அல்தாப் அஹமட்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்சியூட்டும் அத்தாட்சிகளே வந்தவண்ணமுள்ளன. கடந்த சில நாட்களாக சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் எச்சங்களும் மீட்கப்பட்டமை இந்த மனிதப் புதைகுழிகளின் பின்னால் மறைந்திருக்கும் ஈவிரக்கமற்ற அரக்கர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவுள்ளன.
கடந்த வாரம் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, ஒரு குழந்தையின் மனித எச்சங்களும், அத்துடன் ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு சப்பாத்து போன்ற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை தொல்லியல் ஆய்வாளர்கள் 38 மண்டை ஓடுகளை அடையாளம் கண்டுள்ளனர். இவற்றுள் குறைந்தது 10 மண்டை ஓடுகள் குழந்தைகள் அல்லது சிறுவர்களுக்கு உரியவை என சந்தேகிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த இடம் குற்றச்சம்பவம் நடந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்பார்வையிடும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்று முன்தினத்துடன் ஐந்தரை நாட்கள் முடிவடைந்துள்ளன. ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகப்பையோடு இருந்த மனித எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கும் பொழுது சிறு குழந்தையின் எலும்புக் கூட்டுடன் சப்பாத்து, குழந்தை விளையாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையான அகழ்வுப் பணியில் ஐந்து வரையான மனித எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இதனால் அதில் உள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
தடயவியல் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ அடையாளம் காட்டிய சாத்தியமான புதைகுழிகள் உள்ள இடங்களில் கடந்த திங்கட்கிழமை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்களின் உதவியுடனும், நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடனும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.
பேராசிரியர் சோமதேவவும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா பிரணவனும் மே 15 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினர்.
நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் செம்மணி பகுதியில் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சுத்தம் செய்யும் போது கடந்த பெப்ரவரி 20 அன்று மனித எலும்புக் கூடுகளை கண்டுபிடித்ததை அடுத்து, இந்த மனிதப் புதைகுழிகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தன.
செம்மணியின் பின்னணி
1998 ஆம் ஆண்டு இலங்கையில் 18 வயதான தமிழ் பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை நாட்டையே உலுக்கியது. பரீட்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர், கொண்டாவிலில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பின்னர், அவரது சிதைந்த சடலம், அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன் மற்றும் அயலவர் ஆகியோரின் சடலங்களுடன் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் பல இராணுவ வீரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்ச, 1995-1996 இல் இராணுவம் யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான தமிழ் பொதுமக்கள் செம்மணி கிராமத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்தார். இப் பகுதியில் 300 முதல் 400 சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தை தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து 1999 ஆம் ஆண்டில், சர்வதேச அழுத்தத்தின் கீழ், அரசாங்கம் செம்மணியில் நீதிமன்றக் கண்காணிப்பில் அகழ்வாராய்ச்சிகளை தொடர அனுமதித்தது. உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்க, மனித உரிமைக் குழுக்கள் கண்காணித்துக் கொண்டிருக்க, செம்மணி நிலம் தனது உண்மையை வெளிப்படுத்தத் தொடங்கியது.
பதினைந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு சடலங்கள் 1996 இல் காணாமல் போனவர்களுடையவை என அடையாளம் காணப்பட்டன. ஆதாரங்கள் உறுதியாக இருந்தன. ஏழு இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த விசாரணைகள் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டன. கோப்புகள் தூசி படிந்தன. மேலதிக அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படவில்லை. 2006 ஆம் ஆண்டளவில், உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் செம்மணி விவகாரம் கிட்டத்தட்ட முழுமையாகவே மறக்கப்பட்டது.
ஆனால் முதலாவது அகழ்வாராய்ச்சி நடந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஜூன் 2025 இல் மீண்டும் இந்த விவகாரம் பேசுபொருளானது. செம்மணி புதைகுழியில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. அங்கு கண்டுபிடிக்கப்பட்டவை தேசத்தின் மனசாட்சியை மீண்டும் உலுக்கின. மூன்று குழந்தைகள் உட்பட, 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் ஒரு வயதுக்கும் குறைவானவர் என்று நம்பப்படுகிறது.
செம்மணி ஒரு தனித்து நிற்கும் துயரமல்ல. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடந்த மனிதப் படுகொலைகளின் சாட்சியாக நம்முன் காட்சியளிக்கிறது.
2013 ஆம் ஆண்டில், மன்னார் நகரில் கட்டுமான நடவடிக்கைகளுக்காக நிலத்தை தோண்டிய போது 11 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் 2018 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 29 குழந்தைகள் உட்பட 346 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தடயவியல் தொல்லியல் நிபுணர்கள் இந்த எச்சங்கள் 30 வருடங்களுக்கு உட்பட்டவை என்பதை உறுதிப்படுத்தினர்.
ஆனால் தாமதங்கள், அரசியல் தலையீடுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை என்பன காரணமாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. தடயப் பொருட்களும் காணாமல் போயின. விஞ்ஞான பரிசோதனைகள் தடைப்பட்டன, காலப்போக்கில் பொது மக்களும் இவற்றை மறந்தனர். எவருக்கும் பொறுப்புக் கூறப்படவில்லை. ஆனால்குடும்பங்கள் தொடர்ந்து நீதிக்காக காத்திருக்கின்றன.
2000 ஆம் ஆண்டில் மிருசுவிலில் எட்டு தமிழ் பொதுமக்கள் இராணுவத்தால் கடத்தப்பட்டனர். ஒருவர் அங்கிருந்து தப்பினார். அவர் மூலமாக, ஏனைய ஏழு சடலங்கள் கண்கள் கட்டப்பட்டும், சுடப்பட்டும் ஆழமற்ற புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் காரணமான, ஒரு தலைமை பொலிஸ் சார்ஜென்ட், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் எந்தவொரு உயர் அதிகாரியும் விசாரிக்கப்படவில்லை.
மட்டக்களப்பில் உள்ள முரக்கொட்டாஞ்சேனை மற்றும் முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களில், கட்டிட நிர்மாணப் பணிகளின் போது எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. எனினும் அவை மூடி மறைக்கப்பட்டன.
குருக்கள்மடம் புதைகுழி
தமிழ் மக்கள் மாத்திரமன்றி முஸ்லிம் மக்களும் இவ்வாறு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி இதற்கான சாட்சியாகும்.
விடுதலைப்புலிகளால் 1990 ஆம் ஆண்டில், கடத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் இப் பகுதியில் உள்ளதாக நம்பப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பு – கல்முனை ெநடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த குறிப்பாக காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் 165 பேர் குருக்கள்மடம் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளினால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கடலோரப்பகுதியில் புதைக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் சிலர் கடந்த 2014 ஆம் ஆண்டு இப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடுகளை செய்தனர். இதனையடுத்து களுவாஞ்சிக்குடி மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப் பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக சட்ட மருத்துவ நிபுணர், புதை பொருள் மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறை உட்பட 15 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து சென்று அந்த இடத்தை பார்வையிட்டிருந்தனர். எனினும் புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளம் காட்டுவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இங்கு இதுவரை அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.
வடக்கு கிழக்கில் இவ்வாறு இராணுவத்தினராலும் விடுதலைப் புலிகளாலும் ஏனைய ஆயுதக் குழுக்களாலும் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்களின் எலும்புக் கூடுகள் அவர்களது இறப்புகளுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் இன்னமும் புதையுண்டு கிடக்கின்றன. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வாறான படுகொலைகளின் பின்னணிகளைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான விசேட பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த தேசத்தில் இவ்வாறான மோசமான அநீதிகள் நிகழாதிருப்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.- Vidivelli