இலங்கையில் மத்ரஸாக்களிலேயே பயங்கரவாதம் உருப்பெறுகின்றது
கடும் குற்றச்சாட்டுகளை முன்னவைக்கிறார் விமல்
ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்
இலங்கையில் மத்ரஸாக்களிலேயே இஸ்லாமிய பயங்கரவாதம் உருப்பெறுகின்றது. நாட்டில் அடிப்படைவாத அமைப்புகளை முதலில் தடை செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடு என அரசாங்கத்தால் கூற முடியவில்லை. சர்வதேச பயங்கரவாதம் என்றே கூறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதன்போது தெரிவிக்கையில்,
வணாத்துவில்லுவில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பின்னரும் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட போதும் இது தொடர்பாக ஆராயுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த விடயத்தில் விசாரணைகளை முன்னெடுத்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் தற்போது மீண்டும் 10 வருடங்களின் பின்னர் பிள்ளைகளை வெளியில் அனுப்ப முடியாத நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறாக அச்ச நிலைமையை மீண்டும் கொண்டு வந்தது யார்? 2015 ஜனவரி 8ஆம் திகதி அச்ச நிலைமை இல்லாது செய்யப்பட்ட நாட்டையே தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றனர். ஆனால் மீண்டும் அந்த நிலைமையை உருவாக்கியுள்ளனர். வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடு என இவர்களால் கூற முடியவில்லை. சர்வதேச பயங்கரவாதம் என்றே கூறுகின்றனர். அடிப்படைவாதத்திற்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்கு இவர்கள் இடமளிக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய ஏன் இன்னும் நடவடிக்கையெடுக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் தேசிய பாதுகாப்பு உறுதியாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னர் புலனாய்வு பிரிவினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். கிரித்தலே இராணுவ முகாமை அடிப்படையாக கொண்டே கிழக்கில் புலனாய்வு பிரிவினர் செயற்பட்டனர். ஆனால் மங்கள சமரவீர ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிக்கமையவே கிரித்தலே புலனாய்வு பிரிவு அகற்றப்பட்டது. இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு இடமளிக்கும் வகையிலேயே அதனை நீக்கியுள்ளனர்.
கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும். சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமென்ற நோக்கத்திலேயே இதனை செய்கின்றனர். இந்த அரசாங்கமே இவற்றுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தற்போது ஐக்கிய அமெரிக்கா உதவுவதாக கூறுகின்றனர். இப்போது எப்.பீ.ஐ. வருகின்றது. இன்னுமொரு சம்பவம் நடந்தால் அமெரிக்க இராணுவமும் வரும். இந்தளவுக்கு வெடிபொருட்கள் இங்கு எப்படி வந்தது. நாட்டில் இரத்த ஆறு ஓடும் நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகின்றனர். அப்போதே சர்வதேச நாடுகளுக்கு இங்கு தலையிட முடியும். இங்கு மத்ரசாக்களில் தற்கொலை தாக்குதல் மனநிலைகள் உருவாக்கப்படுகின்றன. பாகிஸ்தானில் இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இங்கும் செய்ய வேண்டும். இதேவேளை அடிப்படைவாத அமைப்புகளை இங்கு தடை செய்ய வேண்டும் எல்லோருக்கும் முறையாக சட்டத்தை செயற்படுத்த வேண்டும். அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு இவ்வாறான நோக்கங்கள் கிடையாது. அரசியலுக்காக அவர்களை பயன்படுத்த வேண்டாம். அத்துடன் தீர்மானங்களை எடுக்கும் போது வாக்குகளுக்காக தீர்மானம் எடுக்காது நாட்டுக்காக தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
vidivelli