ஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம்

கைதுகளின்போது உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு இலங்கை தொடர்பான இணைக்குழு சுட்டிக்காட்டு

0 843

இலங்கையில் கைது செய்யப்படுதல் மற்றும் தடுத்து வைத்தலின் போது உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும், அவை சர்வதேச மரபுகள் மற்றும் உலகளாவிய உரிமைகளுடன் இணங்கிப்போவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான இணைக் குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44 அமர்வில் கனடா , ஜேர்மனி, வடமசெடோனியா, மொன்டிநீக்ரோ, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளன.

மனித உரிமைகளிற்கான பிரிட்டனின் சர்வதேச உயர்ஸ்தானிகர் ரீட்டா பிரென்ஞ் இணைக் குழுவின் சார்பில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கை கொவிட் 19 க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்தளவுடன் நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது.

இதேவேளை மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளது போன்று கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான வழமைக்கு மாறான நடவடிக்கைகளை மனித உரிமைகளை பறிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது.

சிறுபான்மை குழுக்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவது, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை, மோதலின் போது பாரிய பாரதூரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளிற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை,பொது நிர்வாகம் மற்றும் பொது முயற்சிகள் பரந்துபட்ட அளவில் இராணுவமயப்படுத்தப்பட்டமை குறித்த இலங்கையின் மனித உரிமை அமைப்புகளின் கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.

இலங்கையின் ஜனநாயக சூழல் வெளிப்படையானதாகவும் பொறுப்புக்கூறுவதாகவும் காணப்படுவதை உறுதி செய்யுமாறு நாங்கள் இலங்கையை கேட்டுக் கொள்கின்றோம்.
நாங்கள் கடந்தகால வன்முறைகளுக்கும் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.