ஞானசார தேரர்: பொது மன்னிப்பின் அரசியல்

0 791
  • எஸ்.றிபான்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தினை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில் குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம், 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையில் கடூழிய சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு 2018 ஆகஸ்ட் 08ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேவேளை, அதற்கு எதிரான கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன. இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஞானசார தேரரை விடுவிக்க வேண்டுமென்று முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் ஞானசார தேரரின் விடுதலையை உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதேவேளை, ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பொதுபலசேனா அமைப்பினர் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைகள்

நீதிமன்றத்தை அவமதித்தன் பேரில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதியும் பொது மன்னிப்பு வழங்கக் கூடியதொரு மன நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா கடிதம் மூலம் கேட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஞானசார தேரரை சிறையிலடைத்தபோது அவர் அச்சமயத்தில் ஏற்பட்ட ஆவேசமான மனநிலையின் வெளிப்பாடாகவே அவருடைய செயற்பாடு அமைந்திருந்தது என்பதைக் கருத்திற்கொண்டு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அஸ்கிரிய – மல்வத்து பீடங்கள் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிங்கள ராவய, ராவணா பலய, சிங்களே ஆகிய பௌத்த கடும் போக்குவாத அமைப்புக்கள் ஞானசார தேரரை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. அக்கோரிக்கையில் நாட்டில் காணப்படும் முஸ்லிம் அடிப்படைவாதம், விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள், கிறிஸ்தவ மதத்திற்கு ஏனைய மதத்தவர்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கை போன்றவற்றிக்கு எதிராகவே ஞானசார தேரர் குரல் கொடுத்து வந்துள்ளார். ஆதலால், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளன.

ஞானசார தேரரை சிறையில் அடைத்தபோது கொழும்பில் பொதுபல சேனா அமைப்பினர் ஓர் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினார்கள். இதன்போது அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் கோரிக்கைகளை முன்வைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. பொதுபல சேனாவின் பார்வையில் ஞானசார தேரர் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர் ஒரு நாட்டுப் பற்றாளர் என்பதாகவே இருக்கின்றது.

இதேவேளை, சிங்களே அமைப்பின் செயலாளர் மடில்ல பஞ்ஞாலோக்க தேரர் ஞானசார தேரரை எதிர்த்த அசாத்சாலி தற்போது அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுள்ளார். ஞானசார தேரரை விடுதலை செய்தால் முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாமல் போகுமென்று அஞ்ச வேண்டியதில்லை. அவரை விடுதலை செய்வதன் மூலமாக எந்த சிக்கல்களும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமாதானப் பேரவையின் முன்னாள் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனியும் ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டுமென்று ஜனாதிபதியை கடிதம் மூலமாகக் கேட்டுள்ளார். ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு முஸ்லிம்கள் கோரிக்கைகள் முன்வைக்கும் பட்சத்தில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நல்ல உறவு நிலை தோன்றும் என்ற நோக்கத்திலேயே அவர் கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதே வேளை, இவரது கோரிக்கைகள் தொடர்பில் பலத்த விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. ஹனீபா மதனி தமது கோரிக்கையை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன்வைத்தாலும், அதனை அவரின் தனிப்பட்ட கோரிக்கையாகவே பார்க்க வேண்டும். அவ்வாறு கோரிக்கையை முன்வைப்பதில் அவருக்கு உரிமையுண்டு. ஆனால், அவரின் கோரிக்கையை முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையாகக் கருதமுடியாது.

ஞானசாரரை விடுதலை செய்யுமாறு இலங்கை இந்து சம்மேளனமும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதனை டெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு இலங்கை இந்து சம்மேளனம் கேட்டுள்ளமை முழு சிறுபான்மையினரையும் கொச்சைப்படுத்தும்  செயலாகும். அரசியல் கைதிகள், காணாமல் போனவர்கள் பற்றி சிந்திக்காத இந்த அமைப்பு,  வெடுக்குநாரி சிவன் கோயிலுக்கு மக்கள் சென்று வழிபடுவதை தடுத்து நிறுத்திய போதும், முல்லை செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் அத்துமீறி புத்தர் சிலை வைத்ததற்கும் இந்து சம்மேளனம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டுள்ளார்.

இவ்வாறு பல அமைப்புக்களும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்த போதிலும் அவரை விடுவிக்கக் கூடாதென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக எக்னெலிகொடவின் மனைவி சந்யா,  பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கூடாதென்று நீதியமைச்சுக்கும் மற்றும் சட்டமா அதிபருக்கும் கடிதம் மூலம் கேட்டுள்ளார். அவரின் விடுதலை தனக்கும், நீதிவானுக்கும், சட்டத்தரணிகளுக்கும் அநீதி இழைப்பதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பு

ஞானசார தேரர் பௌத்த கடும் போக்குவாதியாவார். இவர் நாட்டில் பௌத்த மதம்தான் எல்லாமாக இருக்க வேண்டுமென்றும், நாட்டிலுள்ள சிறுபான்மையினர் பௌத்தர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும் கொள்கைப் பிரகடனம் செய்தவர். சிறுபான்மையினருக்கு எதிரானவர். குறிப்பாக முஸ்லிம்களின் மதவிழுமியங்களான ஹலால் உணவு, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா எனும் ஆடை ஆகியவை குறித்து பலத்த விமர்சனத்தை முன்வைத்தார். மேலும், முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீதான தாக்குல்கள், அளுத்கம, பேருவளை, தர்காநகர் உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களின் மீது பௌத்த இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு இவரது கருத்துக்கள் முக்கிய காரணமென்றும் தெரிவிக்கப்படுகின்றன.

இத்தகையதொருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேன பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வதென்பது சிறுபான்மையினரைப் பொறுத்தவரை கசப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ளார் என்பதற்காக அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் மன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கூடாதென்று சொல்ல முடியாது. ஆனால், அவருக்கு வழங்கப்படும் மன்னிப்பும், விடுதலையும் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை நாட்டின் நலன்கருதி கருத்திற்கொள்ள வேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பாகும். இலங்கையின் பிரஜைகள் யாராக இருந்தாலும், அவர் எந்த அந்தஸ்த்தில் இருந்தாலும் நாட்டின் நலன்தான் முக்கியமாகும். அத்தோடு மன்னிப்பு என்பதுகூட பாரபட்சமாக இருக்கக் கூடாது.

நாட்டில் 30 வருடங்கள் நீடித்த யுத்தத்தினால் பொருளாதாரம், நாட்டின் மீதான சர்தேசத்தின் பார்வை, அரசியல் உறுதிப்பாடு என்பன நாட்டிற்கு எதிராகவே இருக்கின்றன. இவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இலங்கையின் நீதித்துறை குறித்தும் சர்வதேசத்தின் பார்வை சரியாக இருக்கவில்லை. ஆயினும், நல்லாட்சி அரசாங்கக் காலத்தின் பின்னர் நீதித்துறையின் சுதந்திரம் பேணப்படுவதாகவே இருக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை, மஹிந்தராஜபக் ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை ஆகியவை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் தீர்ப்புக்கள் இலங்கை நீதித்துறையின் நன்மதிப்பை உச்ச நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இலங்கையில் நீதி சாகவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தில் இன்னும் வழக்குகள் உள்ளன. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்ற மனக்குறை முஸ்லிம்களிடையே இருக்கின்ற நிலையில்தான் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆதலால், ஞானசார தேரர் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் தண்டனை நீதித்துறையுடன் நேரடியாக தொடர்புடையது. நீதித்துறையின் சுயாதிபத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு வழங்கிய தண்டனையாகும். இதன் மூலமாக நீதித்துறையை யாரும் அச்சுறுத்த முடியாதென்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அரசியல் தலையீடுகள், அரசியல் இலாபம், பௌத்த அமைப்புக்களின் கோரிக்கைகள், தனி; நபர்களின் கோரிக்கைகள் என்பவற்றிக்கு தலைசாய்த்து நீதித்துறையின் தீர்ப்பை மறுதலிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்குவராயின் நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசியல் ரீதியான நிறைவேற்று அதிகாரம் தலையீடு செய்வதாகவே இருக்கும். இதனால், இலங்கையின் நீதித்துறை அரசியல் அழுத்தங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்ற பார்வையை சர்வதேசத்திற்கு கொடுத்துவிடும், அந்தப் பார்வை இலங்கையின் மீது பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை கருத்திற் கொள்ளாது முடிவுகளை எடுக்க முடியாது.

இதேவேளை, குற்றவாளிகளை மன்னித்து விடுதலை வழங்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி என்ற பதவிக்கு இருக்கின்றது. இப்பதவியில் இதுவரைக்கும் இருந்தவர்கள் பல குற்றவாளிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளார்கள். அவ்வாறு விடுவிக்கப்பட்ட எவரும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு சவாலிட்டுத் தண்டனை அனுபவித்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வேறு குற்றங்களுக்காகவே தண்டனை பெற்றவர்கள். அவர்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்வதென்பது நீதித்துறையின் சுதந்திரத்தை தடை செய்யும் ஒன்றாக இருக்கவில்லை.

மேலும், ஞானசாரத் தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமாயின் நாட்டில் புதியதொரு கலாசாரத்தை அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்ததாகவே அமையும். அதாவது, வேறு நபர்களும் நீதிமன்றத்தை அவமதித்து விட்டு ஜனாதிபதி மூலமாக பொது மன்னிப்பு பெற்று விடுதலை பெற்றுக் கொள்ளலாமென்று கருதி செயற்படும் நிலையை ஏற்படுத்தும். நாட்டின் நீதித்துறையை அவமதித்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாதென்றும், ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு வழங்கமாட்டார் என்றும் அறியும்போது நீதித்துறை இன்னும் உறுதியாக செயற்படும்.

மேலும், மனித உரிமைகள் நடவடிக்கையாளர் சாரம வெத்திமுனி, “இந்த நடவடிக்கையை ஏனைய மதத்தினரும் எதிர் பார்க்கலாமா?” ஏன கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச நெருக்கடிக்கான குழுவின் பணிப்பாளர் அலன் கீனான், “நல்லிணக்க அரசாங்கத்தின் அங்கத்தினராக தம்மை கூறிக் கொள்ளும் மங்கள சமவீர, மனோ கணேசன், ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இருக்கும்போது ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமானால் நாட்டில்  வன்முறை, பதற்றம், நிலையின்மை என்பன தொடரவே செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

இவர்களின் இந்தக் கேள்விகளில் உள்ள நியாயத்தையும், அறத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். பொது மன்னிப்பு என்பது கூட பாரபட்சமாக இருக்கக் கூடாது. அரசியல் கைதிகள் என்ற பேரில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பல தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு பல வருடங்களாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் பல வருடங்களாக குற்றவாளிகள் போன்று தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை விடுதலை செய்யாது, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை மாத்திரம் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் அறத்தை அடையாளங் காண முடியவில்லை. அறம் வாழ வேண்டும். அறம் வாழும் போதுதான் ஒரு நாடு தலைநிமிர்ந்து வாழும் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது. எல்லா சமயங்களும் இதனையே போதிக்கின்றன.

ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தது குற்றம்தான் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், அவர் ஒரு பௌத்த தேரராக இருப்பதனால் அவரை விடுதலை செய்வதே நல்லதென்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் கருத்துக்களை அவதானிக்கும் போது சிறைக்கு சென்ற முதலாவது தேரர் இவர்தான் என்பது போலவும், வேறு தேரர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது போலவும் இருக்கின்றது. 15 பௌத்த தேரர்கள் சிறையில் இருப்பதாக ஊடகங்களின் மூலமாக அறிய முடிகின்றது. அது மட்டுமன்றி ஏனைய சமயப் போதகர்களும் சிறையில் இருக்கின்றார்கள். பௌத்த தேரர் என்று மன்னிப்பு வழங்கினால் சிறையிலுள்ள ஏனைய தேரர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அத்தோடு ஏனைய மத போதகர்களுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும்.

அரசியலாகும் ஞானசார தேரர்

இதேவேளை, ஞானசார தேரரின் விடுதலையை வைத்து அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக அரசியல் கட்சிகளின் வங்குரோத்துத் தன்மையை புரிந்துகொள்ளலாம். இதில் எந்தவொரு அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் பொதுபல சேனாவின் கட்டுப்பாட்டிலுள்ள பௌத்த இனவாதிகளின் வாக்குகளை தமதாக்கிக் கொள்வதற்காக எண்ணுகின்றன. ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு தாங்கள் முயற்சி எடுக்கும்போது அந்த வாக்குகள் தங்களுக்கு கிடைக்குமென்று எண்ணுகின்றனர். ஜனாதிபதிதான் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் தாங்களும் அதற்கு ஆதரவு என்பதாகவே அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் உள்ளன.

இதேவேளை, சிறுபான்மைக் கட்சிகள் ஞானசார தேரரின் விடுதலை பற்றி வாய் திறக்கவில்லை. ஆனாலும், தேர்தல்கள் வரும்போது சிறுபான்மைக் கட்சிகள் ஞானசார தேரரரின் விவகாரத்தையும் கையில் எடுத்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இதேவேளை, முஸ்லிம் கட்சிகள் மாற்று முஸ்லிம் கட்சிகள் ஞானசாரர் விவகாரத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றதென்று பார்த்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உயர்பீட உறுப்பினரும், தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்பாட்டாளராகவும் இருக்கின்ற எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி ஞானசார தேரர் விடுதலை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தை மாற்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடாக தேசிய பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றன. முஸ்லிம்களை கொள்கை ரீதியாகவும், செயற்பாடுகள் மூலமாகவும் தமது பக்கத்திற்கு கவர்ந்து கொள்வதற்கு முடியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன.

இதேவேளை, பௌத்த தூபியின் மேல் நின்று போட்டோ பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த பல்கலைக் கழகமொன்றினைச் சேர்ந்த 07 முஸ்லிம் மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இதனை ஒரு குற்றமாகவோ அல்லது வேண்டுமென்றோ, பௌத்த கொள்கைளை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காகவோ செய்யவில்லை. ஆனாலும், அதில் சரி காணவும் முடியாது. ஆதலால், ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று விரும்பும் அரசியல்வாதிகள் இந்த மாணவர்களின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். இவர்கள் முஸ்லிம்கள் என்பதனாலேயே கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆயினும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் மிகவும் மோசமான வகையில் புத்தர் சிலை மற்றும் பௌத்த சின்னங்களுக்கு மத்தியில் போட்டோ பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ள போதிலும் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும். ஞானசார தேரரின் விடுதலை மீது அரசியல் கட்சிகள் அக்கறை கொள்வதற்கு காரணம் அவரின பின்னால் உள்ள பௌத்த இனவாத வாக்குகளேயாகும். இதுதான் அரசியல்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.