பழைய முறைமையில் என்றாலும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைக்க தயார்
சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளிடம் மஹிந்த தெரிவிப்பு
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பழைய முறைமையிலேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராவுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமென்று மக்களுக்கு வாக்குறுதியளித்து, ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் அவர்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பின்போதே மஹிந்த ராஜபக் ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்க்கட்சிக்கு நன்மை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அது குறித்து சிந்திக்காது, ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பழைய முறைமையிலேனும் தேர்தல் நடத்தப்படுமானால் அதற்கு நாம் இணங்குவோம். எந்த முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதைவிட தேர்தல் நடைபெற வேண்டியது முக்கியமாகும்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, தமது பிரதான குறிக்கோள் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது எனத் தெரிவித்தது. தற்போது ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நல்லாட்சி அரசாங்கமே தேர்தலை காலம் தாழ்த்தி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதோடு, மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றாது அவர்களை ஏமாற்றியுள்ளது என்றார்.
சட்டத்தரணிகள் சங்கத்தினால் மாகாண சபைத் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவினை தாம் எதிர்பார்ப்பதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கூறினர். அத்தோடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணப் பிரதிகளும் மஹிந்த ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்டன.
-Vidivelli