மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும்போது பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறை அமுல்
(எம்.ஆர்.எம்.வசீம்)
சுயமான வழியில் தொழிற்சாலை மற்றும் நிறுவன ரீதியான தொழில்களுக்காக வெளிநாடு செல்லும்போது குறித்த தொழிலாளர்களின் தொழில் ஒப்பந்தம், குறித்த நாட்டின் இலங்கை தூதுவர் காரியாலயம் ஊடாக உறுதிப்படுத்தும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த சட்டம் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் அது ஜூலை 1ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
புதிய திருத்தங்களுக்கு அமைவாக, சவூதி அரேபியா, குவைட், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், இஸ்ரேல், ஜோர்தான், லெபனான், மாலைதீவு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கொரியா ஆகிய 13 நாடுகளின் தொழிற்சாலை மற்றும் நிறுவன ரீதியிலான தொழில் பிரிவுகளுக்கு சுயமாக செல்லும்போது, பணியகத்தின் பதிவை பெற்றுக்கொள்வதற்காக, தங்களது சேவை ஒப்பந்தத்தை அந்த நாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் நலநோம்புகள் பிரிவில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கான கட்டணமாக 60 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும்.
தொழில்முறை பிரிவில் உள்ள வேலைகளுக்கு, புதிய சேவை ஒப்பந்தத்துடன் சுயவழியில் வெளிநாடுகளுக்கு செல்லும் தொழில் வல்லுநர்கள், பணியகத்தின் பதிவை பெற்றுக்கொள்ளும்போது, அவர்களின் தொழில் தன்மை குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு அல்லது குறித்த தொழிலின் தொழில்முறைத்தன்மையை உறுதிப்படுத்த முடியுமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியுமாக இருந்தால், தொழில் ஒப்பந்தத்தை இலங்கை தூதுவர் காரியாலயத்தில் உறுதிப்படுத்துவது அவசியமில்லை.
கடந்த காலங்களில் ஆள் கடத்தல் வியாபாரம் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாகியதுடன் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக, இலங்கை தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதை நோக்காகக்கொண்டு இந்த தீர்மானத்துக்கு பணியம் வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli