பிராந்திய அரசியலில் OIC யின் யதார்த்தம் என்ன?

0 1,009
  • ஏ.எச்.ரெஸா உல் ஹக்

இலங்கை முஸ்­லிம்கள் மீதான அண்­மைய அத்­து­மீ­றல்கள் குறித்து இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான கூட்­ட­மைப்பு நாடுகள் (OIC) வெளி­யிட்­டி­ருந்த கூட்­ட­றிக்கை குறித்து முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் சமூக ஊட­கங்­க­ளிலும் அதி­க­மான சம்­பா­ஷ­ணைகள் இடம்­பெற்­றன.  அக்­கூட்­ட­றிக்­கையின் இறு­தியில் “இன­ரீ­தி­யான வன்­மு­றைகள் எழு­வ­தனைத் தடுப்­ப­தற்­கான அனைத்து முன்­னெ­டுப்­பு­க­ளையும் அத்­து­மீ­றல்­களில் பங்­கேற்­றி­ய­வர்­களின் மதத்­தி­னையோ அல்­லது அர­சியல் செல்­வாக்­கி­னையோ பாராது அவர்­க­ளுக்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்­கை­யி­னையும் எடுக்­கு­மாறு இலங்கை நட்பு அர­சாங்­கத்­தினை வலி­யு­றுத்­து­கின்றோம்” என குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. கடந்த ஈஸ்டர் தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் எழுந்த சூழ­லா­னது, ஏற்­க­னவே பேரி­ன­வாத அச்­சு­றுத்­த­லுக்கு முகங்­கொ­டுத்­தி­ருந்த முஸ்லிம் சமூ­கத்­தினை பெரும் நிர்க்­க­தி­யான நிலைக்குத் தள்ளி விட்­டுள்­ளது. உள்­நாட்டு யுத்­தத்­திற்குப் பின்னர் இலங்கை சந்­தித்த புதிய பாது­காப்பு அச்­சு­றுத்­த­லினை அடி­யோடு களை­வ­தற்­கான பூரண ஒத்­து­ழைப்­பினை இலங்கை முஸ்லிம் சமூகம் அர­சாங்­கத்­திற்கும் பாது­காப்புத் தரப்­பிற்கும் வழங்­கு­வதில் முன்­னின்று வரு­கின்­றது. எனினும், நாட்டின் சில பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­களின் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் மற்றும் வெறுப்புப் பிர­சா­ரங்கள் என்­பன முஸ்­லிம்கள் மத்­தியில் பீதி­யி­னையும் பாது­காப்பு நிச்­ச­ய­மற்ற தன்­மை­யி­னையும் தாண்­ட­வ­மாடச் செய்­துள்­ளது. இத்­த­கை­ய­தொரு சூழலில் OIC இனது கூட்­ட­றிக்­கை­யா­னது வெளி­யி­டப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.  மேலும் மேற்­படி நிலை­மை­களை முன்­நி­றுத்தி இலங்கை மீது பொரு­ளா­தார ரீதி­யான அழுத்­தத்­தினை OIC முன்­னெ­டுக்கப் போவ­தாக குறிப்­பாக கனிய எண்ணெய் வழங்­கு­வதின் பால் அழுத்­தத்­தினை பிர­யோ­கிக்கப் போவ­தான ஒரு கருத்தும் சமூக வலைத்­த­ளங்­களில் வலம் வந்­தது. இவ்­வா­றி­ருக்­கையில், தனது இரண்­டா­வது தட­வைக்­கான இந்­திய மக்­களின் ஆசிர்­வா­தத்­தினைப் பெற்ற இந்­தியப் பிர­தமர் மோடி, இலங்­கைக்­கான தனது விஜ­யத்­தினை மேற்­கொண்டு பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­தி­யினைச் சந்­தித்­த­துடன் குண்டுத் தாக்­கு­த­லுக்­குள்­ளான கிறிஸ்­தவ ஆல­யங்­களில் ஒன்­றையும் பார்­வை­யிட்­டு­விட்டுச் சென்றார். இலங்கை முஸ்­லிம்­களின் மீது அத்­து­மீ­றல்கள் மேற்­கொள்­ளப்­படும் ஒரு சூழல் மேலெ­ழும்­போது வெளி­நா­டு­களின் பிர­தி­ப­லிப்பு எவ்­வா­றி­ருக்கும்? இதன் யதார்த்தம் என்ன? போன்ற கேள்­விகள் இங்கு எழு­கின்­றன.

தெற்­கா­சிய நாடு­களின் அமை­வி­ட­மான இந்து -– பசுபிக் பிராந்­திய, புவி­யியல் ரீதி­யான மூலோ­பா­ய­மாக இருப்­பினும் பிராந்­திய அர­சி­ய­லாக இருப்­பினும் பல சிக்­கல்­களைத் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் 21ஆம் நூற்­றாண்­டுக்­கான தனது மேலா­திக்­கத்­தினை தக்­க­வைத்துக் காட்டும் சவால் மற்றும் மேற்­கத்­தே­யத்தின் செழிப்பு என்­பன ஆசி­யாவை மையப்­ப­டுத்­தி­யுள்­ளமை பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே இனங்­கா­ணப்­பட்­டன. அதற்­கேற்­றாற்போல் அமெ­ரிக்கா தனது கூட்­டணி நாடு­க­ளுடன் ஆளணி மற்றும் கலங்­களை மூலோ­பா­ய­மாக முன்­ன­கர்த்­தி­ய­துடன் அதற்கு சமாந்­தி­ர­மாக ராஜ­தந்­திர நகர்­வு­க­ளையும் மேற்­கொண்­டது. மேற்­படி பின்­ன­ணி­யினைத் தொடர்ந்து அமெ­ரிக்கத் தரப்­பி­லி­ருந்து நகர்­வுகள் குறிப்­பாக கடந்த இரு­பது ஆண்­டு­களில் துரி­தப்­ப­டுத்தப்பட்­டன. அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் நீர்­மூழ்­கி­களில் அதி­க­மான சத­வீ­தத்­தினை ஆசி­யாவில் நிலை­கொள்­ள­வைக்கும் பென்­ட­கனின் தீர்­மானம்; ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகி­ய­வற்­று­ட­னான இரா­ணுவக் கூட்­டு­றவு வலு­வாக்கல் மற்றும் உடன்­பா­டுகள், வான்­பா­து­காப்புக் கட்­ட­மைப்­புக்கள், சிங்­கப்பூர் ‘ஷண்கி’ கடற்­ப­டைத்­தளம் என்­பன முக்­கி­யத்­து­வத்­தினைப் பெற்­றன. அமெ­ரிக்க பசுபிக் கடல் கட்­டளைத் தளம் (PACOM) மற்றும் அதன் கட்­டுப்­பாட்­டி­லுள்ள ஏழா­வது கடற்­படைப் பிரிவு (7th Fleet) என்­பன அமெ­ரிக்க அர­சாங்­கங்­க­ளினால் தொடர்ச்­சி­யாக போஷிக்­கப்­பட்டு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. மறு­த­லை­யாக எழுச்சி பெற்ற சீனாவும் இந்­தி­யாவும் பிராந்­தி­யத்தின் பாது­காப்பு, அர­சியல் மற்றும் பொரு­ளா­தா­ரத்­தினைத் தீர்­மா­னிப்­பதில் தனக்­கான பங்­கினை நிச்­ச­யித்துக் கொள்ளல், அதி­க­ரித்தல் என்­ப­தன்பால் போட்­டி­யிடும் அதே நேரம் வல்­ல­ர­சான அமெ­ரிக்­காவின் இருப்­பினை பிராந்­தி­யத்தில் எவ்­வாறு கையாள்­வது என்­ப­தன்­பாலும் கரி­சனை கொண்­டுள்­ளன. ஆக, இந்த மையப்­புள்­ளி­யா­னது பிராந்­தி­யத்தின் ஒவ்­வொரு நாட்­டி­னு­டைய அர­சி­யலில் செல்­வாக்கு செலுத்­து­வ­தா­கவும் சில­போது தீர்­மா­னிப்­ப­தா­கவும், குறித்த ஒரு நாட்டின் மீது சர்­வ­தேச ரீதி­யான  வெளித் தலை­யீ­டுகள் மற்றும் அழுத்­தங்கள் வரும்­போது அதன் காத்­தி­ரத்­தன்மை விளை­வினைத் தீர்­மா­னிப்­ப­தா­கவும் செயற்­ப­டு­கின்­றது. இத்­த­கை­ய­தொரு பூகோள அரசிற் சூழலில் அமெ­ரிக்கா, சீனா மற்றும் இந்­தியா ஒரு நாட்டின் மீது எவ்­வாறு காய் நகர்த்­து­கின்­றன என்­ப­தனை அறிதல் இதனை இன்னும் துலாம்­ப­ர­மாக்கும். சீனா, ஒரு நாட்டில் உறு­தி­யாகக் காலூன்றி தனது நலன்­களை முன்­னெ­டுக்கும் நிலை ஏற்­ப­டு­வ­தற்கு மிக முக்­கி­ய­மான அர­சியல் மற்றும் தந்­தி­ரோ­பா­ய­மான கார­ணங்­களை, அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கத்­தேய நாடுகள்,  பெரும்­பாலும் அந்­நா­டுகள் சம்­பந்­த­மாக, பல மேற்­கத்­தேய ஆய்­வா­ளர்கள் உடன்­ப­டு­வதைப் போன்று அகங்­கா­ர­மான அணு­கு­மு­றை­களும்  நிலைப்­பா­டு­களும் கொள்­கை­க­ளுமே சீனா­விற்குக் களம் அமைத்துக் கொடுக்­கின்­றன. மனித உரிமை மீறல்கள் அல்­லது  வேறு விட­யங்கள் குறித்து முறுகல் நிலைகள் தோன்­றி­ய­வுடன் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கத்­தேய நாடுகள், குறித்த அந்­நாட்­டினை உலக அரங்கில் தனி­மைப்­ப­டுத்­திட தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கும். இது, அந்­நா­டு­களைத் தன்­னிடம் கட்­டுப்­பட்டு மீள  சம­ர­சத்­திற்கு கொண்­டு­வர முயற்­சிக்கும் அமெ­ரிக்க வியூ­க­மாகும். ஆனால்,  ஆபி­ரிக்கா முதல் ஆசி­யா­வரை இவ்­வ­மெ­ரிக்கக் கொள்­கையும் அத­னை­யொத்த வியூ­கமும் எதிர்­பார்த்­த­ளவு அமெ­ரிக்­கா­விற்கு வெற்­றியை நல்­க­வில்லை. ஆனால்,  சீனா­விற்கு அந்­நா­டு­களில் காலூன்­றவே வழி­ய­மைத்துக் கொடுத்­தது. அமெ­ரிக்கத் தலை­மை­யி­லான நாடு­களின் கெடு­பி­டிகள் தொடர்ச்­சி­யாகப் பிர­யோ­கிக்­கப்­படும் சந்­தர்ப்­பங்­களில் பொது­வாக, அந்­நா­டுகள் அமெ­ரிக்க தலை­மை­யி­லான நாடு­களின் பக்கம் சாயாமல் தத்­த­மது இருப்­பினை உறு­தி­செய்து கொள்ளப் போராடும். இச்­சந்­தர்ப்­பத்தில்,  சீனா தனது வலை­யினை இந்­நா­டு­க­ளுக்கு விரித்து அவற்றை ஆரத்­த­ழு­விக்­கொள்ளத் தொடங்கும். உலக அரங்­கி­லி­ருந்து குறித்த அந்­நா­டு­க­ளுக்கு வரும் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் எதிர் நட­வ­டிக்­கை­களின் போது அவற்றைக் காக்கும் நிலைப்­பாட்­டினை எடுக்கும். இதற்குப் பக­ர­மாக அந்­நா­டு­களில் இருந்து தனது கூலி­யினைப் பெற்றுக் கொள்ளும். எவ்­வ­ள­வுக்­கெவ்­வ­ளவு அந்­நா­டு­க­ளுக்கு அழுத்தம் வரு­கின்­றதோ அவ்­வ­ள­வுக்­கவ்­வ­ளவு அந்­நா­டு­களில் சீனா, காலூன்றி தனது அர­சியல், பொரு­ளா­தார மற்றும் இரா­ணுவ ரீதி­யான நலன்கள் குறித்த மூலோ­பா­ய­மான இருப்­பினை உறு­தி­செய்து கொள்ளும். குற்­றங்கள் நடை­பெறும் வரை அல்­லது பொய்க் குற்­றச்­சாட்­டு­களைத் திணித்து  அவற்றைக் காரணங் காட்டி தனது நலன்­களை அடைய அமெ­ரிக்கா அழுத்தம் கொடுக்கும். அமெ­ரிக்­காவோ அல்­லது வேறெ­வ­ருமோ அழுத்­தங்­கொ­டுக்கும் வரை பொறுத்­தி­ருந்து அவ்­வ­ழுத்­தங்­களில் போது அந்­நா­டு­களைக் காத்து தனது நலன்­களை சீனா பெற்றுக் கொள்ளும். இதுவே அமெ­ரிக்கா, சீனா ஆகிய இரு நாடு­க­ளி­னதும் வெளி­யு­றவுக் கொள்­கை­களை மையப்­ப­டுத்­திய இரா­ஜ­தந்­தி­ரங்­களில் உள்ள பிர­தான வேறு­பா­டாகும்.  இந்தப் பின்­ன­ணியில் சீனா ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளையோ அல்­லது மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் அத­னை­யொத்த நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்­றையோ பொருட்­ப­டுத்­தாது தனது நலன்­களை எவ்­வாறு முன்­ன­கர்த்­து­வது என்­பதில் குறி­யாக இருக்கும். இதன் அடிப்­ப­டையில், ஜன­நா­யக ஆட்சி நடை­மு­றை­களை விடவும் மையப்­ப­டுத்­தப்­பட்ட அதி­காரத் (Centralize power) தன்மை வாய்ந்த அர­சாங்­கங்­களை போஷிக்கும் போக்கை சீனா கடந்த இரு தசாப்­தங்­க­ளுக்கு மேலாகப் பின்­பற்றி வரு­கின்­றது. இதன் மூலம் தனது நெகிழ்ச்­சி­யற்ற இரா­ணுவத் தன்மை வாய்ந்த (Rigid and Regimental) ஆட்­சி­மு­றைக்கு நியாயம் கற்­பிக்கும் நோக்­கமும் சீனா­வுக்கு உண்டு. 2003 தொடக்கம் 2010 வரை ஆபி­ரிக்­காவில் ஏற்­பட்ட ஐந்து இரா­ணுவ சதிப்­பு­ரட்­சி­க­ளி­னாலும் சீனாவின் கொள்­கை­யிலோ அல்­லது அதன் நலன்­க­ளிளோ எந்தப் பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை. கடந்த நாற்­பது வரு­டங்­களில் ஐ.நா. பாது­காப்புச் சபையில் அமெ­ரிக்கா மற்றும் மேற்­கத்­தேய நாடு­களால் வட­கொ­ரியா,      சிம்­பாப்பே, மியன்மார், சூடான்,  ஈரான், ஈராக், லிபியா மற்றும் இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வந்த தீர்­மா­னங்கள் மற்றும்  தடை­களில் சீனா தனது வீட்டோ அதி­கா­ரத்தின் மூலம் எதிர்த்­தி­ருக்­கி­றது. இவ்­வா­றாக சீனா தனது உறு­தி­யான பூகோள அர­சியல், – பொரு­ளா­தார, – பாது­காப்பு நலன்­களின் தந்­தி­ரோ­பா­ய­மான மற்றும்  இரா­ஜ­தந்­திர நகர்­வு­களைப் பலப்­ப­டுத்திக் கொள்ளும் பொருட்டே ஐ.நா. பாது­காப்புச் சபையில் இவ்­வ­ளவு காலமும் செயற்­பட்­டி­ருக்­கின்­றது. எந்த ஒரு வீட்டோ பிர­யோ­கத்­தி­னையும் எந்த ஒரு நாட்டின் பொருட்டும் இல­வ­ச­மாக அது வழங்­க­வில்லை என்­ப­தனை இங்கு அழுத்திக் குறிப்­பி­டுதல் தகும். மியன்மார் மற்றும் இலங்­கையில் சீனாவின் வியூ­கங்கள் பெரிதும் ஒத்த போக்­கினைக் காட்­டு­கின்­றன. ஆக, இத்­த­கைய போக்­கிற்குள் இந்­தி­யாவும் தனது நலன்­களின் குறி­யாக இருக்கும் நிலையில் தன்னை படிப்­ப­டி­யாக உட்­ப­டுத்திக் கொண்­டது. இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், மியன்­மாரில் 1988ஆம் ஆண்டு  ஜன­நா­யக ரீதி­யான எதிர்ப்­பார்ப்­பாட்­ட­மா­னது இரும்புக் கரம்­கொண்டு அடக்­கப்­பட்­ட­தனைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி தலை­மை­யி­லான இந்­திய அர­சாங்­கத்தின் இந்து – மியன்மார் உறவில் விரிசல் ஏற்­பட்­டது. எனினும் அதனைத் தொடர்ந்து மியன்­மாரை மையப்­ப­டுத்தி சீனா, ஏக­போ­கி­யாக தனது மூலோ­பாய நலன்­களைப் போஷிப்­ப­தனைப் பார்த்து கலக்­க­ம­டைந்த இந்­தியா, 1993இல் அடெல் பிஹாரி வாஜ்பாய் தலை­மையில் தனது மியன்­மா­ரு­ட­னான உற­வு­களை மீண்டும் மேம்­ப­டுத்திக் கொண்­டது. 1994இல் ஏற்­ப­டுத்­தப்­பட்ட உடன்­ப­டிக்­கை­க­ளுக்­க­மைய விவ­சா­யத்­துறை, இயற்கை வாயு மற்றும் எண்ணெய், தொலைத்­தொ­டர்பு, தகவல் தொழி­நுட்பம் மற்றும் உட்­கட்­ட­மைப்பு என்­ப­வற்றில் சீனா­விற்குப் போட்­டி­யாக  தனது பூகோளப் பொரு­ளியல் மற்றும் தந்­தி­ரோ­பாய பூகோள பாது­காப்பு நகர்­வு­களை இந்­தியா முன்­னெ­டுத்­தது. 2007ஆம் ஆண்டு மியன்மார் இரா­ணுவ ‘ஜுண்டா’வுக்கு எதி­ராக அமெ­ரிக்க மறை கரத்தின் பின்­ன­ணியில் ‘ஸப்ரோன்’ புரட்சி என்ற அகிம்­சா­வாத எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் 1988ஐப் போன்றே இரா­ணுவ இரும்புக் கரம் கொண்டு நசுக்­கப்­பட்­டது. உலகின் கடும் கண்­ட­னத்­திற்கு இலக்­கான இவ்­வ­டக்­கு­மு­றைக்­கெ­தி­ராக அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடுகள்  ஐ.நா.வில் மியன்­மா­ரிற்கு எதி­ராகத் தண்­டனை வழங்கும் மசோதா ஒன்றைக் கொண்­டு­வந்­தது. ஆனால், இதற்­கெ­தி­ராக சீனா, தனது வீட்டோ அதி­கா­ரத்தை பாவித்­தது. இந்­தியா, உலக நாடு­களின் கடும் விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யிலும் மெளனம் காக்கும் அள­விற்குத் தனது பூகோள மூலோ­பா­யத்தை மாற்­றிக்­கொண்­டது. அது­மட்­டு­மின்றி மியன்­மா­ரிற்­கான அமெ­ரிக்க தலை­மை­யி­லான உலக நாடு­களின்  கெடு­பி­டியைத் தணிக்கும் வகி­பா­கத்­தி­னையும் இந்­தியா எடுத்­தது. இந்­தி­யாவின் மோடி நிர்­வாகம் இதே அணு­கு­மு­றை­யினை போஷித்து வரு­கின்­றது. அண்மைக் காலங்­களில் ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட குரூ­ர­மான அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ராக உலக நாடுகள் குரல் கொடுத்த போது, மோடி முதல் ஆளாக அங்கு ஆஜ­ராகி, இந்­தியா மியன்மார் அர­சாங்­கத்­துடன் இருப்­ப­தாக அறி­வித்தார். குஜராத் கல­வ­ரங்­களின் போது கொல்­லப்­பட்ட முஸ்­லிம்கள் விட­யத்தில் பிர­தமர் மோடி குற்­றச்­சாட்­டு­களைக் கொண்­டுள்­ள­மை­யா­னது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. ஆக, நில­மை­களை அவ­தா­னித்த அமெ­ரிக்க அணி நாடுகள், தமது மியன்­மா­ருக்­கெ­தி­ரான இறுக்­க­மான கொள்­கை­க­ளினால் நாளுக்கு நாள் மியன்­மா­ரினை மையப்­ப­டுத்­திய  பூகோள அர­சியல் நகர்­வுகள் பல­வீ­ன­ம­டை­வ­தா­னது இந்து -– பசுபிக் பிராந்­தி­யத்தில் தனது இருப்பை பல­வீ­னப்­ப­டுத்தும் தன்மை வாய்ந்­தது என்­ப­தனை அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா உணர்ந்­தன. உலோக வளங்கள், பெறு­ம­தி­மிக்க மாணிக்க கற்கள், இயற்கை வாயு மற்றும் எண்ணெய், இது­போக மிக மோச­மான உட்­கட்­ட­மைப்பு, ஜனத்­தொ­கையின் மூன்றில் இரண்டு பகு­தி­யி­ன­ருக்கு மின்­சார வச­தி­யின்மை, வள­மான ஆறுகள் அவற்­று­டன சுமார் அறு­பது மில்­லியன் மக்­களைக் கொண்ட சந்தை. இவற்றைச் சீர்­தி­ருத்­து­வதன் பின்­ன­ணியில் மியன்­மாரில் தனது கம்­ப­னி­க­ளுக்கு பல் துறை­க­ளிலும் காத்­தி­ருக்கும் பெரிய வாய்ப்­புக்கள் என்­ப­வற்­றினைக் கருத்­திற்­கொண்டு மியன்மார் விட­யத்தில் தனது அணு­கு­மு­றை­யினை மாற்றிக் கொண்­டுள்­ளது. ஆக, இதுவே இங்கு விட­ய­மாகும்.

அரே­பிய மற்றும் முக்­கி­ய­மான முஸ்லிம் நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தில் அதன் நட­வ­டிக்­கை­க­ளா­னது அமெ­ரிக்க, சீன மற்றும் இந்­திய   முக்­கோண அர­சி­ய­லு­டனோ அல்­லது தனித் தனி­யான அர­சி­ய­லு­டனோ தொடர்பு பட்­ட­தா­க­வே­யுள்­ளது. சவூதி தலை­மைய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் ஈரா­னுக்­கெ­தி­ரான கூட்­ட­மைப்பு வியூ­கத்தில் அமெ­ரிக்கா சார்ந்த நலன் கூட்­ட­மைப்பு நலன் (Coalition Interest) என்ற இடத்­தினைப் பெறும். அணி­சேரா கொள்­கை­யினை பறை­சாட்டி  இந்­தியா நடத்தும் தந்­தி­ரோ­பாய வெளி­நாட்­ட­ர­சி­யலும் ‘காஷ்மீர் பிரச்­சி­னைக்­கான ஐ.நா. வின் தீர்­மா­னத்தை’ அது ‘இந்­தி­யாவின் உள்­ளக விடயம் ‘என்­கின்ற அதன் வாதத்­தினை வலு­வூட்டும் வித­மாக ‘ஒரு நாட்டின் உள்­ளக விட­யங்­களில் தலை­யி­டு­வ­தில்லை’ என்­கின்ற கொள்­கையும் மிக முக்­கி­ய­மா­ன­வை­யாகும்!  ஆக, இக்­கொள்­கை­யினை தமக்கு சாத­க­மாக்கும் வித­மாக சிரியன் அஸாத் ரெஜிம், இந்­திய இரா­ஜ­தந்­திர நகர்­வு­களை பலப்­ப­டுத்தி வரு­கின்­றது. இதனைத் தொடர்ந்து சிரியா விவ­கா­ரங்­களில் வெளி­நாட்டுத் தலை­யீட்­டினை எதிர்ப்­ப­தா­கவும் அதன் இறை­மை­யினை மதிப்­ப­தா­கவும் இந்­திய தரப்­பி­லி­ருந்து அறி­விக்­கப்­பட்­டது. இவ்­வா­றாக பற்­றி­யெ­ரியும் ஒரு சூழ­லினுள் இந்­தியா  மத்­திய கிழக்கை நோக்­கிய அத­னது மூலோ­பா­ய­மான பிர­வே­சத்­தினை சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எடுத்­தது. ஏற்­க­னவே மத்­திய கிழக்கில் பெரும் இந்­திய டயஸ்­போ­ரா­வா­னது பொரு­ளா­தா­ரத்தில் முக்­கிய செல்­வாக்­கினைக் கொண்­டுள்ள நிலையில் மேற்­படி நகர்­வா­னது மோடி நிர்­வா­கத்தின் பால் சவூதி தலை­மைய நாடு­களின் உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்­தி­யது. ஈரான் விட­யத்தில் சீன, ரஷ்ய ஆத­ர­வா­னது சவூதி அரே­பி­யாவை ரஷ்யா மற்றும் சீனாவின் பக்கம் உற­வு­களை முன்­னெ­டுக்க நிர்ப்­பந்­தித்த அதே நேரம், சீனா மற்றும் இந்­தி­யாவின் கனிய எண்ணெய்த் தேவை­யா­னது பெரும் சந்­தை­யினைக் கொண்­ட­தா­கவும் உள்­ளது. ஆக, இத்­த­கை­ய­தொரு மூலோ­பாய சூழ­லி­லேயே சீனாவின் சின்­ஜியாங் மாகா­ணத்தில் சீன அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­படும் அட்­டூ­ழி­யங்கள் விட­யத்தில் சவூதி முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மெத்­த­ன­மான போக்­கினை வெளிப்­ப­டுத்­தி­ய­மை­யினை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது. ஆக, இதுவே இங்கு யதார்த்­த­மாகும்.  இப்­பி­ராந்­தி­யத்தில் அமெ­ரிக்க, சீன மற்றும் இந்­திய நலன்கள் குறித்த போட்டி அர­சி­யலில் அவற்றில் மூலோ­பா­ய­மாகத் தங்­கி­யுள்ள சக்­திகள் இம்­மூன்று சக்­தி­களின் நல­னினை கருத்­திற்­கொண்டோ அல்­லது தமது மூலோ­பாய நலத்தின் பால் கரி­ச­னை­யு­டை­ய­தா­கவே காய் நகர்த்தும். மேலும் முஸ்லிம் நாடுகள் தமது ‘மென் வலு’ மூலோபாயத்தினை மட்டுமட்டாகவே இந்த பிராந்தியத்தில் பிரயோகிக்கும். மியன்மார் விடயத்தில் சவூதி, ரோஹிங்ய அகதிகளின் நலனின் பொருட்டாக மேற்கொண்ட நகர்வுகள் அத்தகையன. இதே விடயத்தில் துருக்கி, ராஜதந்திர தளத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு கடும் பிரயத்தனத்தினை எடுத்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது அமெரிக்காவுடனான 2015ஆம் ஆண்டு அணு உடன்படிக்கையினைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் உறுதியான மூலோபாயப் பங்காளியாகப் பரிணமித்துள்ள போதிலும் அதற்கே உரியதொரு போக்கினையும் பலமுறை அது வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கை விடயத்தில், இலங்கை தமது செல்வாக்கிற்குற்பட்டதாக இருத்தல் வேண்டும் என்கின்ற போக்கு அதனிடம் மிகைத்துள்ளது. ஆக, மோடி தனது இரண்டாவது பதவியேற்றத்தின் பின்னர் அயல் நாடுகளுக்கு விஜயம் செய்தலானது ஒரு பொதுவான சாம்பிரதாயமாகவோ அல்லது ‘அயலவர்களே அடிப்படை’ என்ற மோடி நிர்வாகத்தின் கொள்கையினை அடியானதாகவோ இருப்பின் தற்போதைய விஜயம் ஒரு இராஜதந்திர சூழலிலேயே நிகழ்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது.  முஸ்லிம்களின் மீதான அத்துமீறல்களுக்காக சட்ட நடவடிக்கை குறித்த வினயமான  OIC இனது கூட்டறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளதொரு சூழலில் மோடியின் வருகையானது ராஜதந்திரத் தன்மையினை அதிகரிக்கின்றது. இறுதியாக, உலக கனிய எண்ணெய் உற்பத்திச் சமநிலை மற்றும் சந்தையின் தளம்பலினை தவிர்த்து ஸ்திரநிலைக்குக் கொண்டு வருவதற்காக கனிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இவ்வருடத்திற்கான உற்பத்தியினை குறைப்பது பற்றி ஏற்கனவே கடந்த வருடம் குறிப்பாக OPEC மற்றும் ரஷ்யா, கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தன. அதனடியாக கொள்வனவு நாடுகளுக்கு மிதமிஞ்சிய வழங்கலில் (Supply) மாற்றங்கள் ஏற்படக் கூடுமென எதிர்வு கூறப்படுகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.