பாடசாலை மாணவர்கள் ஏன் கலகக்காரர்களாக மாறியுள்ளனர்?

0 1,246
  • தமிழில்: யு. எல். முஸம்மில் – குருநாகல் நிருபர்

அண்மையில் மாத்தறை மற்றும் பேருவளை பிரதேசங்களில் மாணவர் மோதல்களில் இருவர் உயிரிழந்தனர். மாத்தறையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பேருவளையில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்து ஒருவர் மரணித்தார்.

இச்சம்பவங்களை முன்னிறுத்தி மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கல்வியியலாளர்கள் மூவரை பேட்டி கண்டோம். அவர்களது கருத்துக்கள் வருமாறு:

 

  • பெற்றோர் – பிள்ளை நெருக்கம் அற்றுப் போயுள்ளது
ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை பிரதானி கலாநிதி மயுர சமரகோன்:

இந்த சம்பவங்கள் முழு இலங்கை சமூகத்தினதும் சமூகப் பிரச்சினைகளின் ஒரு பக்கவிளைவு மட்டுமே. இது ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமான விடயமல்ல. இன்று நாம் காண்பது அநியாயங்களுக்குள் அகப்பட்டுள்ள, நீதி நியாயங்களுக்கு அர்த்தம் புரியாத சட்டதிட்டங்களை ஏற்படுத்துபவர்களும் அடாவடித்தனம் புரியும் அரசியல்வாதிகளும் மலிந்துள்ள சமூகத்தையே.

இவ்வாறான சமூகத்தின் மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் புதினமானவையல்ல. நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள பிரஜைகளை உருவாக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் அரைகுறைகளை  உருவாக்கும் சமூகத்தையே காண்கிறோம்.

பெற்றோர் – பிள்ளைகளின்  உறவுகூட மிக ஆபத்தான நிலையில் உள்ளது. இதற்கு பிரதான காரணம் வெற்றியளிக்காத அசாதாரண கல்விக் கொள்கையே.

இன்றைய நிலையில் ஆரம்பப் பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை ஒவ்வொரு பிள்ளைகளும் ஒரு போட்டியான சூழ்நிலையில் மன அழுத்தம் உடையவர்களாகவே காணப்படுகின்றனர்.  பெற்றோரும் இத்தகைய மன அழுத்தத்திலேயே உள்ளனர். பெற்றோர் தமது பிள்ளைகளுடன் கடத்தும் காலம் குறைந்தே உள்ளது. அத்தோடு பிள்ளைகள் தமது பிரச்சினைகளை பெற்றோருக்குத் தெரிவிப்பதற்கும் பிள்ளைகளின் பிரச்சினைகளை பெற்றோர் தெரிந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் இல்லாமலிருந்து கொண்டிருக்கிறது. விசேடமாக பிள்ளைகளின் பிரச்சினைகளின்போது பெற்றார் இதனைவிட வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில், பிள்ளைகள் தமது பிரச்சினைகளை பெற்றோரிடம் தெரிவிப்பதற்கோ அது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கோ பின்வாங்குவார்கள்.

தற்போதைய கல்விக் கொள்கைகள் மாணவர்களை ஆசைகள், எதிர்பார்ப்புகளற்ற ரோபோக்களாக மாற்றியுள்ளன. அத்தோடு எந்தவிதமான உத்தரவாதமும் கண்காணிப்பும் இல்லாத டியூஷன் வியாபார வகுப்புகளும் நேரடியாக இதற்குப் பதில் சொல்ல வேண்டியுள்ளது. தற்போதைய பிள்ளைகளின் ஒரே குறிக்கோள் இந்தக் கல்விப் போட்டியில் எப்படியோ வெற்றிபெற வேண்டுமென்பது மட்டுமே.

இந்த அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் எதை எதையெல்ல்மோ செய்கின்றனர். அத்தோடு இம்மாணவர்களில் அநேகர் உளவியல் ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் பாதிப்படைந்திருக்கின்றனர். இன்னும் சிலர் பாரிய குற்றவாளிகளாகவும் மாறியிருக்கின்றனர். இன்று பிள்ளைகள் காண்பதும், சமூக அமைப்பு என புரிந்துகொண்டிருப்பதும் சமூக வலைத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வருபவற்றையே. இதனால் மனநோயாளிகள் போன்ற ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. இவர்கள் வீரமெனப் புரிந்து கொண்டிருப்பது அடுத்தவனை வீழ்த்துவதும், அவனை தாழ்த்துவதும், அவனை தூற்றுவதும், சண்டை சச்சரவில் ஈடுபடுவதையுமே. சமூக வலைத்தளங்களும் இத்தகையவர்களையே வளர்த்துப் போஷித்து வருகின்றன.

பாடசாலையில் வகுப்புகளுக்கு ‘கட்’ அடிப்பதும், சண்டை சச்சரவில் ஈடுபடுவதும், சமூகவிரோத செயல்களில் பங்கேற்பதும் மாணவர்களுக்கு ஓர் எடுப்பான விடயமென்பது போலவே சமூக வலைத்தளங்களில் செயற்படும் சில மடையர்கள் தமது பதிவுகளில் சித்திரிக்கின்றனர்.

சிலரது வாதம்தான் இவர்களை (தஹம் பாஸல்) அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்பியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று. உண்மையில் சொல்லப்போனால் தற்போதைய நிலையில் தஹம் பாஸல் என்பது விஷக்கருத்துக்களை மட்டும் போதிக்கும் இடங்களாக மாறியுள்ளன.

சிறைவாசம் அனுபவிப்பவர்களில் அதிகமானோர் இருப்பது தஹம் பாஸல் சென்றவர்களே! தஹம் பாஸல்களில் ஆகவேண்டியது அறநெறிகளை போதித்து சிறார்களை நல்வழிப்படுத்துவதாகும். ஆனால் இதை செய்யவேண்டிய சில பௌத்த துறவிகளின் செயற்பாடு குழப்பம் விளைவிக்கும் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் போன்றுள்ளன. மக்களிடையே கலகத்தை உண்டுபண்ணும் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக செயற்படும் இந்த பௌத்த துறவிகளின் நடவடிக்கைகளினால் பொதுமக்கள் மேலும் திண்டாட்டமடைகின்றனர். சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை இத்தகையவர்களுக்கு நன்கு புரிகிறது. இருந்தும் இவர்கள் தெடர்ந்தும் இவ்வாறு செயற்பட முடியாது.

தற்போதைய சிறார்கள் விளையாட்டுத்துறையிலிருந்து தூரமாக இருப்பதும் இத்தகைய பிரச்சினைகளுக்கு மற்றொரு காரணம். வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் போன்றவை வளர்வது விளையாட்டின் மூலமே. எனவே தற்போதைய சிறார்களை விளையாட்டுத்துறையிலும் ஈடுபடுத்த வேண்டும். அது சிறந்த பயனை ஈட்டித்தரும்.

அத்தோடு, தற்போதைய மாணவர்களை கையாளும்போது முன்னைய காலத்து மாணவர்களைப் போன்று கையாள முடியாது. அவர்களை வழிநடாத்த அவர்களுக்கே உரிய விதத்தில், அவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக செயற்பட வேண்டும்.

இவ்வாறு சீரழிந்த சமூகமொன்று உருவாகிக்கொண்டிருக்கக் கூடிய சந்தர்ப்பத்தில்  இவைபோன்ற சம்பவங்கள்   இறுதியானதல்ல. எதிர்காலத்தில் இதைவிடப் பாரிய சம்பவங்களை நமது நாட்டில் கண்டுகொள்ளலாம்; செவியுறலாம்.

அதேபோன்று, இவை போன்ற சம்பவங்களினால் மக்கள் துன்பமடையும்போது அரசியல்வாதிகள் மகிழ்ச்சியில் இருப்பார்கள். இந்த அனர்த்தத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், கடுமையான சட்டதிட்டங்களை உள்ளடக்கிய செயற்பாட்டு முறைமையொன்றை உருவாக்க வேண்டும். இது விடயத்தில் சமூகம் கூடிய கரிசனை காட்டவேண்டும்.

  • சுயநல சிந்தனை கொண்ட மாணவ சமூகமே உருவாக்கப்பட்டுள்ளது

கொழும்பு இஸிபதான, றோயல் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் அதிபர் உபாலி குணசேகர:

தற்போது பாடசாலை மட்டத்தில் முக்கியத்துவமளிக்கப்படுவது பாடத்திட்டங்களுக்கும் பாடங்களுக்கு பெறப்படும் சித்திகளை பற்றியுமே!

இந்தப் பயணத்தின்போது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் எவருமே மனிதநேயம், மனிதாபிமானம் பற்றிய எந்த சிந்தனையுமின்றியே யெற்படுகின்றனர்

நான் எனது சேவைக் காலத்தில் ஆசிரியர்களுக்கு  பாடவிதானங்களுக்கு 80 சதவீத நேரத்தையும் ஏனைய 20 சதவீதத்தை மனிதாபிமானம், மனிதநேயம், பண்பாடுகள், ஒழுக்க சீலத்தைப்பற்றி போதியுங்கள் என  கட்டளையிட்டிருந்தேன்.

இப்படிச் செய்தால் இதுபோன்ற துரதிஷ்டவசமான சம்பவங்களிலிருந்து ஓரளவேனும் விடுபடலாம். இது விடயத்தில் பாடசாலை சமூகம் கூடியளவு கரிசனை காட்டவேண்டும். இல்லையெனில், இதைவிட பாரிய விளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டியேற்படும். இன்று மாணவர்களிடையே சமூக உணர்வு, ஒற்றுமை மிக அரிதாகவே காணப்படுகின்றன.

ஜீரணிக்க முடியாத போட்டிச் சூழலுக்குப் பழகிப்போயுள்ள மாணவர்கள் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநல சிந்தனையுடயவர்களாகவே உள்ளனர். சமூகத்திலிருந்தும் ஊடகங்களிலிருந்தும் நல்ல முன்மாதிரிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும் மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளன. பாடசாலைக் காதலும் இவை போன்ற பிரச்சினைகளுக்கு முதன்மை வகித்த சந்தர்ப்பங்கள் பலவற்றை கண்டிருக்கிறோம். காதல் என்பது உலக ஆரம்பத்திலிருந்து இருக்கக்கூடிய மனித உணர்வுகளிலொன்று. அதனால் நான் நினைக்கிறேன் காதலென்பதை குறிப்பிட்ட வயதினருக்கென்றோ, குறிப்பிட்ட காலத்துக்கென்றோ மட்டுப்படுத்திவிட முடியாது. காதல் வலையில் சிக்கிய பிள்ளைகளை  இளமையிலோ பாடசாலை காலங்களிலோ தண்டிப்பதாலும் கண்டிப்பதாலும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது என்பது எனது கருத்து. உரிய தீர்வுகளை உரிய காலத்தில் அவர்களுக்குப் புரியும்படியாக அதன் நன்மை, தீமைகளை தெளிவுபடுத்த வேண்டும். பெற்றார்களாகிய நாம் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதோடு கட்டுப்பாடுகளை போடுவதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

எனது அனுபவத்தின்படி வழிதவறிய பிள்ளைகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதில் பயனில்லை என்று கருதுகிறேன். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைதான் அவர்களோடு வெளிப்படையாக நடந்துகொள்வது, நெருக்கமாக இருப்பது.

 

  • தொடர்பு சாதனங்களின் தாக்கமே காரணம்

கண்டி பிரதான வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் கிஹான் அபேவர்தன:

இளவயதினரிடையே சாகசங்களையும் வீரதீர செயல்களை புரிவதிலும் விருப்பமுடையவர்களே அதிகம் காணப்படுகின்றனர். அவைகளின் பின்விளைவுகள் பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை. இதன் விளைவே இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதற்கான பிரதான காரணம். அத்தோடு தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியாமையும் மற்றொரு காரணம்.

தீய விதத்தில் தமது உணர்வுகளையும், செயற்பாடுகளையும் வெளிப்படுத்துபவர்களையும், அத்தீய செயற்பாடுகளை தொடர்பு சாதனங்களில் பெரிதுபடுத்தி காண்பிப்பதையும், குறிப்பாக,சமூக ஊடகங்களில் அவைகளுக்கு கூடியளவு விளம்பரம் வழங்கப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளன.

அதுமட்டுமன்றி தற்கொலைச் சம்பவங்களுக்குக்கூட பாரிய விளம்பரத்தைக் கொடுத்து அனுதாப அலையை மோதச் செய்கின்றனர்.

அண்மைய மாத்தறை சம்பவத்தைக்கூட தொலைக்காட்சி அலைவரிசைகள், வலைத்தளங்கள் தமக்குகிடைத்த சி.சி.ரி.வி. காட்சிகளை பலமுறை காட்சிப்படுததி விளம்பரப்படுத்திக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதுபோன்ற செயற்பாடுகள் மேலும் இவைபோன்ற சம்பவங்களுக்குத துணை போவதைத்தவிர தீர்வாக அமையப்போவதில்லை. இன்றைய அழுத்தம் மிகுந்த கல்விக்கொள்கையால் மாணவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூட சக்தியற்றவர்களாகவே  இருக்கின்றனர். தற்போதைய மாணவர்கள் விளையாட்டு,கலை,கலாசார விடயங்களில் ஈடுபடாமையும் தமது சுயகட்டுப்பாட்டை இழப்பதற்கான காரணங்களாக அமைந்துவிடுகின்றன

உணர்வுகள் என்பது மனித இயல்புகளில் ஒன்று. அவைகளை அறநெறி விழுமியங்களின் மூலம் மாணவர்களும் மற்றவர்களும்  கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றொரு காரணம்தான் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றம். முளைக்கமுன்பே அனைத்து சிறார்களின் கைகளுக்கும் கைத்தொலைபேசிகள் சென்று விடுகின்றன. தடைகளையும் தாண்டி பார்க்கக் கூடாதவைகளையும் பார்த்து விடுகின்றனர். தீவிரவாதச் செயல்கள், அட்டூழியங்கள் மிகுந்த காட்சிகளை அடிக்கடி பார்க்கின்றனர். பின்பு அவைகளுக்கு அடிமையாகி தாம் கண்ட காட்சிகளை செய்து பார்க்கவும் முனைகின்றனர். இவைகளின் விளைவுகள் பயங்கரமானது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.