ஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில் என்ன?

0 809
பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் (கபூரி)
முன்னாள் பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப்பீடம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

21.04.2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இவ்வாணைக்குழு முன்னிலையில் கடந்த 13, 15, 16 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக சாட்சியமளித்த பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்துக்களும், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கடந்த கால வரலாறு, அதன் பல நூறு ஆண்டு வரலாறு கொண்ட தஃவா இயக்கங்கள், கல்வி நிலையங்கள், முஸ்லிம் நாடுகளுடனான தொடர்பு பற்றியும் அவரால் கூறப்பட்ட முரண்பட்ட வாதங்களும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு கவலைகளையும், எதிர்காலம் பற்றிய பல்வேறு வினாக்களையும் தோற்றுவித்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் செயற்பட்டு வரும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களையும் அதன் ஸ்தாபகர்களையும், செயற்படும் இடங்களையும், முஸ்லிம் நாடுகளுடனான அதன் தொடர்புகளையும், அவ்வமைப்புக்கள் செயற்படுத்தி வரும் பல்வேறு வேலைத் திட்டங்களையும் மிக விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் ஞானசார தேரர் ஆணைக்குழுவில் முன்வைத்ததாக ஊடகச் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இந்நாட்டின் வரலாற்றுக் காலம்தொட்டு ஆட்சியாளர்களினதும், இலங்கை அரசியலமைப்பினதும் சட்டப்பிரமாணங்களுக்கும், நீதிக்கும், நியாயத்துக்குமுற்பட்ட வகையில் இந்நாட்டில் வாழ்ந்து, தமது சமய, கலாசார, பண்பாட்டு அம்சங்களைப் பேணி வந்த இலங்கை முஸ்லிம்கள், ஞானசார தேரரின் – கற்பனைக்கும் – யதார்த்தத்திற்கும் மாற்றமானதுமான சாட்சி வழங்கலால், இப்போது மூக்கில் கை வைத்தவர்களாக நாட்டில் என்ன நடக்கின்றது?, என்ன நடக்கப் போகின்றது? என்று அங்கலாய்த்தவர்களாக பிரமித்து நிற்கின்றனர்.

தவறான பரப்புரைகள்

ஞானசார தேரர் தமது சாட்சியத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய பல்வேறு தகவல்களையும் பரப்புரைகளையும் மிக ஆழமான ஆய்வுடனும், அதி உச்ச ஆதாரங்களோடும் முன்வைத்த போதும், அவற்றில் தவறான ஆதாரங்களும், தகவல்களும் மிகைப்படுத்தப்பட்ட சான்றுகளும், மொத்தத்தில் தலைகீழான ஆய்வு முடிவுகளுமே காணப்படுகின்றமையை அவரது முழுச்சாட்சியத்தையும் வாசிப்போர் – குறிப்பாக முஸ்லிம்கள் – கண்டு கொள்ளலாம். உதாரணமாக யூசுப் அல்-கர்ளாவி என்பவரே, இஹ்வானுல் முஸ்லிமின் இயக்கத்தின் ஸ்தாபகர் எனவும், அவர் ஒரு பயங்கரவாதி எனவும் குறிப்பிட்டுள்ளமை, ஞானசார தேரர் தனது தேடலில் எவ்வளவு பலஹீனமானவராகவும், நவீன தேடல் முறைகளில் ஒரு பாடசாலை மாணவனுக்குரிய பரீட்சயம் கூட அவருக்கோ அவரது அமைப்புக்கோ இல்லை என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார். அதுமட்டுமன்றி, இஹ்வானுல் முஸ்லிமின் இயக்கத்தின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா என்பது சாதாரணமாக அவ்வியக்கம் பற்றி வாசிக்கும் எல்லோரும் அறிந்து கொள்ளலாம்.

யூசுப் அல்-கர்ளாவி எகிப்தில் பிறந்தாலும். தற்போது கட்டாரை தனது நிரந்தர வாழ்விடமாக அமைத்துக் கொண்டுள்ளவர். 1926ம் ஆண்டில் பிறந்து தற்போது 94 வயதுடைய யூசுப் அல்-கர்ளாவி 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு சர்வதேச இஸ்லாமிய அறிஞராவார். அவரது அறிவியலுக்கும், ஆய்வுக்குமான பங்களிப்புக்காக எட்டு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள யூசுப் அல்-கர்ளாவி எனும் அறிஞர், சமகால உலகில் வாழும் ஈடிணையற்ற அறிஞராக பிரபல ஆய்வாளர் றேமன்ட் வில்லியம் பேகர் (Raymaond Williom Baker, Islam without fear, Egypt and the New Islamists 2003) தனது நூலில் குறிப்பிடுகின்றார். அதே போன்று “2009ல் உலகின் மிகப் பிரபல்யமான 500 முஸ்லிம் அறிஞர்கள்” (THE 500 MOST INFLUENTIAL MUSLIMS IN THE WORLD- 2009)  என்ற நூலை எழுதிய பிரபல கிழக்கத்தைய ஆய்வாளர், பேராசிரியர் JOHN ELPOSITO  என்பவரும் இக்கருத்தை வலியுறுத்துகின்றார். யூசுப் அல்-கர்ளாவியின் இஸ்லாமிய புலமைத்துவத்தினாலேயே கட்டார் அரசு அவரை கௌரவித்து தனது நாட்டின் நிரந்தர இருப்பிடத்தையும், கட்டார் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் அவருக்கு வழங்கியுள்ளது. பொதுவாக யூசுப் அல்-கர்ளாவியை பற்றி சிறிது வாசிப்புக்கூட இல்லாது, ஞானசார தேரர் தனது சாட்சியத்தை அவருக்கு எதிராக வழங்கியுள்ளார்.

அதேபோல், உலகில் காணப்படும் பிரபல இஸ்லாமிய இயக்கங்களான தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்களின் தோற்றுவாய், அதன் இலட்சியங்கள், அதன் பிரச்சார விடயங்கள் பற்றி எல்லாம் ஞானசாரர் தேடிப்பார்க்காமலேயே உலகின் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புபடுத்தி தனது சாட்சியத்தை வழங்கியுள்ளமை ஞானசாரரின் அறிவுச் சூன்யத்தை நிரூபிக்கின்றது. ‘தப்லீக் ஜமாஅத்’ என்பது பாமர முஸ்லிம் மக்களிடையே இஸ்லாமிய வழிகாட்டலை வழங்கவும், அவர்களின் வணக்க இபாதத் வழிபாடுகளில், தூய்மையை, இஸ்லாமிய தூய நெறிமுறைகளை உயிரூட்டவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மறுமலர்ச்சி இயக்கம் என்று சர்வதேச அறிஞர்களால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கிழக்கு, மேற்கு, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் எல்லாம் தனது தஃவாப் பணியை மேற்கொண்டுவரும் தப்லீக் ஜமாஅத் இயக்கம் இன்றுவரை எந்த நாட்டிலும் அது பயங்கரவாத நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்படவுமில்லை. தடை செய்யப்படவுமில்லை. முஸ்லிம்களுக்கெதிராக, மிக மிலேச்சத்தனமான கொடுமைகள், அரசாங்கத்தின் உதவியோடு நடாத்தப்படும் எமக்கு அண்மையிலுள்ள இந்தியாவில் கூட தப்லீக் ஜமாஅத்துக்கு எதிராக எந்த சந்தர்ப்பத்திலும் விரல் நீட்டப்படவில்லை. மாறாக மிக அதிகமான தப்லீக் ஜமாஅத்தின் தஃவா பணிகள் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தப்லீக் ஜமாஅத்தின் பிறந்தகமே இந்தியா என்பது யாவரும் அறிந்ததே.

அதேபோன்று ‘ஜமாஅத்தே இஸ்லாமி’ பற்றிய சில குற்றச்சாட்டுக்கள் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டபோதும், அவ்வியக்கமும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இன்றுவரை நிரல்படுத்தப்படவில்லை. குறிப்பாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவையும், உதவியையும் பெற்ற அமைப்பாக பாகிஸ்தான் ஜமாஅத் ஏ இஸ்லாமி விளங்கியமையை முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியாஉல் ஹக்கின் ஆட்சி வரலாற்றிலிருந்து நாமறியலாம். அதே நேரத்தில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 1954ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அது எந்த வகையிலும் இந்தியா, பாகிஸ்தானிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கங்களுடன் தொடர்புபடவில்லை என்பதை அதன் இயக்க நூல்களில் அறுதியிட்டு கூறியுள்ளது. இலங்கையில் இவ்விரு இயக்கங்களில் உயர் பதவிகளில் வகித்தவர்களோ, அதன் உறுப்பினர்களில் எவருமே எவ்வித பயங்கரவாத நடவடிக்கைகள், நாட்டுக்கு எதிரான எந்த நிகழ்வுகளுடனும் சம்பந்தப்படவில்லை என்பதை ஞானசார தேரர் இலங்கையின் புலனாய்வுப் பிரிவிலோ, பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய ஆய்வகத்திலோ தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறானதொரு குற்றச்சாட்டே 1973ல் நளீம் ஹாஜியார் என்னும் இலங்கை முஸ்லிம்களின் நன் மதிப்புக்குரிய ஒரு தனவந்தரால் ஸ்தாபிக்கப்பட்ட ‘ஜாமிஆ நளீமிய்யா’ என்னும் ஸ்தாபனத்திற்கு எதிரான ஞானசார தேரரின் குற்றச்சாட்டுமாகும். எவ்வளவு உயரிய இலட்சியத்துடனும், தியாகத்தோடும், அளவிட முடியாத செல்வப் பங்களிப்போடும் உருவாக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யாவின் தோற்ற வரலாறு, அதன் பாடத்திட்டம், அங்கு கல்வி கற்று வெளியானவர்களின் உள்நாட்டு, சர்வதேச அதி உச்ச பங்களிப்புக்கள், அவர்களின் கல்வி மேம்பாடு, அங்கு பணியாற்றிய கலாநிதி சுக்ரி போன்றவர்களின் சர்வதேச அறிவியல் பங்களிப்பு என்பன பற்றி எல்லாம் எவ்வித அறிவும், ஆய்வும் இல்லாத ஞானசார தேரர் என்பவர், தான் கண்டதை, கேட்டதை, சிங்களப் பத்திரிகை, ஊடகங்களில் வாசித்ததை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, மிக மோசமான சாட்சியத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கியுள்ளமை சர்வதேச கண்டனத்தை பெற வேண்டிய விடயமாகும். ஆகக்குறைந்தது தான் குற்றஞ்சாட்ட விரும்பும் ஸ்தாபனங்கள், தனிநபர்கள் பற்றி ‘விக்கிபீடியா’ (Wikipedia)  போன்ற இணையத்தள தேடல்களில் கூட தேடி ஆய்வு செய்திருக்கலாம். அதில் தேடுவதற்கு ஆங்கில மொழி கூடத் தேவையில்லை. ‘விக்கிபீடியா’ சிங்கள மொழியிலும் கூட தனது தகவல்களை முழுமையாக வழங்கியுள்ளமை ஞானசார தேரவுக்கோ, அவரது அமைப்புக்கோ தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இலங்கை முஸ்லிம்கள் மீது குற்றஞ்சாட்ட வேண்டுமென்ற வெறியுடனேயே ஞானசார தேரோவும், அவரது குழுவினரும் செயற்பட்டுள்ளமையை அவரது சாட்சிப் பதிவுகள் எமக்கு நிரூபிக்கின்றன. ஞானசார தேரர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு செல்லும் போதும், அங்கிருந்து திரும்பிய போதும் ஏழடுக்கு நூல்களையும், ஆவணங்களையும், அவரும் அவரது ஆதரவாளர்களும் சுமந்து சென்றதை தொலைக்காட்சி செய்திகளினூடாக நாம் காண்டோம்.

எமக்குள்ளேயே கறுப்பாடுகள்

ஞானசார தேரர் சாட்சியமளித்த முதல் நாளில் அவரது சாட்சியத்தின் நடுவிலே, அவர் சாட்சியமளித்த சில விடயங்கள் பற்றி கேள்வியெழுப்பிய ஆணைக்குழுத் தலைவர் “நீங்கள் கூறும் இவ்விடயங்களை எப்போது? யாரிடமிருந்து அறிந்து கொண்டீர்கள்?” என வினா எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஞானசார தேரர் “இவ்விடயங்களை 1986 (ஆண்டு எனக்கு நிச்சயமில்லை) ம் ஆண்டில் என்னை சந்தித்த நான்கு முஸ்லிம்களே எனக்கு ஆதாரத்துடன் தந்தார்கள், என்னிடத்தில் வந்து வாக்குமூலமளித்தார்கள்” என்று குறிப்பிட்டார். “அவர்களின் பெயர்களைக் கூற முடியுமா?” என்ற கேள்விக்கு “அவர்களுக்கு உயிராபத்து இருப்பதனால் தன்னால் பகிரங்கமாக இப்போது கூற முடியாது எனவும், எனினும் தனிப்பட்ட முறையில் ஆணைக்குழுவுக்கு தர முடியும்” எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டார். இதன் மூலம் ஞானசாரவுக்கு வழங்கப்பட்ட தகவல்களில் பெரும்பாலானவை எம்மவர்களிடமிருந்தே வழங்கப்பட்டுள்ளமை நிரூபணமாகின்றது. ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்து நடப்பதால் அவை பற்றி நாம் எதுவும் இப்போது எழுத முடியாதுள்ளது.

இயக்க வெறிகளின் வெளிப்பாடா?

எமது பூரண இஸ்லாமிய வழிகாட்டுதல்களுக்கும், தூய்மையான இஸ்லாமிய வணக்க முறைகளுக்காகவுமே இஸ்லாமிய உலகில் பல்வேறு இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள், இயக்கங்கள் தோற்றம் பெற்றன. ஹதீஸ்களில் பெறப்பட்ட ஒரு சில கருத்து வேற்றுமைகளினூடாக எமது சுன்னத்தான அல்லது சிறு பிரிவுகளுக்குட்பட்ட விடயங்களில், வணக்க வழிபாடுகளில் ஒரு சில கருத்து வேற்றுமைகள் தோன்றியுள்ளமை, ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இஸ்லாமிய உலகில் வழக்காக உள்ளது. இவ்வாறான சிறுவிடயங்கள் தோன்றுவதை நபி பெருமானார் (ஸல்) அவர்களும் “இமாம்களின் கருத்து வேற்றுமை, அல்லாஹ்வின் அருட்கொடையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

எனினும் கடந்த சில தசாப்தங்களாக இலங்கை, இந்தியா போன்ற கிழக்காசிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடையே இவ்வாறான சிறிய கருத்து வேற்றுமைகள் பூதாகரமாக வடிவம் பெற்று, பல்வேறு இயக்கங்களின் தோற்றத்துக்கும் வழிவகுத்து, இறுதியில் அவை இயக்க வெறியாக மாறியுள்ளதை நிதானமாக சிந்திக்கும் முஸ்லிம்கள் அறிந்துள்ளார்கள். அதன் பிரதிபலனாக இந்நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டிய முஸ்லிம் சமுதாயம், இயக்க வெறிபிடித்த சமுதாயமாக, ஆளுக்காள் காட்டிக் கொடுக்கும் மிகக் கேவலமான சமுதாயமாக, மற்ற சமுதாயத்தினரால் அவமதிக்கப்படும் சமுதாயத்தினராக மாறி வருவதையும். அதன் ஒரு வெளிப்பாடே ஞானசார தேரர் போன்றவர்கள் இவ்வாறான தகவல்களை பிழையான வழிகளில் – முரண்பாடான வடிவமைப்பில் – பெற்று, இவ்வாறு முஸ்லிம்களை சர்வதேச ரீதியாக தோலுரித்துக் காட்டுவதற்கு சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். என்று எமக்குள் காணப்படும் இயக்க வெறி மறைந்து, ஒவ்வொரு தஃவா வழிகாட்டலினதும் பெறுமானம் உணரப்பட்டு, நாமனைவரும் ஒரே “முஸ்லிம் சகோதரர்கள்” என்ற சமூக ஒற்றுமை ஏற்படும் போதுதான் இவ்வாறான இரு நிலையிலிருந்து நாம் விடுபட முடியும். சிறு சிறு கருத்து வேற்றுமைகளுக்காக, மற்றவரை பொது வெளியில் காட்டிக் கொடுக்கும் மனப்பாங்கு எம்மை விட்டும் நீங்க முடியும். அல்லாஹ் உதவி செய்வானாக.

ஆணைக்குழு பற்றிய முஸ்லிம்களின் அலட்சியம்

தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தினூடாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சகல அதிகாரங்களும் கொண்ட ஓர் ஆணைக்குழுவாகும். அங்கு தெரிவிக்கப்படும் சகல தகவல்களும் சாட்சிகளும் சர்வதேச தரம் வாய்ந்ததாக பதிவு செய்யப்படுவதுடன், உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் அதே தினத்தன்றே வழங்கப்பட்டு, உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன, பிரசுரிக்கப்படுகின்றன. ஆணைக்குழுவின் முழு அறிக்கையும், சாட்சிகளின் பதிவுகளிற்குப் பிறகு முழுமையாக இலங்கை ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் வழங்கப்பட்டு, அது பூரண அரச ஆவணமாக வரலாற்று ரீதியாக அந்தஸ்தை பெறும். முஸ்லிம் சமூகத்தின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் இவ்வாவணம், ஒருவேளை முஸ்லிம் சமூகத்தின் கறை படிந்த வரலாற்று ஆவணமாக மாறக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அங்கு தினமும் தெரிவிக்கப்படும் கருத்துக்களும், சாட்சிகளும் முற்றுமுழுதாக இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் தலைவிதியை மாற்றியமைக்கும் ஓர் அரச ஆவணமாக, அறிக்கையாக வரலாற்றில் பதியப்படுவதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றன.

இவ்வாறான முக்கியவத்துவமிக்க இந்த ஆணைக்குழுவின் சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கோ, அங்கு தெரிவிக்கப்பட்ட பிழையான கருத்துக்களை மறுதலித்து, விளக்கமளிக்கவோ முஸ்லிம்கள் சார்பில் அங்கு எந்;த சட்டத்தரணியோ, அரசியல்வாதியோ தோன்றவில்லை, முழுமையாக பற்கேற்கவில்லை என்பதையும் ஆணைக்குழு, தகவல்கள் எமக்குத் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவ மத சார்பில் ஒரு வழக்கறிஞர் தொடர்ச்சியாக அங்கு சமுகமளித்து வரும் நிலையில் முஸ்லிம்களின் சார்பில் எவருமே அவ்வாறு பிரசன்னமாகவில்லை எனவும் அறிய முடிகின்றது. எமது சமூகத்தில் எவ்வளவோ திறமையாக சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டவல்லுனர்கள் இருந்தும் இவ்வாறான துரதிஷ்ட நிலையில், எடுப்பார் கைப்பிள்ளையாக, முதுகெலும்பற்ற சமுதாயமாக நாம் திகழ்வதை எம்மில் யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

ஞானசார தேரரின் சாட்சிகளில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு சில முஸ்லிம் நிறுவனங்களும் தனிநபர்களும் பதிலளித்திருப்பதை, விளக்கமளித்திருப்பதை பத்திரிகைகளினூடாக அறிய முடிகின்றது. உதாரணமாக முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூறா சபை போன்ற நிறுவனங்களும், துருக்கி, எகிப்து நாடுகளின் தூதுவர்களுமே இவ்வாறு சில விளக்கங்களை பத்திரிகைகளில் வழங்கியுள்ளதும், ஜனாதிபதிக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாகவும் நாம் அறிகிறோம். இவையனைத்தும் அவர்களின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிரான ஞானசார தேரரின் குற்றச்சாட்டுக்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட பதில்களும் விளக்கங்களுமாகும். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் இதுவரை முழுமையான பதில்களோ, விளக்கங்களோ முழமையாக எவராலும், எந்த ஸ்தாபனத்தாலும் வழங்கப்படவில்லை. ஞானசாரவின் சாட்சியங்களின் முழுமையிலும் முழுக்க குற்றவாளியாகக் காணப்படும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் இன்றுவரையும் பராமுகமாகவே இருந்து வருவது ஈமானிய உள்ளங்களை பெரும் கவலையிலாழ்த்தியுள்ளது. வல்ல அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.