மாற்றங்களுக்கு உறுதி பூணுவோம்

0 414

இலங்­கையின் வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு மக்கள் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்ள காலப்­ப­குதி இது­வாகும். இத்­த­ரு­ணத்­தில்தான் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் புனித நோன்புப் பெரு­நாளைக் கொண்­டா­டு­வ­தற்குத் தயா­ராகி வரு­கிறோம்.

உண்­மையில் முஸ்­லிம்கள் பெரு­நாளைக் கூட சந்­தோ­ச­மாகக் கொண்­டா­டு­கின்ற நிலைமை இப்­போ­தில்லை. பொரு­ளா­தார நெருக்­கடி, பொருட்­களின் விலை­யேற்றம் கார­ண­மாக பெரு­நா­ளைக்குத் தேவை­யான உணவு, உடை­களைக் கூட கொள்­வ­னவு செய்ய முடி­யாத நிலை­யி­லேயே பல குடும்­பங்கள் உள்­ளன. முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் உள்ள தன­வந்­தர்கள் மற்றும் சமூக நிறு­வ­னங்­களின் உத­வியால் இவ்­வா­றான குடும்­பங்­க­ளுக்கு ஓர­ளவு உத­விகள் வழங்­கப்­ப­டு­கின்ற போதிலும் அவை அவர்­க­ளது முழு­மை­யான தேவை­களைப் பூர்த்தி செய்யப் போது­மா­ன­வை­யல்ல என்­ப­துதான் யதார்த்­த­மாகும்.

இன்­றைய பொரு­ளா­தார நெருக்­க­டி­யா­னது மக்­களை சகல வழி­க­ளிலும் பாதித்­துள்­ளது. செல­வுகள் ரொக்கட் வேகத்தில் அதி­க­ரித்­துள்ள போதிலும் வரு­மானம் அதி­க­ரிக்­க­வில்லை. இதன் கார­ண­மாக குடும்பத் தலை­வர்கள் பலத்த நெருக்­க­டி­க­ளுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். பிள்­ளை­க­ளுக்குத் தேவை­யான பால் மாவைக் கூட வாங்­கு­வ­தற்கு வச­தி­யற்ற நிலையில் மக்கள் புலம்­பித்­தி­ரி­கின்­றனர். பிள்­ளை­களின் கல்விச் செல­வு­களை ஈடு­செய்ய முடி­யாத நிலையில், அவர்­க­ளது கல்வி வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டிய நிலை வந்­துள்­ள­தாக பலரும் கவ­லைப்­ப­டு­கின்­றனர். எது­வித வரு­மா­ன­மு­மற்ற அல்­லது பெண்கள் தலை­மை­தாங்கும் குடும்­பங்கள் இதை­விடப் பாரிய சவால்­களைச் சந்­தித்து வரு­கின்­றன.

இந் நிலையில் இவ்­வாறு பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்ள மக்­க­ளுக்கு உத­வு­கின்ற வகையில் சமூக பாது­காப்பு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்த இக்­கட்­டான தரு­ணத்தில் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உதவி ஒத்­தா­சை­யாக இருப்­பதன் மூலமே இந்த சவா­லி­லி­ருந்து வெளி­வர முடியும்.

குறிப்­பாக எவ்­வா­றான நெருக்­க­டிகள் வரு­கின்ற போதிலும் முஸ்லிம் சமூகம் கல்­வியில் மேலும் பின்­தங்­கா­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது நம் அனை­வ­ரதும் கடப்­பா­டாகும். பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த மாண­வர்­களின் கல்விப் பய­ணத்­திற்கு கை கொடுக்கக் கூடிய திட்­டங்­களை பள்­ளி­வா­சல்கள் தோறும் முன்­னெ­டுக்க வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.

கல்­வியில் முன்­னே­று­வதன் மூலம் மாத்­தி­ரமே நம்மால் எதிர்­கால சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கக் கூடி­ய­தா­க­வி­ருக்கும். அடுத்து வரும் ஓரிரு ஆண்­டுகள் நாம் பலத்த நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்டி வரும் என்­பதே யதார்த்­த­மாகும். இத­னையே பொரு­ளியல் நிபு­ணர்கள் பலரும் அழுத்­த­மாகக் கூறி வரு­கின்­றனர். எனினும் அதன் பின்னர் ஏற்­படக் கூடிய சுபீட்­ச­மான எதிர்­கா­லத்தில் நமது பிள்­ளைகள் மகிழ்ச்­சி­யாக வாழ வேண்­டு­மானால் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களை இப்­போதே செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அந்­த­வ­கை­யில்தான், முஸ்லிம் சமூ­கத்­தி­லுள்ள தன­வந்­தர்கள், சமூக நிறு­வ­னங்கள், பள்­ளி­வா­சல்கள் என்­பன கூட்­டி­ணைந்து நமது சமூ­கத்தின் கல்வி எதிர்­காலம் குறித்து சீரி­ய­சான திட்­டங்­களை வகுத்துச் செயற்­பட வேண்டும் என்றும் இதற்­காக ஸகாத் பணத்தை தாரா­ள­மாகப் பயன்­ப­டுத்த முன்வர வேண்டும் என்றும் வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.
மறுபுறம், நாட­ளா­விய ரீதியில் பாரிய போராட்­டங்கள் இடம்­பெற்று வரு­வதை நாம் அறிவோம். ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டுக்குச் செல்­லு­மாறு வலி­யு­றுத்தி மக்கள் தினமும் வீதி­களில் இறங்கிப் போராடி வரு­கின்­றனர். இதில் இன மத வேறு­பா­டின்றி சக­லரும் பங்­கேற்­றுள்­ளனர். முஸ்­லிம்­களும் இப் போராட்­டங்­களில் ஒதுங்­கி­யி­ராது, தமது பங்­க­ளிப்­பு­களை வழங்கி வரு­வதை காண முடி­கி­றது.

இந்தப் போராட்­டங்­களைப் பொறுத்­த­வரை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இரண்டு கடப்­பா­டுகள் உள்­ளன. ஒன்று முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் உள்ள ஊழலும் மோச­டியும் நிறைந்த அர­சியல் கலா­சா­ரத்­திற்கு எதி­ராகப் போரா­டு­வது. அடுத்­தது தேசிய அர­சி­யலில் நிலவும் சீர்­கே­டு­க­ளுக்கு எதி­ராகப் போரா­டு­வது.

தேசிய அர­சியல் சீர்­கே­டு­க­ளுக்கு எதி­ராக முஸ்லிம் பகு­தி­களில் ஆங்­காங்கே போராட்­டங்கள் இடம்­பெ­று­கின்ற போதிலும் முஸ்லிம் அர­சியல் சீர­ழி­வு­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்­களை போதி­ய­ளவில் காண முடி­ய­வில்லை. முஸ்லிம் சமூகம் இன்று அர­சியல், சமூக, கல்வி, கலா­சார, பொரு­ளா­தார ரீதி­யாக பின்­ன­டை­வு­களைச் சந்­தித்­தி­ருப்­ப­தற்கு ஊழல், மோச­டி­மிக்க முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களே பிர­தான கார­ண­மாவர். என­வேதான் இந்த மோச­மான அர­சியல் கலா­சா­ரத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்து, கல்வி கற்ற பொருத்­த­மான இளம் தலைமுறையொன்றை அரசியல் தலைவர்களாக நாம் நியமிக்காதவரை நமக்கு ஒருபோதும் வெற்றிகிட்டப் போவதில்லை.

ரமழான் மனிதர்களில் மாத்திரமின்றி, சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வந்த மாதமாகும். அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக நோன்பு நோற்று, அமல்களில் ஈடுபட்டு நம்மில் மாற்றங்களுக்கு வித்திட்டது போன்றே நமது சமூகத்திலும் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும். அதற்கான கொள்கைகளை நமக்குள் வகுத்துச் செயற்பட வேண்டும் என வலியுறுத் விரும்புகிறோம்.

அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.