அக்குறணையை கொவிட் தொற்று அற்ற நகரமாக்குவதே எமது இலக்கு

அக்குறணை கொவிட் செயலணி தலைவர் இஸ்திஹார்

0 810
நேர்காணல்: ஏ.ஆர்.ஏ. பரீல்

நாடெங்கும் கொவிட் 19 தொற்றாளர்கள் தினமும் இனங்காணப்பட்டு  வருகிறார்கள். இதனால் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை வரை 270 மரணங்கள் பதிவாகியுள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதுவரை தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொவிட் 19 வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் குழுவொன்றினை நியமித்து செயற்படுமாறு அரசாங்கம் சுற்று நிருபம் வெளியிட்டிருந்தது. இக்குழுவில் பிரதேச சபைத் தலைவர், பிரதேச செயலாளர் ஆகியோர் இணைத் தலைவராக  செயற்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு சுகாதார வைத்திய அதிகாரி, வர்த்தக சங்கம், பள்ளிவாசல் மற்றும் மதத் தலங்களின் பிரதிநிதிகள் அங்கம் பெற வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்குறணையில் கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டிருந்ததாலும், அக்குறணையின் சனப்பரம்பல் அதிகமாக இருந்ததாலும் அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுதீன் சம்பந்தப்பட்ட சுகாதார பிரிவு மற்றும் கொவிட் செயலணி உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அக்குறணைக்கென தனியான கொவிட் செயலணி (Covid Task Force)  ஒன்றினை நிறுவுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டார். அதற்கிணங்க அக்குறணையில் கொவிட் செயலணியொன்று அமைக்கப்பட்டது. இச்செயலணியில் அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுதீன் தலைவராகவும், அக்குறணை பிரதேச செயலாளர் செயலாளராகவும் நியமனம் பெற்றனர். இதேவேளை டாக்டர் ஹரீஸ் தலைமையில் கொவிட் ஊர் கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழு ஊரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் தொடர்புகொண்டு கொவிட் தொற்று நோய் பற்றி தெளிவுபடுத்தல்களை வழங்கி வருகிறது.

டாக்டர் லரீப், டாக்டர் நயனா உள்ளடங்கிய மேலுமொரு குழுவில் அக்குறணை நகர் பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் அங்கம் வகித்து A9 வீதி பிரதேசத்தை கண்காணிப்பதுடன் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சில்லறைக் கடைகள் மற்றும் பாமசி உரிமையாளர்களை அழைத்து அக்குறணை பிரதேச செயலகம் இதுவரை 4 தெளிவூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளது. தெளிவூட்டல் நிகழ்ச்சிகள் சுகாதார வழிகாட்டல்களுடன் நடைபெற்று வருகின்றன.

கொவிட் 19 தடுப்பு செயலணியின் (CTF) தலைவராக இருந்து அக்குறணையில் கொவிட் தொற்றினை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு செயற்படும் அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுதீனை விடிவெள்ளி நேர்கண்டது. அவருடனான நேர்காணல் வருமாறு:

Q: பல பிரதேசங்களில் அரசாங்க அதிகாரிகளே கொவிட் 19 விவகாரங்களை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் அக்குறணையில் இவ்வாறு ஒரு செயலணியை அமைப்பதற்கான பின்னணி என்ன?

அக்குறணை பிரதேசம் சனப்பரம்பல் மிகவும் அதிகமான பிரதேசமாகும். இங்கு வாழும் மக்களின் பழக்கவழக்கங்களும் மாறுபட்டவை. ஏனைய சமூக மக்களின் பழக்க வழக்கங்களைப் போன்றதல்ல. எமது உணவுப் பழக்கவழக்கம் மாறுபட்டவை. அத்தோடு நாம் சமூகத்துடன் , உறவினர்களுடன் நெருங்கிப் பழகுபவர்கள். உறவு கொண்டாடுபவர்கள். தற்போதைய எமது நாட்டின் கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையில் எமது பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைமையிலுள்ளோம். தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டல்களை நாம் 100% பின்பற்ற வேண்டியவர்களாக உள்ளோம். இந்நிலைமையை  நாம் மேல் மட்டத்திலும் கீழ் மட்டத்திலும் உருவாக்க வேண்டும். இவையே பிரதான காரணிகளாக அமைந்தன.

Q: அக்குறணையின் கொவிட் 19 தொற்றின் இதுவரை காலமான நிலைமை என்ன?

இத்திட்டத்தை நாம் கடந்த இரண்டு மாத காலமாகவே செயற்படுத்தி வருகிறோம். அக்குறணையின் 80 ஆயிரம் சனத்தொகையில் இதுவரை 360 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் 300 பேர் குணமடைந்துள்ளார்கள். 4 மரணங்கள் சம்பவித்துள்ளன. 4 கொவிட் தொற்று ஜனாஸாக்களும் எரிக்கப்பட்டுள்ளன.

Q: கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உங்கள் செயலணிக்கு யாரெல்லாம் பங்களிப்புகளை வழங்கி வருகிறார்கள்?

எமது திட்டத்துக்கு இப்பகுதி மக்களின் பூரண ஆதரவு கிடைக்கிறது. அக்குறணை ஜம்இய்யத்துல் உலமா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம்,  வர்த்தகர்கள் சங்கம்,  பிரதேச செயலகம் ,  பிரதேச சபை, அக்குறணை பகுதி டாக்டர்கள் உள்ளடங்கிய அக்குறணை சுகாதார குழு என்பன அனுசரணை வழங்கி வருகின்றன. மொழிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

Q: நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலேயே அதிகளவில் கொவிட் தொற்றாளர்கள் பரிசோதனைகளின் பின்பு இனங்காணப்படுகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்?

ஆம், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளிலே கொவிட் தொற்றாளர் அதிகளவில் இனங்காணப்படுகிறார்கள். கொவிட் தொற்று மரணங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கையே அதிகரித்துக் காணப்படுகிறது. எமது சமூகத்தின் நடைமுறைப் பழக்கவழக்கங்களே இதற்குக் காரணம். எமது உணவுப் பழக்கவழக்கங்கள் எம்மிடையே பல நோய்களுக்குக் காரணமாய் அமைந்துள்ளன.

உயர் குருதி அழுத்தம், இருதய நோய், நீரழிவு நோய், சிறுநீரக பாதிப்பு என்பவற்றால் எம்மவர்களில் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொவிட் தொற்று இலேசாக தொற்றிக் கொள்வதற்கு இவை காரணமாய் உள்ளன.

அத்தோடு சன அடர்த்தி கூடிய பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களால் சுகாதார வழிகாட்டலான ஒரு மீட்டர் தூர இடைவெளியை பேண முடியாதுள்ளது. அத்தோடு எம்மவர்களே ஏனையோருடன் மிக நெருக்கமாக பழகுகிறார்கள்.

கொவிட் வைரஸ் ஒரு தொற்றுநோய். இத்தொற்று எம்மையறியாமலே தொற்றிக்கொள்ளலாம். எனவே நாம் மாற்றம் பெற வேண்டும். எமது உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு நூறு சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியினைப் பேண வேண்டும்.

தற்போது கொவிட் தொற்றினால் மரணிப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் உட்பட தகனம் செய்யப்படுகிறார்கள். முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் சமூகத்திடம் மாற்றுக் கருத்து இல்லை. நாம் எம்மை பாதுகாத்துக் கொண்டால் இப்பிரச்சினையிலிருந்தும் நாம் மீண்டு கொள்ளலாம்.

Q: கொவிட் தொற்றிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள சமூகத்துக்கு வழங்கும் உங்கள் அறிவுரை என்ன?

கொவிட் 19 தொற்று மரணத்தின் விகிதாசாரத்தை நோக்கும்போது முஸ்லிம்களே அதிகளவில் மரணித்துள்ளார்கள். அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மிகவும் வயதானவர்கள்.

இவர்கள் தொடர்ச்சியாக ஏனைய நோய்களுக்கு மருந்து குடித்து வந்தவர்கள். உயர் குருதி அழுத்தம், இருதய நோய், சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு மற்றும் ஏனைய  நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள். இவர்களில் அநேகர் சுமார் 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்பு வைத்தியரைச் சந்தித்து தேவையான மருந்துகளை பெறுவதற்கான வைத்திய மருந்து பரிந்துரைகளை (Prescription) பெற்றுக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொரு முறையேனும் தேவையான வைத்திய பரிசோதனை அறிக்கைகளுடன் குறிப்பிட்ட டாக்டரைச் சந்தித்து புதிதாக மருந்துகள் தொடர்பான பட்டியலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எம்மவர்களில் அநேகர் இவ்வாறு செய்வதில்லை. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் பெற்றுக்கொண்ட மருந்து பட்டியலையே தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும்.

Q: உங்கள் செயற்திட்டத்துக்கு அக்குறணை மக்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்களா?

ஆம், மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். அக்குறணை உலமா சபை,  பள்ளிவாசல்கள் சம்மேளனம், வர்த்தகர் சங்கம் என்பன மேலான பங்களிப்பை வழங்கி வருகின்றன. நிச்சயம் அக்குறணையிலிருந்தும் கொவிட் தொற்று நோயை வெளியேற்றி விடலாம் என்பதில் எமக்கு நம்பிக்கையிருக்கிறது.

நாட்டில் கொவிட் தொற்று எப்போது முற்றாக ஒழிக்கப்படும் என்பதை எம்மால் எதிர்வு கூற முடியாது. எனவே மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களைப் பேண வேண்டும். அத்தோடு வெளி மாவட்டங்களில் வாழும் அக்குறணை மக்கள் ஊருக்கு விஜயம் செய்யும் போது தமக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறாயின் மாத்திரமே அக்குறணையை கொவிட் தொற்றிலிருந்தும்  காப்பாற்றலாம். இதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

  Q: இந்தப் பணியில் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா?

ஆம், பெண்கள் குழுக்களாக தனியாக ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சிகளையும் , கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறார்கள். அக்குறணை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண்களும், பட்டதாரி பயிற்சித் திட்டத்தின் கீழ் இங்கு பயிற்சி பெற்று வரும் 50 பெண் பட்டதாரிகளும் இதில் பங்கு கொண்டுள்ளார்கள்.

இதேவேளை கொவிட் செயலணியின் உறுப்பினர்கள் zoom  தொழிநுட்பத்தின் ஊடாக கூட்டங்களை நடத்துவதுடன் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வுகளைப் பெறுகிறார்கள். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.