எப்.அய்னா
அது கடந்த 2024 ஒக்டோபர் மாதம். அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று சில நாட்களில் பொத்துவில், அறுகம்பே பகுதி உள்ளிட்ட இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அவர்களையும் அவர்கள் சார் ஸ்தலங்களையும் இலக்கு வைத்து ஒருங்கமைக்கப்படாத தாக்குதல்கள் நடாத்த திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அப்போது வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஒருவன் இதுவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் இருந்து வருகின்றார். அப்போது (2024 ஒக்டோபர்) இந்த இளைஞன் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் என கூறப்பட்டது. ஆனால் இவரது கைது பிரத்தியேகமானது என்பது தற்போதுள்ள தகவல்கள் ஊடாக தெளிவாகிறது.
தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய கன்சியூலர் அலுவலகம் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியவர் என கூறி, 21 வயதான மொஹம்மட் சுஹைல் எனும் இளைஞன் மாவனெல்லை, கிரிந்தெனிய பகுதியை சேர்ந்தவர். அவரது தொலைபேசி மற்றும் டிஜிட்டல் உபகரண பதிவுத் தகவல்களை வைத்து அவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அப்போது கூறப்பட்டது.
உண்மையில் இந்த விவகாரத்தில் நடந்துள்ள விடயங்கள் தொடர்பில் தற்போது பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. மனித உரிமைகள் ஆர்வலரான முஹீத் ஜீரான், குறித்த இளைஞனின் உறவினர் ஒருவருடன் சந்திப்பொன்றினை நடாத்தி தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிந்த நிலையிலேயே இது குறித்து முழு சமூகமும் பேச ஆரம்பித்தது.
குறிப்பாக தற்போது இந்த விவகாரத்தில் சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு எனும் இளம் சட்டத்தரணிகளை கொண்ட ஒரு குழுவும் முன்னிலையாகியுள்ளதாக அறிய முடிகின்றது.
கடந்த 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தெஹிவளை, பெயார் லைன் வீதி அருகே நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றின் அருகே (இஸ்ரேலிய Chabad House இன் அருகே வைத்து) மொஹம்மட் சுஹைல் எனும் இந்த 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவரிடம் தேசிய அடையாள அட்டை இருக்கவில்லை என கூறப்படுகின்றது. ஆனால் அப்போது உடனடியாக கைத்தொலைபேசியில் உள்ள தேசிய அடையாள அட்டையின் பிரதி பொலிஸாருக்கு காண்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத ஹேரத் தலைமையிலான குழு அவரைக் கைது செய்துள்ளது.
எவ்வாறாயினும் பின்னர் மறு நாள் அதாவது 2024 ஒக்டோபர் 24 ஆம் திகதி முற்பகல் சுஹைல், கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அதன்போது அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உண்மையில் தேசிய அடையாள அட்டை ஒன்றினை கைவசம் வைத்திருக்கவில்லை என்பது ஒருவரை கைது செய்வதற்கான காரணியாக ஒரு போதும் இருக்க முடியாது என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே நேரம் காரணம் இன்றி ஒரு பகுதியில் சுற்றித் திரிந்தமைக்காகவும் ஒருவரை கைது செய்ய முடியாது என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் முன்னாள் சட்ட செயலாளரான சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
கொழும்பில், விமான சேவையுடன் தொடர்புபட்ட கற்கைநெறியினை முன்னெடுக்கும் இந்த இளைஞன், தங்குவதற்கு அறையொன்றை பார்க்கச் சென்ற போது இவ்வாறு பொலிஸாரால் அநியாயமாக கைது செய்யப்பட்டதாக இளைஞன் தரப்பில் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் நீதிமன்றம் குறித்த இளைஞனை விடுவித்த பின்னர், குறித்த இளைஞனும் அவரது தந்தையும் கொழும்பிலிருந்து மாவனல்லையில் உள்ள அவர்களின் வீட்டுக்கு அன்று இரவு சென்றுள்ளனர். எனினும் அவர்கள் வீட்டுக்கு செல்ல முன்னரேயே தெஹிவளைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவனல்லை பொலிஸாருடன் அந்த வீட்டுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சுஹைலிடம் வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக அவரை கொழும்புக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட சுஹைல் “இஸ்ரேலிய கொடிக்கு கையால் குத்துவது” போன்ற ஒரு sticker ஐ கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுஹைல் குறித்து 2024.10.25 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத ஹேரத் பி 48841/24 எனும் இலக்கத்தின் கீழ் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் முன் வைத்துள்ள விசாரணை அறிக்கை பிரகாரம், சுஹைலை, தெஹிவளை, பெயார் லைன் பகுதியில் வைத்து சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த போது கைது செய்ததாக கூறப்பட்டுட்டுள்ளது.
எனினும் சுஹைலின் தரப்பினர், சுஹைலை 2024 ஒக்டோபர் 24 ஆம் திகதி இரவு மாவனெல்லையில் உள்ள வீட்டிலிருந்தே பொலிஸார் அழைத்து சென்றதாக கூறுகின்றனர். பொலிஸார் 24 ஆம் திகதி இரவு மாவனல்லையில் உள்ள சுஹைலின் வீட்டிற்கு வந்து அவரை மீண்டும் தெஹிவளைக்கு கொண்டு சென்றதற்கான CCTV மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2024 ஒக்டோபர் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கல்கிஸ்ஸை பதில் நீதிவான் முன்னிலையில் சுஹைல் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் சுஹைல் ஆஜர்படுத்தப்படும் வேளையில், “தன்னால் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நபரை மீண்டும் ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்?” என பொலிஸாரிடம் கல்கிசை நீதிவான் வினவியுள்ளதாகவும் அதே போன்று, “நீதவானின் எவ்வித உத்தரவுமின்றி” குறித்த நபரின் தொலைபேசி, ஏற்கனவே CID இடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறித்தும் வினவப்பட்டுள்ளதாகவும் சமூக நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுஹைல் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சுஹைலின் கைது அடிப்படை விதிமுறைகளையே மீறி இருப்பதாக சட்ட வல்லுனர்கள் குறிப்பிடும் நிலையில், தெஹிவளை பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் நீதிமன்றுக்கு சுஹைல் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
வசதி குறைந்த குடும்பம் ஒன்றின் உறுப்பினரான சுஹைல் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கூலித் தொழில் செய்யும் அவரது தந்தைக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ இந்த விடயங்கள் தொடர்பில் சட்டத்துடன் போராடும் அளவுக்கு வலிமை இருக்கவில்லை என இது தொடர்பில் எம்முடன் விடயங்களை பகிர்ந்துகொண்ட சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறினார்.
எது எவ்வாறாயினும் இதுவரை இந்த விடயம் வெளிப்படுத்தப்படாமல் மூடி மறைக்கப்பட்டு வந்தது. தற்போது அதன் முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், சட்ட மா அதிபர் இந்த விடயத்தில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்.
அதேநேரம் தெஹிவளை பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சரும் இவ்விவகாரத்தில் தலையீடு செய்யாவிட்டால், நாளை பயங்கரவாத தடை சட்டம் காரணமாக இந்த அரசாங்கம் தனது செல்வாக்கை இழக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.- Vidivelli