ஒக்டோபர் சூழ்ச்சியின் பின்னணியில் ரணிலே

அரசியலமைப்பை பாதுகாக்கவே போராடினோம் என்கிறது ம.வி.மு.

0 685

பிரதமர் ஆசனத்தில் மஹிந்தவை அமர்த்தவோ அல்லது ரணிலை அமர்த்தவேண்டும் என்பதோ எமது பிரச்சினையல்ல. அரசியலமைப்பினை பார்த்துக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கம் அதற்காகவே நாம் போராடினோம். ஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மஹிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணிலே காரணம் எனக் கூறிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக ரணில் மீண்டும் பிரதமாராக நியமித்து எஞ்சியுள்ள ஒரு வருடத்தில் எந்த மாற்றமும் இடம்பெறப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

இன்றைய தினம்  பாராளுமன்றத்தில்  ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்காக நம்பிக்கை வெளியிடும் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டது. அப்போது கடந்த காலங்களில் அவரின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவாக விளக்கப்படுத்தி நாங்கள் அந்த பிரேரணையை ஆதரித்தோம். இந்நிலையில் இன்று அதனை ஒத்த பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து நாங்கள் முன்வைத்த விடயங்கள் எந்த வகையிலும் குறைவடையவில்லை. அவை இன்னும் செல்லுபடியாகும் என்பதனை  தெளிவாக கூறிக்கொள்கின்றோம். அன்று நாங்கள் சுட்டிக்காட்டும்போது அரசாங்கத்தின் இருப்பு பாராளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையில்  மாத்திரமில்லை மக்களின் நம்பிக்கையிலும் தங்கியுள்ளது என்பதனை குறிப்பிட்டோம். எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்கெடுப்புகள் நடத்தப்படும்போது அரசாங்கம் பாராளுமன்றத்தில் தலைகளின் மூலம் நம்பிக்கையை காட்டியுள்ளனர். ஆனால் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளவில்லை.

ஜனவரி  8ஆம் திகதி மக்கள் விசேடமான எதிர்பார்ப்புடனேயே தமது ஆணையை வழங்கினர். எமது நாட்டின் ஆட்சி கவிழ்ப்புகளின் போது கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாட்டிலேயே அது தங்கியிருந்தது. ஆனால் ஜனவரி 8ஆம் திகதி நடந்த மாற்றம் வித்தியாசமானது. எந்தவொரு கட்சிக்கும் என எழுதப்பட்ட மக்கள் ஆணையல்ல. ஜனநாயகம் , சுதந்திரம் , பொருளாதாரம் போன்றவற்றை எதிர்பார்த்தும் மற்றும்  ஊழல்களுக்கு எதிராகவும்  கொலை, கொள்ளைகளுக்கு எதிராகவும் மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர். ஆனால் சகல செயற்படுகளும் மக்களின் எதிர்பார்ப்புகளை சீர்குலைத்து ஒரு கட்சியின் அதிகாரத்தின் மற்றும் நோக்கத்தின் மூலம் அந்த ஆட்சி  தொடர்ந்துள்ளது.  மங்கள சமரவீர எம்.பி  இந்த சபையில் கடந்த 3 வருட ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான எழுத்து மூல அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஆனால் அதில் என்ன உள்ளடங்க வேண்டுமோ அவை அதில் உள்ளடக்கப்பட்டிருக்காது என நாங்கள் நினைக்கின்றோம். அதனை நாங்களே எழுத வேண்டி வரும். அந்த புத்தகத்திற்குள் உள்ளடக்க முடியாத விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவ்வாறான விடயங்களுக்கு முழு அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும்.

ஒக்டோபர் 26ஆம் திகதி சூழ்ச்சி நடந்துள்ளது. அவ்வாறான சூழ்ச்சியை மேற்கொள்வதற்கு தேவையான சமூக பின்னணி தொடர்பாகவும் நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறும் செயற்பாடு மற்றும் மஹிந்த  ராஜபக்‌ஷ மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கம் என்று குறிப்பிடுவது தவறே. அவர்கள் தமது நோக்கத்திற்காக அந்த செயற்பாட்டில் கை வைத்திருக்கலாம். ஆனால் ஒக்டோபர் 26ஆம் திகதி அந்த சூழ்ச்சியில் இருக்கும் நடிகர்கள் எமக்கு வெளிப்படையாக தெரிந்தாலும் அவர்களுக்கு அந்த நாடகத்திற்கான மேடை அமைக்கப்பட்டமை எவ்வாறு என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். பிரதான நடிகர்களான இருவருக்கும் எதிராக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அந்த செயற்பாட்டை நியாயப்படுத்த கூறவில்லை. அது நடந்திருக்கக் கூடாத செயற்படே. என்றாலும் சூழ்ச்சியின் பிரதான நபர்கள் அவர்களாக இருந்தாலும் அதற்கான பின்னணி வேறு. அதாவது மக்களின் நோக்கங்களை நிறைவேற்றாது தாங்கள் நினைக்கும் உலக மன நிலையில் இருந்து செயற்பட்ட காரணத்தினாலேயே இவ்வாறான சூழ்ச்சி நடந்துள்ளது. அதற்கு சமூக ஏற்றுக்கொள்ளும் தன்மையும் ஏற்பட்டுள்ளது என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் மீண்டும் அவருக்கே அந்த கதிரை வழங்கப்பட வேண்டும். அவரையே அந்த கதிரையில்  அமரச் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு ஜே.வி.பி ஒருபோதும் தயாரில்லை என்பதனை கூறிக்கொள்கின்றோம். மஹிந்த  ராஜபக்‌ஷவை நீக்கி  ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் அந்த இடத்தில் அமர்த்தவோ அல்லது ரணிலை நீக்கி விட்டு மஹிந்தவை  அமர்த்தவோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் அந்த ஆசனத்தில் இருந்து ஆட்சி செய்ததை பார்த்துள்ளோம். அந்த ஆசனத்தில் யார் அமர வேண்டுமென்ற பிரச்சினை எமக்கு கிடையாது. எவ்வாறாயினும் சூழ்ச்சி அடிப்படையில் இரண்டு பேர் இணைந்து அரசியல் சூழ்ச்சி மூலம் சூழ்ச்சிகரமான ஆட்சியை அமைத்தமையே பிரச்சினையாக இருக்கின்றது. ஒக்டோபர் 26ஆம் திகதி சூழ்ச்சி அடிப்படையில் ஆட்சியை கைப்பற்றியது தொடர்பாகவே எமக்கு பிரச்சினை இருக்கின்றது. இதனை தவிற எமக்கு வேறு பிரச்சினைகள் கிடையாது. இவ்வாறாக அரசியல் ரீதியில் ஆட்சியை கைப்பற்றி முன்மாதிரியாக இருந்தால் அது அழிவு பாதையை நோக்கிய அரசியல் பயணமாகவே அமையும். இவ்வாறான நிலைமை ஆரம்பிக்கும் நேரத்திலேயே தோற்கடிக்க வேண்டும்.

இதேவேளை பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தமை , பாராளுமன்றத்தை கலைத்தமை , அமைச்சு பதவிகளை வழங்குதல் , நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதும் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்க முயற்சித்தல் , அமைச்சர்களை நியமித்தல் என்பன அந்த சூழ்ச்சியை வெற்றிப் பெறச் செய்வதற்கான முயற்சியே. எவ்வாறாயினும் சூழ்ச்சியை தோற்கடிக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம். நாங்கள் அரசியல் இயக்கம் என்ற வகையில் ஏதேனும் நிலைப்பாட்டை மேற்கொள்வோம். ஜனநாயகத்திற்காக நாங்கள் அந்த நிலைப்பாட்டை எடுப்போம். நாங்கள் அதிலிருந்து மாறப் போவதில்லை. அடுத்த அரசாங்கம் அமையுமாக இருந்தால் அதில் பிரதமர் யார் என்பது எமக்கு தேவையில்லை. யார் அந்த ஆசனத்தில் அமர்ந்தாலும் மாற்ற முடியாது. ஆசனத்தில் அமர்ந்த நேரம் முதல் எவ்வாறு பணத்தை தேடுவது என்பதுதான் அவர்களின் எண்ணங்களாக இருக்கும். அரசியல் கலாச்சாரம் மற்றும் பொருளாதார முறைமையில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. இதனால் எந்த முறையில் பார்த்தாலும் அந்த ஆசனத்தில் அமர்ந்தாலும் அது எங்களுக்கு தேவைப்படாதது. நாங்கள் அரசியல் நிலைப்பாடொன்றில் இருக்கின்றோம். சூழ்ச்சியை தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றோம். இதற்கு மேல் எமக்கு பிரதமர் ஆசனத்தில் யார் அமர்ந்தாலும் தேவையில்லை. ரணில் அமர்ந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. இதனால் இன்றைய தினம் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை எமக்கு தேவைப்படாதது. என்பதனை கூறிக்கொள்கின்றோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.