பயங்கரவாத தடைச் சட்டத்தினால் அழிக்கப்படும் வாழ்க்கைகள்

0 1,239

அஹ்ஸன் அப்தர்

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­மான அந்த குண்டுத் தாக்­கு­தல்­களால் பலர் அன்று தமது வீடு­க­ளுக்குள் முடங்­கி­யி­ருக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். அவர்­களில் ஒரு­வர்தான் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த அஸ்பான் அஹமத். எனினும், அத்­தி­னத்தின் பின் நீண்ட காலத்­துக்கு தான் வீட்டில் தங்­கி­யி­ருக்கப் போவ­தில்லை என்­பதை அவர் அன்று நினைத்­தி­ருக்க மாட்டார்: அந்த நாளின் இறுதிப் பகு­தியில் அவர் கடு­மை­யான பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டார். நான்கு வரு­டங்கள் கடந்த பின்­னரும் அவரின் மனைவி அதன் பின்­வி­ளை­வு­க­ளுடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றார்.

“உடனே கொண்டு வந்து விட்­றதா சொல்­லித்தான் மச்­சான காத்­தான்­குடி பொலி­ஸால ஊட்ட வந்து கூட்டிப் போனாங்க, ஆனால் இர­வா­கியும் வீட்­டுக்கு வரா­த­தால பயத்­தோட மகன கூட்­டிக்­கொண்டு பொலிஸ்­ஸ­டிய போனேன், ஆனால் மச்­சான பாக்க விடல்ல” என்­கிறார் அஸ்­பானின் மனைவி காமிலா.

காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் தனது கணவன் எங்கே என்று காமிலா கேட்டு நின்­ற­போது அவர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார் என்று சொல்­லப்­பட்­டது. என்ற போதிலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் அல்­லது அதன் தீவிரம் குறித்து காமிலா அறிந்­தி­ருக்­க­வில்லை. தனது கணவன் வீட்­டி­லி­ருந்து சென்­றதன் பின்னர் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­றெல்லாம் அவ­ருக்கு தெரி­ய­வில்லை. பயப்­படும் அள­வுக்கு எதுவும் நடக்கப் போவ­தில்லை என்று தனக்­குத்­தானே ஆறுதல் கூறிக்­கொண்டு தனது கண­வ­னுக்­காக காத்­தி­ருந்தார். கைது செய்­யப்­பட்ட ஏனைய பலரின் மனை­விகள் மற்றும் பிள்­ளைகள் போன்று நீதிக்­கான எந்தவித உண்­மை­யான அணு­கலும் இன்றி தனது கண­வனை விடு­விக்க காமிலா பல வருட கால­மாக போராடிக் கொண்­டி­ருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ள 64 குடும்­பங்­களைச் சேர்ந்த 99ஆண்கள் மற்றும் 11பெண்கள் என 110பேர் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­துடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் இரா­ணுவ அதி­காரி ஒருவர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் தீவிரம் குறித்து தெளி­வு­ப­டுத்­தினார். இந்தக் கூட்­டத்­திற்கு சென்ற காமிலா அப்­போ­துதான் தனது கணவன் எவ்­வ­ளவு பார­தூ­ர­மான சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார் என்­பதை அறிந்­து­கொண்டார். மேலும் குறித்த இரா­ணுவ அதி­காரி தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களை புனர்­வாழ்வு மத்­திய நிலை­யங்­க­ளுக்கு அனுப்ப ஒத்­து­ழைக்­கு­மாறு காமிலா உட்­பட தடுத்து வைக்­கப்­பட்ட ஏனைய உற­வி­னர்­க­ளிடம் கேட்­டுள்ளார். குறித்த புனர்­வாழ்வு நிலை­யங்கள் அங்கு செல்­ப­வர்­களை கடு­மை­யாக நடத்­து­வதில் பெயர் பெற்­ற­ன­வாகக் காணப்­ப­டு­கின்­றன.

எந்­த­வித குற்­றமும் நிரூ­பிக்­கப்­ப­டாத நபர்­களை புனர்­வாழ்வு மத்­திய நிலை­யங்­க­ளுக்கு அனுப்பி புனர்­வாழ்வு வழங்க நினைப்­பதை ஏற்க முடி­யாது என பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களை மீட்­டெ­டுக்கும் பணி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்ட மனித உரி­மைகள் ஆர்­வலர் ஷ்ரீன் ஸரூர் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் கருத்து தெரி­விக்கும் போது “கடந்த காலங்­களில் சிறு­வர்கள் உட்­பட கைது செய்­யப்­பட்ட வடக்குத் தமி­ழர்­களை புனர்­வாழ்வு மத்­திய நிலை­யங்­க­ளுக்கு அழைத்துச் செல்­வ­தாகக் கூறி அவர்­களை காணா­ம­லாக்­கி­னார்கள். அந்த கைதி­க­ளுக்கு என்ன நடந்­தது என்றே எங்­களால் ஊகிக்க முடி­ய­வில்லை. மூடப்­பட்ட அறை­களில் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு அவர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என்­றுதான் நான் நினைக்­கிறேன். புனர்­வாழ்வு என்­பது பாது­காப்பு அமைச்சின் ஒரு சூழ்ச்சி வலை. ஒரு­போதும் இப்­ப­டி­யான சூழ்ச்­சி­களை அனு­ம­திக்க முடி­யாது” எனத் தெரி­வித்தார்.

அஸ்பான் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் காமிலா நடை­முறைப் பிரச்­சி­னைகள் மற்றும் உள­வியல் பிரச்­சி­னை­க­ளையும் எதிர் கொண்டார். கைது செய்­யப்­படும் வரை அஸ்பான் ஒரு சுய கைத்­தொ­ழி­லாளர் ஆவார். ஒரு நாளைக்கு 1000 ரூபாவையும் விட குறை­வான வரு­மா­னமே அவ­ருக்கு இருந்­தது. அவர் கைது செய்­யப்­ப­டும்­போது தனது சட்­டைப்­பையில் இருந்த 750 ரூபாய் பணத்தை காமி­லா­விடம் செல­வுக்கு கொடுத்துச் சென்றார். அதைத் தவிர காமி­லா­விடம் தனது வாழ்க்­கையை நடத்த பணமோ அல்­லது சேமிப்போ இருக்­க­வில்லை.

காமிலா அப்­போது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டார். தாய் தந்தை சகோ­த­ரர்கள் என யாருமே இல்­லாத காமிலா தனது மூன்று பிள்­ளை­க­ளையும் பரா­ம­ரிக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்டார். கணவன் கொடுத்துச் சென்ற 750 ரூபாய் பணத்தை மாத்­தி­ரமே கொண்­டி­ருந்த காமி­லா­வுக்கு ஒவ்­வொரு நாளும் போதிய உணவைப் பெறு­வதே போராட்­ட­மாக மாறி­யது. முன்னர் ஒரு போதும் வேலை செய்த அனு­பவம் அற்ற காமிலா தற்­போது வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்ள போராடும் நிலைக்கு தள்­ளப்­பட்டார். காமி­லா­வையும் அவ­ரது குடும்­பத்­தையும் அவரின் சொந்த சமூ­கம் ஒதுக்­கி­ய­துடன் அவ­ருக்கு வேலை வழங்­கவும் அஞ்­சி­யது. காமி­லா­வுக்கு உத­வி­னாலோ அல்­லது அவ­ருடன் எந்­த­வொரு தொடர்­பையும் பேணி­னாலோ தாமும் குற்றப் புல­னாய்­வுத்­துறை அல்­லது பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வினால் கைது செய்­யப்­ப­டலாம் என சமூக உறுப்­பி­னர்கள் அஞ்­சினர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைகக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு உதவி செய்­வது கத்தி மேல் நடப்­பது போல மிகவும் சவா­லா­ன­தாக இருந்­த­தாக தனது பெயரை வெளி­யிட விரும்­பாத சமூக ஆர்­வலர் ஒருவர் தெரி­வித்தார். “இங்­குள்ள பெண்கள் சேவை நாடும் இடங்கள் குறித்து அறிந்து வைத்­தி­ருக்­க­வில்லை. மோச­மான பிரச்­சி­னையில் சிக்­கி­யி­ருக்­கும்­போது கூட அவர்கள் இருட்­ட­றைக்குள் வாழ்­வ­தைதான் வச­தி­யான ஒன்­றாக கரு­தி­னார்கள். ஸகாத் (நன்­கொடை) பணத்தை கூட யாருக்கும் தெரி­யாமல் திருட்­டுத்­த­ன­மா­கத்தான் பங்கு வைத்தோம்” என அவர் மேலும் தெரி­விக்­கிறார்.

அதன் பின்னர் அஸ்பான் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்டார். அது வரை பொலிஸ் நிலையம், சிறைச்­சாலை அல்­லது நீதி­மன்­றத்­திற்கு காமிலா தனது வாழ்­நாளில் ஒரு தடவை கூட சென்­ற­தில்லை. தனது கண­வனை அங்கு சென்று பார்ப்­பது காமி­லா­வுக்கு மேல­திக சவா­லொன்­றாக மாறி­யது. “முஸ்லிம் சமூ­கத்தில் பெண்கள் ஆண் ஒரு­வரின் துணை­யின்றி வெளியே செல்ல முடி­யாது” என்­கிறார் காமிலா. “அப்­படிச் செல்­லும்­போது சமூ­கத்தின் வசைச் சொற்­க­ளுக்கு ஆளாக வேண்டும்” என மேலும் அவர் தெரி­விக்­கின்றார். மேலும் இப்­படி அடிக்­கடி சிறைச்­சாலை வரை சென்று வர காமி­லா­விடம் பணம் இருக்­க­வில்லை. சுமார் மூன்று மாதங்­க­ளாக கடன் வாங்கி இவற்றை செய்த காமிலா கடனை திருப்பிக் கொடுப்­ப­தற்­காக வேண்டி வீட்டு உப­க­ர­ணங்­களை விற்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

அன்­றாட உணவு மற்றும் அடிப்­படைத் தேவை­களை நிவர்த்தி செய்ய அத்­துடன் பிள்­ளை­களை பாட­சா­லைக்கு அனுப்ப என்று பணம் ஒரு அடிப்­படைத் தேவை­யாக இருந்­ததால் பிஸ்கட் மற்றும் கேக் என்­ப­வற்றை தயா­ரித்து கடை­க­ளுக்கு விற்கத் தொடங்­கினார் காமிலா. முடிந்­த­ளவு தையல் மெஷின் மூலம் ஆடை­களை தைத்து ஓர­ளவு வரு­மா­னத்தை பெற்றார்.

பொரு­ளா­தாரப் பிரச்­சி­னையை விட சமூ­கத்தில் தன்­னையும் தனது பிள்­ளை­க­ளையும் ஓரங்­கட்டி வைத்­து­விட்­டார்கள் என்­பதை காமி­லா­வினால் ஜீர­ணிக்க முடி­யாமல் இருந்­தது. “மகன்கள் போன டியுஷன் கிளாஸ்ல புள்­ளய வர வேனா­முண்டு சொல்­லிட்­டாங்க. எங்­கட மச்­சான நல்லா தெரிஞ்­ச­வங்க கூட அவங்­கட பிள்­ளை­கள எங்­கட பிள்­ளை­க­ளோட பொழங்க விடல்ல” என காமிலா கூறிய போது கண்­ணீர்த்­து­ளிகள் அவரின் கன்­னங்­களின் ஊடாக வழிந்­தோ­டின.

“எங்­க­ளுக்கு பள்ளி வாச­லால கூட எந்த உத­வியும் கிடைக்­கல்ல. மச்­சான்ட மேல எந்தத் தப்பும் இல்ல; இது சுத்தி உள்ள எல்­லா­ருக்கும் தெரியும். ஆனாலும் தங்­க­ளயும் ஜெயில்ல போட்­று­வாங்­கண்டு யாரும் உத­வல்ல” என்­கிறார் காமிலா.

கடன்­பட்­டுத்தான் சிறைச்­சா­லைக்கு பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்­டிய நிலைமை இருந்­தி­ருக்­கி­றது. இப்­படி சிறைச்­சா­லைக்கு நிறைய பொருட்கள் கொண்டு செல்­வதை பார்க்­கின்ற உற்றார் உற­வி­னர்கள் அதற்கு நிறைய வசை பேசும் நிலைமை இருந்­தி­ருக்­கி­றது. “கைல ஒரு ஆயி­ரம் ரூவா தாள் வெச்சி இரிக்­கி­றத கண்டா நாங்க செழிப்பா இரிக்­கம்­முண்டு ஜாடை பேசு­வாங்க. உதவ வார ஆட்­க­ளயும் உதவ விட மாட்­டாங்க” என காமிலா தெரி­விக்­கிறார்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சமூ­கத்தின் பக்­கத்தில் இருந்து நீதி கிடைப்­பதில் பாரிய சிக்­கல்­கள்கள் இருப்­ப­தாக சமூக ஆர்­வலர் புஹாரி மொஹமட் தெரி­விக்­கிறார். “தாம் கைது செய்­யப்­ப­டு­வதை தவிர்க்க கைது செய்­யப்­பட்ட குடும்­பங்­க­ளிடம் இருந்து சமூகம் ஒதுங்கி இருக்­கி­றது. தொடர்ச்­சி­யாக அவர்­க­ளிடம் இருந்து ஒதுங்­கு­வதால் நாள­டைவில் அவர்கள் தவறு செய்­ய­வில்லை என்று தெரிந்­தாலும் வெறுப்பு உண்­டாகி விடு­கின்­றது.” என தெரி­வித்தார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் அமைப்பு சமூ­கத்தில் இவ்­வாறு பாரிய பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி விடு­கின்­றது என அவர் மேலும் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பில் இருந்து 200 கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள சிறைச்­சா­லைக்கு அஸ்பான் மாற்­றப்­பட்ட போது காமி­லா­வுக்கு குறித்த தக­வலை அதி­கா­ரிகள் எந்­த­வொரு தொடர்பாடல் முறை ஊடா­கவும் சொல்­ல­வில்லை. மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லைக்கு அஸ்­பானை பார்­வை­யிடச் சென்ற போதுதான் தக­வலை அறிந்­து­கொள்ள முடிந்­தது.
காமிலா மட்­டக்­க­ளப்பை தாண்டி எங்­கேயும் சென்­ற­தில்லை என்­பதன் அடிப்­ப­டையில் அவரால் இந்த நிலை­மையை சமா­ளிக்­கவே முடி­ய­வில்லை. மட்­டக்­க­ளப்பில் இருந்து தனது கணவன் இடம் மாற்­றப்­பட்ட சிறைச்­சா­லைக்குச் சென்று வர 5000 ரூபா தேவைப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டியால் இந்த செல­வுகள் இரு மடங்­கா­னது. மனி­தா­பி­மான உத­வி­யாக சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்­தினால் மாதாந்தம் 3000 ரூபா காமி­லா­வுக்கு கிடைத்­ததை தவிர வேறு எந்த உத­வியும் கிடைக்­க­வில்லை.

பிணையில் விடு­த­லை­யாக இருக்­கின்­ற­வர்­களின் விவ­ரங்­களில் அஸ்­பானின் பெயர் வந்­துள்­ள­தாக கேள்­விப்­பட்டு அது­பற்றி உரிய அதி­கா­ரி­க­ளிடம் விசா­ரிக்கச் சென்­ற­போது அங்கே அதனை உறு­திப்­ப­டுத்தி சொல்­வ­தற்குக் கூட 10000 ரூபா கேட்­டி­ருக்­கி­றார்கள்.
இரண்­டரை வரு­டங்­களின் பின்னர் கடந்த நவம்பர் மாதம் பிணையில் விடு­விக்­கப்­பட்ட அஸ்பான், தான் குற்­ற­மற்­றவன் என்­பதை உறு­தி­யிட்டுக் கூறு­கின்றார்.

சிங்­க­ளத்தில் ஒரு வார்த்தை கூட தெரி­யாத தன்­னிடம் சிங்­கள மொழியில் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கவும் சிங்­க­ளத்தில் எழு­தப்­பட்ட வாய்­மொழி அறிக்­கையிலும் இன்னும் சில வெற்றுக் காகி­தங்­களிலும் கையெ­ழுத்­திட தான் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தாகவும் அஸ்பான் கூறு­கின்றார். இறு­தி­யாக நிலையப் பொறுப்­ப­தி­காரி சிங்­க­ளத்தில் பேசி­யதை தமிழில் ஒரு துணை பொலிஸ் அதி­காரி மொழி­பெ­யர்ப்பு செய்­த­தாக அவர் மேலும் குறிப்­பி­டு­கின்றார்.

“ஆயு­தங்கள் எங்கே உள்­ளன எனச் சொல்­லு­மாறு அவர்கள் என்­னிடம் கேட்டனர், என்­னிடம் எந்த ஆயு­தங்­களும் இல்லை என நான் அவர்­க­ளிடம் கூறினேன்” என அஸ்பான் தெரி­வித்தார்.

இரண்­டரை வரு­டங்­களின் பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது சமூ­கத்­துக்கு முகங்­கொ­டுக்க வெட்­கப்­ப­டு­கின்றார் அஸ்பான். “மனைவி பிள்­ளை­கள பிரிஞ்சி இரிந்த நாட்கள் ஒரு நரகம். இதெல்லாம் எதி­ரிக்குக் கூட வரக்­கூ­டாத நிலம. ஏண்ட மனை­விக்கு எது­வுமே தெரி­யாது. அவ இந்த ஊரத் தாண்டி எங்­கயும் போன­தில்ல. இப்ப இவளோ கஷ்­டப்­பட்­டுட்டா” என்று நிரம்பி வழிந்த கண்­ணீரை தனது சாரத்தின் நுனி­யினால் துடைத்­துக்­கொண்டு சொல்­கிறார். “அவ நிறைய கஷ்­டப்­பட்­டுட்டா, இனிமேல் இந்த மாதிரி கஷ்டம் வேற யாருக்கும் வரக்­கூ­டா­து”­என அவர் மேலும் தெரி­விக்­கிறார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கைது செய்­யப்­பட்ட110 பேரில் 103 பேர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். விடு­தலை செய்­யப்­பட்­ட­வர்களில் 93 ஆண்­களும் 10 பெண்­களும் உள்­ள­டங்­கு­கின்­றார்கள். இவர்கள் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­மைக்­கான ஆதா­ரங்கள் எதுவும் இல்­லா­ததால் இவர்­கள் பிணையில் விடு­தலை செய்­யப்பட்டுள்­ள­தாக மனித உரி­மைகள் ஆர்­வலர் புஹாரி மொஹம்மட் தெரி­வித்தார்.
பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­கள் நான்கு பொது கார­ணங்­களின் அடிப்­ப­டையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என புஹாரி விளக்கம் தரு­கிறார். பயங்­க­ர­வாத நிர்­வாகக் குழு­வினர், குழு­வுடன் தொடர்பு வைத்­தி­ருந்­த­வர்கள், குழு­வுடன் நேர­டி­யாக தொடர்பு இல்­லா­த­வர்கள் மற்றும் குழு­வுடன் எந்­த­வித தெடர்பும் இல்­லா­த­வர்கள் என்று அவர்­களை வகுக்க முடியும் என அவர் குறிப்பிடுகிறார். இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களில் சில­ருக்கு தாம் ஏன் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளோம் எனக் கூடத் தெரி­யாது எனவும் அவர் கூறினார்.

இதே போன்ற சிர­மங்­களை காத்­தான்­கு­டியின் மற்­று­மொரு பகு­தியைச் சேர்ந்த பஸ்­லி­யாவும் (27) அனு­ப­வித்­துள்ளார். இவ­ரு­டைய பிரச்­சி­னையில் வேடிக்கை என்­ன­வென்றால் பஸ்­லி­யாவின் கணவர் கைது செய்­யப்­பட்­ட­தற்­கான காரணம் இவர்­க­ளுக்கே தெரி­யாது. சுமார் மூன்­றரை வரு­டங்­களின் பின்னர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ள பஸ்­லி­யாவின் கணவர் மன்சூர் (29) இது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கும்­போது “என்ன எதுக்கு கொண்டு போனாங்க எண்டே எனக்கு தெரி­யாது” எனக் கூறினார்.

மன்சூர் சிறு­வர்­களின் விளை­யாட்டுப் பொருட்­களை விற்­பனை செய்து வந்த ஒருவர். நாட்டின் பல பகு­தி­களில் இடம்­பெற்ற குண்டு வெடிப்­பினால் இவர் தொழி­லுக்குச் செல்­லாத நிலையில் வீட்­டுக்கு வந்த குற்­ற­வியல் விசா­ரணைப் பிரி­வினர் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்­திற்கு கூட்டிச் சென்­றுள்­ளார்கள்; இன்று வரை எந்த கார­ணத்­திற்­காக மன்சூர் கைது செய்­யப்­பட்டார் என்­பது அவ­ருக்கு தெரி­யாது என்று அவர் சொல்­கிறார்.
குரு­ணாகல் மாவட்ட நீதி­மன்ற அறையில் வைத்து அதி­கா­ரி­க­ளிடம் என்ன கார­ணத்­திற்­காக இவரை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­தீர்கள் என்று கேட்­ட­போது அதி­கா­ரிகள் யாரும் நீதி­ப­தி­யிடம் வாய் திறக்­காமல் இருந்­த­தாக மன்சூர் தெரி­விக்­கிறார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் தீவி­ரத்தை அதி­கா­ரி­க­ளுக்கு எடுத்­துச்­சொல்லி நீதி­பதி அதி­கா­ரி­களை எச்­ச­ரித்­த­தாக மன்சூர் தெரி­விக்­கிறார்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் ஒரு­வ­ரிடம் காரணம் தெரி­விக்­காமல் தடுத்து வைக்க முடி­யுமா என்று நாம் சட்­ட­த­ரணி சுவஸ்­திகா அரு­லிங்கத்திடம் கேட்­ட­போது அதற்­கான சாத்­தியம் குறித்த சட்­டத்தில் இருக்­கின்­றது என அவர் தெரி­வித்தார். “பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் மற்றும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் என்ற இரண்­டி­லுமே ஒரு­வ­ரிடம் காரணம் சொல்­லாமல் தடுத்து வைத்து உள ரீதி­யான சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் இருக்­கின்­றன. மனித உரி­மை­களை அடியோடு துவம்சம் செய்யும் சட்டங்களாக இவை இருப்பதாலேயே நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ஒரு மனிதரை 20 வருடம் வரை எந்தவித குற்ற விசாரணையும் இன்றி வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என சுவஸ்திகா தெரிவிக்கிறார். தடுத்து வைக்கப்பட்டவரின் சொத்துக்களை முடக்குதல், வங்கிக் கணக்குகளை கையாளுதல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் சந்தர்ப்பம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அஸ்பான், காமிலா, மன்சூர் மற்றும் பஸ்லியா ஆகியோருக்கும் மட்டக்களப்பில் உள்ள இவர்களைப் போன்ற பல குடும்பங்களுக்கும் இது ஒரு முடிந்து போன கதையல்ல. தடுத்து வைக்கப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் அவர்கள் 24 மணி நேரமும் நெருக்கமாக கண்காணிக்கப்படுகின்றனர். சமூகக் களங்கம், பொருளாதாரப் பிரச்சினைகள், தமது பிள்ளைகள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியை கைவிடும் நிலை உருவாகலாம் என்ற அச்சம் அத்துடன் மனவழுத்தம் போன்ற பல பிரச்சினைகளை இக்குடும்பங்கள் எதிர்கொள்கின்றன. இப்பிரச்சினைகளை அகற்றும் நோக்கில் கரிசனை மிக்க நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் திட்டங்களை முன் வைக்கும் போதெல்லாம் அதனை தடுக்கும் அல்லது முடக்கும் முனைப்புடன் அரசாங்கம் செயற்படுகிறது.

குறிப்பு: பாதுகாப்பு காரணங்கள் குறித்து கட்டுரையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.