வைரஸை வெற்றி கொள்ள அரசுக்கு ஒத்துழைப்போம்

0 661

சென்ற வார விடிவெள்ளி ஆசிரியர் தலையங்கத்தை ‘அபாயம் நீங்கவில்லை‘ எனும் தலைப்பில் தீட்டியிருந்தோம். கொவிட் 19 உலகளாவிய ரீதியிலும் இந்தியாவிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் இலங்கை இதுவிடயத்தில் அலட்சியமாக நடந்து கொள்ளாது இறுக்கமான சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தியிருந்தோம். துரதிஷ்டவசமாக இந்த வாரம் இலங்கை கொவிட் 19 இனால் மிகப் பெரும் அச்சுறுத்தலைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.

மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையின் 39 வயதான ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டதையடுத்து  1200 க்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் ஒரே கொத்தணியில் ஏற்பட்ட ஆகக் கூடுதலான தொற்று என கணிப்பிடப்பட்டுள்ளது. குறித்த 39 வயதுடைய பெண்ணே முதலில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட போதிலும், அவருக்கு எங்கிருந்து அல்லது யாரிடமிருந்து வைரஸ் தொற்றியது என்பதைக் கண்டறிய முடியாதுள்ளமை பெரும் சவால் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்திருக்கிறார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையின் இந்தியக் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் தனியான விமானத்தில் அண்மையில் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு உரிய தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவிலிருந்து வந்த மேற்படி ஊழியர்கள் எவரும் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை வளாகத்துக்கு வரவில்லை என்றும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந் நிலையில்தான் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக உள்நாட்டிலிருந்தவர்களுக்கு இத் தொற்று பரவியதா இன்றேல் சமூகத்தின் மத்தியில் பல மாதங்களாக இந்த வைரஸ் வெளித் தெரியாது மறைந்திருந்து இப்போது பரவியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை சுகாதாரத்துறையினரும் புலனாய்வுத் துறையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் மேற்படி நிறுவனம் மீதும் அதன் ஊழியர்கள் மீதும் இன்று சமூக வலைத்தளங்களில் பலர் வசைபாட ஆரம்பித்துள்ளதை காண முடிகிறது. இது கவலைக்குரியதாகும். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளில் ஒன்றாக ஆடைத் தொழிற்சந்தையினரும் அதன் ஊழியர்களும் விளங்குகின்றனர். ஏற்கனவே கொவிட் 19 முடக்கத்தினால் பின்னடைவைக் கண்ட நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். அந்தவகையில் இவ் வைரஸ் தொற்றினால் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ள குறித்த நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் நாம் ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டுமே தவிர அவர்களை மேலும் நெருக்கடியில் தள்ள நாம் முயற்சிக்கக் சுடாது.

இப் பின்னணியில்தான் நாடு மீண்டும் ஒரு முடக்க நிலைக்குச் செல்லுமா எனும் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் கடந்த சில தினங்களாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பும் ஏனைய மாவட்டங்களும் இதுவரை முடக்கப்படவில்லை. எனினும் கொழும்பில் கடந்த சில தினங்களாக மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. அச்சம் காரணமாக மக்கள் வெளியில் செல்வதைக் குறைத்து வருகின்றனர். அரசாங்கமும் சகல விதமான ஒன்றுகூடல்களுக்கும் தடைவிதித்துள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடு மற்றுமொரு முழுமையான முடக்கத்தை எதிர்கொள்ளத் தயாரில்லாத நிலையே நிலவுகிறது. ஏற்கனவே சுமார் 3 மாத கால முடக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகள் இப்போதுதான் சற்று வழமைக்குத் திரும்ப முயற்சிக்கையில் மீண்டும் ஒரு முடக்கம் வருமாயின் அது நாட்டை மிகக் கடுமையான பின்னடைவுக்கே இட்டுச் செல்லும். நாடு முழுமையான முடக்க நிலைக்குச் செல்ல முடியாதிருப்பதற்கு மற்றொரு காரணம் அடுத்த சில தினங்களில் இடம்பெறவுள்ள தேசிய பரீட்சைகளாகும். 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 6 வரை க.பொ.த. உயர் தர பரீட்சை நடைபெறும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இப் பரீட்சைகள் ஏலவே உரிய காலத்தில் நடைபெறாததால் மாணவர்களும் பெற்றோரும் பெரும் மன உளைச்சல்களைச் சந்தித்துள்ளனர். இது மேலும் தாமதமானால் அவர்களது எதிர்கால கல்வி வாழ்க்கை பாதிக்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ள கருத்தும் மறுதலிக்க முடியாததாகும்.

ஆக, இன்று நாம் கொவிட் 19 வைரசுடன் இணைந்து வாழப் பழக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்காக நாம் அலட்சியமாக இருக்க முடியாது. மிகவும் அவதானமான முறையில் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்க கடமைப்பட்டுள்ளோம்.  முஸ்லிம் சமூகமும் இது விடயத்தில் அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. நாம் அதிகம் ஒன்றுகூடுகின்ற பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இறுக்கமான விதிகள் முன்னரைப்போன்று கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதற்கு பொது மக்களாகிய நாமும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த வைரஸை வெற்றி கொள்வது அரசாங்கத்தினது பொறுப்பு மாத்திரமல்ல. பொது மக்களாகிய நமக்கே அதில் மிகப் பெரிய பங்குள்ளது என்பதை மனதில் கொள்வோம். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவதோடு சமூக இடைவெளியையும் பேணுவோம். பொறுப்புமிக்க பிரஜைகளாக நடந்து கொள்வோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.