கொரோனா சவாலை வெற்றி கொண்ட ஹஜ்

0 852

ஏ.ஆர்.ஏ. பரீல்

இவ்வருட ஹஜ் வரலாற்றில் சவால்மிக்கதொன்றாக இடம்பெற்று பதிவாகியுள்ளது. கொவிட் -19 வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் அந்நோய்க்கு பலியாகி வருகின்ற நிலையில் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்  ஹஜ் கடமையினை குறிப்பிட்ட தொகையினருக்கே  அனுமதித்து வரலாறு படைத்துள்ளனர். சவூதி அரேபியாவிலும் கொவிட் -19 வைரஸ்  பரவி பலர் உயிர்நீத்த நிலையிலே சவூதி அரேபியா சவால்களை ஏற்று வரலாறு படைத்துள்ளது.

இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு கொவிட் -19 வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனுமதிக்கப்படவில்லை. சவூதி அரேபியாவில் வாழும் உலக நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரும் சவூதி அரேபியா மக்கள் சிலருமே அனுமதிக்கப்பட்டனர். வருடாந்தம் மில்லியன் கணக்கில் கலந்து கொள்ளும் இப்புனித கடமையில் ஆயிரம் பேரளவிலேயே பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இவர்களில்  சவூதி  அரேபியாவில் வாழும் 160 நாடுகளைச் சேரந்த 70 சதவீதமான வெளிநாட்டவரும் ஏனைய 30 வீதமானோர் சவூதி மக்களுமாவர்.

இதனடிப்படையில் இவ்வருடம் இலங்கையிலிருந்தும் ஹஜ் கடமைக்கு யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஹஜ் கடமைக்காக தயாராகவிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்தனர். இலங்கையில் சுமார் 100 ஹஜ் முகவர் நிலையங்கள் ஹஜ், உம்ராவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதால் இழுத்து மூடப்பட்டுள்ளன.

சவூதி அரேபியா ஹஜ் மூலம் வருடாந்தம் பெற்று வந்த பெருந்தொகை வருமானம் இழக்கப்பட்டுள்ளது. அங்கும் பலர் இதனால் தொழில் இழந்துள்ளனர். ஹோட்டல்கள் பயனாளிகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியா அரசு இவ்வருட ஹஜ் யாத்திரிகர்களை கடுமையான சுகாதார விதிகளின் கீழ் 50 பேர் கொண்ட குழுக்களாக அனுமதித்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறைந்த எண்ணிக்கையிலான ஹஜ் யாத்திரிகர்களுடன் இவ்வருட ஹஜ் கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவுற்றதாக சவூதி மன்னர் சல்மான் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

‘இவ்வருட ஹஜ் கடமையினை ஏற்பாடுசெய்து வெற்றிகரமாக நிறைவு செய்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சவூதி மன்னர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஹஜ் கடமைக்கு தெரிவு செய்யப்பட்ட குறைந்த எண்ணியனோரின் பாதுகாப்பினை உறுதி செய்தமைக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இறுதிக்கட்டத்தையெய்தினர். ஹஜ் பெருநாளைக் கொண்டாடினர். கொவிட் -19 வைரஸ் தொடர்பான முடக்கப்பட்ட நிலைமைகளும், கட்டுப்பாடுகளும் இவ்வருட ஹஜ் யாத்திரையையும், ஹஜ் கொண்டாட்டங்களையும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கியிருந்தன.

மன்னர் சல்மான் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் ‘இவ்வருட ஹஜ் மட்டுப்படுத்தப்பட்ட யாத்திரிகர்களுக்கே அனுமதிக்கப்பட்டது. சவூதியில் வாழும் பலநாடுகளைச் சேர்ந்தவர்களில் குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்பட்டனர். ஹஜ் கடமையில் ஈடுபட்டோருக்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டது. எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு உச்சபட்ச நம்பிக்கை வழங்கி ஹஜ்ஜினை நிறைவு செய்தமை குறித்து நாம் பெருமைப்படுகிறோம். கொவிட்-19 அச்சுறுத்தல் விரைவில் இல்லாமற்போகும் அறிகுறி தென்படுகிறது. ஹஜ் ஏற்பாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் சவூதி அரேபியாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது என்றார்.

‘ஹஜ்ஜை பாதுகாப்பானதாகவும் சுகாதார கட்டுப்பாடுகளுடனும் மேற்கொள்வதற்கு  சவூதி அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டது என சுகாதார உதவி அமைச்சர் முஹம்மத் அல்அப்துல் அலி தெரிவித்துள்ளார். 2020 ஹஜ் ஏற்பாடுகள் உலக தரத்துக்கமைய முன்னெடுக்கப்பட்டன. கொவிட் 19 வைரஸ் காரணமாக விஷேட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருட ஹஜ் கடமைக்கு வெளிநாட்டவர்களில் குறிப்பிட்ட தொகையினரே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஹஜ் கடமைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அதற்கான பதிவுகள் இடம்பெற்றன.

உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம் பாராட்டு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரொஸ் அட்ஹானொம் செப்ரேயேசு, சவூதி அரேபியா அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா ஹஜ் யாத்திரிகர்களின் பாதுகாப்புக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளதாக சவூதி ஊக ஏஜன்சி (SPA) தெரிவித்துள்ளது. ‘இன்றைய சூழ்நிலையில் நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா சிறந்த உதாரணமாகும். வைரஸிலிருந்து மக்களின் உயிர்களை சவூதி அரேபியா பாதுகாத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

8000 சுகாதார ஊழியர்கள் கடமையில்

ஹஜ் யாத்திரிகர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் சேவைகள் என்பவற்றுக்காக சவூதி அரேபியாவின் புனித பகுதிகளில் 6 வைத்தியசாலைகள் இயங்கின மற்றும் 51 வைத்தியசேவை நிலையங்கள் இயங்கியதுடன் 200 அம்பியுலன் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 60 இற்கும் மேற்பட்ட குழுக்கள் களத்தில் ஈடுபட்டு இச்சேவைகளை முன்னெடுப்பதற்கு உதவின. சுமார் 8000 சுகாதார ஊழியர்கள் யாத்திரிகர்களுக்கான சுகாதார சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த வைத்திய சேவையில் நோயாளர்களுக்கென 1456 கட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததென டாக்டர் அலி தெரிவித்தார். புனித பிரதேசங்களில் இயங்கிய ஆறு வைத்தியசாலைகளில் அமையப்பெற்றிருந்த இந்த 1456 கட்டில்களில் 272 தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டில்கள், 200 அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களாகும்.

ஜப்பான் தம்பதியினர்

இவ்வருட எமது ஹஜ் அனுபவம் எமது எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டதாக அமைந்திருந்ததாக ஜப்பானிய தம்பதியினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பானியர் யாசர் அல் பரிஸ்ஸி மற்றும் அவரது மனைவி சினெப் அல் பரிஸ்ஸி கருத்துத் தெரிவிக்கையில் 2020 ஆம் ஆண்டின் ஹஜ் சிறந்ததும் விஷேடமானதுமாக இருந்தது. முழுமையான ஹஜ்ஜும் எமது எதிர்பார்ப்புகளை விஞ்சியதாக அமைந்திருந்தது. வைரஸ் காரணமாக ஹஜ்ஜில் முன்னெடுக்கப்பட்ட விஷேட நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவிய சந்தர்ப்பத்தில் இவ்வருட ஹஜ் யாத்திரிரையின் கலந்து கொளவோருக்கு சவூதி அரேபியா அரசு தகுந்த பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பதை அறிந்ததனால் ஹஜ் கடமைக்காக விண்ணப்பிப்பதற்கு நாம் தயங்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ். நாம் ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என்பதை அறியக்கிடைத்ததும் பெரிதும் மகிழ்ச்சியுற்றோம். வாழ்வின் சிறந்த இந்த யாத்திரை எமக்கு கிடைத்தமை பெரும் பாக்கியமாகும்.

ஹஜ் அமைச்சின் அதிகாரியொருவர் எம்மைத் தொடர்பு கொண்டார். ஹஜ் தொடர்பான முழு ஏற்பாடுகளையும் அவர் விளக்கினார். தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. அனைத்து வழிகாட்டல்களும் தெரிவிக்கப்பட்டன. ஹஜ் கடமையின் போது நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டன என்றார்கள். பின்பு ஜப்பானிய தம்பதியினரை சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தொடர்பு கொண்டார். அவர் மேற்கொள்ளவேண்டிய சுகாதார பரிசோதனைகள் தடுப்பூசி ஏற்றல், கொரோனா வைரஸ் பரிசோதனை என்பன பற்றி விளக்கினார். இந்தபரிசோதனைகளின் பின்பு நாம் எமது பாதுகாப்பு கருதி சில தினங்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வேண்டப்பட்டோம். அதன் பின்பு கடந்த ஜுலை மாதம் 25 ஆம் திகதி மக்காவுக்குச் சென்று அங்குள்ள ஹோட்டலில் கொரோனா தனிமைப்படுத்தலில் ஈடுபட்டோம். ரியாதிலிருந்து மக்கா வரையான எமது பயணம் சிரமமின்றி அமைந்தது. ஹஜ் ஏற்பாடுகள் சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தன. அனைத்து பாராட்டுதல்களும் சுகாதார அமைச்சு, ஹஜ் உம்ரா அமைச்சு மற்றும் ஊடக அமைச்சுக்களுக்கு உரித்தாகும். நாம் சவூதி அரேபிய அரசுக்கும் அல்லாஹ்வுக்கும் நன்றியுடையவர்களாவோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஈரானிய யாத்திரிகர்கள்

இவ்வருட ஹஜ் சேவை பாதுகாப்புடன் கூடிய சிறந்த சேவையாக அமைந்திருந்தது என ஈரானைச் சேர்ந்த இரு ஹஜ்யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த முஹம்மட் ஜமால் எனும் ஹஜ் யாத்திரிகர் கருத்து தெரிவிக்கையில் ‘ஹஜ் யாத்திரிகர்கள் வைரஸ் பற்றி அச்சம் கொள்ளாதிருக்கும் வகையில் ஹஜ் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சவூதி அரசாங்கத்துக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றிகள். சுகாதார அமைச்சின் தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அரபாவில் மற்றும் முஸ்தலிபாவில்  இரவு தரித்திருத்தல், மேலும் மினாவுக்குத் திரும்புதல் என்பன மிகவும் இலகுவான முறையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றார்.

‘அப்துல்லா அயர் எனும் ஈரானியர் கருத்து தெரிவிக்கையில் ‘மக்கா பெரிய பள்ளிவாசலில் கஃபாவைச் சுற்றி ஹஜ்ஜாஜிகள் தவாபில் ஈடுபட்டவேளை ஒவ்வொருவரும் சமூக இடைவெளியைப் பேணியமை வியப்பானதாக இருந்தது. சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்கள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. அனைத்துச் சேவைகளும் எமது எதிர்பார்ப்புகளை விஞ்சியதாக அமைந்திருந்ன என்றார்.

துருக்கி யாத்திரிகர்

சிரியாவில் பிறந்த துருக்கி யாத்திரிகர் முஹம்மத் காசிம் ஒம்சா, இவ்வருட ஹஜ் கடமை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இவ்வருட ஹஜ் கடமை எனக்குக் கிட்டியமை தொடர்பாக நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அந்தளவுக்கு நான் மகிழ்ந்தேன். நான் எதிர்பார்த்திருந்ததற்கும் மேலாக புனித பகுதிகளில் திட்டமிட்டு ஹஜ் கடமை வழங்கப்பட்டிருந்தது. சவூதி அரசாங்கம் யாத்திரிகர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி மேற்கொண்ட ஏற்பாடுகளுக்கு சவூதி அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தன. தலை முடியை வழிப்பதற்கு பாபர்கள் எமது மினா தங்குமிடங்களுக்கே அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்றார்.

மேலும் சில நாட்டவர்கள்

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த ஆங்கில மொழி ஆசிரியர் அஸ்ரா அலி (38). இவர் ஜித்தாவில் ஆங்கில ஆசிரியராக 6 வருடங்களாக கடமையாற்றுபவர் ‘ஹஜ்யாத்திரை எனது எதிர்கால வாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்துள்ளது’என்றார்.

மேலும் ஜோர்ஜியன் நாட்டவர் ரஸ்லன் மார்கோஸ்விலி, மசிடோனியர் நாட்டவர் ஹமீதி ஹலிமி என்போரும் சவூதி அரசாங்கத்தின் ஹஜ் ஏற்பாடுகளைப் பாராட்டியுள்ளனர்.
ஹமீதி ஹலிமி தனது மகளையும், கணவரையும் ரியாத்தில் விட்டு விட்டு இவ்வருடம் தனது முதலாவது ஹஜ்ஜை நிறைவேற்றினார்.

பிரார்த்திப்போம்

கொவிட் -19 வைரஸின் பரவல் உலகெங்கும் முடிவுக்கு வந்து இலங்கை உட்பட உலக நாட்டு மக்கள் வழமை போல் அடுத்த வருடம் ஹஜ்கடமையினை மேற்கொள்வதற்கு நாமனைவரும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.