தேசிய அரசாங்கம் அமைக்க மு.கா. துணை போக கூடாது

0 656

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான முயற்­சி­களை ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில், இது தொடர்­பான யோசனை இன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த தேசிய அர­சாங்கம் அமைக்கும் யோச­னையில் பிர­தான பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருப்­பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸாகும். முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யிட்டுப் பெற்றுக் கொண்ட ஓர் ஆச­னத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே தற்­போ­தைய தேசிய அர­சாங்க யோசனை முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பில் இதற்கு அனு­ம­தி­யுள்­ளது. அதா­வது ஒன்று அல்­லது ஒன்­றுக்கு மேற்­பட்ட ஆச­னங்­களைக் கொண்ட கட்­சி­யு­டனோ அல்­லது சுயேட்­சைக்­கு­ழு­வு­டனோ இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைக்க முடியும் என அர­சி­ய­ல­மைப்பு கூறு­கி­றது. அந்­த­வ­கையில் சட்ட ரீதி­யாகக் கூட இதனைச் சரி என வாதி­டலாம்.

எனினும் நாட்டின் சம­கால சூழ்­நி­லை­யிலும் அர­சாங்­கத்தின் போக்கின் அடிப்­ப­டை­யிலும் இந்த தேசிய அர­சாங்க முயற்­சிக்கு முஸ்லிம் காங்­கிரஸ் துணை போவது எந்­த­வ­கையில் நியா­ய­மா­னது என்­பதை அக் கட்சி சற்று மீள்­ப­ரி­சீ­லனை செய்­வது சிறந்­த­தாகும்.

நாட்டின் ஸ்திரத்­தன்­மைக்கும் உறு­தி­யான ஆட்­சிக்கும் தேசிய அர­சாங்கம் அவ­சியம் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் கூறி­னாலும் கூட, அக் கட்­சியில் மீத­முள்ள பல­ருக்கு அமைச்சுப் பத­வி­களை வழங்கி அழகு பார்க்­கவும் தமது கட்­சியின் உறுப்­பி­னர்கள் மற்றும் சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­தோரின் அமைச்சுப் பத­விக்­கான கோரிக்­கை­களை நிறை­வேற்­ற­வுமே இந்த தேசிய அர­சாங்கம் எனும் நாடகம் அரங்­கேற்­றப்­ப­டு­கி­றது என்­பதே யதார்த்­த­மாகும்.

ஆக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேவைக்­காக முஸ்லிம் காங்­கிரஸ் பலிக்­க­டா­வாக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு மு.கா.வும் தெரிந்து கொண்டே துணை போகி­றது. தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­காக முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏதேனும் நலன்­கி­டைக்கும் என்றால் அல்­லது முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் நீண்ட காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதில் ஒரு நியா­யத்தைக் காணலாம். அவ்­வா­றன்றி ஒரு கட்­சிக்குத் தேவை­யான அமைச்சுப் பத­வி­களை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­காக இந்த யோச­னைக்கு துணை போவது எந்­த­வ­கையில் நியா­ய­மா­னது எனத் தெரி­ய­வில்லை.

கடந்த 52 நாட்கள் அர­சியல் நெருக்­க­டி­யின்­போது ஜன­நா­ய­கத்தைப் பாது­காக்க முன்­னின்­ற­தாக கூறும் முஸ்லிம் காங்­கிரஸ், இந்த தேசிய அர­சாங்க யோச­னைக்கு துணை­போ­வது அதற்கு முர­ணா­னது என்­ப­தையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்க யோசனை ஏலவே கடும் எதிர்ப்­பு­களைச் சம்­பா­தித்­துள்­ளது. சுதந்­திர தின உரையில் ஜனா­தி­பதி இதனை அனு­ம­திக்க முடி­யாது என்று விமர்­சித்­தி­ருந்தார். எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவும் இதற்கு எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ளார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் இந்த தேசிய அர­சாங்க நகர்வை கடு­மை­யாக கண்­டித்­துள்­ளது. இது ஒரு வெட்கக் கேடான செயல் என அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் சாடி­யுள்ளார். நேற்று நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­திலும் பெரும்­பா­லான கட்­சிகள் இதனை எதிர்த்­துள்­ளன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இந்த நகர்வை ஆத­ரிக்க முடி­யாது எனக் கூறி­யுள்­ளது.

ஆக, அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதால் நாட்­டுக்கு எந்­த­வித நலனும் கிடைத்­து­விடப் போவ­தில்லை. மாறாக மக்­களின் வரிப் பணமே வீணடிக்கப்படும். அந்த வகையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க துணை நின்ற முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்காக தேசிய அராசங்கம் அமைக்கும் யோசனைக்கு துணை போவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் சிந்தித்து செயற்படும் என்றும் தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் என்றும் நம்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.