்கு கொண்ட பெண் மதத் தலை­வர்கள் திஹா­ரிய தன்வீர் அக­ட­மிக்கு விஜயம் செய்­த­போது ஹஜ் பெருநாள் தொடர்­பான கண்­காட்­சி­யொன்­றி­னையும் பார்­வை­யிட்­டனர். கண்டி, பிலி­ம­த­லா­வையில் ஸ்ரீ குண­தி­ல­க­ரா­மய மெஹெனி ஆரா­ம­ய­வுக்கும் விஜயம் செய்து கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்­டனர். மேலும் கண்டி, கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வா­சலின் நல்­லி­ணக்க மையம், அம்­பிட்­டிய சில்­வெஸ்டர் மொனஸ்­டரி மொன்டே பானோ ஆலயம், திகன, மல்­பான கங்கா திலக மஹா­வி­காரை, கடலா தெனிய விகாரை, கண்டி திரித்­துவ கல்­லூரி ஆலயம், கண்டி புர்­கா­னியா அர­புக்­கல்­லூரி, திகன மஸ்­ஜிதுல் லாபீர் ஜும்ஆ பள்­ளி­வாசல் என்­ப­ன­வற்­றுக்கும் விஜயம் செய்­தனர்.

மல்­பான கங்கா திலக விகாரை
திகன, மல்­பான கங்­கா­தி­லக விகா­ரைக்கு விஜயம் செய்த பெண் மதத்­த­லை­வர்கள் உள்­ள­டங்­கிய குழு­வி­னரை விகாரை அதி­ப­தியும், அக்­கி­ரா­மத்து பெண்கள் உள்­ள­டங்­கிய பொது மக்­களும் மரியா­தை­யுடன் வர­வேற்­றனர்.

திகன கல­வரம் இந்த விகா­ரை­யி­லி­ருந்தே திட்­ட­மி­டப்­ப­டி­ருந்­தது. இங்­கி­ருந்தே முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்­நி­லையில் இக்­கி­ரா­மத்­துக்கும் விகா­ரைக்கும் நல்­லி­ணக்க ஏற்­பா­டுடன் மேற்­கொள்­ளப்­பட்ட விஜயம் குறித்து அவர்கள் வியந்­தனர்.

அங்கு இடம் பெற்ற நிகழ்வில் பள்­ளே­கந்தே ரதன தேரர் கருத்துத் தெரி­விக்­கையில், ‘முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்கள் இடம் பெற்று பல­வ­ரு­டங்கள் கடந்து விட்­டன. இதன் பிறகு ஒரு­போதும் இவ்­வா­றான அசம்­பா­வி­தங்கள் நடக்­க­மாட்­டாது என்­பது உறுதி. இவ்­வா­றான மதத் தலை­வர்­களின் விஜயம் நல்­லி­ணக்க, நட்­பு­றவு உணர்­வு­களைப் பலப்­ப­டுத்தும் என்றார்.

மல்­பான கிரா­மத்­தி­லி­ருந்து சில பெளத்த பெண்கள் தாங்­களும் பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்­ய­வேண்டும். எங்­க­ளுக்குள் புரிந்­து­ணர்வும் சகோ­த­ரத்­து­வமும் வலுப்­பெ­ற­வேண்டும் என்று தெரி­வித்து மதத் தலை­வி­க­ளுடன் இணைந்து திகன மஸ்­ஜிதுல் லாபீர் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்­தனர். திகன கல­வ­ரத்­தின்­போது இந்த பள்­ளி­வாசல் இன­வா­தி­களால் எரிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

திகன கல­வ­ரத்­துக்கு மையப்­புள்­ளி­யாக இருந்த மல்­பான கிரா­மத்தைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் மஸ்­ஜிதுல் லாபீர் பள்­ளி­வாசல் மஹல்­லாவைச் சேர்ந்த 8 முஸ்லிம் பெண்கள் ஒன்­றி­ணைந்து பெண்கள் அணி­யொன்று நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஸம்ஸம் பவுண்­டேசன்
குறிப்­பிட்ட இரண்டு நாள் நல்­லி­ணக்க, நட்­பு­றவு, புரிந்­து­ணர்வு விஜ­யத்­தினை ஏற்­பாடு செய்த ஸம்ஸம் பவுண்­டே­சனின் திட்ட முகா­மை­யாளர் அஷ்ஷெய்க் சாஜித் ஹுமைதி ‘விடி­வெள்­ளி’க்கு கருத்துத் தெரி­விக்­கையில்’ ‘சர்­வ­மத பெண் மதத்­த­லை­வர்களின் இவ்­வி­ஜயம் அடி­மட்­டத்தில் இருக்கும். சர்­வ­மத பெண்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்தும் வகையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இவ்­வி­ஜயம் இனங்கள், மதங்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்­தையும், நல்­லி­ணக்கத்தையும் நிச்­சயம் பலப்­ப­டுத்தும் என்று தெரி­வித்தார். இவ்­வா­றான விஜ­யங்கள் தொடர்ந்தும் மேற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் கூறினார்.

கட்­டு­கலை நல்­லி­ணக்க மையம்
கண்டி கட்டுக்கலை ஜும்ஆ பள்ளிவாசலின் நல்லிணக்க மையத்துக்கு விஜயம் செய்த பெண் மதத்தலைவர்கள் குர்ஆன் மற்றும் முஸ்­லிம்­களின் வர­லாறு தொடர்­பான வர­லாற்று ஆவ­ணங்­களைப் பார்­வை­யிட்டு அது தொடர்­பான சந்­தே­கங்­களைக் கேட்டுத் தெரிந்து கொண்­ட­தாக கண்டி மாவட்ட மஸ்ஜித் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் தெரி­வித்தார்.

விஜ­யத்தில் பெளத்த, இந்து, கிறிஸ்­தவ, முஸ்லிம் மதத் தலை­வர்­களும் பங்கு கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.