முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தேடித் தந்தவர்

0 458

எம்.எம்.எம். ரம்ஸீன்
கெலிஓயா

இந்நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியலுக்கு முகவரியும் அடையாளமும் பெற்றுக் கொடுத்த தலைவர் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றார்.

தேசிய கட்சிகளனூடாகப் பாரம்பரியமாக அரசியல் செய்து வந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் பரப்பில் அதீத துணிச்சலுடன் தனித்துவ அரசியலை முன்னெடுத்து வியாபார சமூகமாய் அடையாளப்படுத்தப்பட்டு வந்த முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக் கொடுத்தவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆவார் என்றால் மிகையாகாது. இத்தலைவர் மறைந்து இரு தசாப்தங்கள் கடந்து விட்டாலும் அவர் விட்டுச் சென்ற இடைவெளி இதுவரை நிரப்பப்படவில்லை என்பது அவரின் ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய அரசியல் சாணக்கியமும், ஆளுமையுமிக்க அரசியல் தலைவர்கள் மத்தியில் சிகரமாய் திகழ்பவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆவார். அவரின் இளமைக்காலத்தில் அவரிடம் இழையோடிய பண்பாடுகள், நற்பழக்கவழக்கங்கள், திறமைகள் அவரின் சிறந்த எதிர்காலத்திற்கு கட்டியம் கூறின. அவர் சிறுவயது முதல் வாசிப்புப் பழக்கம், பத்திரிகைகளுக்கு கவிதைகள் எழுதுதல் ஆகிய பழக்கங்களைக் கடைபிடித்து வந்தார். இதனால், பிற்காலத்தில் அவரால் சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் திகழ முடிந்தது. அவரின் கவித்துவ ஆற்றலுக்கு மகுடமாய் “நான் எனும் நீ” கவிதை தொகுதியை வெளியிட்டார். இதனை தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மற்றும் கவிக்கோ அப்துர் ரஹ்மான் முதலானோரும் பாராட்டியுள்ளனர். இக்கவிதை தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள கவிதைகளில் அவரின் சமூக சிந்தனைகள் இழையோடியிருப்பதை அவதானிக்கலாம்.

அரசியல் ஞானம், சமூக சிந்தனை, சன்மார்க்க அறிவு, துணிச்சல், தலைமைத்துவ ஆற்றல், பேச்சு வாண்மை, உறுதிமிக்க தீர்மானம் எடுத்தல், மும்மொழிப் புலமை முதலான விடயங்கள் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களை பன்முக ஆளுமையின் வடிவமாக மிளிரச் செய்தது.

முஸ்லிம் சமூகத்தற்குள் பரவிய பிரதேசவாத சிந்தனைப் பின்னணியில் துணிச்சமிக்க அரசியல் பிரவேசம் மூலம் சோனகன், மலாய், மேமன், போரா, சம்மான், கொச்சியன் உட்பட சகல சகல கூறுபோடல்களுக்கும் மத்தியில் சமூக ஐக்கியத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களால் அவர் இலக்கு வைக்கப்பட்ட போது, தலைநகரில் இருந்து தேசிய மட்டத்தில் சமூகப் பணிகளில் பங்களிப்புச் செய்தார். சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்ததுடன் அரசியல் சவால்களையும் நெருக்குதல்களையும் துணிவுடன் எதிர்கொண்டார். அவரிடததில் காணப்பட்ட சமூக சிந்தனையும் துணிச்சலும் அவரை களத்தில் செயல்வீரனாக்கியது.

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு சகல இனங்களையும் இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைவதற்கான அரசியல் நிலைப்பாட்டை தோற்றுவிப்பதில் வெற்றி எம்.எச்.எம். அஷ்ரப் கண்டார். அவர் தேசிய ஒற்றுமை, சமூக நீதி, சமாதானம் நிலைக்கப்பாடுபட்டார். அவர் பாதிக்கப்பட்டவர்களின் குரலாய் மாறியதுடன் நின்றுவிடாது இனவாத, மதவாத மற்றும் பிரிவினைவாதம் என்பவற்றுக்கு எதிராக தைரியமுடன் குரல் கொடுத்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் அரசியல் வழிமுறைகளில் கவரப்பட்டு அக்கட்சியின் அரசியல் கருத்தரங்குகள், ஒன்றுகூடல்களில் பங்குபற்றி வந்தார். வட கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமைப்பட்ட வாழ்வியலின் அவசியத்தை உணர்ந்து செயற்பட்டார். யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிதி திரட்டி அனுப்பிய முதல் முதல் முஸ்லிம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆவார்.

1980 களில் வடகிழக்கில் இடம்பெற்ற போராட்டத்திற்குள் முஸ்லிம் சமூகம் சிக்கிக் கொள்வது வடகிழக்கில் மட்டுமன்றி வடகிழக்குக்கு வெளியிலும் பாதிப்புமிக்கது. எனவே, முஸ்லிம் சமூகத்தை தெளிவான பாதையில் நகர்த்துவது அவசியம். இதனை முன்னெடுப்பதற்கான ஆற்றல் தேசிய கட்சிசார் முஸ்லிம் தலைமைகளிடம் இல்லை. எனவே, இவ்விடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்ற புரிதல் எம்.எச்.எம். அஷ்ரபை அரசியல் போராட்டத்தில் செயற்படத் தூண்டியது எனலாம்.

இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட ஒரு அங்கமாக முஸ்லிம் சமூகம் இருக்கும் நிலையில், வட்ட மேசை மாநாடு மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பவற்றில் சமூகம் ஓரங்கட்டப்படுவதாக எம்.எச்.எம். அஷ்ரப் கவலையுற்றார். இதனால், வடகிழக்கு வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பு, அரசியல் அபிலாஷைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் கௌரவமிக்க அரசியல் அந்தஸ்த்து அவசியம் என்பதை புரிந்து கொண்டார்.

இவரின் அரசியல் வழிகாட்டல்கள் அன்றைய சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைப்பதற்கு காரணமாயிற்று. எனவே, சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சமூகத்தின் அரசியல் விடிவுக்காக பாடுபட்டார்.
எம்.எச்.எம். அஷ்ரபின் அரசியலில் கவரப்பட்ட வட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பெரும்பான்மை கட்சிகளில் நம்பிக்கையிழந்தனர். சமூகத்தின் ஆரம்பமட்டம் முதல் மேல்மட்டம் வரை சகலரதும் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றார். இதனால் பணபலம், ஆயுதபலம், அதிகார பலம் என்பன அவருக்கு சவால்களாகத் தெரியவில்லை. முஸ்லிம் சமூக அரசியலானது அபிவிருத்தி, பட்டம், பதவி, சலுகை, கொந்தராத்துக்கள் எனப் பழக்கப்பட்டிருந்த நிலையில் அதற்குள் ஊடுருவி சமூகத்தின் உரிமைகளுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து அரசியல் முகவரியைப் பெற்றுக் கொடுத்தார்.

சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, பொருளாதார பலம் என்பவற்றுக்கு அரசியல் பலம் அவசியம் என்பதை உணர்ந்து ஆரம்பித்த கட்சியை வடகிழக்குக்கு வெளியிலும் வேர்விடச் செய்து சமூகத்திற்குள் பிரதேசவாதம் உருவாகாமல் பாதுகாத்தார். இக்கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் அவ்வப்போது ஏற்பட்ட சவால்கள், சோதனைகளின் போது அதிர்ச்சி வைத்தியம் பார்க்கும் அரசியல் அவரிடம் காணப்பட்டது. அதிரடி முடிவுகளால் கட்சிக்குள் நம்பிக்கைத்துரோகங்கள், கழுத்தறுப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள், குத்துவெட்டுக்கள் என்பன தொடராமல் பாதுகாத்தார்.

இப்பின்னணியில் அரசியலில் உச்சத்தைத் தொட்டு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறினார். எம்.எச்.எம். அஷ்ரப் தனது பேரம் பேசும் சக்தியை சமூக நலனுக்காகப் பயன்படுத்தினார்.

சிறுபான்மை கட்சிகள் மட்டுமன்றி சிறு கட்சிகளும் நன்மையடையச் செய்யும் வகையில் 12 சதவீத வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாக மாற்றியமைக்க பங்களிப்புச் செய்தார்.

முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் செய்ய வேண்டுமாயின் எம்.எச்.எம். அஷ்ரப் என்ற நாமம் அவர் மறைந்து இரு தசாப்பதங்களின் பின்பும் அவசியம் என்பது அவரின் ஆளுமையை எடுத்துக் காட்டுகின்றது.

அரசியல் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை உறுதிப்படுத்துடன் குறுகிய காலத்தில் வேலைவாய்ப்புக்கள், அபிவிருத்திகள் என்பவற்றை பெற்றுக் கொடுத்தார். முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன் மஹ்மூதிற்குப் பின்பு தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் காலத்தில் முஸ்லிம் சமூகம் அரசியலில் உச்ச நன்மைகளை அநுபவித்தது என்பதில் ஐயமில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.