விவசாயிகளின் எதிரி எலிக்காய்ச்சல்

0 954
  • எம்.சி.நஜிமுதீன்

சுற்றுப்புறச் சூழலிலுள்ள விலங்குகள் மற்றும் கொசுத் தாக்கத்தினால் மனிதர்களுக்கு பலவேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் எலிக்காய்ச்சலும் முக்கிய இடம் வகிக்கிறது. எலிக்காய்ச்சலானது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவக்கூடியது. அது விவசாயிகளையே அதிகளவில் பாதிப்பதனால் விவசாயிகளின் எதிரி எனவும் கூறப்படுகிறது.

எலிக்காய்ச்சலினால் குருநாகல் மாவட்டத்தில் 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள 187 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

லெப்டோர்ஸ் பைரா எனும் பக்றீரியாதான் எலிக்காய்ச்சலுக்கு காரணமாக அமைகிறது. இது விலங்குளின் சிறுநீரிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றுகிறது. எலி மாத்திரமல்லாது ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, பன்றி, குதிரை போன்றவற்றின் சிறுநீரின் மூலம் இது மக்களுக்குப் பரவுகிறது. எனினும் எலிகள் மூலமே அதிகளவில் பரவுகின்றன. வயல் நிலங்கள், புல் நிலங்கள், சதுப்பு நிலங்கள், உள்ளிட்ட நீர் தேங்கிநிற்கும் இடங்களில் எலி அல்லது குறித்த பக்றீரியா தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் கலக்கப்படுவதால் எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது.

மழைக்காலங்களில் தெருக்களில் தேங்கி நிற்கும் நீரின் மூலமும் குறித்த பக்றீரியா மனிதர்களுக்கு தொற்றுகிறது. சாலைகளில் நீர் தேங்கி நிற்கின்ற சந்தர்ப்பங்கயளில் அதில் சிறுவர்கள் விளையாடக்கூடும். அப்போது சிறுவர்களையும் அந்த தொற்று பாதிக்கிறது. பொதுவாக வயல் நிலங்கள் மற்றும் புல் நிலங்களில் விவசாயிகள் நடமாடுவதால் குறித்த தொற்று இலகுவில் அவர்களுக்குத் தொற்றிவிடுகிறது. அதனாலேயே எலிக்காய்ச்சலால் பெரிதும் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.

தொற்று எவ்வாறு உடலினுள் செல்கிறது?

நீர் தேங்கியுள்ள வயல் நிலங்களில் இறங்கி வேலை செய்கின்ற போதோ அல்லது தேங்கி நிற்கின்ற நீரில் உடலைக் கழுவுகின்ற போதோ அல்லது பாதுகாப்பற்ற கிணறுகளிலுள்ள நீரைப் பயன்படுத்துகின்றபோதோ எலிக் காய்ச்சலை ஏற்படுத்தும் பக்றீரியா மனிதர்களைத் தாக்குகிறது.

நீரில் கலக்கப்பட்டுள்ள ‘லெப்டோர்ஸ் பைரா’ எனும் பக்றீரியா கண்ணிலுள்ள மெல்லிய படலத்தினுடாகவோ, வாய் கொப்பளிக்கின்ற போது வாயினுள் உள்ள மெல்லிய படலத்தின் வழியாகவோ, காயங்களின் ஊடாகவோ உடலினுள் செல்கிறது. பக்றீரியா உடலினுள் சென்று ஐந்து முதல் பதினான்கு நாட்களுக்குள் எலிக்காச்சலுக்குரிய அறிகுறிகள் தென்படும்.

எலிக்காய்ச்சலுக்கான அறிகுறி

கடுமையான காய்ச்சல், தசைகளில் கடுமையான வலி, கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், இடுப்பு வலி, வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, உடல் பலவீனமடைவதோடு சிறுநீர்கூட கடும் மங்சள் நிறமாக மாற்றடையும். சில சந்தர்ப்பங்களில் சிறுநீருடன் இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இவற்றில் கண்கள் சிவப்பது ஒரு முக்கியமான அறிகுறியாகும்.

நோயின் தீவிரத் தன்மை

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தீவிரமடையும். பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்தில் நோய்க்கிருமிகள்  பயணம் செய்து கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை போன்றவற்றுக்குப் பரவி அந்தந்த உறுப்புகளையும் பாதிக்கும். அப்போது அடுத்தகட்ட அறிகுறிகள் தோன்றும்.

எந்த உறுப்பைக் கிருமிகள் பாதிக்கிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றும். கல்லீரல் பாதிக்கப்பட்டவருக்கு, மேற்சொன்ன அறிகுறிகளுடன் மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் வீக்கமடையும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவதில் பிரச்சினை உண்டாகும். அப்போது கால், கை, முகம், வயிறு என்பன வீங்கும். கிருமித் தாக்கத்தின் காரணமாக மூளை பாதிக்கப்பட்டால், மூளைக் காய்ச்சலுக்குரிய எல்லா அறிகுறிகளும் தோன்றும்.

நுரையீரல் பாதிக்கப்படும்போது நிமோனியா நோய் ஏற்பட்டு, இருமல், இளைப்பு என்பன உண்டாகும். இரைப்பை பாதிக்கப்படும்போது இரத்த வாந்தி வரும். குடல் பாதிக்கப்பட்டால் மலத்துடன் இரத்தம் வெளியேறும். குறித்த கிருமிகள் இதயத்தைத் தாக்கினால் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

இந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவருக்கு கல்லீரலும் சிறுநீரகமும் மோசமாகும். இந்தக் கிருமிகள் இரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்களான தட்டணுக்களை அழித்துவிடும். இதனால் சிலருக்கு இரத்த உறைவுக் கோளாறுகளும் ஏற்படும். இரத்தத்திலுள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும்.

சிகிச்சை முறை

எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளைக் கண்டவுடன் வைத்தியரிடம் சென்று அவரின் ஆலோசனையைப் பெறவேண்டும். குறிப்பாக வயலில் வேலை செய்திருப்பின் அதனை மறக்காமல் வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டும். இதனால் நோயை இலகுவாக இனங்கண்டு அதற்கு சிகிச்சை வழங்குவதற்கு முடியும்.

இணையக அணுக்கள் பரிசோதனை ((Microscopic Agglutination Test – MAT))

எலிக் காய்ச்சலை உறுதிசெய்ய உதவுகிற முக்கியமான பரிசோதனையாகும். மேலும் பொதுவான இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனைகள், கல்லீரலுக்குரிய பரிசோதனைகள், சிறுநீரகப் பாதிப்பை அறியும் பரிசோதனைகள், ஐ.ஜி.எம். எலிசா பரிசோதனை (IGM ELISA Rapid Test)) , பி.சி.ஆர். பரிசோதனை (Real time DNA PCR Test) , முதுகுத் தண்டுவட நீர்ப் பரிசோதனை என்பன இந்த நோயை உறுதிசெய்யவும் இதன் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

மேலும், எலிக்காய்ச்சலுக்கு பலதரப்பட்ட நோய்முறி மருந்துகள் உள்ளன. நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்தால் குணப்படுத்திக்கொள்ளலாம். வைத்தியரின் ஆலோசனையின்படி சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும்.

முற்பாதுகாப்பு நடவடிக்ககை

எலிக்காச்சல் ஓர் உயிர்கொல்லி நோய் என அறியப்பட்ட போதிலும் முற்பாதுகாப்பு நடவடிக்கையாலும் அறிகுறிகள் தென்பட்டவுடன் நாம் மேற்கொளளும் உடனடி வைத்திய அணுகுமுறைகளாலும் உயிராபத்து ஏற்படுவதைத் தடுத்துக்கொள்ள முடியும். விவசாயிகள் முற்பாதுகாப்பு நடவடிக்ககைகளாக பின்வருவனவற்றை பின்பற்றுவதன் மூலம் நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

வயலில் பற்றைகள் பெரியளவில் வளராதவாறு வெட்டி அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் வயல் நிலங்களில் தேங்கி நிற்கும் நீரில் அளவுக்கு அதிகமாக இறங்குதல் கை, கால், முகம் கழுவுதல், வாய் கொப்பளித்தல் என்பவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பாதுபாப்பு சுவரில்லாத திறந்த கிணறுகளிலிருந்து நீர் எடுத்து அருந்துவது மற்றும் குளித்தலையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் திறந்த கிணறுகளில் மிருகங்களின் சிறுநீர் கலக்க வாய்ப்புள்ளது.

வயல்களில் எலிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக எலி வளைகளைக் கண்டால் உடனடியாக அவற்றை அழித்துவிட வேண்டும். மேலும் எலிப்பாசனம் மற்றும் எலிப்பொறிகளைப் பயன்படுத்தி எலிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் எலிகளை உண்ணுகின்ற கபரகொய்யா, உடும்பு, ஆந்தை போன்றவற்றை கொல்லக்கூடாது. ஆந்தைகள் வயலில் வந்து அமர்வதற்கு வசதியாக தென்னோலை மட்டைகள் அல்லது தடிகளை இடைக்கிடையே நட்டி வைக்க வேண்டும்.

அத்துடன் ஒவ்வொரு போகமும் முதலில் வயலில் இறங்கி வேலை செய்வதற்கு முன்னர் பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரியைச் சந்தித்து முன்பாதுகாப்பபு சிகிச்சையாக அவர்கள் தருகின்ற தடுப்பு மருந்தை, வயலில் இறங்கி வேலை செய்வதற்கு ஒரு கிழமைக்கு முன்னரே உட்கொள்ள வேண்டும்.

நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள்

கொழும்பு உட்பட நகர்ப்புறங்களிலிலும் எலித்தொல்லை அதிகளவில் உள்ளது. கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் அது அதிகளவில் காணப்படுகின்ற போதிலும் நகர்ப்புறங்களில் குடியிருப்புகளை அண்டிய பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன. அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவது அவசியமாகும். கொழும்பு போன்ற நகரங்களில் எலிகள் சர்வசாதாரணமாக நடமாடுவதை அவதானிக்கலாம்.

அதனால் வீடுகளுக்குள் எலிகள் நுழைவதற்கான அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே எலிகள் உள்நுழைவதற்கான இடங்களை மூடிவிட வேண்டும். எலிகள் உள்நுழையாதவாறு வீட்டின் அமைப்பு உள்ளபோதிலும் எலிகள் நுழைந்து விடுவதாக பலர் அங்கலாய்க்கின்றனர். அவ்வாறானவர்கள் குளியலறையிலிந்து கழிவு நீர் வெளியேறும் துவாரம் மற்றும் மலசலகூடங்களிலிருந்தும் எலிகள் உள்நுழையாத வகையில் தடுக்கவேண்டும். அத்துடன் நீர்த்தாங்கிகளுக்குள்ளும் எலிகள் நுழைந்துவிடாத வகையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் சேரிப்புறங்களில் வாழ்பவர்கள் தமது வீடுகளுக்கு முன்னுள்ள சாலைகளில் சிறியரக நீர் கொள்கலன்களில் நீரை சேகரித்து வைக்கின்றனர். அந்தக் கொள்கலன்களுக்குள் எலிகள் செல்வதற்கு இடமுண்டு. எனவே, அந்தக் கொள்கலன்களை எந்த நேரத்திலும் மூடிவைக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கொள்கலனில் உள்ள நீரில் எலிகளின் சிறுநீர் கலக்குமிடத்து அதனை நாம் பயன்படுத்தும்போது அதிலிருந்து எலிக்காய்ச்சல தொற்றுவதற்கும் இடமுண்டு.
-Vidivelli

 

 

Leave A Reply

Your email address will not be published.