கல்- எளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி தொடர்பாக நிலவிவரும் கருத்து முரண்பாடுகளை நீக்கி சுமூகமான நிலையை ஏற்படுத்தும் நோக்கில் 2024 ஜூன் மாதம் கல்- எளிய பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையால் கல்- எளிய பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தினர் உள்ளடங்கலாக ஒரு சமாதானக் குழு தெரிவுசெய்யப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை கல்-எளிய பெரிய பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-
சமாதானக் குழு தனது முதல் அமர்வின் போது கல்லூரியிலுள்ள பிரதான பிரச்சினைகளை அடையாளம் கண்டதோடு, அவற்றிற்கு தீர்வுகாணும் முறைமைகள் பற்றியும் கலந்துரையாடியது. கல்லூரியின் சட்டயாப்பின் பிரகாரம் முதலில் முகாமைத்துவ சபையொன்று தெரிவுசெய்யப்பட வேண்டும். பின்னர் அவர்களுக்கான பொதுக்கூட்டம் நடைபெற்று, அதன் போது தான் கல்லூரிக்கான நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இந்த ஒழுங்கு பின்பற்றப்படாமை தான் தற்போதைய ஒழுங்கீனங்களுக்கான பிரதான காரணமாகும். இவற்றினைச் சீர்செய்வதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சமாதானக் குழு முடிவுசெய்தது.
ஆனால், கல்லூரியின் தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போதைய நிர்வாக உறுப்பினர்களுக்கு முகாமைத்துவ சபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கோ அல்லது பொதுக் கூட்டம் நடாத்துவதற்கோ வழக்கின் போது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, இந்த சிக்கலான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு சுமுகமான சூழ்நிலையை தோற்றுவித்து அல்லாஹ்வின் அருளால் கல்லூரியின் ஒளிமயமான எதிர்காலத்தைத் தோற்றுவிக்கும் நோக்கில் சமாதானக் குழுவினர் தமக்கிடையேயும், இதில் சம்பந்தப்பட்டுள்ள பல தரப்பினருடனும் பௌதிக ரீதியாகவும் ஒன்லைன் ஊடாகவும் பல கூட்டங்களை நடாத்தியுள்ளனர்.
அந்த கூட்டங்களின் சுருக்கம் வருமாறு:
2024 ஜூன் 08 இல் சமாதானக் குழுவினர் தமது பணிகளை ஆரம்பித்தனர். முதலில் கல்லூரி நிர்வாகத்தினரை அவர்கள் சந்தித்தனர். இந்தக் கூட்டத்தின் குறிக்கோள்களாக தகவல்களைப் பெற்றுக் கொள்ளல், சமாதானக் குழுவின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தல், கல்லூரியில் உள்ளதாகக் கூறப்படும் பிரச்சினைகள், குறிப்பாக மாணவிகளின் இடைவிலகல் அதிகரித்துள்ளமை என்பன அமைந்திருந்தன. நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வரும் இக்கட்டத்தில், சமாதானமான முறையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமாதானக் குழுவின் ஒத்துழைப்பு தேவையா என்று வினவப்பட்டதற்கு, அங்கு சமூகம் தந்திருந்த நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அது தேவை என ஏற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் சமாதானக் குழு கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி பழைய மாணவிகளின் குழுவொன்றை சந்தித்தது. அடுத்ததாக கல்லூரியின் செயலாளராக நீண்டகாலமாக செயல்பட்ட அஷ்ஷெய்க் மிப்லி அவர்களை குழு சந்தித்து பல தகவல்களைப் பெற்றது. கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரியில் தற்போது கல்வி பயிலும் மாணவியரது பெற்றோர்களின் குழுவொன்றையும் சமாதானக் குழு அடுத்த கட்டமாக சந்தித்தது.பின்னர் முறையே கல்லூரியில் நீண்ட காலமாக பொருளாளராக இருந்து வரும் அல்ஹாஜ் கலீல் அவர்களையும் முன்னாள் பொது முகாமையாளரையும், முன்னர் இயங்கிய சமாதானக் குழுவொன்றின் உறுப்பினர்களில் ஒருவரையும் கல்லூரி விடயத்தில் கரிசனையுள்ள ஷரீஆ, நிர்வாகம் மற்றும் சட்டம் போன்ற பல்துறை சார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்ககளையும் சமாதானக் குழு சந்தித்து பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தது.
அடுத்த கட்டமாக மீண்டும் கல்லூரி நிர்வாக உறுப்பினர்களைச் சமாதானக் குழு சந்தித்தது. இந்தக் கூட்டத்தின் போது இதுவரைக்குமான சமாதான முயற்சிகளின் முன்னேற்றம், பல தரப்பாலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் பற்றி அவர்களுக்கு தெளிவுபடுதப்பட்டது. கல்லூரிக்கான முகாமைத்துவ சபையொன்று தற்போது இல்லை என்பதே பிரச்சினைகளின் அடிப்படையாகும். அதனைத் தீர்க்குமிடத்து இன்ஷா அல்லாஹ் அனைத்து பிரச்சினைகளும் தீரும் ஏன்றாலும், தற்போதுள்ள நிர்வாகத்தினருக்கு பொதுக் கூட்டத்தை கூட்ட முடியாதென்ற நீதிமன்ற தடையுத்தரவு இருப்பதனாலும் தடையுத்தரவு நீங்கினாலும் தற்போதுள்ள நிர்வாகம் முகாமைத்துவ சபையைத் தெரிவு செய்யுமிடத்து, அதனை கல்லூரியோடு சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் ஏற்றுக் கொள்ளாத நிலை காணப்படுவதாலும், முகாமைத்துவ உறுப்பினர்களைத் தெரிவு செய்வது, அவர்களுக்கான பொதுக் கூட்டத்தை நடாத்துவது போன்ற ஏற்பாடுகளை சமாதானக் குழு செய்யுமிடத்து, அனைத்து தரப்பினரும் அதனை ஏற்றுக் கொள்வர் என்ற நிலை உள்ளது.
இவ்விடயத்தை தெளிவுபடுத்தி, இதற்கான இணக்கப்பாட்டை தெரிவுக்கும் படி சமாதானக் குழு தற்போதைய கல்லூரி நிர்வாகத்தினரிடம் வேண்டிக் கொண்டது. அது தொடர்பாக தமது சட்டத்தரணியிடம் ஆலோசனை பெற்று, பதில் தருவதாக கல்லூரி நிர்வாகம் கூறியது.
கல்லூரி நிர்வாகத்தின் நிலைப்பாடு
அதன் பின்னர் சமாதானக் குழுவின் முன்மொழிவிற்கான பதிலை மின்னஞ்சல் மூலம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.அதாவது கல்லூரி நிர்வாகம் சார்பான சட்டத்தரணியின் கருத்திற்கமைய, சமாதானக் குழுவினால் முகாமைத்துவ உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படல் யாப்பிற்கு முரணாகும். எனவே, அவர்கள் தற்போதுள்ள நிர்வாக உறுப்பினர்களாலேயே தெரிவுசெய்யப்பட வேண்டும். சமாதானக் குழுவின் முன்மொழிவிற்கமைய இப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமாக இருந்தாலும். அது எதிர்காலத்தில் சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால், சமாதானக் குழுவின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் மேலும் அறிவித்தது.
பழைய மாணவிகளது நிலைப்பாடு
கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை பழைய மாணவிகள், பெற்றோர் முன்னிலையில் அவர்களது சட்டத்தரணியிடம் சமாதானக் குழு கூறிய போது, முகாமைத்துவ சபை உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சமாதானக் குழு தயாரித்து தற்போதுள்ள நிர்வாகத்திற்கு வழங்கும் பட்சத்தில், அப்பட்டியலில் உள்ளவர்களை நடப்பிலுள்ள நிர்வாக உறுப்பினர்கள் அங்கீகரித்து நியமித்தால் எவ்விதமான சட்டச் சிக்கல்களும் வர முடியாது என பழைய மாணவிகள் சார்பான சட்டத்தரணி கூறினார்.
சமாதானக் குழுவின் 3 ஆலோசனைகள்
பல்வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கேட்டறிந்ததுடன் பல சுற்றுப் பேச்சுவார்தைகளை நடாத்திய சமாதானக் குழு, கல்லூரிக்கான முகாமைத்துவ சபையை
சமாதானக் குழு மாத்திரம் அல்லது,
சமாதானக் குழு, கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், பழைய மாணவிகள், பெற்றோரது பிரதிநிதிகள் அல்லது
சமாதானக் குழு, கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள், பழைய மாணவிகள், பெற்றோரது பிரதிநிதிகள், நாட்டிலுள்ள புத்திஜீவிகள் சிலர் அனைவரும் இணைந்து தெரிவு செய்வது பொருத்தமாகும்
என மூன்று முறைமைகளில் ஒன்றைக் கையாளலாம் என பிரேரித்தது.
மேற்கூறப்பட்ட இந்தத் தீர்வைக் கையாள்வதன் மூலம், இதனை எதிர்காலத்தில் சட்ட ரீதியாக சவாலுக்கு உள்ளாகாமலும், சமாதானமாகவும் இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியுமாக இருப்பதனால், இவ்விடயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு 2024 நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் இறுதியாக கல்லூரி நிர்வாகத்தினரிடம், மின்னஞ்சல் மூலம் சமாதானக் குழு தெரிவித்தது. அதில், கல்லூரி நிர்வாகம் சார்பாக வாதிடும் சட்டத்தரணியிடம் இது தொடர்பாக விளக்குவதற்கும் சமாதானக்குழு தயாராக உள்ளதால், அவரையும் கல்லூரி நிர்வாகத்தினரையும் சந்திப்பதற்கு நேரம் தருமாறு வேண்டிக் கொள்ளப்பட்டது. மேலும், இம்மின்னஞ்சலில், பெற்றோர், பழைய மாணவிகள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட, முகாமைத்துவ சபையைத் தெரிவு செய்யும் 3 வகையான முறைமைகளும் சேர்க்கப்பட்டிருந்தது.
பின்னர் சமாதானக் குழு அனுப்பிய அடுத்த கட்ட முன்மொழிவுக்கான பதில் கிடைக்காமையால், கல்லூரி நிர்வாகத்தின் பதிலுக்காக சமாதானக் குழு காத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மீண்டும் நினைவூட்டப்பட்டதோடு அது கடிதமாக பதிவுசெய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சமாதானக் குழு இறுதியாக அனுப்பி வைத்த அடுத்த கட்ட நகர்வுக்கான முன்மொழிவுக்குரிய பதில் இன்னும் கிடைக்கவில்லை.
என்றாலும், இப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்ப்பதற்கு இது தவிர்ந்த வேறு சிறந்ததொரு முன்மொழிவு இருப்பதாக சமாதானக் குழுவுக்குத் தெரியவில்லை. கல்லூரி நிர்வாகத்தின் சாதகமான பதில் கிடைக்குமிடத்து தனது பணியை தொடருவதற்கு சமாதானக் குழு தயாராக இருக்கிறது.
இந்த நாட்டில் இஸ்லாத்தை ஆழமாகக் கற்ற இஸ்லாமிய விழுமியங்களால் போஷிக்கப்பட்ட ஆலிமாக்களை உருவாக்க வேண்டும் என்ற புனிதமான இலட்சியத்துடன் சமூக நலன் விரும்பிகளாலும் தனவந்தர்களாலும் உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரி, அல்லாஹ்வின் அருளால் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றும் அதற்காக முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகளும் அதிகாரம் மிக்கவர்களும் தம்மாலான பங்களிப்பை அமானிதமாகக் கருதி மேற்கொள்ள வேண்டும் என்றும் சமாதானக் குழு எதிர்பார்க்கிறது. இந்த வக்பு சொத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக வல்ல அல்லாஹ்வை நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
இவ்வண்ணம்
சமாதானக் குழு
01.07.2025
- Vidivelli