பல பகுதிகளில் சஹ்ரான் குழுவினர் பயிற்சி முகாம்களை நடாத்தியுள்ளனர்

புலனாய்வு அதிகாரி ஆணைக்குழு முன் சாட்சியம்

0 350

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினரால் 2018 ஆம் ஆண்டில் நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாவனல்லை ஆகிய பிரதேசங்களில் சுமார் 10 பயிற்சி முகாம்கள் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சிறிமால் சஞ்சீவ சம்பத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் கடந்த புதன்கிழமை சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் சாட்சியமளிக்கையில், ஹம்பாந்தோட்டையில் 5 முகாம்களும் நுவரெலியாவில் 3 முகாம்களும் மாவனெல்லையில் ஒரு முகாமும் நடாத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம் பகுதியில் நடந்த 5 பயிற்சி முகாம்களில் சஹ்ரான் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

2018 ஜுலை, ஆகஸ்ட், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் இப் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் தலா 20 முதல் 40 பேர் பங்குபற்றியுள்ளனர். பங்குபற்றியவர்கள் வேன்களிலேயே அழைத்துவரப்பட்டுள்ளனர். இங்கு ரி56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவற்றை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான துப்பாக்கிகளை அகமட் மில்ஹான் என்பவரே கொண்டுவந்துள்ளார். இதன்போது சஹ்ரானின் சகோதரர் ரில்வான் மற்றும் கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது தாக்குதல் நடாத்திய ஹஸ்தூன் ஆகியோர் குண்டுகளை தயாரித்தல் மற்றும் கையாளுதல் தொடர்பில் பயிற்சி வழங்கியுள்ளனர்.   இம் முகாம்களில் இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பில் சஹ்ரானும் ஐ.எஸ். அமைப்பு பற்றி நௌபர் மௌலவியும் போதனைகளை வழங்கியுள்ளனர்.

இதேவேளை மாவனெல்லையில் இடம்பெற்ற முகாமில், அங்கு புத்தர் சிலைகளை உடைத்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களும் பங்குபற்றியுள்ளனர். நுவரெலியாவில் உள்ள சொகுசு விடுதியிலும் இரண்டு முகாம்களை சஹ்ரான் நடத்தியுள்ளார். மாவனெல்லையில் நடந்த வகுப்புகளில் சாஹித் என்பவர் தீவிரவாதம் தொடர்பில் மாணவர்களுக்கு போதனை நடத்தியுள்ளார் என்றும் அவர் தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிட்டார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.