புத்தளம் மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

0 855

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவாக்காட்டு பிரதேசத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கோரி புத்தளம் மக்கள் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாக கடந்த 19 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்த துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் மகஜர்களைக் கையளித்திருந்தனர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில்  ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதற்கமைய ஜனாதிபதி கடந்த வெள்ளிக் கிழமை புத்தளம் நகருக்கு விஜயம் செய்த நிலையில், அன்றைய தினம் அறுவாக்காடு குப்பைத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சில நிமிடங்களை ஒதுக்கித் தருவதாக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். எனினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையிலேயே, ஜனாதிபதியின் வருகையின்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த வெள்ளிக் கிழமை கறுப்புக் கொடிகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் , இளைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

எனினும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர்.  இதில்  பெண்கள் உட்பட பலர்  காயமடைந்தனர்.

இதேவேளை, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ்  இரண்டு இளைஞர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், மறுநாள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் புத்தளம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது. தாம் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்றும் குப்பைத் திட்டத்தினால் ஏற்படும் ஆரோக்கியப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்புக் கோரியும் குரல் கொடுத்த மக்கள் மீது, குறிப்பாக  வயோதிபத் தாய்மார் என்று கூடப் பார்க்காது தாக்குதல் நடத்திய பொலிசாரின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

இதேவேளை பாதுகாப்பு தரப்பினரால் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தமக்கு  வேதனையளிப்பதாக புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“இன,மத, பால் வேறுபாடின்றி பல தியாகங்களுக்கு மத்தியில் எதிர்கால சந்ததியை பாதுகாக்கும் போராட்டத்தில் இணைந்துள்ள பல்லாயிரக்கணக்கான புத்தளம் மக்களின் உணர்வுகளை அரசாங்கமும், அரசியல் பிரமுகர்களும், உயர் பீடங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே புத்தளம் சிவில் தலைமைகளின் எதிர்பார்ப்பாகும்.

இத்தகைய அசம்பாவிதங்கள் மற்றும் சமூகத்தை அழிக்கக்கூடிய திட்டங்களில் இருந்து எமது ஊரையும் எமது சமூகத்தையும் பாதுகாக்க அல்லாஹ்விடம் உளத்தூய்மையோடும், இறையச்சத்துடனும் துஆக்களில்  ஈடுபடுவோம். அசம்பாவிதங்களில் காயப்பட்ட, வேதனைப்பட்ட, சட்டச் சிக்கல்ளுக்கு உட்பட்டுள்ளவர்களுக்காக பிரார்த்திப்போம்.

சமூகங்களுக்கு மத்தியில் சிக்கல்களை உருவாக்க நினைக்கும் சில தீய சக்திகளின் முயற்சியில் மாட்டிக்கொள்ளாத வகையில் பொதுமக்கள் இந்நாட்களில் சமயோசிதமாக செயல்பட வேண்டும் ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி புத்தளம் மக்களைச் சந்திக்கத் தயாரில்லையா? அல்லது புத்தளத்திலுள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் இதனை விரும்பவில்லையா? என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள போட்டியும் பொறாமையும் சூழ்ந்த அரசியலே இலகுவாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளையும் தீர்வின்றித் தொடரச் செய்கின்றன. இதுவே புத்தளத்திலும் நடக்கிறது. அங்கு கோலோச்சும் உள்ளூர் முஸ்லிம் அரசியல் தரப்புகள் ஒன்றுபடாதவரை இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.