ரணிலுக்கு ஆதரவு 117

ஐ.தே.முவுடன் மு.கா., தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு; ம.வி.மு. வாக்களிப்பில் பங்கேற்கவில்லை;  அமர்வை புறக்கணித்தது ஐ.ம.சு.கூ.

0 777

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவதற்கு பாராளுமன்றம் 117 வாக்குகளால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியுடன்  இணைந்து பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிததுடன்  மக்கள் விடுதலை முன்னணி  சபையில் இருந்தபோதும்  வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி என்பன நேற்றைய பாராளுமன்ற அமர்விலும் கலந்துகொள்ளாது புறக்கணித்தனர்.

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவதற்கு பாராளுமன்றம் 117 வாக்குகளால் அங்கீகாரம் வழங்கியது.   இப்பிரேரணையை முன்வைத்த சஜித் பிரேமதாஸ சுமார் 50 நிமிடங்கள்வரை உரை நிகழ்த்தினார். அதே கட்சியை சேர்ந்த மங்கள சமரவீர பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றியதுடன் ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக செயற்படுவதற்கு அவர்மீது பாராளுமன்றம் அதிக நம்பிக்கையுள்ளதெனத்  தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணைக்கு சபையில்  117 வாக்குகள் அளிக்கப்பட்டடு ரணிலுக்கு சபையில் அங்கீகரம் வழங்கப்பட்டது.  இந்த நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணியுடன்  இணைந்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது. இதுதவிர, ஏற்கெனவே ஐ.தே.மு. கூட்டணியுடன் இணைந்து செயற்படும் பாராளுமன்றில் தனிக் கட்சி அந்தஸ்துள்ள முஸ்லிம் கங்கிரஸும் ஆதரவாக வாக்களித்தது. அத்துடன் ம.வி.மு.  சபையில் இருந்தபோதும்  வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதேபோல் நேற்றைய தினமும்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அக்கட்சியுடன் கூட்டிணைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சி என்பன வழமைபோன்றே நேற்றும் சபைக்கு சமுகமளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கைப் பிரேரணைமீது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போதே நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டன. வாக்குகளின் எண்ணிக்கையை அறிவித்த சபாநாயகர் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.  ஏற்கனவே, ஐந்து பிரேரணைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி  தனது பலத்தை நிரூபித்த நிலையில் நேற்று ஆறாவது தடவையாக தனது பலத்தை மீண்டும் நிரூபித்துக்காட்டியது.

அரச தரப்பு பக்கத்தில் முன்வரிசை ஆசனத்தில் ஐ.தே.க. எம்.பிக்கள்.

பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபை கூடுவதற்கான கோரம் மணி ஒலித்தபோது அரசதரப்பில் பின்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களான விஜயபால ஹெட்டியாராச்சி, ஹெஷன் விதானகே, சமிந்த விஜயசிறி  ஆகியோர் எழுந்துவந்து அரச தரப்பின் முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர். பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது அவர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

ஒரே பிரேரணை

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இரு பிரேரணைகள் முன்னெடுக்கப்படுமென ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் ஒரு பிரேரணை மட்டுமே சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில்  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்த நம்பிக்கைப் பிரேரணையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் நெருக்கடிக்கு  அடுத்தகட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிய பிரேரணையுமே சபையில் சமர்ப்பிக்கப்படுமென ஒழுங்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் ரணில் பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்த நம்பிக்கைப் பிரேரணை மட்டுமே சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன், பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் ஒருமணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவதற்கான அவர்மீதான நம்பிக்கைப் பிரேரணை  117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து  சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்  எழுந்து சென்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு கைலாகு கொடுத்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  இதேபோன்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீனும் ரணிலுக்கு கைலாகு கொடுத்து தமது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

.

 

Leave A Reply

Your email address will not be published.