எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்

0 520

அரசாங்கதின்  பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக  நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியால் நேற்று புதன்கிழமை  பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா எம்.பி கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்க பிரதம அமைச்சராக நியதிக்கப்படுவதற்கான நம்பிக்கைப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்துள்ள போதிலும் தாம் அரசின் பங்காளியாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை. எதிர்க்கட்சியிலேயே செயற்படுவோம். இதனை ஜனாதிபதிக்கு  நாம்  அனுப்பியுள்ள கடிதத்தில் தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளோம்.  கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் உள்ள அரசாங்கம்  தொடர வேண்டுமென ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்ததை கருத்தையே தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றும். அந்த  நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியதிக்கப்படுவதற்கான நம்பிக்கைப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்துள்ள போதிலும் நாம் அரசாங்கத்தின்  பங்காளியாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை. எதிர்க்கட்சியிலேயே செயற்படுவோம்.  எமது நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு  அனுப்பிய கடித்தத்தில் தெளிவுப்படுத்தியுள்ளோம். இந்தக் கடிதம் சபையில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இக் கடிதத்தை ஹன்சார்ட்டில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையுள்ளதாக நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவளித்தென நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த எம்.எ.சுமந்திரன் எம்.பி,

ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டத்துக்கு முரணானவை என்ற நிலைப்பாட்டை நாம் ஆரம்பத்திலிருந்து கொண்டிருக்கின்றோம். நாட்டிலே அரசாங்கம்  இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பில் நாம் ஏற்கனவே அரச தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். அதில் ஐக்கிய தேசிய முன்னணியின் முன்மொழியும பிரதமராக ஆதரவளிப்போம் என்பதைத் திட்டவட்டமாகக் கூறியிருந்தோம். தற்பொழுது ஐக்கிய தேசிய முன்னணி தங்களுடைய தெரிவு ரணில் விக்கிரமசிங்க என அறிவித்திருந்தார்கள். அதன் பிரகாரம் இன்று நாட்டில் உடனடியாக ஓர் அரசொன்று உருவாக்கப்பட வேண்டும். அது பாராளுமன்றத்தில்  நம்பிக்கை இருப்பவரின் தலைமையில் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆதரவாக வாக்களித்திருக்கின்றோம்.

எங்களுடைய விளக்கத்திலே மிகத் தெளிவாக அரசாங்கத்தின் அங்கத்தவராக சேரமாட்டோம் என்பதையும் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருந்துவருவோம் என்பதையும் விளக்கிச் சொல்லியிருக்கிறோம். எந்தவொரு முன் நிபந்தனையையும் நாம் முன்வைக்கவில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மையை யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சகல தரப்பினரிடமும் கலந்துரையாடியிருந்தோம். ஐக்கிய தேசிய முன்னணியிடமும் இதுபற்றிக் கலந்துரையாடினோம். இன்று ரணில் விக்கிரமசிங்கவின் உரையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதகாவும், பிரிக்கப்படாது பிளவுபடுத்த முடியாத நாட்டுக்குள் அரசியல் தீர்வொன்றை முன்வைப்போம் தெளிவாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனக் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.