உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள்:டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஐவரில் நான்கு பேர் விடுதலை

பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்துடன் தொடர்புகள் இருப்பதாக எந்த தகவலும் இல்லை என விசாரணையில் தெரியவந்ததால் நடவடிக்கை

0 913
(எம்.எப்.எம்.பஸீர்)
21/4 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற  தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகளில், டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட   ஐவரில் நான்கு பேரை நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன விடுதலை செய்து உத்தரவிட்டார். குறித்த நான்கு பேரும்  பயங்கரவாத நடவடிக்கைகளுடனோ அல்லது அடிப்படைவாத செயற்பாடுகளுடனோ எந்த தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பது சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து,  அவர்களை விடுவிக்குமாறு சி.ஐ.டி.யினர் கடந்த திங்கட்கிழமை மன்றில் முன்வைத்த விசேட கோரிக்கைக்கு அமைய நீதிவான் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட ஐவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்து  பாதுகாப்பு அமைச்சின்  தடுப்புக் காவல் உத்தரவை பெற்றுக்கொண்ட நிலையில், விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
குறித்த ஐவரும், கடந்த 2019 ஏபரல் 21 ஆம் திகதி  இடம்பெற்ற  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து,  டுபாயில் கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையிலேயே  அவர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர்.
 எம்.எம்.எம். ஆதில்,  எம்.எல். சிஹான் அஹமட்,  பவுஸர் பவாஸ், ஏ.எஸ். மொஹம்மட் ஹாலிம்,  எம்.ரீ.மொஹம்மட் ரியாத் ஆகிய ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் 2 ஆம் சந்தேக நபரான எம்.எல். சிஹான் அஹமட் தொடர்ந்தும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும், ஏனைய  நால்வர் குறித்த தடுப்புக் காவல் விசாரணைகளிலும் அவர்கள்  பயங்கரவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தொடர்பற்றவர்கள் என தெரியவந்ததாகவும் சி.ஐ.டி.யினர் நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் கூறினர்.
‘ பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன. அதில் அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான குற்றங்களை புரிந்ததாகவோ வேரு விடயங்களோ வெளிப்படுத்தப்படாமையால் அவர்களை விடுதலை செய்கின்றேன்.’ என நீதிவான் தனது உத்தரவில் கூறினார். – vidivelli

Leave A Reply

Your email address will not be published.