வழிதவறிச் செல்லும் இளையோரை கால்பந்தாட்டத்தின்பால் ஈர்ப்பதே குறிக்கோள்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்

0 781

இளம் தலை­மு­றை­யி­னரை கால்­பந்­தாட்­டத்­தின்பால் ஈர்க்கச் செய்து இலங்­கையில் கால்­பந்­தாட்­டத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்­வதே தனது குறிக்கோள் என ‘கால்­பந்­தாட்ட மீள் ஆரம்பம்’ என்ற திட்­டத்­துடன் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் தலைவர் பத­விக்கு போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய ஜஸ்வர் உமர் தெரி­விக்­கின்றார்.
“இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளன வர­லாற்றில் கிழக்கு மாகா­ணத்தை பூர்­வீ­க­மாக கொண்ட ஒருவர் தலை­வ­ராகத் தெரி­வா­கி­யி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும்.”
இலங்கை கால்­பந்­தாட்­டத்தின் தரத்தை உயர்த்­து­வ­தாக இருந்தால் முதலில் வய­து­வே­று­பா­டின்றி சிறு­வர்கள் முதல் பெரி­யோர்­வரை அனை­வ­ரையும் கால்­பந்­தாட்­டத்தில் ஆர்வம், அக்­கறை கொள்ளச் செய்­ய­வேண்டும். அதுதான் தனது பிர­தான முயற்­சி­யா­கவும் முதல் நகர்­வா­கவும் இருக்கும் என ‘விடி­வெள்­ளி­’யு­ட­னான நேர்­கா­ண­லில் ­ஜஸ்வர் உமர் தெரி­வித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அக்கரைப் பற்றில் பிறந்த ஜஸ்வர் உமர், றோயல் கல்லூரியில் கல்வி பயின்றதுடன் கல்லூரி கால்பந்தாட்ட அணியிலும் இடம்பெற்றார். இங்கிலாந்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஜஸ்வர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார். ஜஸ்வர் ஒரு சிறந்த ஆளுமைமிக்கவராவார்.
கல்விமானான அவரது தந்தை கல்வி அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் ஆவார். ஜஸ்வர் தற்போது தொலைத்தொடர்பாடல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளராகவும் விளங்­கு­கிறார்.
அவ­ரு­ட­னான முழு­மை­யா­ன நேர்­காணல் வரு­மாறு:

கேள்வி: க்ராஸ்ரூட் எனப்­படும் அடி­மட்ட கால்­பந்­தாட்ட அபி­வி­ருத்தி பற்றி கடந்த 20 வரு­டங்­க­ளாக இலங்­கையில் பேசப்­பட்டு வந்­த­போ­திலும் அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­யவில்லை. அத்­துடன் பாட­சாலை மட்ட கால்­பந்­தாட்­டமும் வீழ்­ச்சி அடைந்­துள்­ளது. இந்த இரண்டு விட­யங்கள் குறித்து உங்­க­ளது தலை­மையில் என்ன திட்டம் வகுத்­துள்­ளீர்கள்?

பதில் : ‘கால்­பந்­தாட்ட மீள் ஆரம்பம்’ என்ற எண்­ணக்­க­ரு­வி­லேயே நான் தலைவர் பத­விக்கு போட்­டி­யிட்டேன். அதனை செயற்­ப­டுத்­து­வதே என் முன்னே உள்ள தலை­யாய கட­மை­யாகும். அதன் வரி­சையில் சிறி­யோர்­முதல் பெரி­யோர்­வரை அனை­வ­ரையும் கால்­பந்­தாட்­டத்­தின்பால் ஈர்த்­தெ­டுப்­பதே எனது முத­லா­வது அணு­கு­மு­றை­யாக இருக்­கின்­றது. வழி­த­வறிச் செல்லும் இளை­யோ­ரையும் கால்­பந்­தாட்­டத்தில் ஈடு­படச் செய்து நல்­வ­ழிப்­ப­டுத்­து­வதும் எனது திட்­டங்­களில் ஒன்­றா­கும். சிறு­வர்கள், பெற்­றோர்கள், பெரியோர் அனை­வ­ரையும் கால்­பந்­தாட்­டத்தில் ஆர்­வமும் அர்ப்­ப­ணிப்பும் கொள்­ளச்­செய்­ய­வேண்டும். இதனை முன்­னிட்டு ‘சமூக கால்­பந்­தாட்டம்’ என்ற எண்­ணக்­க­ரு­வின்கீழ் மினி மைதான கால்­பந்­தாட்டம், வீதி கால்­பந்­தாட்டம், கடற்­கரை கால்­பந்­தாட்டம், குடும்ப கால்­பந்­தாட்டம் ஆகி­ய­வற்றை நாடு முழு­வதும் விரைவில் ஆரம்­பிக்­க­வுள்ளேன். முதல் 2 வரு­டங்­களில் கால்­பந்­தாட்­டத்தை பிர­சித்தி பெறச் செய்த பின்னர் இரண்­டா­வது கட்­ட­மாக கால்­பந்­தாட்­டத்தில் ஆர்வம், திறமை மற்றும் ஆளு­மை­கொண்ட பிள்­ளை­களை இனங்­கண்டு அவர்­க­ளுக்கு அடிப்­படை பயிற்­சிகள் வழங்­கப்­படும்.
கவர்தல், முத­லீ­டு­க­ளுடன் அபி­வி­ருத்தி, பெறு­பே­றுகள் ஆகிய 3 படி­நி­லை­க­ளி­லேயே எனது எதிர்­கால கால்­பந்­தாட்ட திட்­டங்கள் அமைந்­துள்­ளன. சமூக கால்­பந்­தாட்டம் மிக முக்­கி­ய­மா­னது. திற­மை­சா­லி­களை இனங்­காண்­பது மட்டு­மல்ல தவ­றான வழி­களில் செல்­ப­வர்­களை மீட்டு நல்­வ­ழிப்­ப­டுத்­து­வதும் இதன் முக்­கிய நோக்­க­மாகும்.
அதனைத் தொடர்ந்து சம்­மே­ள­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் 50 கனிஷ்ட கால்­பந்­தாட்ட பயிற்சி நிலை­யங்கள், 100 கால்­பந்­தாட்டப் பாட­சா­லைகள், 50 மினி கால்­பந்­தாட்ட மைதா­னங்கள் ஆகி­யன அமைக்­கப்­பட்டு முறை­யான பயிற்­சிகள் வழங்­கப்­ப­டு­வ­துடன் அடிப்­படைத் தேவை­களும் நிறை­வேற்­றப்­படும்.
பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாட­சாலை மட்ட கால்­பந்­தாட்டப் போட்­டிகள் நிறைய நடை­பெற்­றன. ஆனால் இப்­போது இல்லை. கல்வி அமைச்சு, விளை­யாட்­டுத்­துறை அமைச்சு ஆகி­ய­வற்­றுடன் இணைந்து அவற்றை மீண்டும் ஆரம்­பிப்­ப­துடன் கிராம மட்ட, மாவட்ட மட்டப் போட்­டி­களும் தொட­ராக நடத்­தப்­படும்.
அத்­துடன் அடுத்த இரண்டு வரு­டங்­க­ளுக்குள் மேற்கு (கொழும்பு), வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய பிர­தே­சங்­களில் உயர் ஆற்றல் வெளிப்­பாட்டு கால்­பந்­தாட்ட நிலை­யங்கள் ஸ்தாபிக்­கப்­படும்.

கேள்வி: செய­லாளர் நாய­க­மாக பதவி வகித்த காலத்தில் சில பிரச்­சி­னை­களை, தடை­களை எதிர்­கொண்ட நீங்கள் தற்­போது தலை­வ­ராக சுதந்­தி­ர­மாக செயற்­பட வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது. அது பற்றி கூறு­வீர்­களா?

பதில்: இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளன யாப்பில் செய­லாளர் நாய­கத்­துக்கு கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு அழைப்பு விடுப்­ப­தற்கும் லீக் போட்­டி­களை நடத்­து­வ­தற்கும் மாத்­தி­ரமே அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அது விரைவில் மாற்றியமைக்­கப்­படும். இப்­போது தலைவர் என்ற வகையில் கால்­பந்­தாட்­டத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் குறிக்­கோ­ளுடன் நான் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது. எனது தலை­மை­யி­லான நிரு­வாக உத்­தி­யோ­கத்­தர்கள் அனை­வரும் சுதந்­தி­ர­மா­கவும் தொலை­நோக்­கு­டனும் செயற்­ப­ட­வுள்ளோம்.
முதல் கட்­ட­மாக சம்­மே­ள­னத்தில் நில­வி­வந்த பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது. நிரு­வாக சபை உறுப்­பி­னர்­களும் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றும் உத்­தி­யோ­கத்­தர்­களும் தங்­க­ளது கட­மை­களை உணர்ந்து பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­பட இணங்­கி­யுள்­ளனர். சுருங்கச் சொல்லின் தேசிய நல­நோக்­குடன் கூட்­டாண்மை முயற்­சி­யுடன் அனை­வரும் செயற்­ப­ட­வுள்ளோம். மேலும் முன்னர் இருந்த நிறை­வேற்றுச் சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை 28 இலி­ருந்து 10 ஆகக் குறைத்து நிய­மன உறுப்­பி­னர்கள் இருவர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

கேள்வி: தேர்­தலில் கடும் போட்­டிக்கு மத்­தி­யி­லேயே நீங்கள் வெற்­றி­ பெற்­றீர்கள், உங்­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளித்­த­வர்­களை எவ்­வாறு அனு­ச­ரிக்கப் போகின்­றீர்கள்?

பதில்: எனக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் வாக்­க­ளித்­த­வர்கள் அனை­வ­ருக்கும் நான் சொல்லும் ஒரே ஒரு பதில் என்­ன­வெனில் தேர்தல் என்­பது வரு­வதும் போவ­து­மாக இருக்கும். இப்­போது நான் இலங்­கை­யி­லுள்ள சகல லீக்­கு­க­ளுக்கும் பொது­வான தலைவர். கால்­பந்­தாட்ட அபி­வி­ருத்­திக்­காக என்­னோடு இணைந்து பய­ணிக்­கு­மாறு அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கின்றேன். அவர்­களும் என்­னோடு இணைந்து செயற்­பட சம்­ம­தித்­துள்­ளனர்.
எனக்கு வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளுக்கும் பொறுப்­புக்ளை வழங்­கி­யுள்ளேன். அபி­வி­ருத்­தியை நோக்கி நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டால் மாத்­தி­ரமே கால்­பந்­தாட்டம் செழிப்­புறும். அவர்­க­ளுக்கு எதி­ரி­யாக அல்­லாமல் தலை­வ­னாக, நண்­ப­னா­கவே இந்தப் பொறுப்­புக்­களை வழங்­கி­யுள்ளேன்.
நான் பத­விக்கு வந்த முத­லா­வது மாதத்தில் 20 இடங்­க­ளுக்குச் சென்று 20 லீக் பிர­தி­நி­தி­களை சந்­தித்து அவற்றில் நிலவும் குறை­நி­றை­களை அறிந்த பின்­னரே அவர்­க­ளுக்­கான பொறுப்­புக்கள் வழங்­கப்­பட்­டன.
சம்­மே­ள­னத்தின் கீழ் இயங்கும் மாவட்ட அபி­வி­ருத்திக் குழு பணி­களை அவர்கள் செய்­வார்கள்.

கேள்வி: இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள சுப்பர் லீக், எவ்.ஏ.கிண்ணம் ஆகி­ய­வற்­றுடன் சம்­பியன்ஸ் லீக், முதலாம் பிரவு போட்­டி­களை எப்­போது ஆரம்­பிக்கத் திட்­ட­மிட்­டுள்­ளீர்கள்? சுப்பர் லீக்கில் போன்று மற்­றைய போட்­டி­க­ளிலும் வீரர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டுமா?

பதில்: இடை­நி­றுத்­தப்­பட்ட சுப்பர் லீக் போட்­டி­களை இந்த மாதம் 17ஆம் திகதி முதல் 31ஆம் திக­தி­வரை முன்­ன­ரை­விட மிக சிறப்­பான முறையில் குதி­ரைப்­பந்­தயத் திடலில் நடத்­த­வுள்ளோம். அதன் பின்னர் சர்­வ­தேச போட்­டி­களில் பங்­கு­பற்றும் தேசிய மற்றும் 23 வய­தின்கீழ் அணி­களின் பயிற்­சி­க­ளுக்­காக போட்டி இடை­நி­றுத்­தப்­படும். மூன்றாம் கட்ட சுப்பர் லீக் நவம்பர் மாதம் மீண்டும் ஆரம்­பித்து நிறை­வு­செய்­யப்­படும். அதனைத் தொடர்ந்து முதல் தட­வை­யாக சுப்பர் கிண்ண நொக் அவுட் போட்டி நடத்­தப்­படும்.
அத்­துடன் இடை­நி­றுத்­தப்­பட்ட எவ்.ஏ. கிண்ண கால்­பந்­தாட்­டமும் விரைவில் தொட­ர­வுள்­ளது. அதே­போன்று சம்­பயின்ஸ் லீக், முதலாம் பிரிவு கால்­பந்­தாட்டப் போட்­டி­களும் நடத்­தப்­படும். சுகா­தார பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக இப் போட்­டிகள் பெரும்­பாலும் குறிப்­பிட்ட இடங்­களில் மாத்­திரம் நடத்­தப்­படும்.
சுப்பர் லீக்கில் பங்­கு­பற்றும் கழகங்­களைச் சேர்ந்த 10 வீரர்­க­ளுக்கு அவர்கள் அக் கழ­கங்­க­ளுடன் செய்­து­கொண்ட ஒப்­பந்­தங்­க­ளுக்கு அமைய 4 மாதங்­க­ளுக்கு சம்­மே­ளனம் நேர­டி­யாக சம்­பளம் வழங்கும். பயிற்­று­நர்கள், உதவி பயிற்­று­நர்­க­ளுக்கு 50 வீத சம்­பளம் வழங்­கப்­படும். அதே­போன்று சம்­பியன்ஸ் லீக் உட்­பட ஏனைய போட்­டி­களில் விளை­யாடும் வீரர்­க­ளுக்கும் பயிற்­று­நர்­க­ளுக்கும் சுமா­ரான சம்­பளம் வழங்­கப்­படும்.

கேள்வி: சம்­மே­ள­னத்­தினால் கால்­பந்­தாட்ட விரு­து­விழா நடத்த திட்டம் ஏதேனும் உள்­ளதா?

பதில்: விரு­து­ வி­ழா­வுக்கு முன்­ப­தாக 1995 இல் சார்க் தங்கக் கிண்­ணத்தை வென்­றெ­டுத்த இலங்கை அணி­யி­ன­ருக்கு பாராட்டு விழா­வுடன் பணப்­ப­ரிசு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. பாராட்டு விழாவை இந்த மாத இறு­தியில் நடத்த திட்­ட­மிட்­டுள்ளோம்.
வருட இறு­தியில் கால்­பந்­தாட்ட இரவு (விருது) விழா நடத்­தப்­படும். சிறந்த வீரர், சிறந்த பயிற்­றுநர், சிறந்த மத்­தி­யஸ்தர், சிறந்த கழகம், சிறந்த லீக், வாழ்நாள் சாத­னை­யாளர், சிறந்த ஊட­க­வி­ய­லாளர் ஆகியோர் தெரிவு செய்­யப்­பட்டு விரு­துகள் வழங்­கப்­படும்.

கேள்வி: இறு­தி­யாக கால்­பந்­தாட்ட சமூ­கத்­துக்கு வேறு ஏதேனும் கூற­வி­ரும்­பு­கின்­றீர்­களா?

பதில்: நாங்கள் கஷ்­டப்­பட்­டது, கடு­மை­யாக உழைத்­த­தெல்லாம் ஒரு வருட பதவிக் காலத்­துக்­காக அல்ல. எனவே ஒரு வரு­டத்­துக்குள் யாப்பில் உள்ள குறை­பா­டு­களைத் திருத்தி சம்­மே­ளன பொதுச்­சபை மற்றும் பீபாவின் அங்­கீ­கா­ரத்­துடன் நான்கு வருட பதவிக் காலத்தைக் கொண்­டு­வ­ர­வேண்டும். அதற்­கான செயற்­பா­டுகள் நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. எனவே யாரும் இடையில் புகுந்து குழப்­பக்­கூ­டாது. சுய லாபங்­க­ளையும் தீய நோக்­கங்­க­ளையும் புறந்தள்­ளி­வைத்­து­விட்டு அனை­வரும் ஒன்­றி­ணைந்து கால்­பந்­தாட்­டத்தின் ஆரோக்­கி­யத்­துக்­காக, வளர்ச்­சிக்­காக எங்­க­ளது ‘கால்­பந்­தாட்ட மீள் ஆரம்பம்’ திட்­டத்­துடன் கைகோர்க்­கு­மாறு அழைப்பு விடுக்­கின்றேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.