ஜனாதிபதி முறையை ஒழிக்க இன்னும் தீவிரம் வேண்டும்

முஸ்லிம் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ரவூப் ஹக்கீம்.

0 911

அரசியல் ஜனநாயக மரபுகளையும் மீறி, ஜனாதிபதி அகங்காரமாக, ஆணவமாகப்  பேசுகின்ற நிலைவரத்தை வைத்துப் பார்க்கின்றபோது இந்த ஜனாதிபதி முறை இவ்வாறான அரசியல்வாதிகளை கொண்டுவந்து விடுமென்ற அச்சத்தினால் இந்த முறைமையினை இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலே இன்னும் தீவிரமாக செயற்படவேண்டும் எனும் நிலை ஏற்பட்டுள்தென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  செயற்குழுக் கூட்டம் செயற்குழுவின் செயலாளர் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில்  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நேற்று வடமேல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை இந்த ஒன்றரை மாத காலம் இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண சூழல் நாட்டை மிக மோசமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது என்பதை  யாவரும் அறிந்த உண்மை. எந்த ஊடகத்தை பார்த்தாலும், எந்த சாதாரண பொதுமகனை கேட்டாலும், ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த அரசியல் நெருக்கடி என்பது அல்லது இவ்வாறான நெருக்கடி நிலைக்கு யார் காரணம் என்று கேட்கின்ற போது சாதாரண பாமரமகன் கூட இந்த நெருக்கடி நிலையின் காரணகர்த்தா ஜனாதிபதி என்று சொல்லுகின்ற அளவுக்கு அவரது தீர்மானமானது பரவலாக  விமர்சிக்கிக்கப்படுகின்றது.

இதன் பின்னணியிலே கடந்த ஒன்றரைமாத காலமாக நடைபெற்று வருகின்ற இந்த அரசியல் நெருக்கடியின் மத்தியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழமைபோல இன்னொமொரு கண்டத்தை தாண்டியுள்ளது. நாடு தழுவிய ரீதியில் எங்களுடைய கட்சியின் உறுப்பினர்களுக்கு ஓரளவுக்கு மன ஆறுதலை தரக்கூடிய வகையிலே அரசியல் நேர்மையை கடைப்பிடித்தோம்.  நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற ஒரு நிலைவரம் தோன்றியிருப்பதற்கு எங்களுடைய பாராளுமன்ற குழு சோரம்போகாமல் ஒற்றுமையாக நின்றது. இந்த விடயம் எங்களுக்கு மத்தியிலே ஒரு பெரிய ஆறுதலை உருவாக்கியிருக்கின்றது. அதையிட்டு எங்களது கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரமின்றி, இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம்கூட சந்தோசப்படுகின்றது.  பொதுவாக சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எல்லா இயக்கங்களும், கட்சிகளும் மிக நிதானமாக, பக்குவமாக இந்த விடயத்தை கையாண்டது. மிக நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்கின்ற ஒரு பார்வையை  ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆங்காங்கே சில சலசலப்புகள், ஓரிரு கட்சித்தாவல்கள் நிகழ்ச்சிகளினால் ஒருசில சிறுபான்மை உறுப்பினர்கள் மீது ஆரம்பத்திலே சற்று வெறுப்புணர்வு ஏற்பட்டாலும், நாளடைவிலே அவர்களும் தங்களது தவறுகளை மாற்றியமைத்துக்கொண்டு இருந்த இடத்திற்கே மீண்டும் வந்த நிலையில், ஏற்பட்ட அரசியல் சதியை நிறைவேற்ற முடியாத வகையில் அதனை தடுக்கின்ற சாத்தியமான முயற்சி கைகூடியது என்பதனையும் நாங்கள் ஆறுதலோடு திரும்பிப்பார்க்கலாம்.

100 நாள் திட்டத்தின்போது, அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றினோம். அதனூடாக இந்தநாட்டிலே ஜனாதிபதி பதவிக்கு இருந்த ஏகபோக அதிகாரங்களை குறைக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்றத்திற்கு சுயாதீனமாக செயற்படுவதற்கு தடையாக இருந்த ஜனாதிபதியின் எதேச்சாதிகரமான அதிகாரங்களை பறிக்கப்பட்டன. இந்த நாட்டின் நீதிமன்றத்திற்கு இருந்த சுயாதீனத்தை இன்னும் விரிவுபடுத்தி திருத்தம் செய்யப்பட்டது. இதுவே இந்த நாட்டு ஜனநாயகத்திற்கு ஒரு பெரிய கேடயமாக மாறியிருக்கின்றது. கடந்த மூன்றரை வருட காலமாக இந்த தேசிய அரசாங்கத்தில் எதை செய்துகொள்ளாவிட்டாலும், இதையாவது செய்ததன் மூலம் வழமையாக ஜனாதிபதி பதவியை கையிலெடுத்து மக்கள் கொடுத்த ஆணையை மீறி தொடர்ச்சியாக தாங்கள் விரும்பிய திசைகளில் இந்த நாட்டை இழுத்துச்செல்ல எத்தனிக்கின்ற, சர்வாதிகார பண்போடு செயற்படத் துணிகின்ற ஜனாதிபதியின் கைகளை கட்டிப்போடுகின்ற வேலையை செய்ய முடிந்திருக்கின்றது. இதுவரையும் நாங்கள் நிம்மதியோடு நினைக்கின்ற விடயம் நேற்றுவரையும் உருவாகியிருக்கின்றது என்று சொன்னால் அதற்கு  இந்த 19வது திருத்தச்சட்டமே காரணம் என்றால் அதுமிகையாகாது.

ஆனால் இன்னும், இதுவரை காலமும் தான்தோன்றித்தனமாக, அரசியல் நியாயங்களை முழுமையாக மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி, கடந்த வாரம் மீண்டுமொருமுறை 19ஆவது திருத்தச்சட்டத்தில் பிழைகள் இருக்கின்றன, அதை திருத்துவதற்கு நான் நிச்சயமாக பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பேன் எனும் தொனியிலே இன்னுமொரு அபாய அறிவிப்பை விடுத்திருக்கின்றார். அதனை ஏளனத்தோடு பார்ப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது.

பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, அந்த கலைப்பை நிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை பி.ப 6 ஆறுமணி வரைக்கும் நடைபெற்றது. குறிப்பாக கடந்த ஒருவாரகாலமாக இந்த வழக்கு தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் சகல தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்த சூடு ஆறுவதற்கு முன்பாகவே இந்த 19வது திருத்தச்சட்டமானது தன்னுடைய அதிகாரங்களை குறைத்து தனக்கு அநியாயம் செய்திருப்பதாக நினைத்துக்கொண்டு, அதை திருத்துவதற்கு மீண்டும் பாராளுமன்றத்திற்கூடாக நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராகி வருகிறார்.

இன்று தன்னை சுற்றி இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு அதனூடாக ஒரு தெம்பை கொடுத்துவிடலாம் என்ற ஒரு நோக்கிலும், இவ்வாறான அவருடைய பேச்சுக்களினால் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்கின்ற கபட நோக்கிலேயே பேச ஆரம்பித்திருக்கின்றார். அந்தப் பாணியிலே அவருடைய  பேச்சு அமைந்திருக்கின்றது. ஆனால் நாங்கள் பெரிய எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் ஜனாதிபதி கதிரையில் அமர்த்தப்பட்ட இந்த ஜனாதிபதி மாறிமாறி இவ்வாறாக தடுமாற்றத்தோடு பேசிவருகின்றார் என்பதை எண்ணி வருத்தப்படாமல், வேதனைப்படாமல் இருக்க முடியாது.

கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் கடைசிவரையில் மகிந்த ராஜபக் ஷவோடு இருந்துவிட்டு, தேர்தலிலே படுதோல்வியடைந்த பின்னர் இந்த ஜனாதிபதியோடு சேர்ந்துகொண்டு ஒரு கும்பல் 20ஆவது திருத்தச்சட்டம் என்று ஒன்றை கொண்டுவந்து இந்த நாட்டிலே இருக்கிற பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றவேண்டும் என்பதற்கு எடுத்த முயற்சியையும் முன்னர் நாங்கள் தோற்கடித்திருந்தோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரிந்து கட்டிக்கொண்டு முன்னின்று அந்த முயற்சியை முறியடித்தது என்பதும், இந்த தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்காக எடுத்த முயற்சி சிறுபான்மை சமூகங்களுக்கு மிகப்பாதகமானது என்ற அடிப்படையிலே, எங்களுக்கு இருக்கின்ற ஆசனங்களின் எண்ணிக்கையிலேயே பாரிய மாற்றங்களை உண்டுபண்ணுகின்ற விடயத்தை நாங்கள் மிகத்தைரியமாக முறியடித்தமை என்பதும் முன்னைய வரலாறு.

இன்னும் எங்களுக்கு எதிராக பாதகமாக நடந்த விடயங்களை மீளமைத்துக்கொள்வதற்கான எங்களது போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே அவற்றைப் பற்றியெல்லாம் நாங்கள் விரிவாக ஆராயவேண்டும், பேச வேண்டும். என்ன நடந்தது என்பது தொடர்பில் தெளிவான நிலைப்பாடு நமக்கு தேவை. அடுத்த வாரம் இந்த நாட்டின் அரசியலில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம் என்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்ற வாரமாக அமையப்போகின்றது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்ற கலைப்பானது சட்டபூர்வமானதா?  இல்லையா?  என்பது குறித்து ஏழுபேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஒரு தீர்ப்பை வழங்க காத்திருக்கின்ற நிலையில், இந்த வாரத்திற்குள் மேல்நீதிமன்றம் தரவிருக்கின்ற அதிர்ச்சி வைத்தியத்திற்கு மாறாக ஏதாவது மாற்று வைத்தியத்தை உயர்நீதிமன்றம் செய்யுமா என்பது குறித்த தீர்ப்பும் எதிர்வரும் வாரங்களில் வரவிருக்கின்ற நிலையில், இந்த தீர்ப்புக்கள் ஏதாவது மாற்றங்களை கொண்டு வருமா எனும் நிலையிலும் இந்த நாட்டினுடைய அரசியல் போக்கில் எவ்வாறு அமையப்போகின்றது என்பதனை தீர்மானிக்கின்ற முக்கியமான விஷயங்களாக மாறியிருக்கின்றன.

இதற்கிடையிலேயே திங்கட்கிழமை (இன்று)  ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை அரசியலமைப்பை மீறி நீக்கியதாக இன்னுமொரு வழக்கும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவிருக்கின்றது. பாராளுமன்றத்தை கலைத்தது தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதிவாதிகளின் வாதங்களை முன்வக்கின்றபோது மேற்சொன்ன விடயத்தை ஏன் கேள்விக்கு உட்படுத்தவில்லை என்ற தோரணையில் வாதங்களை முன்வைத்தார்கள். இதற்க்கு சாதகமாக பிரதமரை பதவி விலக்கியமை என்பதும் அப்பட்டமாக அரசியலமைப்பை மீறுகின்ற விடயம். போதாக்குறைக்கு ஜனாதிபதியினுடைய அரசியல் தடுமாற்றத்தின் உச்சக்கட்டம் கடந்த வியாழக்கிழமை சுகதாச உள்ளரங்கிலே இடம்பெற்ற அவரது கட்சியின் மாநாட்டிலே ”பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமியுங்கள் என்று கையொப்பமிட்டு கேட்டாலும் நான் நியமிக்க மாட்டேன் ”என்று  அகங்காரமாக, ஆணவமாக எல்லா அரசியல் ஜனநாயக மரபுகளையும் மீறி, பேசுகிற நிலைவரத்தை வைத்து பார்க்கின்றபோது இந்த ஜனாதிபதி முறை இவ்வாறான அரசியல்வாதிகளை கொண்டு வந்து விடும் என்ற அச்சத்தினாலாவது அதனை இனிமேலாவது இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதிலே இன்னும் தீவிரமாக செயற்படவேண்டும் எனும் நிலையை கொண்டு வந்துள்ளது.

எங்களது கட்சி இந்த நிறைவேற்று அதிகாரமுறைமையை மாற்றுவது தொடர்பாக மாற்றுக்கருத்துக்களோடு தொடர்ந்தும் இருந்து வந்துள்ளோம். இதனை மீளாய்வு செய்கின்ற அளவுக்கு இப்போதைய அரசியல் களநிலைவரம் உருவாக்கப்பட்டுள்ளது. பலத்த விமர்சனத்திற்குட்பட்டதாக இப்போது இருக்கின்ற நிறைவேற்று அதிகாரமுறைமை உட்பட்டுள்ளது என்பதனை நாங்கள் மனதில் கொள்ளவேண்டும். எனவே இவற்றுக்கு மத்தியில் மிகவும் சாணக்கியமாக  எங்களது அரசியல் காய்நகர்த்தலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.