மாவனெல்லை இளைஞர் 8 மாதங்களாக தடுப்புக் காவலில் – குடும்பத்தினரை நேரில் சந்தித்தது சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) இன் கீழ் கைதுசெய்யப்பட்டு, 8 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் மாவனல்லையைச் சேர்ந்த சுஹைலின் தந்தையை, சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு (Lawyers for Social Justice) கடந்த சனிக்கிழமை (28.06.2025) மாவனெல்லையில் சந்தித்தது.
சுஹைல் PTA இன் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டது குறித்த முழு விவரங்களையும் இச்சந்திப்பின் போது சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
பெற்றுக்கொண்ட விவரங்களின் சுருக்கம் வருமாறு:
23.10.2024 – மாவனெல்லையைச் சேர்ந்த 20 வயதான சுஹைல், கொழும்பில் தனது வேலை நிமித்தம் தங்குவதற்காக ஒரு வாடகை அறையைப் பார்க்கச் சென்ற போது, தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய Chabad House இன் அருகே வைத்து பகல் 2.30 –3.00 மணியளவில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுகிறார். கைது செய்யப்படும் போது அவரிடம் தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை. ஆனால் உடனடியாக கைத்தொலைபேசியில் உள்ள தேசிய அடையாள அட்டையின் பிரதி பொலிஸாருக்கு காண்பிக்கப்படுகிறது.
24.10.2024 – காலை கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் சுஹைல் ஆஜர்படுத்தப்பட்டு, மாலை 4.30 மணியளவில் கல்கிஸ்ஸை நீதிவானினால் விடுவிக்கப்படுகிறார்.
அதே நாள் தந்தையும், மகனும் கொழும்பிலிருந்து மாவனெல்லையில் உள்ள அவர்களின் வீட்டுக்கு இரவு வந்தடைய முன்னரேயே, சம்பந்தப்பட்ட தெஹிவளைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) தெஹிவளை மற்றும், மாவனெல்லை பொலிஸார் சகிதம் சுஹைலின் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்.
தந்தையும் மகனும் வந்து சேர்ந்தவுடன் “உங்கள் மகனை தெஹிவளைக்கு கொண்டு போய் ஒரு வாக்குமூலத்தைப் பெற்றுவிட்டு அடுத்த நாள் காலை திரும்பவும் விட்டுவிடுவோம். பயப்பட வேண்டாம்” என்று தெஹிவளைப் பொலிஸார் கூறியிருக்கின்றனர்.
தந்தைக்கு இது குறித்து நம்பிக்கையின்மை ஏற்படவே, மாவனெல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைத் (OIC) தொடர்புகொண்டு பேச, அவரும் “சுஹைல் காலையில் விடுவிக்கப்படுவார்” என்று வாக்குறுதியளித்திருக்கிறார். அந்த அடிப்படையில் சுஹைலை மீண்டும் தெஹிவளைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர் தெஹிவளைப் பொலிஸார்.
ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மீறி, “இஸ்ரேலிய கொடிக்கு கையால் குத்துவது” போன்ற ஒரு ஸட்டிக்கரை கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுகிறார் சுஹைல்.
எனினும், பொலிஸ் B அறிக்கையில் சுஹைல் மாவனெல்லையில் வைத்து கைது செய்ததை மறைத்து, “ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் chabad house இற்கு முன்னால் சந்தேகப்படும் படியாக உலாவியதனால் கைது செய்யப்பட்டார்” என்று பொய்யான ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள் பொலிஸார்.
பொலிஸார் 24 ஆம் திகதி இரவு மாவனெல்லையில் உள்ள சுஹைலின் வீட்டிற்கு வந்து அவரை மீண்டும் தெஹிவளைக்கு கொண்டு சென்றதற்கான CCTV மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன.
ஒக்டோபர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் சுஹைலின் தாயாரும் தந்தையும் பொலிஸ் நிலையமும் கையுமாக அலைந்திருக்கின்றனர். அப்போதும் “இன்று விடுவிப்போம், நாளை விடுவிப்போம்” என்று கூறி காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள்.
27.10.2024 – ஞாயிற்றுக்கிழமை, கல்கிஸ்ஸை ‘பதில்’ நீதிவான் முன்னிலையில் சுஹைல் ஆஜர்படுத்தப்படுகிறார். அவ்வேளையில் பதில் நீதிவான் சுஹைலை 5 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடுகிறார்.
5 நாட்களின் பின்னர், மீண்டும் கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் சுஹைல் ஆஜர்படுத்தப்படும் வேளையில், “தன்னால் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நபரை மீண்டும் ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்?” என பொலிஸாரிடம் வினவினார் கல்கிஸ்ஸை நீதிவான். அதே போன்று, “நீதவானின் எவ்வித உத்தரவுமின்றி” குறித்த நபரின் தொலைபேசி, ஏலவே CID இடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறித்தும் வினவப்பட்டது.
அவ்வேளையில் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் (ASP) வழங்கப்பட்ட ஒரு கடிதத்தை நீதவானுக்கு சமர்ப்பித்தனர்.
பின்னர் 8 நாட்கள், சுஹைல் PTA இன் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறாக முதலில் 8 நாளுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுஹைல், மீண்டும் 14 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்நிலை மூலமாக (Online hearing) இன்றுவரை ஆஜர்படுத்தப்படுகிறார்.
இந்தப் பிரச்சினை குறித்து பொலிஸ்மா அதிபருக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சுஹைலின் தந்தையால் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டும் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையில் பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கிணங்க மஹஜன சஹன மெதிரிய மூலம் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதுவும் தெஹிவளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் (ASP) குறுக்கீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
சுஹைலை விடுப்பதா அல்லது தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைப்பதா என்றது குறித்து சட்டமா அதிபரின் சட்ட ஆலோசனையை கோரி 6 மாதங்கள் கடந்து சென்றும் அதுகுறித்து சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை எந்தவித சட்ட ஆலோசனைகளும் கிடைக்கப்பெறவில்லை.
சுஹைலின் தந்தையுடனான சந்திப்பில் அர்க்கம் முனீர், சட்டத்தரணிகளான ரஷாத் அஹமத், இல்ஹாம் ஹஸனலி, அஷ்ரப் முக்தார் மற்றும் இர்பான் பன்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுவரை சுஹைலின் பெற்றோர், தனியாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் பல லட்சங்களை செலவழித்து போராடி வருகின்றனர். சுஹைலின் விடுதலைக்காவும், சுஹைலுக்கு நீதியை நிலைநாட்டவும் போராடுவது நம் அனைவரதும் கடமை. அந்த அடிப்படையில் சமூகநீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பானது, சிரேஷ்ட சட்டத்தரணிகளின் உதவியோடு சுஹைலுக்கான சட்ட ரீதியான பிரதிநிதித்துவத்தை (Legal Representation) வழங்க தன்னார்வமாக முன் வந்துள்ளதாக அறிவித்துள்ளது.- Vidivelli