(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில், பயங்கரவாதிகள் சத்திய பிரமாணம் செய்யும் வீடியோ காட்சிகளை ஐ.எஸ். அமைப்பினருக்கு அனுப்பி உரிமை கோரச் செய்ததாக கூறப்படும் சம்பவத்தை மையப்படுத்தி கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் வரையில் தடுப்பில் இருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சின்ன சஹ்ரான் (பொடி சஹ்ரான்) எனும் பெயரால் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அறியப்படும் பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரான் மீண்டும் கடந்தவாரம் கைது செய்யப்பட்டார்.
போரா பள்ளிவாசல் மற்றும் ரயில் நிலையத்தை அவர் புகைப்படம் எடுத்தமை சந்தேகத்துக்கு இடமானது எனும் குற்றச்சாட்டில் பம்பலபிட்டிய பொலிஸாரால் கடந்த ஜூன் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் பம்பலபிட்டிய பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான சஹ்ரான் மேலதிக விசாரணைகளுக்காக பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஏதேனும் அனர்த்தம் ஏற்படுத்த இவ்வாறு வீடியோ படம் எடுத்தாரா எனும் நோக்கில் இதன்போது விசாரணை செய்யப்பட்டுள்ளது.
தான் போரா பள்ளிவாசலில் ஏற்றப்பட்டிருந்த போரா கொடியை இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை எனவும் அதனாலேயே வீடியோ படம் எடுத்ததாகவும் இதன்போது சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் சாதாரண சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரித்த பொலிஸார் கடந்த திங்களன்று (ஜூன்30) சஹ்ரானை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து, எந்த குற்றம் தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படவில்லை என தெரிவித்து அவரை விடுவிக்க கோரினர். அதன்படியே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போரா முஸ்லிம்கள் வருடாந்தம் முஹர்ரம் புத்தாண்டினை மையப்படுத்தி நடாத்தும் மாநாடு கடந்த ஜூன் 27ஆம் திகதி ஆரம்பமாகியது. இது நாளை மறுதினம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 15,000 போரா சமூக பிரதிநிதிகள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது.
விசாரணையாளர்களால் பொடி சஹ்ரான் என அறியப்படும் பஸ்லூர் ரஹ்மான் மொஹமட் சஹ்ரான் என்ற இவர், கடந்த 2019 ஏப்ரல் 24 ஆம் திகதி மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். பின்னர் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்ட அவர், விளக்கமறியலிலும் இருந்த நிலையில் 2023 மார்ச் மாதம் மேன் முறையீட்டு நீதிமன்றின் ஊடாக பிணை பெற்றார்.
பயங்கரவாத கும்பலின் சத்திய பிரமாண வீடியோவை ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பி உரிமை கோரச் செய்தமை, சொனிக் சொனிக் எனும் அரச உளவுச் சேவை அதிகாரியோடு நெருங்கிய தொடர்புகளை முன்னெடுத்து அவரின் ஆலோசனைக்கு அமைய சில நடவடிக்கைகளில் ஈடுபட்டமை போன்றன இவர் குறித்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இது குறித்து விசாரணைகள் தொடரும் நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli