ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குக

பிரேரணையை முன்வைத்து சஜித் வலியுறுத்து

0 523

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவும், நம்பிக்கையும் உள்ளது.  இந்த உண்மையை அனைவரும் புரிந்துகொண்டு அரசியலமைப்பிற்கும்  சட்ட ஆட்சிக்கும்  ஜனநாயகத்துக்கும் முழுமையாக  மதிப்பளித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கே  பிரதமர் பதவியை வழங்க வேண்டுமென  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும்  நம்பிக்கை பிரேரணையை சபையில் நேற்று புதன்கிழமை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் ஜனநாயகம்  இருள் சூழ்ந்த யுகத்தில்  இன்று  பயணித்துக்கொண்டிருகிறது. இந்த நிலையிலிருந்து மீண்டெழவே பிரதமராக ரணில் விக்கிரமசிங்க  நியமிக்கப்பட வேண்டுமென்ற  பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கின்றேன். கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் அடுத்தடுத்து பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு  பாரதூரமாக மீறப்பட்டுள்ளதால் மக்களின் இறையாண்மைக்கும் பாரிய பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. தனியொருவரின் நிலைப்பாட்டில் அரசியலமைப்பிற்கு  முரணாக அரசாங்கமொன்று  அமைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மை கொண்ட  பிரதமரை நீக்கிவிட்டு  85 பேர்கூட ஆதரவில்லாத ஒருவர் பிரதமராக  நியமிக்கப்பட்டார். அதன் காரணமாக நாட்டில் அரசியல், பொருளாதார, சமூக மட்டத்தில்  பாரதூரமான நெருக்கடிகளும், பாதிப்புகளும், இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பிரதமரை  நீக்குவதற்கு நான்கு முறைமைகள் எமது அரசமைப்பில் உள்ளன. பிரதமரே பதவியை துறக்க வேண்டும் அல்லது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து நீக்க வேண்டும் அல்லது அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாது போகும் நிலையில் பதவி விலக்க முடியும் அல்லது வரவு செலவு திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால் குறித்த  எந்த முறைமைகளில் ஒன்றையேனும் கையாளது தம்மையும், தனது தனிப்பட்ட நிலைப்பாட்டையும் மாத்திரம் எண்ணி நாட்டையும், ஆணையை வழங்கிய மக்களையும் புறக்கணித்து அரசியலமைப்பிற்கும், நாட்டின் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும்  விரோதமான அரசாங்மொன்றை  அமைத்தனர்.

சட்டத்துக்கு முரணான அரசாங்கம் ஒன்றினை  அமைத்தது மாத்திரமின்றி அவர்களின் பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எமது தரப்பு உறுப்பினர்களை பணம், பதவிகளை கொடுத்து வாங்கப்பார்த்தனர். ஆனால் அவர்கள் தனது மனசாட்சியை காட்டிக் கொடுக்காது நடந்துக்கொண்டுள்ளனர். பாராளுமன்றத்தில்  பல சந்தர்ப்பங்களில் எமது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டியுள்ளோம். நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலில் பெரும்பான்மையை நிரூபித்தோம். பின்னர் பாராளுமன்ற  தெரிவுக்குழுவை அமைப்பதில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினோம். குரல் பதிவில் பெரும்பான்மையை நிரூபித்தால் போதாது என்று கூறியதால் இலத்திரனியல் முறை மாத்திரமல்ல காட்ட வேண்டிய அனைத்து முறைகளிலும் எமது பெரும்பான்மையை காட்டியுள்ளோம்.

அரசியலமைப்பையும்  சட்டத்தையும் மீறி சதித்திட்டங்கள் மூலம் எமது பெரும்பான்மையை உடைக்கப்பார்த்தனர். ஒடுக்குமுறை, அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள், அரச பயங்கரவாதத்தை கொண்டு இதனை செய்யப் பார்த்தனர். பொலிசார் மீது தாக்குதல் நடத்தினர். அடிதடியில் ஈடுபட்டு பாராளுமன்ற  கௌரவத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தினர். சபையினுள் இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டு பாராளுமன்ற  கட்டத் தொகுதியில் ஊடக சந்திப்புகளை நடத்தி தாம் சுத்தமானவர்களென உலகத்துக்கு எடுத்துக்காட்டினர். அத்துடன், பௌத்த தர்மத்தை பாதுகாக்கும் புனிதர்களாகவும் காட்டிக்கொண்டனர். அவ்வாறானவர்கள் தமக்கு பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்து கௌரவமாக விலகிச்சென்றிருக்க வேண்டும். ஆனால், அதனை அவர்கள் செய்யவில்லை.

அரசியலமைப்புத்தான்  எமது நாட்டின் அதியுச்ச சட்டமாகும். அதனைப் பாதுகாக்க வேண்டியது அனைத்துப் பிரஜைகளினதும் கடமையாகும். வேண்டுமென்றே பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பை  மீறி இந்த சதித்திட்டத்தை கொண்டு சென்றனர். அரசியலமைப்பை  மதித்து உரிய முறைமையை பின்பற்றி எதனையும் செய்ய வேண்டும். அவைதான் ஜனநாயகத்தின் அடையாளம். அதன் காரணமாக இன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில்  பெரும்பான்மை உள்ளதாக நிரூபிக்கின்றோம். இதுதான் உண்மை. அதற்கு மதிப்பளித்து அரசியலமைப்பிற்கு  உட்பட்டு அனைவரும் செயற்பட வேண்டும். சட்டரீதியான அரசாங்கமொன்று  இல்லாமையால் அபிவிருத்திகள், மக்களுக்கு கிடைக்கும் மானியங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களும், விவசாயிகளும், அரச வேவையாளர்களும், மத்தியதர வர்க்கத்தினரும் நிர்க்கதியாகியுள்ளனர்.  எனவே,  அரச தலைவரிடம் பகிரங்கமாக நாம் கோருவதாவது, இன்னமும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற சதித்திட்டம் என்பதை முழு நாடும் உணர்ந்துகொண்டுள்ளது. அதிலிந்து நாட்டை மீட்டெடுக்க ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு சபையின் பெரும்பான்மை ஆதரவை தெரிவிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.