பாராளுமன்ற உறுப்பினர்களில் கொக்கைன் பாவிப்பது யார்?

மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி கண்டறியுமாறு எதிரணி கோரிக்கை

0 592

கொக்கைன் பாவிக்கும் 24 பாராளுமன்ற உறுப்பினர்களும் யார்? அவர்களின் பெயர்ப் பட்டியலை உடனடியாக சபையில் முன்வைத்து மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி சபையில் கேள்வி எழுப்பியது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சனிடம் இருந்தே விசாரணையை ஆரம்பித்து உண்மைகளை கண்டறிய வேண்டும் அலல்து பாராளுமன்றத்தின் சகல உறுப்பினர்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 உறுப்பினர்கள்  கொக்கைன் போதைப்பொருள் பாவிப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பாரதூரமான குற்றச்சாட்டை ஒன்றினை சபையில் முன்வைத்துள்ளார். இவர்களின் பெயர்களை சபாநாயருக்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உறுப்பினர்கள் யார்? இவர்களின் பெயரை உடனடியாக சபையில் முன்வைக்க வேண்டும். இந்த விடயத்தில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் ஆகிய மூவரும் உடனடியாக உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு வரும் நபர்கள் அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் இவாறு  போதைக்கு அடிமையாவது நாட்டினையும் மக்களையும் பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாக்கும். ஆகவே பாராளுமன்ற புனித தன்மையையம் ஒழுக்கத்தையும் நிரூபிக்க உடனடியாக இந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். 24 பேர் செய்த இவ்வாறான செயற்பாடு காரணமாக பாராளுமன்றத்தில் அதுவும் கொக்கைன் என்றால் என்ன என்றே தெரியாத பலர் மீதும் குற்றம் சுமத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆகவே சபாநாயகர் தலையிட்டு உடனடியாக உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

இதன்போது  ஒழுங்குப பிரச்சினை எழுப்பிய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சகல உறுப்பினர்களையும் மரபணு பரிசோதனைக்கு  உட்படுத்த வேண்டாம், உரிய 24 பேரை மட்டுமே பரிசோதனைக்கு  உட்படுத்துங்கள் என்றார்.

இதன்போது  ஒழுங்குப பிரச்சினை எழுப்பிய மஹிந்தானந்த அழுத்கமகே, இந்த குற்றச்சாட்டுக்கு குறித்து சபாநாயகர் ஏன் வாய் திறக்கவில்லை. சபையில் ஏற்பட்ட சண்டை மற்றும் குழப்பங்களை விசாரிக்க அவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்ப சபாநாயகர் எடுக்கும் அக்கறை இந்த விடயத்தில் ஏன் இல்லாமல் போய்விட்டது. சபாநாயகர் பொறுப்புள்ள ஒருவராக இந்த விடயத்தை கையாள வேண்டும். கொக்கைன் பாவனையாளர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர் என்பது சாதாரண விடயம் அல்ல என குறிப்பிட்டார். இதனை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்க பிரதி சபாநாயகர் அனுமதி வழங்காததை அடுத்து சபையில் எதிரிக்கட்சி உறுப்பினர்கள் பெரும் கூச்சலிட்டனர்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.