ஜனாஸா நல்லடக்கம்: யாருக்கு நன்றி சொல்வது?

0 581
கலாநிதி அமீரலி, 
மேர்டொக் பல்கலைக்கழகம், 
மேற்கு அவுஸ்திரேலியா

 

பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு விடையளிக்கையில், கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று கூறியதைக் கேட்ட அனைத்து முஸ்லிம்களும், மனிதாபிமானம் கொண்ட அத்தனை நல்லுள்ளங்களும் ஓர் ஆறுதல் பெருமூச்சு விட்டிருப்பர். எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள் பல மாதங்களாக அழுது வடித்த கண்ணீருக்கும் அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் பாராளுமன்றத்தில் விடை கிடைத்தமை வரவேற்கத்தக்கது. ஆனால் பிரதமரின் வார்த்தைகள் செயற்படுத்தப்படுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. இருந்தும், அரசாங்கத்தின் புதிய மன மாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?

 

கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே நீர் மூலம் கொரோனா பரவாது என்று பாராளுமன்றத்தில் கூற, அதனை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினரொருவர் அடக்கம் செய்வதை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமெனக்கோர, அந்தக் கோரிக்கையை சபாநாயகர் புறந்தள்ள முற்பட்டபோது பிரதமர் உடனெழுந்து அனுமதி வழங்கப்படும் எனக் கூறியதெல்லாம் யாரையோ எதற்கோ கவர்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நாடகம்போல் தோன்றவில்லையா? ஆகவே முஸ்லிம்கள் யாருக்கு நன்றி சொல்வது? ராஜாங்க அமைச்சருக்கா? எதிர்க்கட்சி உறுப்பினருக்கா? பிரதமருக்கா? அல்லது வேறு யாரையோ எதையோ குறிவைத்த அந்த நபருக்கா? இது சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

 

முதலாவதாக, கொரோனாவால் மரணித்த ஜனாஸாக்களை எரிக்கவேண்டுமென்பது ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்திரத்தின் அடிப்படையில் சிங்கள பௌத்த பேராதிக்கவாதிகளின் நிர்ப்பந்தத்தினால் இடப்பட்ட அரசாங்கக் கட்டளை. அதற்கான வர்த்தமானியும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது. மண்ணுக்குள் அடக்குவதனால் கொள்ளை நோய் பரவாதென்று உலகெங்குமுள்ள தொற்றுநோய் வைத்திய நிபுணர்களும், உலக சுகாதார நிறுவனமும் மற்றும் சர்வதேச மனித உரிமை இயக்கங்களும் கூற, அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு, பௌத்த பேராதிக்கவாதச் சித்தாந்தத்துக்குப் பலியான சில அரசாங்க வைத்தியர்களினதும் பல்கலைக்கழக மண்ணியல் விரிவுரையாளரொருவரது ஆலோசனையையும் காரணங்காட்டி, பிணங்களை எரிப்பதே நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழியென்று ஒற்றைக்காலில் நின்ற அரசு சடுதியாக முஸ்லிம்கள்மேல் மனமிரங்கிய மர்மம் என்ன?

 

முஸ்லிம்களின் சடலங்களைப் புதைக்க அனுமதிப்பது அரசாங்கத்தையே புதைப்பதற்குச் சமன் என்று ஒரு பேராதிக்கவாதத் தேரர் கூறியதை வாசகர்கள் அறிந்திருப்பர். அப்படிப்பட்டவர்களே இந்த ஆட்சி அமைவதற்கும் அது தொடர்ந்து நிலைப்பதற்கும் தூணாக இருக்கின்றனர். அவர்களும் மனம் மாறி விட்டார்களா? நன்றாக யோசித்தால் எல்லாமே அரசியல் இலாபம் கருதி நடத்தப்படும் ஒரு நாடகம் என்பது புலப்படும். சோழியன் குடும்பி சும்மா ஆடுவதில்லை. அப்படியானால் இந்த மனமாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன?

 

ராஜபக்ச ஆட்சி இன்று பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. ஆளும் கட்சிக்குள்ளேயே பிளவு, பொருளாதாரத்தின் சீரழிவு, கடன் சுமை, இந்தியாவுடனான சினேக உறவில் சிக்கல், சீனாவின் ஓயாத அழுத்தங்கள் என்றவாறு ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் சிகரமாக அமைந்துள்ளது இன்னொரு நெருக்கடி. அண்மையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெரோணிக்கா மிசேல் பச்சலெற் வெளியிட்ட இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்பற்றிய அறிக்கை மிகவும் பாரதூரமான ஒரு குற்றப்பத்திரிகை எனலாம். அந்த அறிக்கை அடுத்த மாதம் ஜெனிவாவில் ஐ. நா. மனித உரிமைச் சபையில் விவாதிக்கப்படப் போகிறது. இப்பொழுது ராஜபக்ச அரசுக்குள்ள பிரதான தலையிடி அந்தச் சபையில் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதே. பச்சலெற்றின் அறிக்கையை அச்சபையின் அங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டால் அந்த அறிக்கை சிபார்சு செய்துள்ள இலங்கையின் ஆட்சியினருக்கு எதிரான தடைகள் அமுலாக்கப்படும்போது ராஜபக்ச அரசின் கதி அதோகதிதான்.

 

இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி மனித உரிமைச் சபையின் பெரும்பான்மையான அங்கத்தவர்களை அந்த அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கச் செய்வதாகும். அந்த நோக்கத்துக்கும் ஜனாசா எரிப்பை நிறுத்துவதற்கும் ஒரு முக்கிய தொடர்புண்டு. இந்த இரகசியத்தை விளங்கிக் கொண்டால் இலங்கை முஸ்லிம்கள் யாருக்கு நன்றி சொல்லவேண்டும் என்பது தெளிவாகும்.

 

மனித உரிமைச் சபையிலே அதிகமான அரபு நாடுகளும் பாகிஸ்தான் உட்பட பல முஸ்லிம் நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளை ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இணைந்து பச்செலெற்றின் அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கச் செய்தால் இலங்கை அரசினர் ஐ.நா.வின் பொறியிலிருந்து விடுபட முடியும். இதனை எப்படிச் சாதிப்பது? அதற்கு வழிசமைக்கும் நோக்கத்திலேதான் இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் கிரிக்கட் வீரர் இம்ரான் கான் அவர்களுக்கு அரச வரவேற்பொன்று காத்திருக்கிறது. அவர் ஏற்கனவே முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆகவே பிரதமர் ராஜபக்சவின் தகனம்பற்றிய மனமாற்றம், வரப்போகும் விருந்தாளியையும் திருப்திப்படுத்தி அத்துடன் அவர்மூலமாக ஏனைய முஸ்லிம், அரபு நாடுகளையும் இலங்கைக்கு ஆதரவாக ஐ. நா. சபையிலே வாக்களிக்கச் செய்யவும் எடுக்கப்பட்ட ஓர் அரசியல் தந்திரமேயன்றி வேறில்லை. ஆனால் எந்த அளவுக்கு பாகிஸ்தான் பிரதமரால் மற்ற முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கையின் சார்பாகத் திரட்ட முடியும் என்பது ஒரு கேள்விக்குறி. பிரதமர் இம்ரான் கான் எவ்வளவு கெட்டிக்காரராய் இருந்தாலும் அவர் ஒரு அஜமி. அவர் ஒரு அரபிக்கு ஈடாகார்.

 

இது தொடர்பாக இன்னுமோர் உண்மையையும் வாசகர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தான். அதேபோன்று சீனாவும் இந்தியாவின் எதிரி. அண்மையில் கிழக்குக் கொள்கலன் முனையம் விடயத்தில் இலங்கை இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் இரத்துச் செய்ததனாலும், இந்தியாவுக்கு 48 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள நெடுந்தீவையும் நயினாதீவையும் அனலதீவையும் சீனாவுக்குத் தரைவார்த்துக் கொடுத்ததனாலும் இந்தியாவின் பகையை இலங்கை தேடிக்கொண்டது. இதனால் இந்தியாவும் அதன் செல்வாக்குக்கு உட்பட்ட அரபு நாடுகளும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கலாம். ராஜபக்சாக்களின் இலங்கையும் இம்ரான் கானின் பாகிஸ்தானும் சீனாவின் வலைக்குள் சிக்கியுள்ள நாடுகள். ஆகவே இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தடுப்பதற்காக சீனாவே பாகிஸ்தனை ஒரு கருவியாகப் பாவிக்கின்றதா என்பதும் ஒரு நியாயமான சந்தேகம். இரு நாடுகளுமே வங்குரோத்து நாடுகள். கடன் சுமை இருநாடுகளையும் வளரவிடாமல் தடுக்கின்றது. இருந்தும், இம்ரான் கானின் வருகையையும் அதன் இரகசியங்களையும் இந்திய உளவுத்துறை உன்னிப்பாகக் கவனிக்கும்.

 

எவ்வாறிருப்பினும் ஜனாஸா எரித்தலை நிறுத்துவோம் என்று பிரதமர் கூறியது வெறும் வார்த்தைகள் மட்டுமே. ஏற்கனவே எரிப்பதற்றகாக வெளியிடப்பட்ட வர்த்தமானி நீக்கப்பட்டு அடக்குவதை அனுமதித்த ஒரு புதிய வர்த்தமானி வெளியிடப்படும்வரை வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஜெனிவாவுக்குப்பின் எப்படி நிலைமை மாறுமோ தெரியாது. பௌத்த பேராதிக்கவாதிகளின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே அவர்களின் எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டன.

 

ஆனால் உண்மையிலேயே ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி வழங்கப்படுமாயின் அது அரசு முஸ்லிம்களுக்கு அளிக்கும் ஒரு விசேட சலுகையல்ல. முஸ்லிம்களின் மனித உரிமையொன்று அவர்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதே அதன் அர்த்தம். அதற்கான நன்றியை அரசாங்கத்துக்கோ முஸ்லிம் தலைவர்களுக்கோ கூறமுடியாது. அந்த நன்றிக்கு உண்மையிலேயே உரித்தானவர் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் வெரோணிக்கா மிசேல் பச்சலெற் என்ற பெண்மணியே. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.