இம்ரான்கான் இல்லாத பாகிஸ்தான்!

0 352

ஏ.ஆர்.ஏ.பரீல்

2018 ஆம் ஆண்டு பாகிஸ்­தானின் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்டு பதவி வகித்த இம்ரான்கான் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் தோல்­வியைத் தழு­வி­ய­தை­ய­டுத்து பிர­தமர் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்­டுள்ளார். நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் மூலம் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றப்­பட்ட பாகிஸ்­தானின் முதல் பிர­தமர் இவர் ஆவார்.

எதிர்க்­கட்­சி­யி­னரின் இம்­ரான்­கா­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கடந்த 9ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­டது. பாகிஸ்­தானின் அர­சியல் வர­லாற்றில் எந்­த­வொரு பிர­த­ம­ருக்கும் தனது ஐந்து வருட பத­விக்­கா­லத்தை பூர்த்தி செய்து கொள்­வ­தற்கு வாய்ப்பு கிடைக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதற்­கான காரணம் அர­சியல் சூழ்ச்சி மற்றும் இரா­ணுவ புரட்சி என வெளி­நாட்டு ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

பாகிஸ்தான் பாரா­ளு­மன்றம் 342 உறுப்­பி­னர்­களைக் கொண்­ட­தாகும். இம்­ரான்­கா­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் 174 வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தானின் எதிர்க்­கட்சி கூட்­டணி ஒன்­றி­ணைந்து இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­வைத்­தி­ருந்­தது. இம்­ரான்­கா­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வாக்­கெ­டுப்­புக்­கு­வி­டப்­ப­டு­வ­தற்கு இருந்த நிலையில் அவர் ஒரு வாரத்­துக்­கு­முன்பு பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து அதற்கு முட்­டுக்­கட்­டை­யிட்டார்.

இத­னை­ய­டுத்து அந்­நாட்டின் எதிர்க்­கட்சி கூட்­ட­ணி­யினர் நீதி மன்றில் பாரா­ளு­மன்ற கலைப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­தனர்.மேன்­மு­றை­யீட்டை விசா­ரித்த நீதி­மன்றம் இம்ரான் கானின் நட­வ­டிக்கை அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது எனவும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வாக்­கெ­டுப்­புக்கு முட்­டுக்­கட்­டை­யிட்­டமை சட்­ட­வி­ரோ­த­மா­ன­தெ­னவும் தீர்ப்­ப­ளித்­தது. அத­னை­ய­டுத்து நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வாக்­கெ­டுப்பு மூலம் அவர் வெளி­யற்­றேப்­பட்டார்.

தற்­போது பாகிஸ்தான் எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு பிர­த­ம­ரான இம்ரான் கான் பொறுப்­புக்­கூற வேண்டும் என்று குற்றம் சுமத்­தியே எதிர்­கட்சி கூட்­டணி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை முன்­வைத்­தி­ருந்­தது.

பிர­தமர் இம்­ரான்­கானின் பொரு­ளா­தாரக் கொள்­கைகளே நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யதா­கவும் அவ­ர் பொரு­ளா­தாரத்தை சரிவர முகா­மை செய்ய­வில்லை எனவும் எதிர்க்­கட்­சி­களின் கூட்­டணி குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்­தானின் எதிர்க்­கட்சி கூட்­ட­ணி­யினை பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் எனும் கட்­சிகள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றன. பாகிஸ்தான் மக்கள் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக முன்னாள் பிர­தமர் பெனாசிர் பூட்டோ வின் மகன் பிலாவல் சர்­தாரி பதவி வகிக்­கிறார். பிலா­வலின் தந்­தையும்,பெனாசிர் பூட்­டோவின் கண­வ­ரு­மான ஆசிப் அலி ­சர்­தாரி பாகிஸ்­தானின் முன்னாள் ஜனா­தி­பதி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

‘கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக பாகிஸ்­தானில் ஜன­நா­யகம் சவா­லுக்­குள்­ளா­கி­யி­ருந்­தது. இப்­போது பாகிஸ்தான் பாகிஸ்­தா­னி­யர்­களின் கைக­ளுக்குக் கிடைத்­து­விட்­டது. புதிய பாகிஸ்­தா­னொன்று இப்­போது உரு­வாகும்’ என நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வாக்­கெ­டுப்பு வெற்­றி­பெற்று இம்­ரான்கான் தோற்­க­டிக்­கப்­பட்­டதும் பிலாவல் பூட்டோ தெரி­வித்தார்.

முஸ்லிம் லீக் என், முன்னாள் பிர­தமர் நவாஸ் ஷரீபின் கட்­சி­யாகும். நவாஸ் ஷரீப் ஊழல் மோசடி செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டார். பின்பு சுக­யீனம் கார­ண­மாக விடு­தலை செய்­யப்­பட்டார். தற்­போது லண்­டனில் வசித்து வரு­கிறார். அவ­ரது மக­ளான மர்யம் நவாஸ் ஷரீப் இம்ரான் கானுக்கு எதி­ராக முஸ்லிம் லீக் என் கட்­சியை வழி­ந­டத்தி வந்தார்.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த நிலையில் பாரா­ளு­மன்றம் ஏற்­க­னவே கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக சபா­நா­ய­க­ருக்கு எதி­ராக, மர்­யமே நீதி­மன்றம் சென்று மேன்­மு­றை­யீடு செய்தார். இத­னை­ய­டுத்தே நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­னெ­டுப்­ப­தற்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

இம்ரான் கான் தஹ்ரீக் ஈ இன்சாப் எனும் கட்­சி­யையே பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கிறார். 2018 இல் நடை­பெற்ற தேர்­தலில் தஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி அதி­கா­ரத்­துக்கு வந்­த­போது அக்­கட்சி மூன்­றா­வது அர­சியல் சக்­தி­யாக இருந்­தது.

பாகிஸ்தான் மக்கள் கட்­சியும் மற்றும் முஸ்லிம் லீக் என் கட்­சி­யுமே பாகிஸ்­தானில் மாறி மாறி பத­வியில் இருந்­தது.2018 ஆம் ஆண்­டா­கும்­போது பாகிஸ்தான் அர­சியல் – ஊழல் நிறைந்­த­தாக இருந்­தது. இம்ரான் கான் அப்­போது ஊழ­லுக்­கெ­தி­ரான அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்தார். 2018 இல் இம்­ரான்கான் அப்­போது எதிர்­கட்­சி­யி­லி­ருந்த இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களின் ஒத்­து­ழைப்­புடன் தேர்­தலில் வெற்றி பெற்று ஆட்­சி­ய­மைத்து பிர­த­ம­ரானார். இம்ரான் கான் பத­விக்கு வந்­ததும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக அர­சாங்­கத்தின் தேவை­யற்ற செல­வு­க­ளுக்குத் தடை­வி­தித்தார்.
சவூதி அரே­பியா உட்­பட மத்­திய கிழக்கு நாடு­க­ளி­ட­மி­ருந்து உத­வி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முன்­னின்று செயற்­பட்டார்.

சவூதி அரே­பியா உட்­பட மத்­திய கிழக்கு நாடுகள் மற்றும் மேலைத்­தேய நாடுகள் இம்ரான் கான் பிர­தமர் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து எதிர்­பார்த்­த­ளவு உத­விகள் வழங்­க­வில்லை. இத­னை­ய­டுத்து இம்ரான் கானின் அர­சாங்­கத்­துக்கு விரும்­ப­மின்­றி­யேனும் சீனா­வுடன் உத­வி­க­ளுக்­காக தொடர்பு கொள்ள வேண்­டி­யேற்­பட்­டது.

2018 ஆம் ஆண்­டுக்கு முன்பு சீனா பாகிஸ்­தானின் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் பல­வற்­றுக்கு கட­னு­தவி வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இம்­ரான்கான் சீனா­வுடன் உறவு பலப்படுத்தியதை­ய­டுத்து பாகிஸ்­தா­னுக்கு சீனா­வி­ட­மி­ருந்து தொடர்ந்து கட­னு­த­விகள் கிடைக்­கப்­பெற்­றன. சீனாவின் திட்­டங்கள் பாகிஸ்­தானில் ஆரம்­பிக்­கப்­பட்­டன.
பாகிஸ்தான் மற்றும் சீனா­வுக்கு மிடையில் நெருங்­கிய உறவு நில­வி­ய­தை­ய­டுத்து அது இந்­தியா அதி­ருப்­தி­ய­டை­வ­தற்கு கார­ணமாய் அமைந்­த­தாக அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கி­றார்கள். பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் சீனாவின் கடன் சிக்­கலில் மாட்­டிக்­கொண்­ட­மையே பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள்­ளாகும் நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டது எனவும் அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளனர்.

தனக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் தோற்­றுப்­போன 69 வய­தான இம்ரான் கான் தான் இறு­திப்­பந்­து­வரை போரா­டி­ய­தா­கவும்,ஆனால் ஜன­நா­யகம் மோச­மான நிலைக்குச் சென்று விட்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

தன்னைப் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கு எதிர்க்­கட்சி அமெ­ரிக்­காவின் ஒத்­து­ழைப்­புடன் சூழ்ச்சி செய்­த­தா­கவும் கூறினார். பக்கச் சார்­பற்று செயற்­ப­டு­வ­தாக தெரி­வித்த இரா­ணுவம் இந்தச் சூழ்ச்­சிக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

அமெ­ரிக்­கா­வுக்கு சார்­பான அர­சொன்றே பாகிஸ்­தானில் நிறு­வப்­படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

என்­றாலும் தன்னை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்தும் அகற்­று­வதற்­கான சூழ்ச்­சியின் பின்­ன­ணியில் அமெ­ரிக்கா இருந்­தது என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கான முக்­கிய ஆதா­ரங்கள் எத­னையும் இம்ரான் கான் முன் வைக்­க­வில்லை.

பாகிஸ்­தானில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ‘முஸ்லிம் லீக் என்’ கட்­சியின் சிரேஷ்ட தலைவர் ஷபாஸ் ஷரீபே பதவி வகித்தார்.இவர் நவாஸ் சரீபின் சகோ­த­ர­ராவார். ஷபாஸ் ஷரீப் (70) பாகிஸ்தான் மக்கள் மத்­தியில் சிறந்த நிர்­வாகி என பெயர் பெற்­றவர். நவாஸ் ஷரீபைப் போலன்றி இவர் இரா­ணு­வத்­தி­ன­ருடன் அந்­நி­யோன்­ய­மாக செயற்­ப­டு­ப­வ­ரு­மாவார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

22 கோடி மக்கள் வசிக்கும் பாகிஸ்­தானில் உள்­நாட்டு, வெளி­நாட்டு கொள்­கைகள் உட்­பட பாது­காப்புக் கொள்­கை­களும் இரா­ணு­வத்தின் மேற்­பார்­வையின் கீழேயே உள்­ளன.
பாகிஸ்­தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் சகோதரர் ஷபாஸ் ஷரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்வரை இவர் பாகிஸ்தானின் பிரதமராக பதவிவகிப்பார். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

ஷபாஸ் ஷரீப் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்­தானில் நடந்த இரா­ணுவ புரட்­சியின் பின்பு சிறையில் அடைக்­கப்­பட்டார். பின்பு அவர் சவூதி அரே­பி­யா­வுக்கு நாடு கடத்­தப்­பட்டார்.
அவர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் பாகிஸ்­தா­னுக்குத் திரும்­பினார். பனாமா அறிக்­கையின் வெளி­யீ­டு­களின் படி பாகிஸ்­தானின் முன்னாள் பிர­த­மர் நவாஸ் ஷரீப் சொத்­து­களை மறைத்து வைத்­தி­ருந்தமைக்காக குற்­ற­வா­ளி­யாக இனங்காணப்பட்ட­தை­ய­டுத்து கட்­சியின் தலை­வ­ராக பத­வி­யேற்ற ஷபாஸ் ஷரீப் அர­சி­ய­லிலும் பிர­வே­சித்­த­துடன் நவாஸ் ஷரீபின் மகள் மரி­ய­முக்கு கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஏ.எப்.பி.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.