நீதித்துறை ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

0 1,294

புதிய  ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கமும் இன்று மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கமைய பிரதமர் பதவியிலிருந்து தான் இராஜினாமாச் செய்வதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்திருக்கிறார். இன்றைய தினம் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்பதுடன் புதிய அமைச்சரவையும் அமைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து, ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி தான் பதவி விலகுவதாக ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவித்தார். இதேபோன்றுதான் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பெறுபேறுகள் முழுமையாக வெளியிடப்படுவதற்கு முன்னரே, தனது தோல்வியை ஒப்புக் கொண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்திலிருந்தும் வெளியேறி மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும் ஆட்சியமைக்க வழிவிட்டமை இந்த இடத்தில் ஞாபகப்படுத்தத்தக்கதாகும். பதவியிருந்து நீங்க முடியாதென அடம்பிடிக்காது மக்கள் ஆணையை மதித்து நடக்கின்ற இந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகும்.

இந் நிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கு இனிமேல்தான் பலத்த சவால்கள் காத்திருக்கின்றன. நாட்டின் தேசிய பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தி தாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதில்தான் பொது ஜன பெரமுனவின் எதிர்கால வெற்றி தங்கியுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தேர்ச்சி பெற்ற அரசியல்வாதியல்ல என்ற போதிலும் அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக வர்ணிக்கப்படுகிறார். 10 வருடங்கள் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்து, யுத்தத்தை வெற்றி கொள்வதிலும் அதன் பின்னர் நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதிலும் அவர் வகித்த பங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும்.

தான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அரசாங்க அலுவலகங்களில் தனது புகைப்படங்களை காட்சிப்படுத்தக் கூடாது என்றும் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையையும் வாகனங்களின் எண்ணிக்கையையும் ஜனாதிபதி செயலணியின் ஊழியர்களின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கவுள்ளதாகவும் அவர் விடுத்த அறிவிப்புகள் அவர் நேர்த்தியானதொரு அரச நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை துளிர்விடச் செய்துள்ளன.

இருந்தபோதிலும் இந்த சிறிய மாற்றங்களைத் தாண்டி அவர் எவ்வாறு இந்த நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கப் போகிறார் என்பதையும் ஊடகங்களுக்கு எந்தளவு சுதந்திரம் வழங்கப் போகிறார் என்பதையும் சர்வதேசமும் தேசியமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

தனது சகோதரரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் கடந்த அரசாங்க காலத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவை தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட இடமளிக்கப்படுமா அல்லது அந்தக் கோவைகள் கிடப்பில் போடப்படுமா என்ற எதிர்பார்ப்பு இன்று மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேபோன்றுதான் கடந்த காலங்களில் ஊடகங்கள் மீது பலத்த அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. மீண்டும் அவ்வாறானதொரு இருண்ட யுகம் வருமா? ஊடகங்கள் தணிக்கைக்குட்படுத்தப்படுமா? ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுமா? என்பன போன்ற பல கேள்விகளும் இன்று முன்வைக்கப்படுகின்றன. அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் புதிய ஜனாதிபதி எடுக்கவுள்ள தீர்மானங்களும் அவரது நகர்வுகளுமே மேற்படி கேள்விகளுக்கு விடைபகரப் போகின்றன.

எனவேதான் புதிய ஜனாதிபதி நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அந்த நம்பிக்கையை சிதைவடையச் செய்யும் வகையிலான செயற்பாடுகளில் அவரோ அவர் சார்ந்த அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ ஈடுபடுக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.