மாசற்ற புத்தளம்: தொடரும் மக்கள் போராட்டம்

0 590

பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம். அனஸ்

மனித வாழ்வின் ஆதாரம் இயற்­கைதான். நாம் தாயின் வயிற்றில் இருக்­கும்­போதே இயற்­கையின் தேவை ஆரம்­ப­மாகி விடு­கின்­றது. சுத்­த­மான காற்று, சுத்­த­மான நீர், சுத்­த­மான சுற்­றாடல். நிலமும் நீரும் வனமும் வன ஜீவ­ரா­சி­களும் காற்றும் சுத்­த­மான வளி­மண்­ட­லமும் இன்றி மனித வாழ்வு சாத்­தி­ய­மில்லை.

எறும்­புகள், தேனீக்கள், மீன்கள், ஆடு மாடுகள், காட்டு விலங்­குகள் நிலத்தின் பசுமை, பூச்­சிகள், புழுக்கள், குளங்கள், நீர்­நி­லைகள் இவற்­றிற்கு மத்­தி­யில்தான் சாத­க­மான உயிர்­வாழ்வை இயற்கை வடி­வ­மைத்­துள்­ளது. கொழும்பு, சென்னை போன்ற நக­ரங்­களின் கதை­களில் சில மாற்­றங்கள் இருக்­கலாம். ஆனால் புத்­தளம், புத்­தளம் மாவட்டம் போன்ற இயற்கைச் சூழல் என்ற இயல்­பான சுற்­றாடல் வரம்­பு­க­ளுக்குள் நிறு­வப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களின் உயிர்­நாடி இச்­சுற்­றாடல் ஒழுங்­கு­கள்தான். அவற்றைச் சீர­ழிப்­பது அங்கு வாழும் உயி­ரி­னங்­க­ளுக்கும் மனி­தர்­க­ளுக்கும் இழைக்­கப்­படும் அநீ­தி­யாகும்.

இலங்­கையின் ஒரு மாவட்­டத்தின் இயற்கை வளம் அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் பயன் தரு­வ­தாகும். முழு­நாட்­டிற்­கு­மான இயற்­கையின் கொடை அது. சிங்­க­ரா­ஜ­வனம் அந்­தப்­ப­குதிக்கு மட்டும் சொந்­த­மா­ன­தல்ல முழு உல­குக்­கு­மான இயற்­கையின் கொடை. புத்­த­ளத்­துக்கும் ஒரு சிங்­க­ரா­ஜ­வனம் இருக்­கி­றது.

வண்­ணாத்­தி­வில்­லு­வையும், கரைத்­தீ­வையும், சேராக்­கு­ழி­யையும் கடந்து சற்றுத் தூரம் சென்றால் புத்­தளம் மாவட்­டத்தின் சிங்­க­ரா­ஜ­வ­னத்தை அடைந்து விடலாம். ஈழப்­போ­ரின்­போது வெளி­யேற்­றப்­பட்ட  வட­புல மக்கள் 30 வரு­டங்­களின் பின்னர் ஊர் திரும்­பி­ய­போது  அவர்­களின் மீள்­கு­டி­யேற்றம் தடுக்­கப்­பட்­டது. காட­ழிப்பு ஒரு கார­ண­மாகக் காட்­டப்­பட்­டது. நீங்கள் எங்­கா­வது குடி­யே­றுங்கள். உங்கள் ஊர் என்­பது பழை­ய­கதை. இது இப்­போது காடு. காடு இயற்­கையின் அருஞ்­செல்வம். அதில் கைவைக்­கக்­கூ­டா­தென  அர­சாங்­கத்தின் சில தரப்­பி­னரும் கறுப்பு ஊட­­கத்­தி­னரும் கூச்­ச­லிட்­டனர். காட்டின் காத­லர்­க­ளாக (போலிக்) கண்ணீர் வடித்­தனர். இன்று சுமார் 300 ஏக்கர் காடு முற்­றாக அழிக்­கப்­பட்­டுள்­ளது. பாரிய குழிகள் தோண்­டப்­பட்­டுள்­ளன. பேசு­வ­தற்கு யாரு­மில்லை. கறுப்பு ஊட­கங்கள் செய­லி­ழந்­துள்­ளன. உள்ளூர் அர­சியல் தூங்­கி­வ­ழி­கி­றது. வெற்றுப் பேச்­சுக்கள் வானைப் பிளக்­கின்­றன.

“மாசற்ற புத்­தளம்” (Clean Puttalam) என்ற பதா­கையின் கீழ் மக்கள் அணி­தி­ரண்­டுள்­ளனர். பசு­மை­யான, புத்­தளம்  எமக்கும் எமது அடுத்த சந்­த­தி­க­ளுக்கும் அது வேண்டும். அதை விட்­டுத்­தர மாட்டோம். என்­ப­துதான் அவர்­களின் அடி­நாதக் கருத்து. பொது நல நோக்­குள்ள நல்ல இளை­ஞர்கள் வனி­தை­யர்கள் ஒன்று கூடிச் செய­லாற்றும் சமூ­க­நல மக்கள் இயக்கம் அது. அர­சி­யல்­வா­திகள் தூங்­கும்­போது மக்கள் விழித்­துக்­கொள்­கின்­றார்கள்.

குடி­மைச்­ச­மூக எதிர்ப்பு (Civil Resistance) என்­பதை நோக்கி மக்கள் நகர்ந்­துள்­ளனர். தான்­தோன்­றித்­த­ன­மான அநீ­தி­யான அரசின் செயல்­களை தட்­டிக்­கேட்க ஒரு சாதா­ரண குடி­ம­க­னுக்கு உள்ள உரி­மையைத் தமது இலட்­சி­ய­மாகக் கொண்டு அவர்கள் இயங்­கு­கி­றார்கள். அவ்­வி­ளை­ஞர்­களின் மனதில் பதிந்­துள்ள இலட்­சிய வாசகம் “மாசற்ற புத்­தளம்”. முழு மாவட்­டத்­திற்­கு­மான பொறுப்பில் இருந்து எல்லா மக்­க­ளையும் இணைத்து அவர்கள் செயற்­ப­டு­கி­றார்கள். இது ஒற்­று­மையின் தருணம்.

கல்­பிட்டி, கரைத்­தீவு, நாவல்­காடு வண்­ணாத்­தி­வில்லு, ஆணை­மடு,  தல­வில, கட்­டைக்­காடு, மது­ரங்­குளி, கடை­யா­மோட்டை, மாம்­புரி, பள்­ளி­வாசல் துறை போன்ற எல்லா ஊர் மக்­க­ளி­னதும் பௌத்த, கிறிஸ்­தவ, இந்து, இஸ்லாம் என்ற எல்லா இன மக்­க­ளையும் மொழி­களில் கூட பேத­மின்றி அனைத்துத் தரப்­பி­ன­ரையும் எல்லா அர­சியல் வாதி­க­ளையும் ஒன்­றி­ணைத்துச் செயற்­பட வேண்­டிய நேரம் இது.

“மாசற்ற புத்­தளம்” என்­பது புத்­தளம் மாவட்­டத்தை அரக்­கர்­களின் பிடி­யி­லி­ருந்து பாது­காத்து மக்­களை நோயின்றி வாழ­வைக்கும் புனி­தப்­ப­ணி­யாக மாறி­யுள்­ளது. அர­சியல் இதற்குத் தேவை. ஆனால் அது அர­சியல் காய்­ந­கர்த்தும் அரங்கம் அல்ல. அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களின் இறு­திக்­கட்ட ஆட்­டத்­தின்­போ­துதான் நுரைச்­சோலை அனல்மின் திட்டம் வெற்­றி­வாகை சூடி­யது.

ஆனால், அர­சியல் சாணக்­கி­ய­கா­ரர்­களின் அர­சியல் துருப்­பு­களால் புத்­தளம் மீட்­சி­பெறும் என்ற கடைசி ஆசை புத்­தளம் மக்­களின் உள்­ளங்­களில் ஊச­லாடிக் கொண்­டி­ருப்­பதை நாம­றிவோம்.

இயற்கை வளத்தை அநி­யா­ய­மாக அழித்து சுற்­றா­டலைச் சீர்­கு­லைப்­ப­தற்கு யார் முயன்­றாலும் அவர் மனுக்­கு­லத்தின் எதி­ரியே. முன்னர், வில்­பத்து காட்­டுக்­காக  அவலக் குரல் எழுப்­பிய நாட்­டுத்­த­லை­வர்கள் புத்­த­ளத்தின் சிங்­க­ரா­ஜ­வனம் சின்­னா­பின்னம் செய்­யப்­பட்டு வரும் அநீ­தியை அங்­கீ­க­ரிப்­பது தேசத்தின் தலை­வி­தி­யாகும்.

அர­சியல் தலை­வர்கள் அற்ற புத்­த­ளத்தின் வெறுமை நிலையை மக்கள் இன்று தற்­காத்து வரு­கி­றார்கள். இளை­ஞர்­களின் தியாக உணர்­வு­க­ளுக்கு மக்கள் மதிப்­ப­ளிக்­கி­றார்கள். ஒரு எறும்­புக்­குக்­கூட அநி­யாயம் இழைக்­காது, ஜன­நா­யகப் பெறு­மா­னங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து நடத்தும் இவ்­வி­ளை­ஞர்­களின் போராட்டம் வெற்­றி­பெ­ற­வேண்டும்.

சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லுக்கு அடி­ப­ணி­யாத, உள்­நோக்­கங்­க­ளுடன் செயற்­ப­டாத ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்­களை உலகம் ஆர்­வத்­துடன் வர­வேற்­கி­றது. குடி மக்­களின் இயல்­பான துயர் வெளி­யீ­டு­க­ளுக்கும் அநீ­திக்கு எதி­ரான போராட்டங் களுக்கும் ஜெனிவா வரை ஒரு செல்­வாக்கு இருக்­கி­றது.

குடி­மக்­களின் முறை­யீ­டு­களைச் சொந்த நாடே நிரா­க­ரிக்­கும்­போது எழும் சோத­னையும் விரக்­தியும் ஆபத்­தா­ன­தாகும். சாத்­வீ­கத்­திலும் ஜன­நா­ய­கத்­திலும் நம்­பிக்கை கொண்ட மக்­களின் நியா­ய­மான எளி­மை­யான கோரிக்­கை­களை அலட்­சி­யப்­ப­டுத்­து­வது ஜன­நா­யகவாதி­களின் பண்­பாக இருக்­க­மு­டி­யாது.

நல்­லாட்சி என்­பது மக்­க­ளாட்­சியின் உயர்ந்த பரி­மாணம். அந்த உயர்ந்த இலட்­சியத்திற்கு எதி­ரா­கத்தான் அர­சாங்க உயர்­மட்டத் தலை­வர்கள் தான்­தோன்­றித்­த­ன­மாகக் கருத்­து­களை அள்ளி வீசு­கின்­றனர். மன்­னர்­களைப் போல் அதி­காரத் தொனியில் சத்­த­மி­டு­கின்­றனர்.

இங்கு நடப்­பது சுற்­றா­டலைப் பாது­காக்கும் முயற்சி மட்­டு­மல்ல, அர­சாங்­கத்­திட மிருந்து எந்த உத­வி­களும் சலு­கை­களும் இன்றி உடல் உழைப்­பிலும் மீன்­பி­டி­யிலும் விவ­சா­யத்­திலும் வர்த்­த­கத்­திலும் ஈடு­பட்­டி­ருக்கும் சுமார் 15,000 குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ரத்தைப் பாது­காக்கும் பாரிய போராட்­ட­மா­கவும் இது அமைந்­துள்­ளது.  துர­திஷ்­ட­வ­ச­மாக புத்­தளம் குறி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

புத்­த­ளத்தின் சுற்­றாடல் துய­ரத்தின் வயது அரை நூற்­றாண்டைக் கடந்­து­விட்­டது. அந்த அழுத்­தத்தின் வெளிப்­பா­டுதான் இன்­றைய போராட்ட அலை­யாகும். 1970 களின்  ‘தம்­மன்னா’ (தற்­போது ஹொல்சிம்) சீமெந்து தொழிற்­சா­லை­யுடன் இந்த வியாதி ஆரம்­ப­மா­கி­றது. படித்த செல்­வாக்­கு­மிக்க அர­சியல் தலை­வர்கள் புத்­த­ளத்­திற்குத் தலைமை தாங்­கிய காலத்தில் அது நடந்­தது.

எதிர்ப்­புக்கள் இருந்­ததா என்று எம்மால் அறிய முடி­ய­வில்லை. சுற்­றா­டலை நாசம் செய்து புத்­தளம் பிர­தே­சத்தைத் தூசிப்­ப­ட­லத்தால் மூழ்­க­டிக்கும் இராட்­சத தொழிற்­சா­லைக்­குதான் நாம் அனு­மதி தரு­கிறோம் என்­பதை மெத்­தப்­ப­டித்த முன்­னைய அர­சி­யல்­வா­திகள் அறி­யாமல் இருந்­தார்­களா? சீமெந்­துக்­கான கற்கள் தோண்­டப்­படும் பாரிய குழி­களால் அடுத்த அரை நூற்­றாண்­டுக்குள் புத்­தளம் மாவட்டம் பெரும் சுற்­றாடல் சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுக்கும் என்­ப­தனை இவர்கள் அறி­ய­வில்­லையா?

அப்­போது நாங்கள் பள்­ளிக்­கூடம் செல்லும் மாண­வர்கள். புத்­த­ளத்­திற்கு சீமெந்துத் தொழிற்­சாலை வரு­வ­தா­கவும் புத்­தளம் வாழ் மக்­க­ளுக்கு 85%  தொழில் வாய்ப்பு வழங்­கப்­பட இருப்­ப­தா­கவும் அங்கும் இங்­கு­மாக செய்­திகள் பர­வின. அர­சாங்கம் தொழில் வாய்ப்பைக் காட்டி புத்­தளம் அர­சி­யல்­வா­தி­களை வீழ்த்தி இருக்­க­வேண்டும்.

புத்­தளம், குறிப்­பாக புத்­தளம் நகரம் இன்று ஆஸ்­துமா, நுரை­யீரல் சார்ந்த  நோய்கள் முதல் புற்­று­நோய்­வரை முகங்­கொ­டுத்து வரு­கி­றது. புத்­தளம் கடல் ஏரியால் புத்­தளம் பெற்­றி­ருந்த நோய்த்­த­டுப்பு சுகா­தாரப் பாது­காப்பு வலயம் இன்று சின்னா பின்­ன­மா­கி­யுள்­ளது. புத்­தளம் சுற்றுச் சூழ­லையும் கடல் ஏரி­யையும் சீமெந்து ஆலை வெளி­யிடும் புகையும் தூசு மண்­ட­லமும் ஆக்­கி­ர­மித்­துள்­ளன. நுரைச்­சோலை அனல் மின் நிலையம் முழு பிராந்­தி­யத்­தை­யுமே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

சுண்­ணாம்­புக்கல் மற்றும் பல்­வேறு கனிம பொருட்­க­ளுடன் மிகப்­பெ­ரிய வனாந்­த­ரத்­தையும் ஆயிரம் ஏக்­க­ருக்கும் அதி­க­மான நெற்­செய்­கைக்­கான நிலப் பரப்­பையும் கொண்ட அறு­வாக்­காடும் ஐலி­ம­லையும் சீமெந்துத் தொழிற்­சாலை, உத்­தி­யோக வாய்ப்­புக்கள் என்ற பெயரில் பன்­னாட்டுக் கொம்­ப­னி­க­ளுக்குத் தாரை வார்க்­கப்­பட்­டது. முதல் பிழை இங்கு தான் ஆரம்­ப­மா­கி­றது. 40, 50  வரு­டங்­க­ளாக குழிகள் தோண்­டப்­பட்டு அறு­வாக்­காடும் ஐலி நிலப்­ப­கு­தியும் நாசம் செய்­யப்­பட்­டன.

‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’­என்ற பழ­மொழி புத்­த­ளத்­திற்குச் சரி­யாகப் பொருந்­து­கி­றது. எல்லா மாவட்­டங்­க­ளி­னாலும் நிரா­க­ரிக்­கப்­பட்ட, துரத்தி அடிக்­கப்­பட்ட நிலக்­கரி அனல்மின் நிலை­யத்­திட்­டத்தை இரு­கரம் நீட்டி ஏற்றுக் கொண்ட கொடு­மையும் புத்­த­ளத்­தில்தான் நடந்­தது. உலகம் முழுக்க நிரா­க­ரிக்­கப்­பட்டு உயிர்­வாழ்­வுக்கு ஆபத்­தா­னது என்று நிரூ­பிக்­கப்­பட்ட காலா­வ­தி­யா­கிப்­போன நிலக்­கரி மின் திட்டம் நுரைச்­சோ­லைக்கு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டது.

சீமெந்துத் தொழிற்­சாலை புத்­த­ளத்­திற்கு பரி­ச­ளிக்­கப்­பட்­ட­போது சுற்­றாடல் பற்­றிய அறிவு வளர்ந்­தி­ருக்­க­வில்லை என்­பது உண்­மைதான். நுரைச்­சோலை அனல்மின் நிலைய பரி­ச­ளிப்பு நம் கண்­முன்னால் நேற்று நடந்த துர்­சம்­பவம். அது சீமெந்துத் தொழிற்­சா­லை­யையே தூக்கிச் சாப்­பிடக் கூடிய, சுகா­தா­ரத்தை  சீர்­கு­லைத்து சுற்­றா­டலை பெரும் அனர்த்­தத்­திற்­குள்­ளாக்கக் கூடிய பெரிய நாச­காரத் திட்டம். அதற்கு மலர்­மாலை அணி­வித்து வர­வேற்­ப­ளித்­த­வர்கள் அல்­லது இக்­கொ­டு­மையை புத்­த­ளத்தின் மீது திணித்த அந்த கன­வான்கள் யார்?

நுரைச்­சோ­லையும், மாம்­பு­ரியும், நாவக்­காடும் சுற்­றி­யுள்ள அநேக கிரா­மங்­களும் அர­சாங்­கத்தின் அந்த அரிய வெகு­ம­தி­யினால் சுருண்டு சுண்­ணாம்­பாகிக் கிடக்­கின்­றன. அந்த மக்­களின் அடிப்­படை வாழ்­வா­தா­ர­மான மீன்­பி­டியும், விவ­சா­யமும் பெரும் ஆபத்தில் சிக்­கி­யுள்­ளன. நிலக்­கரித் தூசும், சாம்பல் போன்ற பல்­வேறு இர­சா­ய­னத்­து­கள்­களும் சுற்­றா­டலை சர்­வ­நாசம் செய்து வரு­கின்­றன.

கட­லுக்கு அனுப்­பத்­த­கு­தி­யற்ற கழிவும் அதிக வெப்­பமும் கொண்ட உலை­களில் வெப்­ப­மூட்­டப்­பட்ட நீர் கட­லுக்­குள்தான் பாய்ச்­சப்­ப­டு­கின்­றன. சீமெந்துத் தொழிற்­சாலை நிறுவி சுமார் 30 வரு­டங்­களில் நுரைச்­சோ­லைக்கு அனல் மின்­சாரம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. பல எதிர்ப்­புகள், ஆர்ப்­பாட்­டங்­களும் நடந்­தன. சர்வ மதத்­த­லை­வர்­களின் ஒத்­து­ழைப்பும் இடது சாரி சிங்­க­ளக்­கட்­சி­களின் ஆத­ரவும் கிடைத்­தன. ஆனால் நடந்­தது என்ன? சுற்றிவரக் கிராமங்கள், உயிரோட்ட மிக்க மக்களின் செயற்பாடுகள் வாழ்வாதாரத்தை வழங்கும் கவர்ச்சியான தொழிற்துறைகள் உள்ள அந்தப் பிரதேசம் எப்படி அனல் மின்சாரத்திற்குத் தாரைவார்க்கப்பட்டது?

சுற்றாடல் பற்றிய மக்களின் அறியாமை ஒருபுறம், எவ்விதத் தீங்குகளுமின்றி, நவீன பாதுகாப்பு முறைகளுடன் பெரிய அதிசயத்தை உங்கள் ஊருக்குத் தருவோம் என்ற அரசியல்வாதிகளின் ஏமாற்று மறுபுறம். பல்லின, பல மத மக்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு இல்லாமை போன்ற பலவீனங்களும்  இருந்தது உண்மைதான். ஆனால் இத்தனைக்கு மத்தியிலும் திருப்பி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்த நுரைச்சோலை அனல் மின்சாரத் திட்டம் மீண்டும் புத்தளத்தில்  நிலைகொண்டது எப்படி?. அரசியல் அனாதையாகியுள்ள புத்தளம் அதன் அரசியல் உணர்வுகளை இழந்து விடவில்லை. இந்தப் பிரச்சினையில் வெற்றியை நிலைநாட்ட அரசியல் ஒரு வழிமுறைதான். மக்கள் அதற்காக காத்திருப்பதும் உண்மைதான். ஆனால் இது மக்கள் போராட்டம். தியாகமும் பக்கச்சார்பற்ற போக்கும்தான் இதன் அச்சாணி. புத்தளம் மக்கள் அதில் வெற்றி கண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ மக்களும், தமிழ் மக்களும், பௌத்த மத தலைவர்களும் ஓர் அணியில் இணைந்த காட்சி வெற்றியின் அடையாளமாக கருத வேண்டும்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.