வி.எஸ். முஹம்மத் அமீன்
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக் கூறி இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஜூன் 13 ஆம் திகதி ஈரானின் தெஹ்ரான், நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட பல இராணுவ, அணுசக்தித் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் ‘ட்ரூ ப்ராமிஸ் 3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பூதாகரத்தைத் தகர்த்தெறிந்தது.
ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கத் தயாரென அறிவித்த நிலையில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் இத்தாக்குதலைக் கண்டித்து வந்தன. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் போர்டோ, நடான், இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
மத்திய கிழக்கில் இதனால் பெரும் போர் வெடிக்கக்கூடும் என்ற நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதாக தமது வலைதளப் பக்கத்தில் அறிவித்தார். பிற நாடுகளின் உள் விவகாரங்களில் நுழைந்து உலக அமைதியைச் சீர்குலைத்து வரும் அமெரிக்காவும், எந்த அறநெறிக்கும் கட்டுப்படாமல் யுத்தவெறி கொண்டு நிற்கும் இஸ்ரேலும் உலக அமைதியை வேண்டி நிற்பதாகச் சொல்வது கேலிக்கூத்தாகும்.
2023 ஒக்டோபர் 7 இலிருந்து இன்று வரை பலஸ்தீனின் மீது இனவெறித் தாக்குதலை நடத்தி 17 ஆயிரம் குழந்தைகள் உட்பட 70 ஆயிரம் பேரைக் கொன்றழித்து எவ்வித உதவியும் கிடைக்கவிடாமல் பட்டினியால் பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல். யெமன், லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இக்காலகட்டத்தில் இஸ்ரேல் 42,000 தாக்குதல்களை நடத்தியுள்ளது. பலஸ்தீனில் மட்டும் 25,000 தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாக ஆயுதமோதல், இருப்பிட நிகழ்வுத் தரவு(ACLED) தெரிவிக்கிறது.
ஐநாவின் போர் நிறுத்த வாக்கெடுப்பை வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி பலஸ்தீனை அழித்தொழிக்கும் அமெரிக்கா இஸ்ரேல் மீதான ஈரானின் இந்தத் தாக்குதலின்போது உலக அமைதியைப் பற்றிப் பேசுவது அமெரிக்காவின் இரட்டை நிலையைக் காட்டுகிறது. இந்தியா போன்ற நாடுகள் பலஸ்தீன, ஈரான் விவகாரத்தில் அமைதியைக் கடைப்பிடிக்காமல் அறத்தின் பக்கம் நின்று உரத்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.
இஸ்ரேல் பலஸ்தீன் மீது நிகழ்த்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும். சுதந்திர பலஸ்தீன் உருவாக வேண்டும். அதுவே உலக அமைதிக்கான உண்மையான அடையாளமாக இருக்கும்.- Vidivelli