உள நலம் பாதிப்பு
ஈர்த்தெடுக்கும் தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு சமூக ஊடகங்களின் வரவுக்கு முந்தியது. சமூக ஊடகங்களின் வருகையின் பின்னர் அதன் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. எப்போதும் ஸ்மார்ட் தொலைபேசிகளை கையில் வைத்திருக்கின்ற சிறுவர்கள் அல்லது எப்போது வேண்டுமானாலும் ஸ்மார்ட் தொலைபேசிகளை பெற்றுக் கொள்கின்ற வாய்ப்பு இருக்கின்ற சிறுவர்கள் இந்த தொழில்நுட்ப வடிவமைப்பினால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
ஒருவருடைய ஆளுமை வளர்ச்சியிலும் நடத்தை கோலங்களின் மாற்றத்திலும் சிறுவயது முக்கியமான ஒரு கட்டமாகும். இக்காலப் பகுதியில் சிறுவர்களின் நுண்ணறிவு மற்றும் நரம்பியல் வளர்ச்சி ஏற்படுகின்றது. நரம்பியல் என்பது (Neuropsychology) மூளை மற்றும் மனித நடத்தை என்பனவற்றுக்கிடையிலான தொடர்புகளை குறித்து காட்டும் ஒரு துறையாகும். இந்தத் துறை மூளையின் பிரதான செயற்பாடுகள் மீது அதிக கவனம் செலுத்தும். குறிப்பாக நினைவாற்றல் (memory), கவனம் (Attention), உணர்ச்சி (Emotions) மற்றும் அறிவாற்றல் பற்றிய கூர்மையான அவதானத்தை செலுத்தும். எனவே, சிறுபராயம் என்பது ஒருவரது ஆளுமை மற்றும் நரம்பியல் வளர்ச்சியில் முக்கிய தாக்கம் செலுத்துகின்ற ஒரு கட்டமாகும். இந்த வளர்ச்சியுடன் ஒட்டியதாகவே, பல்வேறு கட்டங்களில் சிறுவர்கள் தான் சந்திக்கின்ற தடைகளுக்கான வரையறைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வித்தியாசமான சமூகத் தொடர்பாடல்களை பரீட்சித்துப் பார்க்கிறார்கள். பல சுய அடையாளங்களை உள்வாங்கி, அனுபவித்து, பரீட்சித்துப் பார்க்கிறார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகின்ற சமூக இயலுமைகளை பெற்றுக் கொள்கிறார்கள். வெட்கம் என்றால் என்ன என்பது பற்றிய உள்ளுணர்வு அவர்களுக்குள் ஏற்படுகிறது. வயது செல்லச் செல்ல படிப்படியாக மற்றவர்களுடன் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பும் அதிகரிக்கிறது. முக்கியமாக தமது அடையாளம் சமூக அங்கீகாரம் பற்றி அவ்வப்போது சரி பார்த்துக் கொள்கிறார்கள்.
இந்த வளர்ச்சிக் கட்டத்தில் இணையதளத்தில் தமது அடையாளத்தையும் தன்னைச் சுற்றிய சமூகத்தையும் நட்பு வட்டாரத்தையும் பேணிக் கொள்வது புதுவிதமான ஆற்றல்களை அவர்களிடம் வேண்டி நிற்கிறது. இதனால், இயல்பாகவே சிறுவர்களிடம் சமூக பதகளிப்பு, தாழ்வுணர்ச்சி என்பன முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு ஏற்படுகிறது. 2009 ஆம் ஆண்டுகளின் பின்னர் வெளியான பல்வேறு ஆய்வுகள், சுய கட்டுப்பாட்டை மீறிய சமூக ஊடகப் பாவனை பல்வேறு உளநல கோளாறுகளை சிறுவர்கள் மத்தியில் தோற்றுவிப்பதாக குறிப்பிடுகின்றன.
குறிப்பாக வாழ்வியல் திருப்தி, அன்றாட சந்தோஷம், மன நிறைவு என்பன அதிகம் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்ற சிறுவர்களிடம் குறைவாக காணப்படுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துகின்ற சிறுவர்களின் மனோநிலை அடிக்கடி மாற்றமடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதீத இணையதள பாவனையின் மூலம் கிரகிக்கின்ற ஆற்றல் மங்கிச் செல்கின்றது. இவற்றின் ஒட்டுமொத்த கூட்டாக சிறுவர்கள் உளநலப் பாதிப்புக்கு உட்படுகிறார்கள். Dekkers மற்றும் நண்பர்கள் (2022) மேற்கொண்ட Understanding Problematic Social Media Use in Adolescents with Attention-Deficit/Hyperactivity Disorder (ADHD) எனும் தலைப்பிலான ஆய்வு சுய கட்டுப்பாட்டை மீறிய சமூக ஊடகங்களின் பாவனை ஒருவரில் அவதானக் குறை மிகையியக்கக் குறைபாட்டை ஏற்படுத்துவதாக உறுதியாக எடுத்துக் கூறுகிறது.
எனினும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்ற எல்லா சிறுவர்களும் ஒரே மாதிரியான மனநல பாதிப்புக்கு முகம் கொடுப்பதில்லை. பல காரணிகள் இதில் தாக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக ஒருவரது வயது, அபிவிருத்தி இயலுமை, பால் நிலை, பால், கல்வி, குடும்ப நிலை, பொருளாதார நிலை போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய காரணிகளின் தாக்கத்தினால் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்ற குழந்தைகள் குறைவாகவும் அதிகமாகவும் மனநல பாதிப்புக்கு உள்ளாகலாம்.
அதேநேரம், சில ஆய்வுகள், சமூக ஊடகங்களின் உளநலத் தாக்கம் நலிவுற்ற குழந்தைகளில் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றன. ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு இடம்பெற்ற ஆய்வொன்றின் படி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்ற 11 தொடக்கம் 13 வயது வரையிலான சிறுமிகளிடையே தமது அன்றாட வாழ்வு பற்றிய திருப்தியீனம் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. இத்தகைய திருப்தியீனம் சிறுவர்களைப் பொறுத்தவரை 14 தொடக்கம் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் இடையே அதிகம் காணப்படுகின்றன.
சிறுவர்கள் இணையத்தளங்களில் நண்பர்களை தேடிக் கொள்கின்றார்கள். எனினும், தமது பிள்ளைகள் சமூக வலைத்தளங்களில் மாத்திரமே தமக்கான நண்பர்களை தேடிக் கொள்கின்றார்கள் என பெற்றோர் நினைப்பது தவறானதாகும். நண்பர்களைத் தேடிக் கொள்வதற்கான பல்வேறு நட்புத் தளங்கள் இணையத்தில் காணப்படுகின்றன. சிறுவர்கள் அத்தளங்களுக்கு ஓடோடிச் சென்று முகமறியாத ஒருவரை கண்டுபிடித்து நண்பராக ஏற்றுக்கொள்கின்றார்கள். அவரோடு தொடர்பினையும் பேணிக் கொள்கிறார்கள். இணையதள தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு, நிகழ்நிலையில் சிறுவர்களுக்கு நண்பர்கள் இல்லாதிருப்பது ஒரு குறைபாடு என எண்ணத் தூண்டுகிறது.
சாரா பொஸ்டர் (Sarah Foster, 2022) பெற்றோர்களிடம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் படி சமூக ஊடகங்களையும் நிகழ்நிலை உலகையும் நிஜமாகக் கொண்டு வளர்கின்ற சிறுவர்களிடையே உண்மையான நட்பு பற்றிய புரிதல் குறைவாக காணப்படுவதாகவும் வாழ்க்கை தொடர்பான யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் நிறைந்து காணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.
இணையதளத்தின் வாயிலாக பிரசித்தி பெற்ற விளையாட்டு வீரர்கள், சமூகத் தலைவர்கள், சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றவர்கள் போன்றோர் சிறுவர்களது மனதில் அதிக இடம் பிடிக்கின்றனர். சிறுவர்கள் அவர்களுடன் ஒருதலைப் பட்சமான நட்புகளை பேணிக் கொள்கிறார்கள். அத்தகையவர்கள் போன்று தமது தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றிக் கொள்ள முற்படுகிறார்கள். அத்தகையவர்களின் வலைப் பின்னல்களில் தம்மையும் ஒரு அங்கத்தவராக கருதி பெருமை அடைகிறார்கள். இதில் சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய தனிப்பட்டவர்களுடன் (Influencers) ஒரு தலைப்பட்சமான தொடர்பாடலை பேணிக் கொள்வதில் ஒரு விபரீதம் உள்ளது. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றவர்களின் பிரதான இலக்கு தமது நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வது மாத்திரமன்றி அதன் வாயிலாக பணம் சம்பாதிப்பதாகும். அவர்கள் சொல்கின்ற சமூக கருத்தில் உண்மை இருக்கிறதோ இல்லையோ ஒரு சிறிய விடயத்தை பெரிதாகக் காட்டி பணம் சம்பாதிக்கின்ற உள்நோக்கு காணப்படும்.
சிறுவர்கள் அத்தகையவர்களை பின்தொடர்கின்றபோது தமது நேரத்தை அவர்களது உள்ளடக்கங்களுக்காக செலவிடுகிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக இலங்கையில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர்களின் வீடியோ உள்ளடக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எனினும், இளையவர்கள் அதிகமான நேரத்தை அவர்களது உள்ளடக்கங்களுக்காக செலவிடுவதை மறுப்பதற்கில்லை. எனினும், இதனை ஒரு பாதிப்பாகவே கொள்ள வேண்டி இருக்கிறது.
சில போது, பாலியல் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வது ஆண்மைத் தன்மையானது என இள வயதினர் நம்புகின்றனர். இது பாரதூரமான சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பெரும்பாலான சமூக ஊடக தளங்களும் இணைய விளையாட்டுத் தளங்களும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வெளிப்படையான பாலியல் காட்சிகளை பரிமாறிக் கொள்வதற்கு தடை விதித்தாலும் அத்தகைய தளங்களை பயன்படுத்துகின்றவர்கள் அவற்றுக்கு வெளியில் பல்வேறு வழிமுறைகளில் இத்தகைய பாரதூரமான உள்ளடக்கங்களை நட்பு வட்டாரத்துக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
இது சிறுவர்களின் உண்மையான நட்பு, பாலியல் சுகாதாரம், மனநல ஆரோக்கியம் என்பனவற்றை அதிகம் பாதிக்கும். இலங்கையிலும் பாடசாலை மாணவர்கள் பால் வேறுபாடு இன்றி இத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்களை பார்வையிடுவது பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இதன் தாக்கம் நீண்டு செல்கையில் குடும்ப வாழ்வு மற்றும் சமூக உறவு என்பனவும் பாதிக்கப்படலாம்.
(தொடரும்…)
-Vidivelli